மகாராட்டிராவில் ஆட்சிக் கவிழ்ப்பு: பாரதீய ஜனதா கட்சியின் சதி? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 6, 2022

மகாராட்டிராவில் ஆட்சிக் கவிழ்ப்பு: பாரதீய ஜனதா கட்சியின் சதி?

முதலமைச்சர் ஷிண்டேயின் ஒப்புதல் வாக்குமூலம்!

மும்பை, ஜூலை 6 - உத்தவ் தாக்கரே அரசைக் கவிழ்த்தது, திடீர் நடவடிக்கையல்ல; அது நீண்ட கால திட்டம் என்று பா.ஜ.க. தயவுடன் மகாராட்டிர முதலமைச்சராகியிருக்கும் ஏக்நாத் ஷிண்டே கூறியுள்ளார். அத்துடன் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பா.ஜ.க. தலைவர் தேவேந் திர பட்னாவிஸ் ஆகியோர் தனக்கு  துணையாக நின்றார்கள் என்றும் உண்மைகளைப் போட்டு உடைத்துள்ளார்.

மராட்டிய மாநிலத்தில் அரசியல் ஜனநாயகப் படுகொலையில் பாஜ கவின் பங்களிப்புகுறித்து, பா.ஜ.க.வின் ஆதரவுடன் ஆட்சிப்பொறுப்பேற்ற ஏக்நாத் பாஜிராவ் ஷிண்டே தற்போது வெளிப் படையாகக்  கூறி யுள்ளார்.

சிவசேனாவுக்கு எதிராக அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்கள் போர்க்கொடி தூக்கியதால் அந்த கட்சியில் பிளவு ஏற்பட்டது. இதனால் நடந்த அரசியல் திருப்பங்களுக்கும், தங் களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என பா.ஜனதா மழுப்பலாக பதில் கூறி வந்தது. 

தேவேந்திர பட்னாவிசும், ஏக்நாத் ஷிண்டேயும் குஜராத்தில் சந்தித்துப் பேசியதாக தகவல்களும் பரவின. 

இந்த நிலையில் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற கையோடு திறந்த புத்தகம் போல, திரைக்கு பின்னால் நடை பெற்ற பல்வேறு சம்பவங்களை முதல்அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே படம் போட்டு காட்டினார்

கடந்த 5.7.2022 அன்று மகாராட்டிர சட்டப் பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக் கெடுப்பிற்குப் பின், ஆற்றிய உரையில் இது தொடர்பாக ஏக்நாத் ஷிண்டே கூறியிருப்ப தாவது: 

''பாஜக - சிவசேனா கூட்டணி ஆட்சியில்,  எனக்கு  துணை முதலமைச்சர் பதவி வழங்குவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டது. எனக்கு விரைவில் நல்ல பதவி கிடைக்கும் என்று ஒன்றிய அமைச்சர் நிதின் கட்காரியும் என்னிடம் தெரிவித்தார். முந்தைய அரசில் அமைச்சராக பணியாற்ற வாய்ப்பு அளித்த தேவேந்திர பட்னாவிஸ்-ஜிக்கு  இந்த நேரத்தில் நன்றி கூறுகிறேன். 2019 ஆம் ஆண்டும் சிவசேனாவுக்கு (எனக்கு) துணை முதலமைச்சர் பதவியை அவர் வழங்க இருந்தார்.  பின்னர் மகா விகாஸ் அகாதி கூட்டணி உருவானது. அப்போது, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங் கிரஸ் தலைவர்கள் ''ஷிண்டேவின்கீழ் பணியாற்ற விரும்பவில்லை'' என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தெரிவித்ததாக உத்தவ் தாக்கரே என்னிடம் கூறினார்.

ஆனால், ‘மகா விகாஸ் அகாதி’ அரசு அமைந்த பிறகு, ''உங்கள் சொந்தக் கட்சியில் (சிவசேனா) மோதல் நடந்ததாகவும், நீங்கள் முதலமைச்சராக வருவதை நாங்கள் (தேசியவாத காங்கிரஸ்)ஒருபோதும் எதிர்க்கவில்லை'' என்று என்னிடம் அஜித் பவார் தெரிவித்தார்.  

எனவே, இன்றைய நிகழ்வுகள் (உத்தவ்  அரசைக் கவிழ்த்தது) ஒரே நாளில் நடந்தவை  அல்ல. நான் நீண்ட காலமாக ஒடுக்கப்பட்டிருக்கி றேன். நான் எப்படி நடத்தப்பட்டேன் என்பதை  நேரில் பார்த்தவர்கள் இந்த அவையில் உள்ளனர். சுனில் பிரவும் (உத்தவ் தாக்கரே ஆதரவு  சிவசேனா சட்டமன்ற உறுப்பினர்) ஒரு சாட்சி. இறுதியாக கடந்த ஜூன் 20 ஆம் தேதி எம்.எல்.சி. தேர்தலில் கட்சியால் எனக்கு கிடைத்த அவமரியாதை என்னை கட்சிக்கு எதிராகத் தூண்டியது. இனி கட்சி பக்கம் திரும்பக் கூடாது என்று தீர்மானித் தேன். 

சட்டமன்ற உறுப்பினர்களுடன் காவல்துறை சோதனை சாவடிகளைத் தாண்டி எப்படி  செல்வது என்பது எனக்கு தெரியும். 'செல்போன்  டவர்' களைக் கண்டறிவது மற்றும் ஒரு நபரை கண் காணிப்பது எப்படி என்று எனக்குத் தெரியும். 

இவை எல்லாவற்றிற்கும் மேலாக (தனது வலது பக்கம் அமர்ந்திருந்த பட்னாவிசை சுட்டிக் காட்டி) மிகப்பெரிய வித்தகர் இவர்தான். கவுகாத்தி ஓட்ட லில் எனது ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் அயர்ந்து தூங்கிய பிறகு நான் குஜராத் செல்வேன். அங்கு பட்னாவிசை சந்தித்துப் பேசுவேன். சட்டமன்ற உறுப்பினர்கள் எழுந்திருக்கும்  முன்பே அதிகாலையில் கவுகாத்தி ஓட்டலுக்குத் திரும்பி விடுவேன். எல்லாவற்றையும் ஒருக்கிணைத்தவர் (பட்னாவிஸ்) இங்கே இருக்கிறார். இவர் என்ன செய்வார், எப்படி செய்வார் என்று யாருக்கும் தெரி யாது.  எல்லவாற்றையும்விட எங்கள் (அதிருப்தி  சிவசேனா சட்டமன்ற உறுப்பினர்கள்) எண் ணிக்கை பாஜகவை விடக் குறைவாக இருந்தது. ஆனாலும், பதவி ஏற்கும் முன் பிரதமர் நரேந்திர மோடி  எங்களுக்கு வாழ்த்துக் கூறினார். மேலும் தன்னால் முடிந்த அனைத்து உதவி களையும் செய்வதாக என்னிடம் தெரிவித்தார். ஒன்றிய அமைச்சர் அமித்ஷா எங்களுக்கு பின் னால் ஒரு பாறையை போல நின்று ஆதரவளிப் பதாகக் கூறினார்.” 

இவ்வாறு ஏக்நாத் ஷிண்டே பேசினார்.

No comments:

Post a Comment