சேலம் பெரியார் பல்கலைக் கழகம் காவி மயமாகிக் கொண்டிருக்கிறது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 15, 2022

சேலம் பெரியார் பல்கலைக் கழகம் காவி மயமாகிக் கொண்டிருக்கிறது

கேள்வித் தாளில் எந்த ஜாதி, தாழ்ந்த ஜாதி? என்று கேட்பதா?
இதற்குக் காரணமானவர்கள்மீது கடும் நடவடிக்கையை உயர்கல்வித் துறை அமைச்சர் எடுக்கவேண்டும்!
செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர்

சென்னை, ஜூலை 15 பெரியார் பல்கலைக் கழகம் காவி மயமாகிக் கொண்டிருக்கிறது; ஜாதி தர்மம் அங்கே படமெடுத்தாடிக் கொண்டிருக்கின்றது. இதற் குக் காரணமானவர்கள்மீது கடும் நடவடிக்கையை உயர் கல்வித் துறை அமைச்சர் எடுக்கவேண்டும்; எடுக்காவிட்டால், திராவிடர் கழகம் கடுமையாகப் போராடும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

கல்வி வள்ளல் காமராசர் பிறந்த நாளான இன்று (15.7.2022)  சென்னை பெரியார் பாலம் அருகில் (ஜிம்கானா கிளப்) உள்ள அவரது சிலைக்கு - உருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்த திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

காமராசருடைய கொள்கைகள் நிலைக்க வேண்டும்; சாதனைகள் தொடரவேண்டும்

கல்வி வள்ளல், பச்சைத் தமிழர் என்று தந்தை பெரியார் அவர்களாலே வர்ணிக்கப்பட்ட தமிழ் நாட்டின் ரட்சகர் காமராசர் அவர்களுடைய பிறந்த நாளான இன்றைக்கு, கட்சி வேறுபாடில்லாமல், அவரைப் பாராட்டக் கூடிய அளவிற்கு, அவருடைய கொள்கைகள் நிலைக்கவேண்டும் - அவர் பாடுபட்டு செய்த சாதனைகளைத் தொடரவேண்டும் என்கிற உணர்வோடு அனைத்துக் கட்சியினரும் இன்றைக்குக் காமராசர் அவர்களுக்கு மரியாதை செலுத்துகிறார்கள்.

காமராசர் அவர்கள் குலக்கல்வியை ஒழித்த காரணத்தினால்தான், இன்றைக்கு நாடெல்லாம் கல்வி நீரோடை பாய்ந்து கொண்டிருக்கிறது.

தகுதி, திறமை என்ற பெயராலே, மாணவர்களை வடிகட்டிக் கொண்டிருக்கிறார்கள்

காமராசர் அவர்களுடைய அரிய முயற்சி, மீண்டும் இன்றைக்குக் குழிதோண்டி புதைக்கப்படுகிறது என்ப தற்கு அடையாளமாக, புதிய கல்விக் கொள்கை என்ற பெயராலே - தகுதி, திறமையை சாடிய காமராசருடைய கொள்கைக்கு விரோதமாக இன்றைக்கு மிகப்பெரிய அளவிற்கு, நீட் தேர்வு, கியூட் தேர்வு என்று தகுதி, திறமை என்ற பெயராலே, மாணவர்களை வடிகட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்தவர்களுக்கு சமூகநீதி இல்லாமல் ஆக்குகிறார்கள்.

எனவே, காமராசர் அவர்களுடைய பிறந்த நாளை, வெறும் வெளிச்சம்போட்டு, மாலை போடுவது என்ற அளவில் நிறுத்தாமல், எந்தக் கொள்கைக்காக, எந்த சாதனைக்காக காமராசர் அவர்கள் வாழ்ந்தார்களோ, அந்தக் கொள்கை என்றைக்கும் நிலைத்திருக்கக் கூடிய அளவிற்கு, அவர் பாடுபட்டு செய்த சாதனைகள் கல் வித் துறையில் - குலக்கல்வித் திட்டத்தை ஒழித்தார்.

இன்றைக்கு அதே குலக்கல்வி வேறு அவதாரம் எடுத்துக் கொண்டிருக்கிறது. இதையெல்லாம் எடுத்துப் போராடுவதுதான், காமராசருக்கு உண்மையிலேயே நாம் செய்யக்கூடிய மிகப்பெரிய மரியாதையாகும்.

அதைத் தொடர்ந்து திராவிடர் கழகமும், திராவிட இயக்கங்களும், 'திராவிட மாடல்' ஆட்சியும் தொடர்ந்து செய்து கொண்டிருக்கின்றன என்பதை நாடு அறியும்.

காமராசர் புகழ் ஓங்குக!

பல்கலைக் கழக கேள்வித்தாளில்  எந்த ஜாதி, தாழ்ந்த ஜாதி?

செய்தியாளர்: சேலம் பெரியார் பல்கலைக் கழக த்தில் செமஸ்டர் தேர்வு வினாத்தாளில், நான்கு ஜாதிகளைக் குறிப்பிட்டு, இதில் எந்த ஜாதி. தாழ்ந்த ஜாதி என்று கேட்டிருப்பது சர்ச்சையாகி இருக்கிறது; பல்கலைக் கழக கேள்வித் தாளிலேயே இதுபோன்ற கேள்வி வருவதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

தமிழர் தலைவர்: வன்மையாகக் கண்டிக்கின்றோம். ஏற்கெனவே, சேலம் பெரியார் பல்கலைக் கழகம் காவி மயமாகிக் கொண்டிருக்கிறது; ஜாதி தர்மம் அங்கே படமெடுத்தாடிக் கொண்டிருக்கின்றது. இதற்குக் காரண மானவர்கள்மீது கடும் நடவடிக்கையை உயர்கல்வித் துறை அமைச்சர் எடுக்கவேண்டும்; எடுக்கவிட்டால், திராவிடர் கழகம் கடுமையாகப் போராடும்.

ஆளுநருக்குச் சொந்தமாக எந்த அதிகாரமும் கிடையாது

செய்தியாளர்: மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவிற்கு, உயர் கல்வித் துறை அமைச்சரை அழைக்காமல், தன்னிச் சையாக ஆளுநர் செயல்பட்டிருப்பது குறித்து...?

தமிழர் தலைவர்: ஆளுநர் ஒரு போட்டி அரசாங் கத்தை நடத்தலாம் என்று நினைத்துக் கொண்டிருக் கிறார். ஆளுநருக்குச் சொந்தமாக எந்த அதிகாரமும் கிடையாது.

அவரைப் பொறுத்தவரையில் பல்கலைக் கழகத்தில் அவர் ex-officio Chancellor என்ற அளவிலேதான் - ஆளுநராக இருக்கிற காரணத்தினால், அதுவும் மாநில அரசு பார்த்து கொடுத்தது.

அதே மாநில அரசு, தமிழ்நாடு அரசு இப்பொழுது மீண்டும் மசோதாவை மற்ற மாநிலங்களில் இருப்பது போல, திருத்தி இருக்கிறது.

அதற்கு ஆளுநர் அனுமதி தர மறுக்கிறார், ஒப்புதல் தர மறுக்கிறார் என்ற சூழ்நிலையில், அவர் ஒரு போட்டி அரசாங்கத்தை நடத்துகிறார்.

எனவேதான், இனிமேல் ஆளுநர், தமிழ்நாட்டில் கலந்துகொள்கின்ற நிகழ்ச்சிகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்பது முதற்கட்டப் போராட்டமாக, அமைதிப் போராட்டமாக இருக்கும்.

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி செய்தியாளர்களிடம் கூறினார். 

No comments:

Post a Comment