ஆளுநரின் செயல்பாட்டில் அதிருப்தி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 13, 2022

ஆளுநரின் செயல்பாட்டில் அதிருப்தி

மதுரை காமராஜர் பல்கலைப் பட்டமளிப்பு விழாவை புறக்கணிக்க அமைச்சர் பொன்முடி முடிவு!

சென்னை, ஜூலை 13 மரபுகளுக்கு மாறாக பல்கலைக்கழக நிர்வாகத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி தலையிட்டு, மாணவர்களிடம் அரசியலைப் புகுத்துவதாக குற்றம்சாட்டி, மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை புறக்கணிப்பதாக உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து நேற்று (12.7.2022) சென்னை தலைமைச் செயலகத்தில் பத்திரிகையாளர்களுக்கு உயர் கல்வித்துறை அமைச்சர் அமைச்சர் முனைவர் க.பொன்முடி அளித்த பேட்டி வருமாறு: 

பொதுவாக பல்கலைக்கழகங்களில் பட்டமளிப்பு விழாவை துணை வேந்தர் உள்ளிட்ட பல்கலைக்கழகத்தின் நிர்வாகம்தான் முடிவு செய்ய வேண்டும். அனைத்து பல்கலைக் கழகங்களிலும் இதுதான் நடைமுறையில் உள்ளது. இந்த நிலையில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் (இன்று) பட்டமளிப்பு விழா நடைபெறும் என்று அறி விக்கப்பட்டுள்ளது. ஆனால், உயர்கல்வி அமைச்சர் மற்றும் பல்கலைக்கழகங்களின் இணை வேந்தர் என்ற அளவில் எங்களிடம் எந்தவிதத் தகவலையும் கூறவில்லை. வேந்தராக உள்ள ஆளுநர் அலுவலகமே அதை அறிவிப்பதாக அந்த பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் கூறுகிறார். இந்த நிகழ்ச்சிக்கு யாரை சிறப்பு விருந்தினராக அழைக்க வேண்டும்? என்பதையெல்லாம் இணை வேந்தரிடம் கேட்க வேண்டும். 

அதில் தரப்படும் பட்டியலில் ஒருவரை தேர்வு செய்து அவர் ஒருவரையே சிறப்பு விருந்தினராக அறிவிக்க வேண்டும். ஆனால் அந்த மரபு முறையை பின்பற்றவில்லை. மேலும், இதுபோன்ற பட்டமளிப்பு விழாக் களுக்கு சிறப்பு விருந்தினர் மட்டுமே அழைக்கப்படுவது மரபு. ஆனால் கவுரவ விருந்தினர் என்ற பெயரில் ஒன்றிய இணை யமைச்சர் எல்.முருகன் அழைக்கப்பட்டுள்ளார். 

டாக்டர் பட்டம் பெறும் பிரமுகரைத்தான் கவுரவ விருந்தினராக அழைத்து பட்டம் வழங்குவார்கள். இந்த விஷயத்தில் உயர் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் மற்றும் அதிகாரிகள், ஆளுநர் அலுவலக அதிகாரிகளுடனும், மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணை வேந்தர் அலுவலகத்துடனும் தொடர்பு கொண்டு பேசினார்கள். ஆளுநர் கூறியதைத்தான் நாங்கள் செய்கிறோம் என்று துணை வேந்தர் கூறுகிறார். 

ஆளுநர் அலுவலக அலுவலர்கள், இப்படித்தான் செய் வோம் என்று கூறுகின்றனர். வேந்தருக்கு பிறகு இணை வேந்தர் பதவி வருகிறது. பட்டமளிப்பு விழாக்களில் வேந்தர் உரையாற்றுவதற்கு முன்பு இணை வேந்தர் உரையாற்ற வேண்டும். வேந்தர் வராத பட்டமளிப்பு விழாக்களில் இணை வேந்தர்தான் பட்டங்களை வழங்கி உரையாற்றுவார். சிறப்பு விருந்தினராக ஒரு கல்வியாளரை அழைத்து, இணை வேந்தருக்கு முன்பாக அவரை உரையாற்ற அழைப்பதுதான் மரபு. ஆனால் இதில், ஒன்றிய இணையமைச்சர் ஒருவரை சிறப்பு விருந்தினராக அழைத்து அவரை இணை வேந்தரான எனக்கு பிறகு உரையாற்றுவார் என்று அறிவித்துள்ளனர். 

மேலும், முதலமைச்சரை விழாவுக்கு அழைத்தால் தலைமை விருந்தினராக அழைப்பார்கள். ஆனால் பலராமன் என்ற இந்திய அறிவியல் நிறுவனத்தின் மேனாள் இயக்குநரை தலைமை விருந்தினராக அழைத்துள்ளனர். பல்கலைக்கழகங்களில் பட்டமளிப்பு விழா நடத்தும்போது உயர் கல்வித்துறை அமைச்சர் மற்றும் இணை வேந்தர் என்ற முறையில் எங்களிடமும் கலந்து பேசி, யாரை சிறப்பு விருந்தினராக அழைக்கலாம்? என்பதை முடிவு செய்யவேண்டும். இப்போது சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டுள்ள எல்.முருகன் கல்வித் துறையைச் சேர்ந்தவரல்ல. 

மேலும் அவர் இணையமைச்சர்தான். சிறப்பு விருந்தினர் என்று யாரையும் பட்டமளிப்பு விழாவுக்கு இதுவரை அழைக்காத நிலையில், எனக்கு பிறகு உரையாற்றும்படி ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகனை சிறப்பு விருந்தினராக அழைத்திருப்பதில் ஆளுநருக்கு இருக்கும் நோக்கம் என்ன? இதுபோன்ற தவறுகளை தவிர்க்க வேண்டும் என்று எவ்வளவோ சொல்லிப் பார்த்தோம். இதையெல்லாம் பார்க்கும்போது, பட்டமளிப்பு விழாவில் மாணவர்களிடையே அரசியலை புகுத்தும் நடவடிக்கைகளில் ஆளுநர் ஈடுபடுகிறாரோ? என்ற சந்தேகம் எழுகின்றது. 

எனவே, இந்த பட்டமளிப்பு விழாவில் நான் கலந்து கொள்ளாமல் புறக்கணிக்கிறேன்.  பட்டமளிப்பு விழாக்களில் மாணவர்களிடம் கட்சி சார்பாக பேசக் கூடாது. இந்த புறக்கணிப்போடு விட்டுவிடாமல் இனி இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காமல் இருப்பதற்காக முதலமைச்சர், அமைச்சர்களுடன் கலந்தாலோசனை செய்வோம். பட்டமளிப்பு விழாவுக்கும் ஆளுநருக்கும் (வேந்தர்) சம்பந்தமில்லை. பல்கலைக்கழகத்தை நடத்தும் துணை வேந்தருக்கும், பல்கலைக்கழக நிர்வாகத் துக்கும்தான் அதில் அதிகாரம் உண்டு. 

ஆனால் பல்கலைக்கழகங்களின் அனைத்து விவ காரங்களிலேயும் முழுக்க முழுக்க இந்த கவர்னர் வேந்தர் என்ற முறையிலும், ஆளுநர் அலுவலகமும் தலையிட்டுக்கொண்டு இருக்கின்றனர். ஆசிரியர்களை அழைத்து பேசுவது, புதிய கல்விக்கொள்கை பற்றி பேசுவது போன்றவை தவறானது. துணை வேந்தர் நியமனங்களிலும் அரசியல் சாயம் பூசப்படுகிறது. பல்வேறு விவகாரங்களில் ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவித்து பல வகைகளில் அவரை உணர்த்தி வருகிறோம். இது தொடர்ந்தால் மறுபடி என்ன செய்ய வேண்டும்? என்பது பற்றி முடிவு செய்வோம். 

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment