குருவரெட்டியூர் பொதுக்கூட்டத்தில் ஈ.வெ.கி.ச.இளங்கோவன் உரை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, July 24, 2022

குருவரெட்டியூர் பொதுக்கூட்டத்தில் ஈ.வெ.கி.ச.இளங்கோவன் உரை

 காவிமயக்காரர்களை நாம் துரத்தியடிக்கவேண்டும் என்றால்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கரங்களைப் பலப்படுத்துவதில் உறுதியாக இருக்கவேண்டும்!

குருவரெட்டியூர், ஜூலை 24  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுடைய கரங்களைப் பலப்படுத்தவேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருந்தால்தான், காவிமயக் காரர்களை நாம் துரத்தியடிக்க முடியும் என்றார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மூத்த தலைவர் ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள்.

குருவரெட்டியூரில் பொதுக்கூட்டம்

கடந்த 3.7.2022 அன்று மாலை குருவரெட்டியூரில் நடைபெற்ற கழகப் பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு காங் கிரஸ் கமிட்டியின் மூத்த தலைவர் ஈ.வெ.கி.ச.இளங் கோவன்  சிறப்புரையாற்றினார்.

அவரது சிறப்புரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:

ஆனால், உண்மைகளை ஆணித்தரமாக சொல்லக் கூடிய  அந்தத் திராணியும், திறமையும் யாருக்கு இருக்கின்றது என்றால், பதவியைத் துச்சமாக மதிக்கின்ற இந்தத் திராவிடர் கழகத்திற்குத்தான் இருக்கின்றதே தவிர, வேறு யாருக்கும் கிடையாது.

மு.க.ஸ்டாலின் தலைமையில் 

‘திராவிட மாடல்’ ஆட்சி!

இன்றைக்குத் தமிழ்நாட்டில் ஒரு நல்லாட்சி - பாசத்திற்குரிய மு.க.ஸ்டாலின் அவர்களுடைய தலை மையில் ஒரு நல்லாட்சி நடந்துகொண்டிருக்கின்றது. இன்னும் சொல்லப்போனால், ஒரு ‘திராவிட மாடல்’ அரசியல்.

நீங்கள் கேட்கலாம், ஒரு காங்கிரஸ் கட்சிக்காரனாக இருந்துகொண்டு, நீ திராவிட மாடலைப்பற்றி பேசலாமா? என்று.

நான் இந்தியன், ஏற்றுக்கொள்கின்றேன். ஆனால், முதலில் நான் தமிழன்.

என்னை சார்ந்தவர்கள் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, சோனியா காந்தி போன்றவர்கள் - அது அரசியல்.

சுயமரியாதை உள்ளவனாக என்னால் இருக்க முடிகிறது என்று சொன்னால், அதற்குக் காரணம், சிறு வயதிலிருந்து நான் விரும்பியோ, விரும்பாமலோ என் காதுகளில் விழுந்த செய்திகளின்மூலமாகத்தான் - இன் றைக்கு வரைக்கும் நான் சுயமரியாதைக்காரனாக இருக் கிறேன்; கடைசிவரைக்கும் அப்படித்தான் இருப்பேன்.

பிரகலாதன் இருந்திருந்தால், பல நல்ல காரியங்களை இந்த குருவரெட்டியூருக்குச் செய்திருப்பார்!

இன்றைக்கு பிரகலாதனின் நினைவு நாளை - அவரை நினைத்து நாம் நடத்துகின்றோம். நல்ல மனிதர் அவர் - இருந்திருந்தால் இன்னும் பல நல்ல காரியங்களை இந்த குருவரெட்டியூருக்குச் செய் திருப்பார் என்று நாம் நினைக்கின்றோம். இதுதான் ஒரு மனிதனுக்குப் புகழே தவிர, ஒருவர் இருக்கும் பொழுது மதிப்பவர்கள்- அவர் இல்லாமல் போனால், அவரை மதிக்கமாட்டார்கள் என்றால், அதன் பொருள், அவர் மக்களுக்கு நல்லது செய்ய வில்லை- கெட்டவைகளைத்தான் செய்திருக் கின்றார் என்றுதான் பொருள்.

ஆகவே, நீ உயிரோடு, பலத்தோடு இருக்கும்பொழுது, உன்னுடைய கால்களில் விழுந்து கெஞ்சி, எதையாவது பெறவேண்டும் என்ற சுயநலத்தோடுதான் இருப்பார்கள். ஆனால், இறந்த பிறகு, அவரை மறந்துவிடுவார்கள்.

இன்றைக்கு நாம் இறந்த தலைவர்களைப் போற்று கின்றோம் என்றால், எத்தனையோ தலைவர்கள் இருந்திருக்கின்றார்கள். 

யார் யாரோ தலைவர் பட்டத்தை அந்தக் காலத்தில் சூட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

நானும், 1920 ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை வெளிவந்த திராவிடர் கழகத்தினுடைய புத்தகங்களை யும், ‘குடிஅரசு’ பத்திரிகையின் தலையங்கங்களையும் படித்துக் கொண்டு வந்திருக்கின்றேன். இன்றுவரை அதுதான் நடந்துகொண்டிருக்கின்றது. இறந்த பிறகு, கேட்பதற்கு யாரும் கிடையாது.

தந்தை பெரியார், அண்ணா போன்ற தலைவர்கள் மக்களால் போற்றப்படுகின்றார்கள் என்றால்...

ஆனால், தந்தை பெரியாரைப் போன்றவர்கள், காம ராஜரைப் போன்றவர்கள், அண்ணாவைப் போன்றவர் கள், கலைஞரைப் போன்றவர்கள், இந்திரா காந்தியைப் போன்றவர்கள் இன்றைக்கும் மக்களால் போற்றப்படு கின்றார்கள் என்றால், அவர்கள் மக்களுக்கு நல்ல காரியங்களைச் செய்திருப்பதினால்தான்.

மக்களை பகுத்தறிவாளர்களாக மாற்றினார்களா, சுயமரியாதைக்காரர்களாக மாற்றினார்களா என்றால், நாம் அதைக் கண்டிப்பாக சொல்ல முடியாது. ஆனால், மக்களை பொருளாதாரத்தில் அவர்களுடைய தரத்தை உயர்த்தினார்களா? என்று கேட்டால், ஒரு சில தலைவர்களைச் சொல்ல முடியும்.

திராவிட இயக்கத்தைத்தான்

சாரும்

ஆனால், தமிழ்நாட்டில் இருக்கின்ற மக்கள் பகுத் தறிவுவாதிகளாக, சுயமரியாதைக்கார்களாக இருக்கின் றார்கள் என்று சொன்னால், அதனுடைய வெற்றி என்பது இந்தத் திராவிட இயக்கத்தைத்தான் சாரும்.

அருமை நண்பர்களே, இன்றைக்கு நான் மன நிறைவோடு இருக்கின்றேன்.

நேற்று நடைபெற்ற விழாவும், மனதிற்கு நிறைவான விழாவாக நடைபெற்றது. திராவிடர் கழகத்தில், மூத்த பெரியார் பெருந்தொண்டராக இருக்கின்ற சண்முகம் அவர்களுக்குப் பொத்தனூரில் நூற்றாண்டு விழா நடை பெற்றது. அந்த விழாவில் கலந்துகொள்ளும்பொழுது எனக்கு மனநிறைவாக இருந்தது.

இன்றைக்கு இத்தனை தன்மான உணர்வுகளையும், சுயமரியாதை, பகுத்தறிவு உணர்வையும் கட்டிக் காப்ப தோடு மட்டுமல்ல, மக்களுக்கு அதைக் கொடுப்பது, மக்களையும் சுயமரியாதைக்காரர்களாக மாற்றுவது என்பது ஒரு ‘புனித யாத்திரை!’

‘புனித யாத்திரை’ என்று சொன்னால், அதை நீங்கள் ஏற்றுக்கொள்ளமாட்டீர்கள். அது வேறு விஷயம் - ஆனால், எனக்குத் தெரிந்த பாஷை அதுதான்.

ஒரு நல்ல பாதையை இன்றைக்கு மக்கள் தேர்ந் தெடுத்து இருக்கின்றார்கள் என்று சொன்னால், அதற்கு நீங்கள்தான் காரணம்.

மக்கள் இறுதிவரை, மக்கள் மிருகங்களாக இருக்கக் கூடாது - தமிழ் மொழிக்கு அந்தஸ்து வரவேண்டும் என்ற காலகட்டம் வந்தபொழுது, அதற்காக ஒரு சட்டத்தைக் கொண்டு வந்தவர் நம்முடைய காமராஜர், அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

தமிழர்கள் முன்னேறவேண்டும் என்பதில் நாம் அக்கறை கொண்டிருக்கின்றோம்

நமக்கும், அவர்களுக்கும் கொள்கையிலே வித்தியாசம் இருக்கலாம். ஆனால், தமிழர்கள் முன்னேறவேண்டும் என்பதில் நாம் எல்லோரும் அக்கறையாக இருக்கின்றோம்.

தமிழர்களை ஒழிக்கவேண்டும் என்று நினைக் கின்ற சக்தி எதுவென்று சொன்னால், அது மோடி யின் தலைமையில் இருக்கின்ற சக்தி - இங்கே இருக்கின்றார்களே, மேஜைக்குக் கீழே ஊர்ந்து போய் கால் பிடித்துப் பேசிய துரோகிகள். அவர் களுக்கு ஆதரவுக் கேட்டுக் கொண்டிருக்கின்றார் கள்; காவடி தூக்குகின்றார்கள். இது தமிழ்நாட்டிற்கு ஏற்பட்ட மிகப்பெரிய அவமானம் என்று நினைக் கின்றேன்.

பகைக்குக் காரணம் மோடிதான்!

கண்டிப்பாக இதை எம்.ஜி.ஆர். செய்திருக்கமாட்டார்; ஏன், ஜெயலலிதாகூட செய்திருக்கமாட்டார். ஆனால், இன்றைக்கு அந்த இயக்கத்தின் தலைவர்கள் என்று சொல்லிக் கொண்டிருக்கின்றவர்கள், ஒருவரை ஒருவர் ஏமாற்றிக் கொண்டு, ஒருவரை ஒருவர் எதிர்க்கின்றார்கள் என்று சொன்னால், இருவருக்கும் சண்டை மூட்டிவிட்டது இந்த மோடிதான்.

இதைத்தான் பன்னீர்செல்வம் அவர்கள் ஒப்புக் கொண்டார்கள்; ‘‘நீ துணை முதலமைச்சராக இரு என்று அன்றைக்கு மோடி சொன்னதால், அதை நான் ஏற்றுக்கொண்டேன்’’ என்கிறார்.

இன்னும் 6 மாதம் கழித்து என்ன சொல்வார், ‘‘மோடி சொன்னதினால்தான், நான் எடப்பாடி பழனிசாமியை எதிர்த்தேன்’’ என்று சொல்வார்.

எடப்பாடி என்ன சொல்வார், ‘‘மோடி சொன்ன தினால்தான், நான் பன்னீர்செல்வத்தை எதிர்த்தேன்’’ என்று சொல்லப் போகிறார்.

வடக்கே இருந்து வருபவர்களுக்குச் 

சோரம் போகின்ற ஒரு கூட்டம்

இன்னும், வடக்கே இருந்து வருபவர்களுக்குச் சோரம் போகின்ற ஒரு கூட்டம் தமிழ்நாட்டில் இன்றைக்கும் இருந்து கொண்டிருக்கின்றது.

சில நேரங்களில் நினைக்கும்பொழுது, இன்னும் ஒரு 10, 15 பெரியார்கள் பிறக்கமாட்டார்களா? என்று தோன்றும்.

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் இன்னும் தீவிரமாகச் சுற்றுப்பயணங்களை  மேற்கொள்ள மாட்டாரா? என்று தோன்றினாலும், அவர்மீதுள்ள தனிப்பட்ட அக்கறையின் காரணமாக, அவர் இப்படி அலையக்கூடாது என்றும் நான் கேட்டுக் கொள்கின்றேன்.

கொடி ஒன்று கிராமத்தில் ஏற்றினால், 

10 ஆயிரம் ரூபாயாம்!

இன்றைக்குக் கிராமங்கள்தோறும் காவிக் கொடிகள் பறக்கின்றன; கோவில்கள் இருக்கின்ற இடங்களில் எல்லாம் பாரதிய ஜனதா கட்சியினுடைய கொடி பறக்கவிடப்படுகின்றது. அதுமட்டுமல்ல, கொடி ஒன்று கிராமத்தில் ஏற்றினால், 10 ஆயிரம் ரூபாய். ஊரிலே எவன் பெரிய ரவுடி, அவனைப் பிடித்துக்கொண்டு வந்து கட்சியிலே சேர் என்கிற நிலை உள்ளது.

மதத்தின் பெயரால் மக்களைப் பிரிக்கவேண்டும்; பிறகு ஜாதியின் பெயரால் பிரிக்கவேண்டும்; பின்பு மொழியின் பெயரால் மக்களைப் பிரிக்கவேண்டும்; இந்திதான் இந்தியா முழுவதும் - கன்னியாகுமரியிலி ருந்து, இமயமலை வரை ஒரே மொழியாக இருக்க வேண்டும்; ஒரே தேசம், ஒரே கொடி, ஒரே மொழி, ஒரே பண்பாடு என்ற ரீதியில் இன்றைக்குப் போய்க் கொண் டிருக்கின்ற மோடிக்கு ஒன்றைச் சொல்லிக் கொள்கின் றேன், மீண்டும் நீங்கள் ஆட்சிக்கு வர முடியாது; ஆனால், வந்தால், இந்த நாட்டிற்குப் பெரிய இழப்பு.

யு.எஸ்.எஸ்.ஆர். நாட்டின் நிலைமை இந்தியாவிற்கும் ஏற்படும்!

எப்படி யு.எஸ்.எஸ்.ஆர். என்று சொன்னாமோ - அது எப்படி இன்றைக்கு சிதைந்து போயிருக்கின்றதோ, அதே நிலைமை இந்தியாவிற்கும் ஏற்படும்.

இதை நாம் சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது; பஜனைதானே பாடுகின்றான், பாடிவிட்டுப் போகட்டும்;

சாமிதானே ஆடுகின்றான், ஆடிவிட்டுப் போகின் றான் என்று நாம் சும்மா இருந்தோம் என்றால்,

சாமி ஆடுகின்றவன், கடைசியில் நம்மீதே ஆட ஆரம்பித்துவிடுவான்.

காவிக் கட்சியினரை 

நாம் ஒழித்தாகவேண்டும்!

இவர்களை நாம் ஒழித்தாகவேண்டும் என்ற உறுதியோடு செயல்பட்டால்தான், இந்தியாவைக் காப்பாற்ற முடியும்; தமிழ்நாட்டை முன்னேற்ற முடியும்.

இன்றைக்கு ராணுவத்தைக் காவி மயமாக்க வேண்டும் என்பதற்காகத்தான் அக்னிபத் என்கிற திட்டத்தைக் கொண்டு வருகின்றார்கள். அந்தத் திட்டத்தில், 6 மாதம் பயிற்சி; மூன்று ஆண்டு வேலை - அதற்குப் பிறகு, அவர்களில் 25 சதவிகித பேரை ராணுவத்திற்கு எடுத்துக்கொள்வோம் - மீதி பேர் வீட்டிற்குப் போகலாம் என்று சொல் கின்றார்களே,

வடக்கே உள்ளவர்களுக்குப் புரிய 

இன்னும் பல ஆண்டுகளாகும்!

மீதியுள்ளவர்களை வீட்டிற்குப் போகவேண்டும் என்று சொல்வதின் உள் அர்த்தம் என்னவென்றால், அவர்கள் அத்தனை பேரையும் ஆர்.எஸ்.எஸ். அமைப் பில் சேருங்கள் என்று சொல்வதுதான். ராணுவத்தை காவிமயமாக்கவேண்டும் என்பதற்காகத்தான், இன் றைக்கு அக்னிபத் திட்டத்தை கையிலே எடுத்திருக்கின்றார்கள்.

தமிழ்நாட்டில் அவர்களால் வெற்றி பெற முடியாது. ஆனால், வடக்கே, அங்கே உள்ள மக்களுக்கு நம்மைப் போன்று அறிவு வரவில்லை.  சில பேர் படித்திருக்கலாம்; ஆனால், நம்மைவிட அறிவிலும், மூளையிலும் குறைவுதான். ஆகையால், அவர்களுக்கு இன்னும் பல ஆண்டுகள் ஆகும், சில விஷயங்கள் அவர்களுடைய மண்டையில் ஏறுவதற்கு.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுடைய கரங்களைப் பலப்படுத்தவேண்டும்

அதை நாம் உணர்ந்திருக்கின்ற காரணத் தினால்தான், எதிர்த்தாகவேண்டும் என்று நான் சொல்லுகின்றேன்.

அதை எப்படி செய்யவேண்டும் என்று சொன் னால், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களு டைய கரங்களைப் பலப்படுத்தவேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருந்தால்தான், இந்தக் காவிமயக்காரர்களை நாம் துரத்தியடிக்க முடியும். ஏனென்றால், ஸ்டாலின் அவர்கள் வீரர். எனக்கு அவரை பல ஆண்டுகளாகத் தெரியும். இன்னும் சொல்லப்போனால், ஸ்டாலின் அவர்களுடைய அண்ணன் மு.க.முத்து அவர்கள், என்னுடைய சமகால தோழர்.

மு.க.ஸ்டாலின் அவர்களை எனக்குப் பல ஆண்டுகளாகத் தெரியும்; ஆனால், முதலமைச்ச ரானவுடன், இவ்வளவு ஒரு சிறப்பான ஆட்சியை, கடுமையான உழைப்பை அந்த மனிதர் தருவார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. அதை இன் றைக்குப் பார்த்து அசந்து போயிருக்கின்றேன்.

நான் அவரைப் பார்க்கும்பொழுது என்ன சொல்லவேண்டும் என்றால், நான் எப்படி தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்குச் சொல்லுகின் றேனோ, அதுபோல், ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள் சில காலத்திற்கு.

சில காலத்திற்கு என்று சொன்னால், பதவியேற்ற நாளிலிருந்து இன்றைக்கு ஓராண்டை நாம் கடந் திருக்கின்றோம். ஆனால், ஒரு நாள்கூட அவர் ஓய்வெடுத்ததில்லை. சென்ற வாரம் அவருக்குக் காய்ச்சல் வந்ததின் காரணமாக, இரண்டு, மூன்று நாள்கள் ஓய்வெடுத்தார்.

காவி வேட்டிகள் துரத்தியடிக்கப்படவேண்டும்

எப்படி ஆசிரியர் அவர்கள் நூறாண்டுகளுக்கு மேலும் வாழவேண்டும் - அவர் நன்மைக்காக அல்ல - நம்முடைய நன்மைக்கு என்று நாம் நினைக்கின்றோமோ, அதுபோல், மு.க.ஸ்டாலினும், திராவிட முன்னேற்றக் கழகமும் இங்கே ஆட்சி செய்வது தொடரவேண்டும் - தீய சக்திகள் ஒழிக்கப்படவேண்டும் - காவி வேட்டிகள் துரத்தியடிக்கப்படவேண்டும் என்பதை மட்டும் பிரகலாதன் நினைவு நாளன்று, உறுதியாக எடுத்துக் கொண்டு என்னுரையை முடிக்கின்றேன்.

நன்றி, வணக்கம்!

 - இவ்வாறு  தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மூத்த தலைவர் ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் சிறப்புரை யாற்றினார்.

No comments:

Post a Comment