மரத்தடி பள்ளிகளுக்கு புதிய கட்டடங்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, July 24, 2022

மரத்தடி பள்ளிகளுக்கு புதிய கட்டடங்கள்

  அமைச்சர் மகேஸ் பொய்யாமொழி

ராமநாதபுரம், ஜூலை 24 தமிழ்நாட்டில் மரத்தடி வகுப்புகள் நடைபெறும் சுமார் 2,500 பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள் கட்டப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறினார்

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை முகம்மது சதக் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற வயது வந்தோர் கல்வித் திட்டத்தில் அடிப்படை எழுத்தறிவு பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்குதல் மற்றும் கற்பித்தல் பணியில் ஈடுபட்ட தன்னார்வலர்களுக்கான பயிற்சிப் பணி தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் அன்பில் மகேஷ், செய்தியாளர்களிடம் கூறியது:

தமிழ்நாட்டில் கல்வித்தரத்தை மேம்படுத்தும் வகையில் அனைத்துப்பள்ளிகளின் அடிப்படை வசதிகள் மேம்பாட்டுக்கு ரூ.7 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டு, முதல் கட்டமாக ரூ.1,300 கோடிக்கு அனுமதி பெறப்பட்டுள்ளது. அதனடிப்படையில் மக்கள் பிரதிநிதிகள் பரிந்துரைப்படி பள்ளிகளின் பட்டியல் தயாரித்து சுமார் 10,031 பள்ளிகளின் கட்டடங்கள் சீரமைக்கப்படவுள்ளன. 

மாநில அளவில் சுமார் 2,500 பள்ளிகளில் மரத்தடிகளில் அமர்ந்து மாணவ, மாணவியர் படிக்கும் நிலை உள்ளது. பாதுகாப்பற்ற நிலையில் யாரும் பள்ளிகளில் அமரக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆகவே அந்த பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் நகரில் பள்ளிகளின் தரம் உயர்த்தப்படுதல் மற்றும் குடிநீர் பிரச்னை இல்லாத நிலையை ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

விதிமுறைக்கு உள்பட்டு புதிய பள்ளிகள் அமைக்கப்படும்.பள்ளிக் குழந்தைகளுக்கு உரிய நேரத்தில் புத்தகங்கள், சீருடைகள் வழங்கப்படும். அடுத்த கல்வியாண்டுக்கான புத்தகங்கள் வரும் அக்டோபர், நவம்பரிலேயே தயாராக வைத்திருக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்

கள்ளக்குறிச்சி பள்ளிச் சம்பவத்தைப் போல இனிமேல் நடைபெறாமலிருக்க மாணவ, மாணவியரின் தன்னம்பிக்கையை மேம்படுத்துவது முக்கியம். மாநிலத்தில் உள்ள 38 ஆயிரம் பள்ளிகளில் ஓரிரு இடங்களில் விரும்பத்தகாத சம்பவம் நடந்தால், அது ஒட்டுமொத்த கல்வித்துறைக்கே அவப்பெயரை ஏற்படுத்துகிறது.

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மீதான வன்முறையில் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவியருக்கு உதவ அப்பகுதியில் உள்ள பிற பள்ளி நிர்வாகங்கள் முன்வந்துள்ளன. அச்சம்பவம் தொடர்பாக வழக்கு விசாரணை அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

No comments:

Post a Comment