வானளாவிய அதிகாரமா?: ஆளுநருக்கு வைகோ கண்டனம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 14, 2022

வானளாவிய அதிகாரமா?: ஆளுநருக்கு வைகோ கண்டனம்

சென்னை, ஜூலை 14  "மதுரை காமராசர் பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவை அரசியல் மேடையாக்குவதற்கு வழிவகுத்துத் தந்துள்ள ஆளுநரின் நடவடிக்கை கடும் கண்டத்துக்கு உரியதாகும்" என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: "மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தின் 54ஆவது பட்டமளிப்பு விழாவில்  பல்கலைக் கழக வேந்தரும், தமிழ்நாடு ஆளுநருமான ஆர்.என்.ரவி பட்டங்களை வழங்கி உரை நிகழ்த்துகிறார். மேலும் இவ்விழாவில் தமிழ்நாடு உயர்கல்வித் துறை அமைச்சரும், பல்கலைக் கழக இணை வேந்தருமான க.பொன்முடி வாழ்த்துரை வழங்குவார்; ஒன்றிய தகவல் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர் எல்.முருகன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று சிறப்புரை ஆற்றுவார். இந்திய அறிவியல் நிறுவன உயிரியல் அறிவியலுக்கான தேசிய மய்ய இருக்கை பேராசிரியர் ப.பலராம் முதன்மை விருந்திரனராக பங்கேற்று, பட்டமளிப்பு விழா உரையாற்றுவார் என்று பல்கலைக் கழகம் அறிவித்தது.

மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற இந்தப் பட்டமளிப்பு விழா குறித்து பல்கலைக் கழக இணை வேந்தரும், உயர்கல்வித் துறை அமைச்சருமான க.பொன்முடி கவனத்திற்கு வராமலேயே பல்கலைக் கழக நிர்வாகம் பட்டமளிப்பு விழாவை ஏற்பாடு செய்திருக்கிறது. தமிழ்நாடு உயர்கல்வித் துறை மூலம் பல்கலைக் கழக நிர்வாகத்திடம் இது பற்றி விளக்கம் கேட்டபோது, பல்கலைக் கழகங்களின் வேந்தர் என்ற முறையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி வழிகாட்டுதலுடன் இவ்விழா நடைபெறுவதாகவும், விழாவில் பங்கேற்போர் குறித்து ஆளுநரே முடிவெடுத்து பட்டமளிப்பு விழா தேதியையும் உறுதி செய்ததாகக் கூறப்படுகிறது.

“பட்டமளிப்பு விழாவில் இணை வேந்தர் உரையாற்றிய பிறகு ஒன்றிய இணை அமைச்சர் உரையாற்றும் வகையில் நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டு இருப்பது மரபு மீறலாகும். ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகனை இவ்விழாவுக்கு அழைத்திருப்பதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் முறையாக தமிழ்நாடு அரசின் உயர்கல்வித் துறையிடம் அனுமதி பெற்றிருக்க வேண்டும்” என்று தமிழ்நாடு அரசு சார்பில் துணை வேந்தரிடம் அறிவுறுத்தப்பட்டபோது, “எனக்கும் எதுவும் தெரியாது. பட்டமளிப்பு விழா குறித்த அனைத்து நிகழ்வுகளும் ஆளுநர் அலுவலகம்தான் மேற்கொண்டது” என்று அவர் தெரிவித்து இருக்கிறார்.

ஆளுநர் மாளிகை அலுவலர்களுடன் தமிழ்நாடு அரசின் அதிகாரிகள் தொடர்புகொண்டு கேட்டபோது, “நாங்கள் அப்படிதான் அழைப்போம். என்ன முடியுமோ அதைச் செய்து கொள்ளுங்கள்” என்று மரியாதையின்றி பேசுகின்றனர். இவ்வாறு ஆளுநர் வரம்பை மீறி பல்கலைக் கழகச் செயல்பாடுகளில் தலையிடுவதால், அதைக் கண்டிக்கும் விதமாக “பட்டமளிப்பு விழாவைப் புறக்கணிக்கிறோம்” என்று தமிழ்நாடு உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி தெரிவித்து இருக்கிறார்.

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் அடாவடியான செயல்பாடுகள், போட்டி அரசு நடத்துவதைப் போல இருக்கிறது.அரசமைப்புச் சட்டப்படி ஆளுநர் மாநில முதலமைச்சர் தலைமையிலான அமைச்சரவையின் அறிவுரைப்படிதான் இயங்க முடியும். ஆளுநரின் அதிகாரம் பரந்துபட்டது எனினும், பொதுவாக இவர் தன்னிச்சையாகச் செயல்படக் கூடாது என்று உச்சநீதிமன்றம் பல்வேறு தீர்ப்புகளில் சுட்டிக்காட்டி இருக்கிறது.

மேலும் ஒருவர் ஆளுநராக இருப்பதால்தான் (Ex.Officio)  பல்கலைக் கழகங்களின் வேந்தராக உள்ளார். ஆளுநரே அமைச்சரவையின் அறிவுரையின் பேரிலே செயல்பட வேண்டும் என்பதால், வேந்தர் பணிகளையும், அமைச்சரவையின் ஆலோசனையின்படிதான் மேற்கொள்ள முடியும். பல்கலைக் கழக வேந்தர் எனும் பதவி, மாநில அரசின் கீழ் உள்ள பல்கலைக் கழகச் சட்ட விதிகளின்படி வழங்கப்பட்டதாகும். எனவே வேந்தர் பதவி அதிகாரத்தை ஆளுநர் தான் விரும்பியவாறு செயல்படுத்த முடியாது.

ஆளுநர் ஆர்.என்.ரவி அரசமைப்புச் சட்ட நெறிகளை காலில் போட்டு மிதிப்பதையும், அதிகார வரம்பை மீறி செயல்படுவதையும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை அலட்சியப் படுத்துவதையும் ஒருபோதும் அனுமதிக்க முடியாது.மதுரை காமராசர் பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவை அரசியல் மேடையாக்குவதற்கு வழிவகுத்துத் தந்துள்ள ஆளுநரின் நடவடிக்கை கடும் கண்டத்துக்கு உரியதாகும். தமிழ்நாடு ஆளுநர் தனக்கு வானளாவிய அதிகாரம் இருக்கிறது என்று நினைத்துச் செயல்படுவதையும், பேசுவதையும் நிறுத்திக்கொள்ள வேண்டும்" என்று அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment