தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மேனாள் தலைவர் ஈ.வெ.கி.ச.இளங்கோவன் நெகிழ்ச்சியுரை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 6, 2022

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மேனாள் தலைவர் ஈ.வெ.கி.ச.இளங்கோவன் நெகிழ்ச்சியுரை

 பெரியார் பெருந்தொண்டர் பொத்தனூர் க.சண்முகம் போன்றவர்கள் 150 ஆண்டுகள் அல்ல - இன்னும் அதிக ஆண்டுகள் வாழவேண்டும்!

பெரியாருடைய கொள்கைகளைப் பரப்பவேண்டும் என்பதற்காக 90 வயது இளைஞராக ஒவ்வொரு நாளும் ஓடோடிக் கொண்டிருக்கிறார் நம்முடைய தமிழர் தலைவர்!

பொத்தனூர், ஜூலை 6   க.சண்முகம் போன்றவர்கள் 150 ஆண்டுகள் அல்ல, இன்னும் அதிக ஆண்டுகள் வாழவேண்டும் என்று நான் விரும்புகின்றேன். காரணம், இந்தத் தமிழ் மக்களுக்கு நல்லது செய்வதற்காகத்தான் இன்னும் அவர் அதிக ஆண்டுகள் வாழவேண்டும் என்று சொல்கிறேன். நான் இந்த சமுதாயத்திற்கு உழைக்கவேண்டும்; பெரியாருடைய கொள்கைகளைப் பரப்பவேண்டும் என்ற நிலை எடுத்து, அதற்காக இன் றைக்குத் 90 வயது இளைஞராக இருந்து பாடுபட்டுக் கொண்டிருக்கின்றார் நம்முடைய தமிழர் தலைவர் ஆசிரியர். ஒவ்வொரு நாளும் நம் மக்களின் நலனுக்காக ஓடோடிக் கொண்டிருக்கின்றார் என்றார் தமிழ்நாடு காங்கிரஸ் மேனாள் தலைவர் ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள்.

பெரியார் பெருந்தொண்டர் பொத்தனூர் க.சண்முகம் நூற்றாண்டு விழா

கடந்த 3.7.2022 அன்று பொத்தனூரில் நடைபெற்ற சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத் தலைவரும், மூத்த பெரியார் பெருந்தொண்டருமான பொத்தனூர் க.சண் முகம் அவர்களின் நூற்றாண்டு விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் மேனாள் தலைவர் ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் சிறப்புரையாற்றினார்.

அவரது சிறப்புரை வருமாறு:

மாமனிதர் க.சண்முகம் அவர்களுடைய நூற்றாண்டு விழாவினை தலைமையேற்று நடத்திக் கொண்டிருக் கின்ற குமார் அவர்களே,

நூறாண்டுகள் வாழ்ந்து இன்னும் பல ஆண்டுகள் வாழ வேண்டும் என்று, அவரை வாழ்த்துவதற்காக வந்திருக்கின்ற தமிழர் தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்களே,

மரியாதைக்குரிய கலி.பூங்குன்றன் அவர்களே, 

முனைவர் துரை.சந்திரசேகரன் அவர்களே, பாசத் திற்குரிய அன்புராஜ் அவர்களே, குமரேசன் அவர்களே, ஜெயக்குமார் அவர்களே, குணசேகரன் அவர்களே, இன்பக்கனி அவர்களே, ஈரோடு சண்முகம் அவர்களே, மற்றும் என்னோடு இந்த விழாவில் கலந்துகொண்டி ருக்கின்ற நாமக்கல் மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலை வர்கள் மரியாதைக்குரிய சித்திக் அவர்களே, பாசத்திற் குரிய செல்வக்குமார் அவர்களே, நெடுங்காலமாக காங்கிரஸ் பேரியக்கத்தில் உழைத்துக் கொண்டிருக்கின்ற வி.ஏ.பரமசிவம் அவர்களே, சீனிவாசன் அவர்களே, மற்றும் இங்கே எதைப்பற்றியும் கவலைப்படாமல், இந்த சமூகம், இந்த நாடு நல்வழியில் செல்லவேண்டும் என்பதற்காகத் தங்களை அர்ப்பணித்துக் கொண்டு இங்கே வந்திருக்கின்ற கருஞ்சட்டை வீரர்களே, உங்கள் அனைவருக்கும் என்னுடைய நெஞ்சார்ந்த வணக்கத் தினைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

என்னுடைய வாழ்வில் பெருமைதரக்கூடிய நிகழ்ச்சிகளில் இந்நிகழ்ச்சியும் ஒன்று

பெரியவர் க.சண்முகம் அவர்களை வாழ்த் துவதற்கு என்னை இங்கே அழைத்தது என்பது, என்னுடைய வாழ்வில் நடந்த மகிழ்ச்சிகரமான அல்லது பெருமைதரக்கூடிய நிகழ்ச்சிகளில் இந் நிகழ்ச்சியும் ஒன்று என்று நான் நினைக்கின்றேன்.

அதற்காக திராவிடர் கழக நண்பர்கள் அத் துணை பேருக்கும், குறிப்பாக தமிழர் தலைவர் அவர்களுக்கும் என்னுடைய நன்றியைத் தெரி வித்துக் கொள்கின்றேன்.

பொதுவாழ்வில் இருக்கின்றவர்கள் அல்லது அரசி யலில் இருக்கின்றவர்கள் பல பேர் உலகம் முழுவதும் பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள்; அல்லது நாடு முழுவதும் பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள். அல்லது மாநிலம் முழுவதும் பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள். ஆனால், உள்ளூரில் அவர்களுக்கு எவ்வளவு மரியாதை இருக்கிறது என்பதுதான் முக்கியம்.

ஊரிலே  வேண்டாம்; அவர் வசிக்கின்ற தெருவிலே இரண்டு ஓட்டுகள்கூட விழவில்லை என்பார்கள்

எனக்குத் தெரிந்து பல நாடாளுமன்ற உறுப்பினர்கள், எதிர்க்கட்சித் தலைவர் என்று சொல்லக்கூடியவர்கள் எல்லாம் தேர்தல் நேரத்தில், கூட்டணியின் பலத்தில் நாங்கள் வெற்றி பெற்றுவிடுகின்றோம் - அப்படிப்பட்ட தலைவர்களில் சில பேர், ஊரிலே எவ்வளவு  ஓட்டு விழுந்தது என்று சொன்னால், ஊரிலே  வேண்டாம் - அவர் வசிக்கின்ற தெருவிலே இரண்டு ஓட்டுகள்கூட விழவில்லை என்று சொல்வார்கள்.

ஆனால், தான் பெரிய தலைவர், மக்களுடைய எழுச்சித் தலைவர் என்று போர்வையிலே அவர்கள் புகுந்துகொண்டிருப்பார்கள். ஆனால், உண்மை நிலைமை அதுதான்.

பொத்தனூர் க.சண்முகம் அவர்களை கடந்த முறை நம்முடைய தமிழர் தலைவர் அவர்கள் ஈரோடு வந்த பொழுது, அவரை சந்திக்கச் சென்றபொழுதுதான், நான்  முதன்முறையாக அவரைப் பார்த்தேன்.

பார்க்கும்பொழுது, இவர் நூறு வயதைக் கடக்கப் போகின்றவர் என்று சொல்லும்பொழுது, என்னால் நம்ப முடியவில்லை.

ஏனென்றால், என்னைவிட திடகாத்திரமாக, சுறு சுறுப்பாக, தெளிவாக - அதே சமயத்தில் அமைதியாக அமர்ந்திருக்கிறார்.

தமிழர் தலைவர் அவர்கள், என்னை அவருக்கு அறிமுகப்படுத்தினார்கள்.

அப்போதுதான், அவருடைய நூற்றாண்டு விழாவில் நான் பங்கேற்கவேண்டும் என்று சொன்னார்கள். மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டேன் நான்.

காங்கிரஸ் கட்சியில் கொஞ்சம் கஷ்டம்

எதற்காக நான், சொந்த ஊரில் மரியாதை இல்லாத வர்கள், உலகம் முழுவதும் பெயர் பெற்றவர்கள்போல் பாவனை செய்கிறார்கள் என்று சொன்னேன் என்றால், நான்  இங்கே வருவதற்கு முன்பு, காங்கிரஸ் கமிட்டியினுடைய அலுவலகத்திற்குச் சென்றேன், அங்கே பரமசிவம், இன்னும் சில பெரியவர்கள் இருந்தார்கள். எங்கேயும் இளைஞர்களைக் காணவில்லை; அது காங்கிரஸ் கட்சியில் கொஞ்சம் கஷ்டம்.

நான் அவர்களிடம், சண்முகம் அவர்களைப்பற்றி கேட்டேன், அத்தனை பேரும் பெருமையாகச் சொன் னார்கள். ‘‘எங்கள் ஊரைச் சார்ந்தவர்; அவர் மிகவும் நல்லவர். நிறைய சொத்துகள் இருந்தது; நிறைய தோட்டங்கள் இருந்தன; வீடுகள் இருந்தன; எல்லா வற்றையும் விற்றுவிட்டார்; வீடு மட்டும் இப்பொழுது இருக்கின்றது’’ என்று சொன்னார்கள். அதேபோன்று, ‘‘அவர் மிகவும் நல்லவர்; அவருடைய குடும்பத்தைப் பொறுத்தவரையில், இந்த ஊரில் உள்ள நாங்கள் எல்லாம் எப்பொழுதும் பாராட்டிக் கொண்டிருப்போம்’’ என்று சொன்னார்கள்.

உண்மையான ஒரு மக்கள் தொண்டனுக்கு நடைபெறுகின்ற விழா

உண்மையான ஒரு மக்கள் தொண்டனுக்கு நடைபெறுகின்ற விழாவில் நான் பங்கேற்கின்றேன் என்ற உணர்வோடு இங்கு வந்தேன்.

அதுமட்டுமல்ல, அவரைப்பற்றி நான் சிறு குறிப்பைப் படித்தபொழுது, அவர் அந்தக் காலத்திலேயே இண்டர்மீடியட் படித்தவர்.

இண்டர் மீடியட் படிப்பு என்று சொன்னால், அந்தக் காலத்தில் மிகப்பெரிய படிப்பாகும்.

நம்முடைய தமிழர் தலைவர் அவர்களைப்பற்றி சொல்லவே வேண்டாம் - அவர் பி.ஏ. ஹானர்ஸ்; எம்.ஏ., பி.எல். படித்திருக்கிறார் அந்தக் காலத்திலேயே!

ஆனால், இந்தக் காலகட்டம்போல் யார் வேண்டு மானாலும் படித்து, பெயருக்குப் பின்னால் டிகிரியைப் போட்டுக் கொள்ளலாம் என்கிற நிலை அப்பொழுது இல்லை.

டிகிரி வாங்கவேண்டும் என்று சொன்னால், உண் மையாகப் படிக்கவேண்டும்; நாள்தோறும் கல்லூரிக்குச் செல்லவேண்டும்; ஒழுங்காகத் தேர்வு எழுதவேண்டும்; பாக்கெட்டில் ஏதாவது பிட் எடுத்துக்கொண்டு போனால், தேர்வறையிலிருந்து உடனடியாக வெளியேற்றி விடுவார்கள்.

ஆனால், சண்முகம் அவர்கள், அந்தக் காலத்திலேயே இண்டர் மீடியட் படித்திருக்கின்றார். 1944 ஆம் ஆண்டு என்று நான் பார்த்தேன். 

1942 ஆம் ஆண்டிலிருந்து பெரியார் அவர்கள் எங்கே உரையாற்றினாலும்...

ஆனால், அவர் எழுதிய குறிப்பைப் பார்த்தபொழுது, ‘‘1942 ஆம் ஆண்டிலிருந்து பெரியார் அவர்கள் எங்கே உரையாற்றினாலும், அங்கே நான் போய்விடுவேன்’’ என்று இருந்தது.

சிறு வயதிலேயே ஒரு பகுத்தறிவாளராக, சுயமரியா தைக்காரராக இருந்தவர், இன்று நூறு வயது வரை சுயமரியாதைக்காரராக, பகுத்தறிவாளராக இருக்கின்றார்.

இங்கே உரையாற்றிய என்னுடைய அன்புச்சகோதரி அருள்மொழி அவர்கள் உரையாற்றும்பொழுது, அவர் 150 ஆண்டுகாலம் வாழவேண்டும்; நாங்கள் அந்த விழாவிலும் பங்கேற்கவேண்டும் என்று சொன்னார்.

க.சண்முகம் போன்றவர்கள் 

இன்னும் அதிக ஆண்டுகள் வாழவேண்டும்

க.சண்முகம் போன்றவர்கள் 150 ஆண்டுகள் அல்ல, இன்னும் அதிக ஆண்டுகள் வாழவேண்டும் என்று நான் விரும்புகின்றேன். காரணம், அவர் உயிரோடு இருக்க வேண்டும் என்பதைவிட, அவர் அதிக ஆண்டுகள் உயிரோடு இருக்கவேண்டும் என்பது எதற்காக என்றால், இந்தத் தமிழ் மக்களுக்கு நல்லது செய்வதற்காகத்தான் இன்னும் அவர் அதிக ஆண்டுகள் வாழவேண்டும் என்று சொல்கிறேன்.

இந்நேரம் அவர் ஒரு அரசியல் கட்சியில் இருந் திருந்தால், அவருடைய வயதிற்கும், அவருடைய அறிவுக்கும், அவருடைய அந்தக் கால படிப்பிற்கும், என்றைக்கோ சட்டமன்ற உறுப்பினராக, நாடாளுமன்ற உறுப்பினராக, அமைச்சராக இருந்திருக்க முடியும்.

ஏற்றுக்கொண்ட கொள்கைக்காக 

எந்தத் தியாகத்தையும் செய்பவர்கள்

ஆனால், அதைப்பற்றியெல்லாம் கவலைப் படாது, தான் ஏற்றுக்கொண்ட கொள்கைக்காக எந்தத் தியாகத்தையும் செய்வேன்; பொதுவாழ்வில் எனக்கு செல்வம் வேண்டாம், சுகம் வேண்டாம் என்று இருக்கக்கூடிய ஒரு சிலரில் அவரும் ஒருவர்.

அவருடைய நூற்றாண்டு விழாவில், அவரைப் பாராட்டுவதற்கு எனக்கு வயதில்லை என்று சொன் னாலும்கூட, அருகதைகூட இல்லை.

ஏனென்றால், இன்றைய காலகட்டத்தில் எனக்கு சில உணர்வுகள் வருகின்றன. ஓட்டு வங்கி அரசியல் செய்யப் போய்,  வாழ்க்கையை நாம் வீணடித்து விட்டோமோ - ஒரு சமுதாயப் புரட்சியை, கீழ்நிலையில் இருக்கும் மக்களை, ஜாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு அவர்களை மேலே கொண்டு வரவேண்டும் -  நீங்கள் பகுத்தறிவாளர்களாக, சுயமரியாதைக்காரர்களாக இருப் பதுபோல் -அந்த வேலையை செய்திருந்தால், ஒரு வேளை எனக்கு நிறைவு வந்திருக்குமோ என்னமோ தெரியவில்லை.

அண்மைக்காலமாக, ஓட்டு வங்கி அரசியல் என்பது, உண்மையாகவே அது ஒரு கெடுதலான முறைதான். ஏனென்றால், எனக்குத் தெரியும் - பெரியார் அவர்களை இரண்டு முறை இந்த மாநிலத்தின் முதலமைச்சராக வரவேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கேட்டுக் கொண்டதும், வெள்ளைக்காரர்கள் சொன்னபொழுதும் அதனை ஏற்க மறுத்துவிட்டவர் தந்தை பெரியார் அவர்கள்.

அதுமட்டுமல்ல, இப்பொழுது இருக்கிறாரே, தமிழர் தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்கள்.

தமிழ்நாட்டின் அமைச்சராக, 

முதலமைச்சராக வந்திருக்க முடியும்

அண்ணா அவர்கள் முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில் மட்டுமல்ல, அதற்கு முந்தைய காங்கிரஸ் ஆட்சியிலும் சரி, கலைஞர் ஆட்சியிலும் சரி, எம்.ஜி.ஆர். ஆட்சியிலும் சரி, ஏன், ஜெயலலிதா ஆட்சியிலும், கலை ஞருக்குப் பின், இப்பொழுது நடைபெறுகின்ற ஸ்டாலின் அவர்களுடைய ஆட்சியிலும் சரி - எப் பொழுது அவர் நினைத்திருந்தாலும், இந்தத் தமிழ்நாட்டின் அமைச்சராக, முதலமைச்சராக வந்திருக்க முடியும்.

தமிழ்நாட்டை விடுங்கள், வி.பி.சிங் அவர்கள் பிரதமராக இருந்தபொழுது, அவர் மத்திய அமைச்ச ராகக்கூட ஆகியிருக்க முடியும்.

ஒவ்வொரு நாளும் 

நம் மக்களின் நலனுக்காக 

ஓடோடிக் கொண்டிருக்கின்றார்

ஆனால், அதைப்பற்றியெல்லாம் கவலைப் படாமல், நான் இந்த சமுதாயத்திற்கு உழைக்க வேண்டும்; பெரியாருடைய கொள்கைகளைப் பரப்பவேண்டும் என்ற நிலை எடுத்து, அதற்காக இன்றைக்குத் 90 வயது இளைஞராக இருந்து பாடுபட்டுக் கொண்டிருக்கின்றார்; ஒவ்வொரு நாளும் நம் மக்களின் நலனுக்காக ஓடோடிக் கொண்டிருக்கின்றார்.

நான் அவருக்கு, இந்த மாதத்திலேயே இரண்டு, மூன்று முறை சொல்லிவிட்டேன்; நம்முடைய துரை.சந்திரசேகரனிடம் பேசிக் கொண்டிருக் கும்பொழுதுகூட சொன்னேன், ‘‘எதற்காக  இப்படி அலைந்துகொண்டிருக்கின்றார்? இந்த வயதில் அவர் இந்த அளவிற்குச் சுற்றுப்பயணம் செய்வது தேவைதானா?’’ என்று கேட்டேன். அன்பு ராஜிடமும் நான் கேட்டேன்.

‘‘என்ன செய்வது? நாங்கள் எவ்வளவோ சொல்லியும் அவர் கேட்கமாட்டேன் என்கிறார். வாரத்தில் 4, 5 நாள்கள் நான் வெளியூர் சுற்றுப் பயணம் செய்தே ஆகவேண்டும் என்று சொல் கிறார்’’ என்றார்கள்.

இதைக் கேட்கும்பொழுது, எவ்வளவு பெரிய தியாக உள்ளத்தோடு, எதையும் எதிர்பாராமல் சமுதாயத்திற்காக உழைத்துக் கொண்டிருக்கின்றார் என்பது புரிகின்றது.

பாராட்டியே தீரவேண்டும்

சில பேர் அவரைப்பற்றி தெரியாதவர்கள், திராவிட இயக்க வரலாற்றைப்பற்றி தெரியாத வர்கள், அவரைக் கொச்சைப்படுத்திப் பேசலாம்; ஆனால், அவரைப்பற்றி அறிந்தவர்கள், அவரைக் கொச்சைப்படுத்த முடியாது; கண்டிப்பாக பாராட்டியே தீரவேண்டும் என்பது அவசியமாகும்.

பணத்தைப் பார்க்காதவர் அல்ல அவர்; அவருடைய வாழ்விணையர் இங்கே வந்திருக் கின்றார். அவருடைய திருமணம் முடிந்தவுடன், அவருடைய மாமனார், ஓட்டுநரோடு ஒரு காரை அனுப்பினார். இவர் அதை ஏற்க மறுத்து, அதைத் திருப்பி அனுப்பிவிட்டார். அந்தக் காலத்தில் இது எவ்வளவு பெரிய விஷயம்.

(தொடரும்)


No comments:

Post a Comment