பாஜகவின் கொள்கை பரப்புச் செயலாளராக செயல்படும் ஆளுநர் பேரா. எம்.எச். ஜவாஹிருல்லா கண்டனம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 15, 2022

பாஜகவின் கொள்கை பரப்புச் செயலாளராக செயல்படும் ஆளுநர் பேரா. எம்.எச். ஜவாஹிருல்லா கண்டனம்

பாபநாசம், ஜூலை 15- மனித நேய மக்கள் கட்சியின் தலை வரும், பாபநாசம் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மதுரை காமராஜர் பல் கலைக்கழகத்தின் 54ஆவது பட்டமளிப்பு விழா  நிகழ்ச்சியில் ஒன்றிய இணை அமைச்சர் எல்‌.முருகன் கவுரவ விருந்தினராக பங்கேற்று உள்ளார். பல்கலைக்கழகத்தின் இணைவேந் தரான தமிழ்நாட்டின் உயர்கல்வி அமைச்சரை ஆலோ சிக்காமல் மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவின் நிகழ்வுகளை ஆளுநர் அறிவித்தது கண்டனத்திற்குரியது. மாநில அரசின் உரிமைகளைத் தொடர்ந்து புறந்தள்ளும் வகையில் ஆளுநர் நடந்து கொள்வதை ஏற்றுக் கொள்ள முடியாது.  பல்கலைக்கழக வளாகங்களை தன்னுடைய கொள்கை சித்தாந்தத்தைப் பரப்புவதற்காக ஆளுநர் தொடர்ந்து பயன்படுத்தி வருகிறார். கல்வியாளர் இல்லாத ஒரு அரசியல் பிரமுகரைத் தன்னிச்சையாக ஆளுநர் பட்டமளிப்பு விழாவிற்கு கவுரவ விருந்தினராக அழைத்திருப்பதுடன் பல்கலைக்கழக இணைவேந்தருக்கு உரிய நடைமுறை மரியாதையை அளிக்க மறுத்திருப்பதும் கடும் கண்டனத் திற்கு உரியது. 

ஆளுநர் ரவி தனது செயல்பாடுகள் வாயிலாக, பாரதிய ஜனதா கட்சியின் அறிவிக்கப்படாத கொள்கை பரப்புச் செயலாளராக செயல்பட்டு வருவது மீண்டும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் சனாதனம் குறித்துப் பேசியதும், பின்னர் திராவிடம் குறித்து பேசி யதும் தமிழ்நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தற்போது மீண்டும் தமிழ்நாடு அரசை சீண்டுகிற முயற்சியில் ஈடுபட்டிருப்பது கடும் கண்டனத்துக்குரியது. தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களின் வேந்தராக முதலமைச்சர் இருக்க வேண்டும் என்று சட்டமன்றம் நிறைவேற்றிய தீர்மானத்திற்கு ஒப்புதல் அளிக்கும் பொறுப்பைத் தட்டிக் கழித்து விட்டு, தொடர்ந்து தனது அதிகாரப் போக்கை மீறி வரும் ஆளுநரின் செயல்பாட்டைக் கண்டித்து இந்நிகழ்ச்சியைத் தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சர் புறக்கணிப்பதாக அறிவித்தது வரவேற்கத் தக்கது.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment