உ.பி.யில் போராட்டம் நடத்திய அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை தீவிரவாதிகளாக சித்தரித்து - காவல்துறையினர் சித்திரவதைலக்னோ, - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, July 11, 2022

உ.பி.யில் போராட்டம் நடத்திய அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை தீவிரவாதிகளாக சித்தரித்து - காவல்துறையினர் சித்திரவதைலக்னோ,

ஜூலை 11 பா.ஜ.க. செய்தித் தொடர் பாளர் நூபுர் சர்மாவைக் கண்டித்து போராட்டம் நடத்திய ஒரே காரணத்திற்காக 8 முஸ்லிம்களை உ..பி. காவல் துறையினர் கைது செய்து பயங்கர வாதிகளைப் போல சித்ரவதை செய்தது வெளிச் சத்திற்கு வந்துள்ளது.

நூபுர் சர்மாவின் நபிகள் நாயகம் குறித்த, அவதூறுக் கருத்துக்கு எதிராக தலைநகர் புது டில்லி மற்றும் உத்தரப் பிரதேசத்தில் ஜூன் 10 அன்று சிறுபான்மையினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சகரான்பூரில் 8 பேர் உ.பி. காவல் துறையால் மிகவும் அராஜகமான முறையில் கைது செய்யப்பட்டு தாக்கப்பட்டனர். உ.பி. காவல் துறை  அவர்களை 22 நாட்கள் காவல் நிலைய சிறைக்கொட்டடியிலே வைத்து தீவிர வாதிகளை நடத்துவது போல் நடத்தியது. பிறகு குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்கு  எதிராக எந்த ஆதாரமும் காவல்துறையினரால் காட்டமுடியாத தால் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.  காவல் துறையால் கைது செய்யப்பட்டு அடக்குமுறைக் குள்ளாகி பிறகு விடுவிக்கப்பட்டவர்களில்  ஒருவர் 19 வயது முகமது அலி, மரம் அறுக்கும் ஆலைத் தொழிலாளி. அன்று மதிய வேளையில் வழக்கமான வெள்ளிக்கிழமை தொழுகையை  சகரான்பூரில் முடித்துவிட்டு திரும்புகையில்,  சிறிது நேரத்தில் கைது செய்யப்பட்டார்.  இரண்டு கைகளையும் விசாரணையில் காவல்துறையினர் உடைத்ததோடு திரும்பத் திரும்ப இரக்கமின்றி அடித்தார்கள்  என்று முகமது அலி கூறுகிறார்.

”நான் எந்த வன்முறையிலும், கல் வீச்சிலும் ஈடுபடவில்லை. என்னை விட்டு விடும்படி நான் பலமுறை கெஞ்சினேன். ஆனால், என் கைகள் உடைக்கப்பட்ட நிலையிலும் அவர்கள் அதை பொருட்படுத்தவில்லை. நான் 22 நாள்கள் எந்தக் குற்றமும் செய்யாமல் சிறையில் அடைக்கப் பட்டேன் இரக்கமில்லாமல் கடுமையாக அடித்து உதைத்தார்கள். உணவு வழங்காமல் தீவிரவாதி போல் என்னை நடத்தினார்கள். குற்றமே செய் யாமல் 22 நாள்கள் சிறையில் இருந்திருக்கிறேன். நான் தொலைத்த 22 நாள்களை யார் எனக்குத் திருப்பி தருவார்கள்? தீவிரவாதி என்றும் தேச விரோதி என்றும் என் மீது சுமத்தப்பட்ட பழி களை யார் நீக்குவார்கள்?” என்று செய்தியாளர் களிடம்  முகமது அலி வேதனையைப் பகிர்ந்து கொண்டார்.

முகமது அலியோடு சேர்த்து 8 சிறுபான் மையினரைச் சிறைக் கொட்டடியில் வைத்து காவல்துறையினர் கடுமையாக லத்தியால் அடித்து உதைத்திருக்கின்றனர். பின்பு அவர்கள் வன்முறையில் ஈடுபட்டதற்கான ஆதாரம் ஏதும் காவல்துறையினரால் சமர்ப்பிக்க முடியாததால் 8 பேரும் விடுவிக்கப்பட்டனர்.  “இந்த நாட்டில் முஸ்லிம்களை துன்புறுத்துவதற்கு காவல் துறையினரும், அரசாங்கமும் கற்களைக் கூட விட்டு வைப்பதில்லை. குடியுரிமைச் சட்ட திருத்தத்திற்கு எதிரான போராட்டத்தின்போதும் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள், முக்கியமாக போராட்டக்காரர்களுக்கு உணவளித்தவர்கள் கூட கைது செய்யப்பட்டனர். அதே நிலைதான் தற்போதும் நடந்தேறி இருக்கிறது. எங்களால் இரண்டு வேளை ரொட்டி துண்டுகள் வாங்குவது கூட சிரமமாக இருக்கிறது. எங்கள் குழந்தைகளை விடுவிப்பதற்கு வழக்குரைஞர்களுக்கும் மற்ற செலவுகளுக்கும் செலவு செய்து கொண்டிருந் தால் நாங்கள் எப்படி உயிர் வாழ முடியும்” என்று முகமது அலியின் தாயார் கேட்கிறார்.

குற்றம்சாட்டப்பட்ட 8 பேரின் குடும்பங் களைச் சார்ந்தவர்கள் வன்முறை நடந்த ஜூன் 10 அன்று வன்முறையில் ஈடுபடவில்லை எனவும், அதே நேரம் வேறொரு இடத்தில் இருந்ததற்கான சிசிடிவி ஆதாரங்களையும் கொடுத்தனர். இதனைத் தொடர்ந்து உள்ளூர் நீதிமன்றத்தில் அந்த 8 பேருக்கு எதிரான எந்த ஆதாரமும் இல்லையென்று விண்ணப்பித்தனர். அதன்பின் அவர்கள் நீதிமன்றத்தால் விடுவிக் கப்பட்டார்கள்.

அப்பாவி இஸ்லாமிய இளைஞர்களை குறிவைக்கும் போக்கு

முகமது அலியைப் போலவே, முகமது ஆசிப்பும் அந்த நாளில் உ.பி. காவல் துறையின் அதிகாரத்திற்குப் பலிகடாவாக்கப்பட்டவர்தான். வெள்ளிக்கிழமை தொழுகையை முடித்துவிட்டு வெளியே வரும்போது, இரண்டு காவல் துறையினர் அவருடைய இருசக்கர வாகனத்தை நிறுத்தி, எந்தக் கேள்வியும் கேட்காமல், சிசிடிவி பதிவுகளை ஒப்பிட்டுப் பார்த்துவிட்டு விடு விப்பதாகக் கூறி காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். ஏற்கெனவே சில பேர் காவல்நிலையத்தில் இருந்தார்கள். ஆனால், மாலை நேரத்திற்குள் 30 - 35 பேர் வரை சிறைக்கொட்டடிக்குக் கொண்டுவரப்பட்டனர். பத்துப் பேர் கொண்ட குழுவாக வெவ்வேறு அறைகளுக்கு அனுப்பப்பட்டு, காவல் துறை யால் அடித்து உதைக்கப்பட்டனர். அடிக்கும் போதே நிறைய மதரீதியான வன்மமான அநாகரீகமான வார்த்தைப் பிரயோகத்தைப் பயன்படுத்தினார்கள். எங்களை இழிவுபடுத்து வதன் மூலம் அவர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள் என்பதை காணமுடிந்தது என்று பேசும்போதே அழுகையைக் கட்டுப்படுத்தமுடியாமல் கதறி னார் ஆசிப்.

”சிசிடிவியின் ஆதாரத்தை அடிப்படையாகக் கொண்டே என் சகோதரரை கைது செய் திருப்பதாகக் கூறிய காவல்துறை, பின்னர் நீதிமன்றத்தில், கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை என்று பதிலுரைத்தது. அப்படியென்றால், எந்தவித ஆதாரமும் இல்லாமல் முதன் முதலாக ஏன் காவல்துறையினர் கைது செய்தனர் என்று அவர்கள் சொல்ல வேண்டும். அப்படியே கைது செய்திருந்தாலும், அவரை ஏன் அடித்தார்கள்? எந்தவிதமான ஆதாரமும் இல்லாமல் எவரை யும் அடிப்பதற்கு காவல்துறைக்கு ஏதேனும் அதிகாரத்தை சட்டம் வழங்கியிருக்கிறதா? அல்லது அவர் ஒரு முஸ்லீமாக இருப்பத னாலேயே காவல்துறையால் குறிவைக்கப் பட்டாரா?” என்று ஆசிப்பின் சகோதரர் முகமது ஆரிப் கேள்வி எழுப்புகிறார். செய்யாத குற் றத்திற்காக 23 நாள்கள் சிறையில் கழித்துவிட்டு கடந்த 4.7.2022 அன்று ஆசிப் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

அகில இந்திய சிறுபான்மையின வழக் குரைஞர் நலச்சங்கத்துடன் இணைந்து இந்த வழக்கில் வாதாடிய வழக்குரைஞர்களில் ஒரு வரான பாபர் வாசிம்செய்தியாளரிடம் பேசு கையில், 

”அப்பாவி முஸ்லீம் இளைஞர்கள் எந்த விதமான ஆதாரமும் இன்றி அநியாயமாக குறிவைக்கப்படுகிறார்கள். காவல்துறையிடம் எந்தவிதமான ஆதாரமுமில்லாத போது, மிக மோசமாக அவர்களை அடிப்பதற்கான காரணம் என்னவாக இருக்கிறது” என்று கேள்வி எழுப்பினார். 

மேலும், அவர் கூறுகையில், 

முதன்மை நடுவர்மன்ற நீதிபதியின் வார்த்தைகளில், “சிறைக் கொட்டடியில் மனிதர் களை அடிப்பதற்கு காவல்துறைக்கு எந்தவித மான உரிமையும் கிடையாது” என்றும் கூறினார்.

No comments:

Post a Comment