எடுத்துக்கொண்ட பணியை - ஏற்றுக்கொண்ட கொள்கைகளை எப்பொழுதும் நினைத்துக் கொண்டிருப்பவர்கள் திராவிடர் கழகத்துக்காரர்கள்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 22, 2022

எடுத்துக்கொண்ட பணியை - ஏற்றுக்கொண்ட கொள்கைகளை எப்பொழுதும் நினைத்துக் கொண்டிருப்பவர்கள் திராவிடர் கழகத்துக்காரர்கள்!

குருவரெட்டியூர் பொதுக்கூட்டத்தில் ஈ.வெ.கி.ச.இளங்கோவன் உரை

குருவரெட்டியூர், ஜூலை 22   எடுத்துக்கொண்ட பணியை, ஏற்றுக்கொண்ட கொள்கைகளை - எப்பொழுதும் அதையே நினைத்துக் கொண்டிருப்பவர்கள் திராவிடர் கழகத்துக்காரர்கள்; அதுவும் நம்முடைய தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுடைய தலைமையில் இருக்கின்ற இவர்களுக்கு எடுத்துக்கொண்ட கொள்கை தான் 24 மணிநேரமும் சிந்தனையும், செயலுமாக அமைந்துவிடுவது பார்க்கும்பொழுது எனக்கு மிக்க மகிழ்ச்சியாக இருக்கின்றது என்றார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மேனாள் தலைவர் ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள்.

குருவரெட்டியூரில் பொதுக்கூட்டம்

கடந்த 3.7.2022 அன்று மாலை குருவரெட்டியூரில் நடைபெற்ற கழகப் பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மேனாள் தலைவர் ஈ.வெ.கி.ச. இளங்கோவன்  சிறப்புரையாற்றினார்.

அவரது சிறப்புரை வருமாறு:

இந்த சிறப்புமிகு கூட்டத்திற்கு, குறிப்பாக நம்முடைய பிரகலாதன் அவர்களுடைய நினைவுக் கொடிக்கம்பம், கல்வெட்டு திறப்பு, மாநில உரிமை மீட்பு விளக்கப் பொதுக்கூட்டம் என்று நடைபெறுகின்ற இந்த அருமையான நிகழ்ச்சிக்குத் தலைமைப் பொறுப்பு ஏற்று இருக்கின்ற ஈரோடு சண்முகம் அவர்களே,

வரவேற்புரையாற்றிய கிருஷ்ணமூர்த்தி அவர்களே,

நிறைவாக சிறப்புரையாற்றவிருக்கின்ற தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களே,

என்னுடைய பாசத்திற்கும், மரியாதைக்கும் உரிய அந்தியூர் செல்வராஜ் அவர்களே,

மிகச் சிறப்பாக உரையாற்றிய திராவிட முன்னேற்றக் கழக செயலாளர் நல்லசிவம் அவர்களே,

என் அருமைத்தம்பி ஏ.ஜி.வெங்கடாசலம் அவர் களே, அருமை நண்பர் வி.பி.எஸ். அவர்களே, என்னு டைய பாசத்திற்குரிய கோவிந்தராஜ் அவர்களே, காங்கிரஸ் பேரியக்கத்தினுடைய மாவட்டத் தலைவர் சரவணன் அவர்களே, வட்டாரத் தலைவர் விஜயகுமார் அவர்களே, என்னுடைய அருமை நண்பர் ராமராஜன் அவர்களே, சிவகுமார் அவர்களே, பூங்கொடி அவர் களே, பாசத்திற்குரிய விவேகானந்தம் அவர்களே மற்றும் இங்கே திரளாகக் கூடியிருக்கின்ற கருஞ்சட்டை வீரர்களே, திராவிட முன்னேற்றக் கழக நண்பர்களே, காங்கிரஸ் பேரியக்கத் தோழர்களே உங்கள் அனை வருக்கும் என்னுடைய வணக்கத்தைத் தெரிவித்துக் கொண்டு,

இந்த நிகழ்ச்சியில், குறிப்பாக பிரகலாதன் அவர் களுடைய நினைவு நாள் நிகழ்ச்சிக்கு என்னை அழைத் ததை நான் மிகப்பெரிய வாய்ப்பாக கருதுகின்றேன்.

என்னுடைய  மனநிறைவுமிக்க நிகழ்ச்சியாக இந்த நிகழ்ச்சி இருக்கின்றது என்பதை நான் சொல்லியாக வேண்டும்.

ஏனென்றால், இங்கே இருக்கின்ற பல பேர், பிரகலாதனை நன்றாக அறிந்தவர்களாக இருப்பீர்கள். ஆனால், என்னை பொறுத்தவரையில், கோபிச்செட்டிப் பாளையம் நாடாளுமன்றத் தொகுதி காங்கிரஸ் - திரா விட முன்னேற்றக் கழக கூட்டணியின் வேட்பாளராக - இங்கே என்றைக்கு நான் அறிவிக்கப்பட்டேனோ, அன்றுமுதல் பிரகலாதனை நான் அறிவேன்.

பிரகலாதனை பார்த்த நொடியிலிருந்து 

எனக்கு அவர்பால் அன்பு பிறந்தது

அவரைப் பொறுத்தவரையில், சில பேரை பார்த்த வுடனேயே காரணமில்லாமல் நமக்குப் பிடித்துவிடும்; சிலரைப் பார்த்தால், காரணமில்லாமலேயே அவர்மீது வெறுப்பு வந்துவிடும். அவர்  நல்லவராக இருக்கலாம், அது வேறு விஷயம். ஆனால், எல்லோருக்கும் அந்த உணர்வு உண்டு.

சிலரைப் பார்த்தவுடன் நாம் ஏற்றுக் கொள்வோம்; பலரை பல நாள் பார்த்தாலும், நாம் ஏற்றுக்கொள்ள மாட்டோம்; அதற்குக் காரணம் நமக்குத் தெரியாது.

ஆனால், பிரகலாதனை பார்த்த நொடியிலிருந்து எனக்கு அவர்பால் அன்பு பிறந்தது. என்னுடைய அன்புச் சகோதரராக  அவர் இருப்பார் என்று நினைத் தேன், அது வீண்போகவில்லை, கடைசிவரை அப் படியே இருந்தது.

எதையும் எதிர்பார்க்காமல், என்னுடன் இங்கே உழைத்தவர் பிரகலாதன்

என்னைப் பொறுத்தவரையில், தேர்தலில், இந்தப் பகுதியில் என்னுடைய அருமை காங்கிரஸ் தோழர்கள் ராஜராஜனைப் போன்றவர்கள், விஜயகுமாரைப் போன்றவர்கள் மற்றும் சந்திரனைப் போன்றவர்கள், கொண்டையம்பாளையம் மோகனைப் போன்றவர்கள், கள்ளிப்பட்டி பாலுவைப் போன்றவர்கள் எல்லாம் மிகச் சிறப்பாகப் பணியாற்றினார்கள் என்று சொல்லும்பொழுது, கண்டிப்பாக பிரகலாதனையும் நான் மிக உயர்ந்த இடத்தில் வைத்திருக்கின்றேன். காரணம், எதையும் எதிர்பார்க்காமல், என்னுடன் இங்கே உழைத்தவர்.

என்னுடைய அருமைத்தம்பி கோவிந்தராஜ் இங்கே உரையாற்றும்பொழுது சொன்னார், நான் அவரைத் தோற்கடித்துவிட்டேன் என்று சொன்னார். அதோடு நிறுத்தியிருந்தார் என்று சொன்னால், எனக்குக்கூட அவர்மீது கோபம் வந்திருக்கும். நான் தோற்கடித்த காரணத்தினால், ஜெயலலிதா அவரை ராஜ்ஜிய சபா உறுப்பினராக ஆக்கினார். செலவே இல்லாமல், ராஜ்ஜிய சபா உறுப்பினரானார்.

நாங்கள் சார்ந்திருந்த இயக்கங்கள் வெவ்வேறாக இருந்தாலும்கூட, எங்கள் இருவருக்கும் நல்ல ஒற்றுமை இருந்தது, ஒரு பாசம் இருந்தது.

அவரை நான் டில்லிக்கு அழைத்துச் சென்று, எல்லா தலைவர்களிடமும், நான் தோற்கடித்த அ.தி.மு.க.வைச் சேர்ந்த நபர் இவர்தான். ஆனால், இன்றைக்கு இவர் எம்.பி.,யாகிவிட்டார் என்று நான் பெருமையோடு சொல் லும்பொழுது, அவரும் மனம் குளிர்ந்து, என்னோடு மிகுந்த நட்பு பாராட்டினார்.

பல்வேறு அரசியல் கட்சிகளைச் சார்ந்தவர்களாக, கொள்கைக்கு உறுதியாளர்களாக இருந்தாலும்கூட, அத்தனைக்கும் அப்பாற்பட்டு, தனிப்பட்ட முறையில் நாம் நண்பர்களாக இருக்க முடியும் என்பது எல்லோ ருக்கும் தெரியும்.

கடைசி நேரத்தில், சரியான இடத்திற்குச் செல்வோம் என்பதற்கு எடுத்துக்காட்டு!

அந்த வகையிலே, கோவிந்தராஜன் அவர்களை திராவிட முன்னேற்றக் கழகத்தில் பார்க்கும்பொழுது, குறிப்பாக இந்த நிகழ்ச்சியின் அழைப்பிதழில்தான் பார்த்தேன், கோவிந்தராஜன் அவர்கள், திராவிட முன்னேற்றக் கழகம் என்று அச்சிடப்பட்டு இருந்தது.

எப்படித்தான், எப்படித்தான் நாம் சுற்றி அலைந் தாலும், கடைசி நேரத்தில், சரியான இடத்திற்குச் செல் வோம் என்பதற்கு எடுத்துக்காட்டு கோவிந்தராஜன் அவர்கள்,

ஆகவே, இந்த மேடையில் நாம் இன்றைக்குப் பிரகலாதனைப்பற்றி பேசுகிறோம் என்றால், அவர் கருப்புச் சட்டைதான் அணிவார்; அவருடைய கொள்கைகளைத்தான் அவர் பேசுவார். ஆனால், தனிப்பட்ட முறையில், எல்லோரிடமும் பாசத்தோடு இருப்பவர் என்று சொன்னால், அது மிகையாகாது.

நான் அமைச்சராக இருந்த காலத்தில், ஈரோட்டிற்கு வரும்பொழுதெல்லாம் என்னை வந்து பார்ப்பார். பல நேரங்களில், என்ன விஷயம், ஏதாவது செய்ய வேண்டுமா? என்று கேட்டால்,

ஒன்றுமில்லை, உங்களைப் பார்க்கவேண்டும் என்று நினைத்தேன். இங்கே பெரியார் மன்றத்திற்கு வந்தேன் என்று சொல்வார்.

ஊருக்கு  நூல் நிலையம் வேண்டும்; பள்ளிக்கூடத்திற்குக் கட்டடங்கள் வேண்டும் என்றுதான் கேட்பார்!

வாய்த் தவறி ஏதாவது கேட்கமாட்டாரா? என்று நினைப்பேன். ஒருமுறை கேட்டார், எதற்காக அவர் கேட்டார் என்றால், எனக்கு இந்த ஊரிலே நூல் நிலையம் வேண்டும்; அந்த நூலகத்திற்கு நூல்கள் வேண்டும்; எங்களுடைய ஊரில் உள்ள பள்ளிக்கூடத்திற்கு கட்டடங்கள் வேண்டும் என்று இதுபோன்றவற்றைத்தான் கேட்டார்.

ஏனென்றால், என்னைப் பொறுத்தவரையில், நாடாளுமன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும் இருந்தபொழுது, நான் கட்டடங்களுக்குத்தான் நிதி ஒதுக்குவேன்; அதிலும் குறிப்பாக பள்ளிக்கூடக் கட்டடங்களுக்குத்தான், சமுதாயக் கூடங்களுக்குத்தான் நிதி ஒதுக்குவேன்; நூல் நிலையங்களுக்குத்தான் நிதி ஒதுக்குவேன். 

அதைத்தான் அவர் கேட்டாரே ஒழிய, இதுவரை தனிப்பட்ட முறையில், எனக்கு இது வேண்டும், அது வேண்டும் என்று என்னிடம் அவர் எப்பொழுதும் கேட்டதில்லை.

ஏன் இதைப் பெருமையாகச் சொல்கிறேன் என்றால், என்னிடம் வருகின்றவர்கள், என்னால் சில காரியங் களைச் செய்ய முடியும் என்று, நம்பி வருகின்றவர்கள்.

வந்தவுடனேயே, எனக்கு இதுவேண்டும்; என்னு டைய நண்பருக்கு இது வேண்டும் என்றுதான் கேட்பார்களேயொழிய,

எங்கள் ஊருக்கு இது வேண்டும்; எங்கள் ஊர் மக்கள் படிப்பறிவு பெறுவதற்கு நூலகங்கள் வேண்டும் என்று கேட்பவர்கள் மிகச் சிலர்தான்.

ஆனால், இங்கே வந்த பிறகுதான், இவ்வளவு பெரிய கூட்டத்தை நான் பார்க்கின்றேன்.

தானாக வந்தக் கூட்டம் இது!

இவ்வளவு பெரிய கூட்டம் என்று நான் ஏன் சொல்கின்றேன் என்றால், தானாக வந்தக் கூட்டம் இது.

ஆக, இந்தக் கூட்டத்திற்கு இருக்கின்ற மரியாதை என்பது, தனி மரியாதை.

அதுவும் இந்தக் கூட்டம் என்ன கூட்டம்?

திராவிடர் கழகத்தினுடைய தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பங்குபெறுகின்ற கூட்டம்.

ஆசிரியர் அவர்கள் பங்கு பெறுகின்றார் என்றால், மக்களுக்கு ஒரு ‘மாயத்’தோற்றம் அந்தக் காலத்தில் இருந்தது - இவர்கள் என்ன சொல்வார்கள், ‘கடவுள் இல்லை’ என்று சொல்வார்கள், நாம் ஏன் அங்கே போகவேண்டும் என்கின்ற நிலை மாறி,

கடவுள் இல்லை என்று சொன்னாலும் பரவாயில்லை, மற்ற பல நல்ல கருத்துகளை இங்கே நாம் கேட்கலாம் என்று இங்கே மக்கள் வருகின்றார்கள் என்று சொன்னால், இன்றைக்குத் தந்தை பெரியார் அவர்கள் எடுத்த முயற்சிக்குத் தமிழ்நாட்டில் மிகப்பெரிய ஆதரவு, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களால் பெருகிக் கொண்டு வருகிறது என்றுதானே அர்த்தம். இன்றைக்கு எனக்கு மனநிறைவு உங்களையெல்லாம் பார்க்கும்பொழுது.

ஒரு குற்ற உணர்வோடுதான் 

இந்த ஊருக்கு நான் வந்தேன்

அதுவும் பிரகலாதன் குடும்பத்தினரைப் பார்க்கும் பொழுது, அவருடைய துணைவியாரைப் பார்க்கும் பொழுது, அவருடைய சகோதரியைப் பார்க்கும்பொழுது, எனக்கு மிகவும் மன நிறைவாகத்தான் இருந்தது. காரணம், ஒரு குற்ற உணர்வோடுதான் இந்த ஊருக்கு நான் வந்தேன்.

அதற்குக் காரணம், பிரகலாதன் அவர்கள் இறந்த பொழுது,  என்னால், அவருடைய உடலை வந்து பார்க் கக்கூடிய சந்தர்ப்பம் இல்லாமல் போனது. என்னுடைய மகன் சட்டமன்ற உறுப்பினரான திருமகன் ஈ.வெ.ரா. அவர்களை அனுப்பி வைத்தேன். இருந்தாலும், நானே வந்து நேரிலே பார்த்திருக்க வேண்டும் - பார்க்க வில்லையே என்கின்ற குற்ற உணர்வு எனக்கு இருந்தது. அது இன்றைக்கு ஓரளவு நீங்கியது என்று சொல்லலாம்.

இந்த ஊருக்கு மட்டும் பெருமையல்ல - தமிழர்களாகிய நாம் அத்தனை பேருக்கும் பெருமைதான்!

அப்படிப்பட்ட பிரகலாதன் அவர்களுக்கு, நீங்கள் இன்றைக்கு இவ்வளவு பெரிய நிகழ்ச்சியை நடத்து கின்றீர்கள். அதுவும் இந்த வயதிலும் இந்த ஊருக்கு, இன்றைக்கு நம்முடைய தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் வந்திருக்கின்றார் என்று சொன்னால், இந்த ஊருக்கு மட்டும் பெருமையல்ல - தமிழர்களாகிய நாம் அத்தனை பேருக்கும் பெருமைதான்.

அவருக்கு 90 வயது ஆகின்றது. ஆனால், அவரைப் பார்த்தால் அப்படி தெரியாது. பேசினால், 40 ஆண்டு களுக்கு முன்பு என்ன நடந்ததோ, அதை அப்படியே நினைவுபடுத்தி சொல்வார்.

இன்னின்ன நடந்தது என்று பிரித்துப் பிரித்து சொல் வார். நான் கடந்த ஆண்டில் ஒருமுறை அவரோடு பேசிக் கொண்டிருந்தபொழுது, 1959 ஆம் ஆண்டு, என்னுடைய தந்தையார், திராவிட முன்னேற்றக் கழ கத்தின் நாடாளுமன்ற உறுப்பினராக டில்லியில் இருந்தபொழுது,

தந்தை பெரியார் அவர்களும், தமிழர் தலைவர் அவர்களும், மரியாதைக்குரிய மணியம்மையார் அவர் களும் வேனிலே, வெளிநாட்டு சுற்றுப்பயணம் சென்றார் கள். அப்பொழுது டில்லிக்கும் சென்று, எங்களது இல்லத்தில், என் தந்தையாரோடு தங்கினார்கள் என்று சொல்லியபொழுது,

தமிழர் தலைவரின் ஞாபகத் திறனைக் கண்டு வியந்தேன்!

தேதி வாரியாக, இன்னின்ன மணிக்கு இது நடைபெற்றது என்று அவர் சொல்லும்பொழுது, எவ்வளவு ஞாபகத்திறன் இவருக்கு என்று நினைத்து வியந்தேன்.

ஞாபகத்திறன் மட்டுமல்ல, எதை செய்ய வேண்டும் என்று நினைக்கின்றாரோ, அதே சிந்தனையில் 24 மணிநேரமும் இருக்கின்றார் என்பதை நான் புரிந்துகொண்டேன்.

இன்றைக்கு அவரும், அவரைச் சார்ந்த அருமைத் தோழர்களும் நடத்தி முடிக்கவேண்டிய காரியம் என்னவென்று சொன்னால், 60 ஆயிரம் பிரதிகள் ‘விடுதலை’ விற்பனையாக வேண்டும் என்று அவர்கள் எடுத்திருக்கின்ற முயற்சி.வெற்றி பெறவேண்டும் என்று அவர்கள் எடுத்திருக்கின்ற ஒரு முயற்சி.

அதே சிந்தனைதான் 24 மணிநேரமும் அவர் களுக்கு. இன்றைக்குச் சொன்னார், பேசும்பொழுது, ‘விடுதலை’யைப்பற்றி பேசுங்கள் என்று.

கருப்புச்சட்டைக்காரர்கள்மீது 

எனக்கு மிகப்பெரிய பாசம் வருகிறது

ஆகவே, எடுத்துக்கொண்ட காரியத்தில், எவ்வளவு ஆழமாக, எவ்வளவு திடமாக, எவ்வளவு உறுதியாக அவர் இருக்கின்றார் என்பதைப் பார்க்கின்றபொழுது, எனக்கு அவர்மீது மட்டுமல்ல, கருப்புச்சட்டைக் காரர்கள்மீதே எனக்கு மிகப்பெரிய பாசம் வருகிறது.

அவர்தான் அப்படியென்றால்,  நேற்று ஒரு மனநிறைவான நிகழ்ச்சி ஒன்று நடந்தது.

க.ச. என்ற மிகப்பெரிய உயர்ந்த மனிதர்  - அவரு டைய நூற்றாண்டு விழா நேற்று கொண்டாடப்பட்டது. அவரைப் பார்த்தால், நூறு ஆண்டுகளைக் கடந்தவர் போல் தெரியவில்லை. அவரும் பழைய நினைவுகளை யெல்லாம் நினைவு கூர்ந்தார்.

எதற்காக இதைச் சொல்லுகின்றேன் என்றால், அந்த நேரத்தில், நம்முடைய ஈரோடு சண்முகம், ‘விடுதலை’யை வாங்கச் சொல்லுங்கள் என்றார்.

எதற்காக இதைச் சொல்கிறேன் என்றால், எடுத்துக் கொண்ட பணியை, ஏற்றுக்கொண்ட கொள்கைகளை - எப்பொழுதும் அதையே நினைத்துக் கொண்டிருப்ப வர்கள் திராவிடர் கழகத்துக்காரர்கள்; அதுவும் நம்முடைய தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுடைய தலைமையில் இருக்கின்ற இவர்களுக்கு எடுத்துக் கொண்ட கொள்கைதான் 24 மணிநேரமும் சிந்தனையும், செயலுமாக அமைந்துவிடுவது என்று பார்க்கும்பொழுது எனக்கு மிக்க மகிழ்ச்சியாக இருக்கின்றது.

ஆனால், இதே நேரத்தில் இன்னும் சில பேர் இந்த நாட்டிலே இருக்கின்றார்கள். அவர்களும்  எடுத்துக் கொண்ட காரியத்தை, ஏற்றுக்கொண்ட கொள்கையை - நினைத்ததை செய்து முடித்தாகவேண்டும் - அதற்கு என்ன விலை கொடுத்தாலும் பரவாயில்லை; அதற்காக ஜனநாயகத்தை அழித்தாலும் பரவாயில்லை; மக்கள் மாண்டாலும் பரவாயில்லை - இந்த நாட்டை என்னு டைய நாடாக, காவி நாடாக மாற்றுவேன் என்று உறுதி எடுத்துக்கொண்டிருக்கின்ற சில தலைவர்கள் இன் றைக்கு நாட்டை ஆண்டு கொண்டிருக்கின்றார்கள் என்பது மட்டுமல்ல, நாள்தோறும் அதற்கான வேலை களைச் செய்துகொண்டிருக்கின்றார்கள்.

(தொடரும்)


No comments:

Post a Comment