இல்லந்தோறும் 'விடுதலை' உள்ளந்தோறும் 'பெரியார்' தோழர்களே வெறும் 'விடுதலை' சந்தா திரட்டவில்லை மாறாக அறிவாயுதத்தை அனைவருக்கும் தருகிறீர்! முனைந்து செயல்படுங்கள் - இலக்கை முடியுங்கள்! தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, July 11, 2022

இல்லந்தோறும் 'விடுதலை' உள்ளந்தோறும் 'பெரியார்' தோழர்களே வெறும் 'விடுதலை' சந்தா திரட்டவில்லை மாறாக அறிவாயுதத்தை அனைவருக்கும் தருகிறீர்! முனைந்து செயல்படுங்கள் - இலக்கை முடியுங்கள்! தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை

இல்லந்தோறும் 'விடுதலை' உள்ளந்தோறும் 'பெரியார்' -தோழர்களே வெறும் 'விடுதலை' சந்தா திரட்டவில்லை மாறாக அறிவாயுதத்தை அனைவருக்கும் தருகிறீர்! முனைந்து செயல் படுங்கள் - இலக்கை முடியுங்கள்! என்று  அறிக்கை விடுத்துள்ளார்  திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள். 

அவரது அறிக்கை வருமாறு:

கடந்த 25.6.2022 அன்று மதுரையில் சிறப்புடன் நடைபெற்ற பொதுக்குழுவின் முடிவுப்படி, நமது கழக உறவுகளும், பகுத்தறிவாளர்களும், திராவிடர் இயக்க உடன்பிறப்புகளும், பொதுவான முற்போக்கு சிந்தனை யாளர்களும், 60 ஆயிரம் ‘விடுதலை'யை வீடு தோறும், கடைகள், பொதுமன்றங்கள், பொது நிலையங்கள் இவற்றில் எல்லாம் கிடைத்து,  ஊருணி நீரை ஊரார் பருகிப் பயன்படுவதுபோல் ஆக்கி, நமது இன எதிரிகளின் விஷமப் பிரச்சாரத்திற்கு தக்க பதிலடியை நாள்தோறும் தரும் நல்வாய்ப்பைப் படிக்கவும், பரப்பவுமான பணிதான் அது என்ற உணர்வுடன் சுறுசுறுப்பு தேனீக்களாக்கி - பருவம் பாராது கடுமையாக உழைத்து வருகிறார்கள்.

செயல்வீரத் தோழர்களுக்கு 

எமது மகிழ்ச்சி கலந்த நன்றி!

இந்த இயக்கத்தின் ‘‘கண்களுக்கு'' இலக்கு மட்டுமே இந்த நாட்களில் தெரியும்; மற்ற எதுவும் தெரியாது என்று கருதிடும் வண்ணம் ‘‘கடமைக்காக கண்துஞ்சாது, மெய் வருத்தம் பாராது, வெற்றிக்கனி பறிக்க நொடிப்பொழுதும் வீண் செய்யோம்'' என்ற உறுதி பொங்க உலா வருகின்ற செயல்வீரத் தோழர்களுக்கு எமது மகிழ்ச்சி கலந்த நன்றி!

ஒரு சிறு விளக்கம் - 

இந்த இலக்கு ‘விடுதலை'யின் பணி விழா அறுபதாண்டு எம் பங்கு என்பதால், எம்மை ஊக்கப்படுத்த என்பதைவிட, நம்மை, நம் இனத்தை, உயர்த்திட, நம் ‘‘திராவிட மாடல்'' ஆட்சியை அகிலத்திற்கும் வழிகாட்டும் அதிசய சமூகநீதி, சுயமரியாதை, சமத்துவம் தழைத்தோங்கும் ‘அனைவருக் கும் அனைத்தும்' என்ற அரிமா ஆட்சியைப் பாராட்டியும் - பொய்ப் பிரச்சாரத் திரையைக் கிழித்து உண்மையை ஒப்பனையின்றி காட்டி, மக்களுக்கு விளக்கிடவே! இன்றைக்கு மதவாதப் பாம்பு படமெடுத்தாடுவதற்கு- காவிகள் மகுடி வாசிக்கும் காலகட்டத்தில், நாம்தான் அதன் நச்சுப் பல்லைப் பிடுங்கி எறியும் ‘‘பாம்பு பிடிப்பவர்கள்'' ஆகியுள்ளவர்கள்!

அந்த நச்சுப் பல்லைப் பிடுங்கும் அதிசய குறடுதான் ‘விடுதலை' நாளேடு என்ற அறிவாயுதம்!

உறங்கும் ஒடுக்கப்பட்டோரை தட்டி எழுப்பிடும் அறிவுப் போர்ச் சங்கு

எனவேதான் இந்த முக்கிய தருணத்தில் உறங்கும் ஒடுக்கப்பட்டோரை தட்டி எழுப்பிடும் அறிவுப் போர்ச் சங்கு நமது நாளேடான ‘விடுதலை' என்ற வித்தகக் கருவி!

அதனால்தான் தோழர்களே, அது நாடெல்லாம், வீடெல்லாம், ஏன் உலகெலாம் பரவிடவேண்டிய - அறியாமை, மூடநம்பிக்கைகளைத் தடுக்கும் தடுப்பூசி போன்றது!

அதுமட்டுமா?

‘விடுதலை' நாளேட்டின் தனித்தன்மை எப்படிப் பட்டது?

அறிந்துகொள்வீர் அகிலத்தோரே!

தந்தை பெரியார் அவர்களே விளக்குகிறார், படியுங்கள்!

‘‘சரியானாலும், தப்பானாலும் தனக்குச் சரியென்று தோன்றியதை தயவு, தாட்சண்யம், பயம், பாரபட்சம் இல்லாமல் தைரியமாய் வெளிப்படுத்தி வந்திருக்கிறது.

உலகில் பத்திரிகைகள் இரண்டு விதம்

மற்றொரு காரியம் என்னவென்றால், பத்திரிகை வாசிப் பவர்களைப் பின்பற்றாமல் பத்திரிகையில் உள்ள தைப் பின்பற்றும்படி வாசகர்களை செய்து வந்திருக்கிறது. உலகில் பத்திரிகைகள் இரண்டு விதம்:

1. அவை, தமது வாழ்க்கை வழி வேண்டுமென்று சுயநலம் கருதுபவர்களால் (பாமர) மக்களைப் பின்பற்றி நடத்தப்படும் பத்திரிகை ஒன்று.

2. மக்கள் சமூகத்தில் சில கொள்கைகளைப் பரப்ப வேண்டுமே என்று பொதுநலம் கருதுபவர்களால், ஒரு குறிப்பிட்ட லட்சியத்தையே பின்பற்றி நடத்தப்படும் பத்திரிகை மற்றொன்று.

முதலாவது  வகை பத்திரிகைகளுக்கு ஒரு குறிப்பிட்ட கொள்கை இருக்க முடியாது; தயவு, தாட்சண்யம், பயம், பாரபட்சம் ஆகியவை இல்லாத தன்மையில் இருக்க முடியாது என்பதோடு, சமயத்துக்குத் தகுந்தபடி சரிப்படுத்திக் கொள்வதன்மூலம் அவற்றிற்கு எவ்வித கஷ்டமும், தொல்லையும், நஷ்டமும் இருக்க முடியாது.

ஆனால், இரண்டாவதாகக் குறிப்பிட்டதானதாவது, அதாவது கொள்கைகளுக்காக நடத்தப்படும் பத்திரிகை களுக்கு பல தொல்லைகளும், கஷ்டமும், நஷ்டமும் ஏற்படுவதோடு, வெகு சுலபத்தில் எதிரிகள் ஏற்பட்டுக் கொண்டே இருப்பார்கள்.

இம்மாதிரி பத்திரிகைகள், பொதுஜன செல்வாக்குக்கு விரோதமாகவும் வேலை செய்யவேண்டி ஏற்பட்டு விடு வதால், பொதுஜனங்கள், ஆதரவும் இல்லாமல் இருக்க வேண்டியும் வரும்.

அறிவு மருத்துவ அன்றாடப் பணி!

கொள்கை ஏடாக - அது ஒரு நாளேடாக கடந்த பல அடக்குமுறை அம்புகளால் ஏற்பட்ட விழுப்புண்கள் - நிதிப் பற்றாக்குறை - நட்டங்களால் ஏற்பட்ட இதய வலிகள், இடையிடையே மக்களுக்கு மருத்துவம்போல செய்யும் பணியே, அறிவு மருத்துவ அன்றாடப் பணியாகும்!

கரோனாவைத் தடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறி, எளிய வழிமுறையாக முகக் கவசத்தை அணியுங்கள் என்று சொன்னால், எத்தனை பேர் கேட்கிறார்கள்?

தடுப்பூசி தடுக்கும் என்பதைக் கூறினாலும், பலரும் போட்டுக் கொள்ளத் தயங்குகிறார்களே இன்றளவும் - அதுபோலத்தான் ‘விடுதலை' நாளேடு பரப்பும் பணியும் நடந்துகொண்டிருக்கும்.

அரசுக்காக நாம் ஊசி போட்டுக் கொள்ளவில்லை - முதலமைச்சருக்காக முகக் கவசம் அணியவில்லை - உங்களைப் பாதுகாக்கத்தானே என்பதை எளிதில் வற்புறுத்த முடிகிறதா?

‘‘விடுதலை''யின் விவேகப் பணி - தாய்மை உள்ளத்தோடு தடம்புரளாத கொள்கைப் பணி

அறுவைச் சிகிச்சையின்போது புண்ணும், வலியும் தவிர்க்க இயலாது என்றாலும் விளைவு - நிரந்தர மகிழ்ச்சி நோய் தீர்ந்ததினால் என்பதை உணர வைக்கும் பணி போன்றது ‘‘விடுதலை''யின் விவேகப் பணி - தாய்மை உள்ளத்தோடு தடம்புரளாத கொள்கைப் பணி.

எனவே, இல்லந்தோறும் விடுதலை, உள்ளந்தோறும் பெரியார்; நம் வாழ்வை ‘அறியாமை' நோயற்ற வாழ்வாக்கி, குறைவற்ற அறிவுச் செல்வத்தை' வாரி வழங்கி, ‘விடு தலை'யைப் பரப்புவது ஒரு சமூகத் தொண்டு - தனி மனித மகிழ்ச்சி அல்ல!

விரைந்து செயலாற்றி இலக்கு முடித்து இன்பம் காண்போம்!

அறிவாயுதத்தை - அனைவருக்கும் தரும் அரும்பணியாற்ற வாரீர்! வாரீர்!!

ஏடுகளின் வரலாற்றில் இது ஒரு மக்களின் அமைதிப் புரட்சி! அறிவுப்புரட்சி என்பதை வரலாறு பதிவு செய்யும்; எனவே, தோழர்களே, தாய்மார்களே, உடன்பிறப்புகளே, கொள்கை உறவுகளே நீங்கள் வெறும் ‘சந்தா' திரட்ட வில்லை. மாறாக, ஒரு அறிவாயுதத்தை - அனைவருக்கும் தரும் அரும்பணியாற்ற வாரீர்! வாரீர்!!

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

11.7.2022


No comments:

Post a Comment