பா.ஜ.க.வின் ஊரை ஏமாற்றும் அரசியல்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 6, 2022

பா.ஜ.க.வின் ஊரை ஏமாற்றும் அரசியல்!

பழங்குடியினப் பெண், குடியரசுத் தலைவராக ஆதரவு கேட்டு பரப்புரை செய்துவரும் நிலையில் நாடு முழுவதும். பழங்குடியினருக்கு எதிரான கொடுமைகள் அதிகரித்துள்ளன.

பழங்குடியினப் பெண்ணை தீ வைத்து எரித்து காணொலியில் ஒளிபரப்பினர் உயர்ஜாதியினர்!

மத்தியப் பிரதேசத்தில், அரசு ஒதுக்கிய நிலத்தில் விவசாயம் செய்த பழங்குடிப் பெண்ணை, உயர்ஜாதியைச் சேர்ந்த சில பேர் தீ வைத்து எரித்து, அதனை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்ட கொடூரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எரிக்கப்பட்ட பெண் கடுமையான தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

பாதிக்கப்பட்ட பழங்குடிப் பெண் மத்தியப் பிரதேசத்தின் குணா மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவர் குடும்பத்துக்கு அரசு நலத்திட்ட உதவியின் கீழ் கொஞ்சம் நிலம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால்,உயர்ஜாதியினர் சிலர், அந்த நிலத்தை அபகரித்துக் கொண்டனர். 

பின்னர் அண்மையில் வருவாய்த்துறை அதிகாரிகள் அந்த நிலத்தை மீட்டு, அந்தப் பெண்ணின் குடும்பத்தாரிடம் ஒப்படைத்துள்ளனர். இந்த நிலையில்தான், கடந்த சனிக்கிழமையன்று உயர்ஜாதி இளைஞர்கள் பிரதாப், ஹனுமத், ஷியாம் கிரார் ஆகியோர், அந்த நிலத்தில் வேலை பார்த்துக் கொண்டு இருந்த  பழங்குடியினப் பெண்ணை அடித்து கட்டிவைத்து தீ வைத்து எரித்திருக்கின்றனர்.

அப்போது தன் மனைவியைத் தேடி அந்த நிலத்துக்கு வந்த பழங்குடியினப் பெண்ணின் கணவர், தன் மனைவி எரிக்கப்பட்டு வலியால் துடிப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.பின்னர் உடனடியாக அவர் உடலில் பரவிய தீயை அணைத்து அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளார். பின்னர் தனது மனைவியை உயிரோடு தீவைத்து எரித்த மூன்று பேர்மீது அவர் காவல்துறையில் புகாரளித்துள்ளார்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து ஒருவரைக் கைதுசெய்த நிலையில் காவல்துறையினர் மற்ற இருவரை தேடிவருகின்றனர். 

 இதே போல் கண்டேல்வால் மாவட்டத்தில் பழங்குடியினப்பெண் உயர்ஜாதி இளைஞருடன் பேசினார் என்பதற்காக, அவரை அரை நிர்வாணப்படுத்தி, அந்த உயர்ஜாதி இளைஞரைத் தோளில் தூக்கிக்கொண்டு கிராமத்தில் பழங்குடிப் பெண்ணை  ஊர்வலமாக செல்ல வைத் தனர். வழியில் அந்தப்பெண்ணை கம்பு மற்றும் வயர்களால் அடித்து சித்திரவதை செய்தனர். (குறிப்பு: பழங்குடியினப் பெண் எரிக்கப்பட்ட படம் அருகில் காண்க)

 இது தொடர்பாக காவல்துறையில் விசாரித்த போது  - முறையற்ற காதல் விவகாரம்! இது தொடர்பாக பாதிக்கப் பட்டவரோ அல்லது வேறு யாருமே புகார் அளிக்கவில்லை. காணொலிகளைப் பார்த்து எங்களால் நடவடிக்கை எடுக்க முடியாது என்று கூறிவிட்டனர். கொலை நடந்தால் கூட இப்படித்தான் சொல்லுவார்களோ?

ஒரு பழங்குடியினப் பெண்ணை குடியரசுத் தலைவராக நிறுத்தி இருக்கிறோம் என்று பாஜகவும், அதன் கூட்டணிக் கட்சிகளும் கூறிக்கொண்டு வருகின்றனர். தமிழ்நாட்டில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி -  "சமூகநீதி என்று மூச்சுக்கு மூன்றுமுறை பேசும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பழங்குடி இனப்பெண்ணான திரவுபதி முர்முவை ஆதரிக்காமல் இருப்பது ஏன்?" என்று கேள்வி எழுப்புகிறார். 

ஆனால் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான பரப்புரையில் இருக்கும் போதே வட இந்தியாவில் தொடர்ந்து பழங்குடியினர் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன.  இதுகுறித்து மத்தியப் பிரதேசத்தை ஆளும் பிஜேபி அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதைப் பற்றி எல்லாம் பிஜேபிக்கு அடமானம் போன எடப்பாடியார் பேசமாட்டாரா!

பழங்குடியினப் பெண்ணைக் குடியரசுத் தலைவராகத் தேர்வு செய்யப் போகிறோம் என்று குதியாட்டம் போடும் கும்பல்- இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்? எஸ்.சி.யான குடியரசுத் தலைவர் மாண்பமை ராம்நாத் கோவிந்தை பூரி ஜெகநாத் கோயிலிலும், ராஜஸ்தான் பிர்மா கோயிலிலும் அவமானப்படுத்தியதையும் இதில் இணைத்துக் கொண்டு பார்த்தால் - பா.ஜ.க.வின் பம்மாத்து - ஊரை ஏமாற்றும் அரசியலின் வண்டவாளம் புரியும்.

No comments:

Post a Comment