தேசிய சின்னத்தில் திரிபு வேலை ஏன்? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 16, 2022

தேசிய சின்னத்தில் திரிபு வேலை ஏன்?

தலைநகர் டில்லியில் சென்ட்ரல் விஸ்டா என்ற பெயரில் புதிதாக கட்டப்பட்டு வரும் நாடாளுமன்ற கட்டடத்தின் மீது 6.5 மீட்டர் உயரம் உள்ள தேசிய சின்னம் நேற்று நிறுவப்பட்டது. 9500 டன் எடையுள்ள இந்த வெண்கல சிலையை பிரதமர் மோடி  திறந்து வைத்தார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அசாதுதீன் ஒவைசி மற்றும் சீதாராம் யெச்சூரி ஆகியோர் நெறிமுறைப்படி மக்களவைத் தலைவர் தான் இந்த சிலையை திறந்து வைத்திருக்க வேண்டும் என்றும் இந்த நிகழ்ச்சிக்கு அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் அழைக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்த நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் ஜவஹர் சிர்க்கார் தேசிய சின்னம் அவமதிக்கப்பட்டதாக குற்றம்சாட்டி உள்ளார்.

அசோக சின்னத்தில் உள்ள சிங்கம் சாந்தமாக அதேவேளையில் கம்பீரமாக தோற்றமளிக்கும். ஆனால் புதிதாக நிறுவப்பட்டுள்ள சிலையில் உள்ள சிங்கம் ஆக்ரோஷமாக இருப்பது போல் உள்ளது. அதோடு அதன் உருவம் சீராக இல்லாமல் அதிக அகலம் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது என்று குற்றம் சாட்டியுள்ளார்.

உத்தரப் பிரதேசம் சாரனத்தில் அசோகர் உருவாக்கிய நான்குமுக சிங்க உருவம் இந்திய அரசின் சின்னமாக தேர்வு செய்யப்பட்டது.  அசோகர் பவுத்த கருத்துக்களை நான்கு திசைகளிலும் கம்பீரமாக பறைசாற்றும் வகையில் அமைதியான தோற்றத்தோடு அதே நேரத்தில் அதன் கம்பீரம் குறையாமலும், அழகில் எந்த ஒரு குறையும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக கச்சிதமாக இளம் சிங்கங்கள் அமர்ந்திருப்பதைப் போன்று செதுக்கி இருந்தார். 

ஆனால் மோடி ஆலோசனையில் அமைக்கப்பட்ட இந்த சிலையில் சிங்க முகம்  கோரமாக உள்ளது. மேலும் உடல்கள் பருத்தும், அச்சுறுத்தும் விதமான தோற்றத்தோடு வெறித்தும் நிற்கும் வகையில் அமைந்துள்ளது. இது மிகவும் திட்டமிட்ட செயலாகும். 

 மோடி ஆட்சிக்கு வந்ததில் இருந்தே இனி வருங்காலத்தில் அனைத்துமே மோடியால் தான் என்ற ஒரு இறுமாப்போடு செயல்பட்டு வருகிறார். 

ஆகையால் தான் ஒட்டுமொத்த ரூபாய் நோட்டுக்களையும் ஒழித்து கலர் கலராக ரூபாய்நோட்டுக்களை புழக்கத்தில் விட்டுள்ளார். 

அதே போல் புழக்கத்தில் இருந்த நாணயங்களையும் சத்தமில்லாமல் திரும்பப்பெற்று இவரது ஆட்சிக் காலத்தில் அச்சிடப்பட்ட நாணயங்கள் மட்டுமே புழக்கத்தில் இருப்பது போன்று செயல்பட்டு வருகின்றார்.   தற்போது நாடாளுமன்ற கட்டடத்தையே மாற்றி விட்டார். இறுதியாக இந்திய தேசியச் சின்னத்தையும் தனது விருப்பத்திற்கு மாற்றிவிட்டார். 

இது அவரது விருப்பமா? அல்லது இந்திய அரசு முத்திரையில் பவுத்தச் சின்னங்கள் இருப்பதை வெறுக்கும், மோடியை பின்னிருந்து இயக்கும் ஆர்.எஸ்.எஸ் திட்டமா?


No comments:

Post a Comment