மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்வு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 14, 2022

மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்வு

மேட்டூர், ஜூலை 14  நீர்வரத்து வினாடிக்கு ஒரு லட்சம் கனஅடியாக அதிகரித்த நிலையில், மேட்டூர் அணை நீர்மட்டம் ஒரே நாளில் சுமார் 8 அடி உயர்ந்தது.  

இதனால் கபினி, கிருஷ்ண ராஜசாகர் ஆகிய இரு அணைகளில் இருந்து நேற்று முன்தினம் தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 423 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து கணிசமாக அதிகரித்தது. நேற்று முன்தினம் இரவில் நீர்வரத்து வினாடிக்கு 98 ஆயிரத்து 208 கனஅடியாக இருந்தது. நேற்று (13.7.2022) மதியம் இந்த நீர்வரத்தானது வினாடிக்கு 1 லட்சத்து 153 கனஅடியாக அதிகரித்தது. 

பின்னர் மாலையில் நீர்வரத்து வினாடிக்கு 93 ஆயிரத்து 711 கனஅடியாக குறைந்தது. இருப்பினும் அணையில் இருந்து வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படும் நிலையில், நீர்வரத்து பலமடங்கு அதிகரித்து உள்ளது.

 இதனால் அணையின் நீர்மட்டம் மளமளவென்று உயர்ந்து கொண்டே வருகிறது. 

குறிப்பாக நேற்று முன்தினம் காலை 100.44 அடியாக இருந்த அணை நீர்மட்டம் நேற்று காலை 105.81 அடியாக உயர்ந்தது. மாலையில் நீர்மட்டம் 107.45 அடியாக மீண்டும் உயர்ந்தது.  இரவு 8 மணி நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 92 ஆயிரத்து 54 கனஅடியாக இருந்தது. அணையின் நீர்மட்டம் 108.21 அடியாக உயர்ந்தது. இதன்மூலம் அணை நீர்மட்டம் நேற்று (13.7.2022) ஒரே நாளில் சுமார் 8 அடி உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதே போன்று நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் அணையின் உச்சபட்ச நீர்மட்டமான 120 அடியை விரைவில் எட்டும் என்று பொதுப்பணித்துறையினர் நம்பிக்கை தெரிவித்தனர்.


No comments:

Post a Comment