குட்கா ஊழல் வழக்குகள்:வழக்குப்பதிவு செய்ய அனுமதி கோரல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 22, 2022

குட்கா ஊழல் வழக்குகள்:வழக்குப்பதிவு செய்ய அனுமதி கோரல்

சென்னை,ஜூலை22- குட்கா ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அதிமுக மேனாள் அமைச்சர்கள், காவல்துறை மற்றும் அரசு உயர் அதிகாரிகள் என 12 பேருக்கு எதிராக சட்ட ரீதியாக வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க முன்அனுமதி கோரி தமிழ்நாடு அரசுக்கு சிபிஅய் கடிதம் அனுப்பியுள்ளது.

சென்னை புறநகரில் உள்ள எம்டிஎம் என்ற பான் மசாலா நிறுவனத்தில் வரு மானவரித் துறையினர் கடந்த 2016ஆம் ஆண்டு நடத்திய சோதனையில் அந்நிறுவனம் ரூ.250 கோடி வரி ஏய்ப்பு செய்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

இந்த சோதனையின்போது கைப்பற்றப் பட்ட டைரியின் மூலம், குட்காவை தமிழ்நாடு முழுவதும் சட்டவிரோதமாக விற்பனை செய்ய அப்போதைய தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜய பாஸ்கர், வணிக வரித்துறை அமைச்சர் பி.வி.ரமணா, மேனாள் டிஜிபி ராஜேந் திரன், மேனாள் சென் னை மாநகர காவல் ஆணையர் ஜார்ஜ் மற்றும் காவல்துறை, உணவு பாதுகாப்புத் துறை, வணிகவரித் துறை அதிகாரி களுக்கு கோடிக்கணக்கில் லஞ்சம் கொடுக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

அதையடுத்து இந்த குட்கா ஊழல் தொடர்பாக சிபிஅய் விசாரணை கோரி மறைந்த திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன், உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தி ருந்தார். அந்த வழக் கில் ஒன்றிய கலால் வரித்துறை தாக்கல் செய்த பதில் மனுவில், ‘‘டில்லியில் உற்பத்தி செய்யப் பட்ட குட்கா பொருட்கள் சட்டவிரோதமாக தமிழ் நாட் டிற்கு கொண்டு வர ரூ.55 கோடி ஹவாலா முறையில் பணப்பரி மாற்றமும், பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பும் நடந்துள்ளது’’ என தெரிவிக்கப்பட்டது.

அதேபோல, வருமானவரித் துறை புலனாய்வு பிரிவின் முதன்மை இயக்குநர் சுசிபாபு வர்கீஸ் தாக்கல் செய்திருந்த பதில்மனுவில், ‘‘தமிழகத்தில் குட்காவை சட்டவிரோதமாக பதுக்கி கள்ளச் சந்தையில் விற்பனை செய்வதாகக் கிடைத்த தகவலின்பேரில் மாதவராவ், சீனிவாச ராவ் மற்றும் உமா சங்கர் குப்தா ஆகியோர் பங்கு தாரராக உள்ள செங்குன்றம் குட்கா குடோனில் கடந்த 08.07.2016 அன்று சோதனை நடத்தப் பட்டது.

அப்போது எங்களுக்குக் கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில் இந்த ஊழலில் தொடர்புடைய முக்கிய நபர் கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அப்போதைய தலைமைச் செயலர் மற்றும் தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநருக்கு தனித்தனியாக ரகசிய கடிதம் அனுப் பப்பட்டது. 

கடந்த 01.04.2016 முதல் 15.06.2016 வரையிலான ஒன்றரை மாதத்தில் மட்டும் சுகாதாரத் துறை அமைச் சருக்கு ரூ.56 லட்சம் லஞ்சமாக கொடுக்கப்பட்டுள்ளதாக மாதவராவ் தெரிவித்துள்ளார்.

கடந்த 17.11.2017 அன்று போயஸ் தோட்டத்தில் வி.கே.சசிகலா அறையில் நடந்த வருமானவரித் துறை சோதனையின்போது, குட்கா ஊழல் தொடர்பாக அப்போதைய தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் மற்றும் மேனாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நாங்கள் அனுப்பிய ரகசிய கடிதம் கைப்பற்றப் பட்டது’’ என தெரிவித்திருந்தார்.

அதையடுத்து இந்த வழக்கை விசாரித்த, அப்போது தலைமை நீதிபதியாக இருந்த இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி 

அப்துல் குத்தூஸ் ஆகி யோர் அடங்கிய அமர்வு, ‘‘சமு தாயத்துக்கு தீங்கு விளைவிக்கும் குட்காவை ஒழித்தே தீர வேண்டும். அதை ஒருபோதும் அனு மதிக்கக் கூடாது. 

இந்த வழக்கில் அமைச்சர்கள், டிஜி பிக்கள் மற்றும் உயரதிகாரிகள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ள தால் இந்த வழக்கை சிபிஅய் விசாரணைக்கு மாற்றுகிறோம்’’ என கடந்த 2018ஆம் ஆண்டு உத்தர விட்டனர்.

இந்த ஊழல் தொடர்பாக மேனாள் தலைமைச் செயலரான பி.எஸ்.ராம மோகன ராவ், 

‘‘இதுதொடர்பாக மேனாள் முதல மைச்சர் ஜெயலலிதாவுக்கு அறிக்கை அனுப்பியதாகவும், ஆனால் அந்த கோப்பின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை’’ என ஏற்கெனவே தெரிவித்திருந்தார்.

சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி இந்த வழக்கை விசாரித்து வரும் சிபிஅய் புதுடில்லி ஊழல் தடுப்புப் பிரிவு, இந்த குற்றச்சாட்டில் சிக்கியுள்ள மேனாள் சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜய பாஸ்கர், மேனாள் வணிகவரித் துறை அமைச்சர் பி.வி.ரமணா மற்றும் மேனாள் டிஜிபி-க்கள் டி.கே.ராஜேந்திரன், எஸ்.ஜார்ஜ் உள்ளிட்ட 12 பேருக்கு எதிராக சட்டரீதியாக வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க முன்அனுமதி கோரி தமிழ்நாடு அரசுக்கு தற்போது கடிதம் அனுப்பியுள்ளது.

இந்த ஊழல் வழக்கில் முதற்கட்டமாக குட்கா ஆலை உரிமையாளர் மாதவராவ், பங்குதாரர்கள் சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா, உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி செந்தில்முருகன், ஒன்றிய கலால்துறை அதிகாரி என்.கே.பாண்டியன், சுகாதாரத் துறை ஆய்வாளர் சிவக்குமார் ஆகிய 6 பேரையும் ஏற்கெனவே சிபிஅய் கைது செய்து, அவர்கள் மீது கடந்த 2018ஆம் ஆண்டு குற்றப்பத்திரிகையையும் தாக்கல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment