அரியலூரில் அணியமாவோம் - ஆர்ப்பரித்தெழுங்கள் இளைஞர்களே ஜூலை 30 ஆம் தேதி அரியலூருக்கு தமிழர் தலைவர் அழைக்கிறார்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, July 25, 2022

அரியலூரில் அணியமாவோம் - ஆர்ப்பரித்தெழுங்கள் இளைஞர்களே ஜூலை 30 ஆம் தேதி அரியலூருக்கு தமிழர் தலைவர் அழைக்கிறார்!

கடந்த ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு இராஜ பாளையத்தில் திராவிடர் கழக மாநில மாநாடு மிக எழுச்சியோடு நடைபெற்றது. அந்த எழுச்சியின் தொடர்ச்சியாக தமிழ்நாடு முழுவதும் மண்டல இளைஞரணி மாநாடுகள், வட்டார அளவில் மாநாடுகள், பொதுக்கூட்டங்கள், கிராம பிரச்சார கூட்டங்கள் என இளைஞரணி சார்பில் பல்வேறு நிகழ்வுகள் நடை பெற்றன. அதன் மூலம் பொதுமக்கள் இளைஞர்கள் இடையே விழிப்புணர்வை, எழுச்சியை ஏற்படுத் தினோம்.

கூடிக் கலையும் கூட்டமல்ல!

2019 ஆம் ஆண்டு அரியலூரிலே திராவிடர் கழக இளைஞரணி மாநில மாநாட்டு ஏற்பாடுகள் தொடங்கி நடைபெற்ற போது கரோனா நோய் தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. கரோனா ஊரடங்கு தளர்வுக்குப் பிறகு தமிழர் தலைவர் கன்னியாகுமரி முதல் சென்னை வரை மிகப்பெரிய பிரச்சார பெரும்பயணத்தை மேற் கொண்டார். அந்த பயணத்தின் முடிவாக இளைஞர்களை சந்திக்க அழைத்தார் ஆசிரியர். கூடினோம் சென்னை யில், 600-க்கும் மேற்பட்ட துடிப்புமிக்க இளைஞர்கள் மாநில இளைஞரணி கலந்துரையாடல் கூட்டமாக. அந்த கூட்டத்தில் கலந்துகொண்ட இளைஞர்கள் பலர் இப் போதுதான் நேரில் தமிழர் தலைவரை, பெரியார் திடலை பார்த்தோம் என்றார்கள். இப்படி தலைவரை நேரில் பார்த்திராது, தலைமை நிலையத்தையும் நேரில் பார்த் திராது, தத்துவத்தை ஏற்றுக்கொண்டு தடம் பதிக்கும் இளைஞர்களின் கூட்டமாக அது அமைந்தது. அது கூடிக் கலையும் கூட்டமல்ல, அறிவை கூர்தீட்டும் கூட்டம். அந்த கூட்டத்தில் கூடியிருந்த இளைஞர்களைப் பார்த்து “உடலுக்கு தீங்கு விளைவிக்கும் (மது, புகைப் பழக்கம்) காரியங்களில் ஈடுபடாதீர்கள், அப்படி இருந் தால் உடனே அவற்றை கைவிடுங்கள் என்று தனிமனித ஒழுக்கத்துடனும், சுய கட்டுப்பாட்டுடனும் வாழ வேண் டும் என்பதை வலியுறுத்தி அக்கறையோடு ஆசிரியர் கண்டித்தது, சமூக அக்கறை இளைஞர்கள் மனதில் எழவேண்டி, திருமணமாகாதோர் எத்தனைபேர் இருக்கிறீர்கள் என்று கேட்டு, அவர்களிடையே விதவை மறுமணம், ஜாதி மறுப்பு திருமணம் செய்துகொள்ள முன்வரவேண்டும் என்ற சமூகமாற்றத்தை பற்றி ஆசிரியர் பேசியது,  சமூகத்தின் மீது அக்கறை கொண்டு இயக்கப்பணி செய்திடவேண்டும் என்பதை வலியுறுத்து வதாக ஆசிரியரின் உரை அமைந்திருந்தது. காசு கொடுத்து கூட்டம் சேர்க்கும் தலைவர்கள் மத்தியில், கருத்துகளை கூறி, கொள்கையை பேசி இளைஞர்களை ஊக்கப்படுத்தும் தலைவர் நம்முடைய தமிழர் தலைவர் ஒருவர்தான்.

அந்த மாநில இளைஞரணி கலந்துரையாடல் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது தான் மீண்டும் அரிய லூரிலே ஜுலை மாதம் மாநில இளைஞரணி மாநாடு நடைபெறும் என்று அறிவிப்பு வெளிவந்த நாள் முதல் தமிழ்நாட்டின் அனைத்து ஊர்களிலும் கழகத் தோழர்களின் கடும் உழைப்பால், அரும் ஒத்துழைப்பால் மாநில மாநாட்டு ஏற்பாடுகள் சிறப்பாக நடைபெறுகின்றன. தமிழ்நாடு முழுவதும் எங்கு பார்த்தாலும் சுவர் எழுத் துகள் மாநாட்டுக்கு அழைப்புவிடுத்து அணி சேர்க் கின்றன. இயக்க வரலாறு இதுவரை கண்டிராத திராவிடர் கழகத்தின் இளரத்தங்கள், இளைஞர் பட்டாளம் வரும் ஜுலை 30 அன்று அரியலூரை ஆட்கொள்ளவேண்டும். அதற்கான ஆயத்தப் பணிகளை இளைஞர்கள் உடனே மேற்கொள்ளவேண்டும்.

இளைஞர்களுக்கு 

தந்தை பெரியாரின் அழைப்பு

23.08.1945 அன்று திருச்சி டவுன் ஹாலில், திராவிட வாலிபர்கள் சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தலைமை ஏற்று தந்தை பெரியார் பேசுகிறார் “இன்று எது ஒழிய வேண்டும், யார் வெளியேற வேண்டும், எது மாற வேண்டும்? இவை அறியாத மக்களும், சுயநல வாதிகளும், சமயசஞ்சீவிகளும், வயிற்றுப்பிழைப்பு, பொதுஉடைமை, தேசபக்தர் குழாங்களும் எங்களை ஏன் கடிய வேண்டும். எங்களுக்கு எந்தப் பார்ப்பான் மீது கோபம்? எந்தக் கடவுள் மீது கோபம்? எந்தத் தலைவன் மீது கோபம்? எந்த ஜாதி மீது கோபம்? எந்த வெள்ளையனிடம் அன்பு? தோழர்களே! பித்தலாட் டத்தின் மீது கோபம், முட்டாள் தனத்தின் மீது கோபம், ஏமாற்றுகிறதன்மை மீது கோபம், எங்களை இழிவுபடுத் தியும், முன்னேற விடாமலும் செய்து வைத்து இருக்கும் சகலத்தின் மீதும் கோபம், இவைகளுக்கு ஆதர வளிப்பதால் வெள்ளையன் மீதும் கோபம்.

இளைஞர்களே! நடப்பது நடக்கட்டும் என்று நீங்கள் எதற்கும் துணிவு பெற்றுத் தொண்டாற்ற வேண்டிய காலம் இது. நீங்கள் அடிபட வேண்டும், காயப்பட வேண்டும், கும்பல் கும்பலாகச் சிறைப்பட நேரிட்டாலும் மனம் கலங்காமல் நிற்கும் துணிவு பெற வேண்டும், இதற்குத்தான் திராவிட இளைஞர் கழகம் இருக்க வேண் டும்.

தோழர்களே! துணிவு கொள்ளுங்கள், சாகத் துணிவு கொள்ளுங்கள். உங்கள் சொந்த வாழ்வு நலத்தையும், மானத்தையும் விட்டுத் தொண்டாற்றத் துணிவு கொள் ளுங்கள். இதுதான் இன்றைய திராவிட வாலிபர் கழக ஆண்டு விழாவில், இனி வெகுகாலம் வாழப்போகும் மக்களாகிய உங்களுக்குச் சாகப்போகும் கிழவனாகிய நான் வைத்துவிட்டுப் போகும் செல்வமாகும். உன் சொந்த மானத்தை விட்டாகிலும், உன் இன ஈனத்தை ஒழிப்பதற்குத் தொண்டு ஆற்று. உன் இனத்தின் இழிவை, ஈனத்தைப் போக்க உன் சொந்த மானத்தையும் பலிகொடு. இனத்தின் மானத்தைக் காக்க எவ்வகைத் துன்பத்தையும் பொறுத்துக் கொண்டு தொண்டாற்றத்தக்க குடிமகன் இல்லாத இனம் வேர்ப்பற்றில்லாத மரம்போல், கோடரிகொண்டு வெட்ட வேண்டிய அவசியம் இல்லாத மரம்போல் தானாகவே விழுந்துவிடும். தன் இனத்திற்கு உண்மையான தொண்டாற்றுபவனுக்கு அடையாளம் என்னவென்றால் அத்தொண்டால் ஏற்படும் இன்னலுக்கும், துன்பத்திற்குமே அவனது வாழ்வையும், உடலையும் ஒப்புவித்து விட்டவனாக இருக்கவேண்டும்.” என்று இளைஞர்களை அழைத்தார்.  தற்போதும் அதே நிலைமை தான் நிலவுகிறது, ஆகவே திராவிடர் கழகத்தின் அடலேறுகளே, இயக்கத்தின் இளைஞர்களே உணர்ச்சிபெறுங்கள், எழுச்சிகொள்ளுங்கள் வரலாறு படைப்போம் - அரியலூர் வாருங்கள். 

ஈடு இணையற்ற கொள்கை 

நமது கொள்கை

இளைஞர்களே, நமக்குக் கிடைத்த தத்துவ ஆசான் தந்தை பெரியாரைப் போல் வேறு யாருக்கும் கிடைக்க வில்லை. நமது கொள்கைக்கு ஈடான -இணையான கொள்கை உலகில் வேறு எங்குமில்லை. சமூக வளர்ச் சிக்கு  இன்றியமையாத ஒன்றாகத் திகழும் சமூக நீதியை பாதுகாக்கும் சமூகநீதி இயக்கம், அறிவியல் மனப்பான் மையை வளர்க்கும் பகுத்தறிவு இயக்கம், பெண்ணடிமை ஒழிப்பு இயக்கம், ஜாதி ஒழிப்பு இயக்கம், நோய் நாடி நோய் முதல் நாடி என்பதை போல வருமுன் காக்கும் தொலைநோக்கு இயக்கம், அறிவை மட்டுமல்லாது ஒழுக்கத்தையும் உயிரினும் மேலாக ஓம்பும் கொள் கையை கொண்டுள்ள இயக்கம் தான் நம்முடைய இயக்கம்.

அரியலூரில் அகிலம் வியக்கும் 

மாநாடு - பேரணி

ஜூலை  30 இல் அரியலூரில் அகிலம் வியக்கும் வண்ணம் திராவிடர் கழக மாநில இளைஞரணி மாநாடு மற்றும் இளைஞரணியின் எழுச்சி பேரணி நடை பெறவுள்ளது. இந்த மாநாட்டில், இன இழிவு நீக்க, அறியாமை இருளில் மூழ்கியிருக்கும் மக்களிடம் அறிவு வெளிச்சம் பாய்ச்ச, ஆரியத்தால் சீர்கெட்ட சமுதாயத்தை சீர்படுத்த, ‘நீட்’டை ஒழித்துக்கட்ட, காவிரி உரிமையை மீட்க, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உறுதி செய்திட, பெண்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட, மதவெறியை வீழ்த்தி மனிதநேயம் காப்பாற்றப்பட, சமூகநீதியை உயர்த்திப் பிடிக்க, சாமியார்கள் இல்லாத, ஜாதியில்லாத நாட்டை உருவாக்கிட தீரமிக்க பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. கழகம் காணும் களங்கள் எனும் கருத்தாழமிக்க கருத்தரங்கத்திலும், தமிழின முன்னேற்றத்திற்கு பெரிதும் தடையாக இருப்பது ஆரிய சனாதனமா? அடிமைமோகமா? எனும் பட்டிமன்றத்திலும் கழக பேச்சாளர்களின் உரை முழக்கங்கள், கருத்துப் பிரச்சாரங்கள் கனமழையாகப் பெய்யப் போகிறது.

தந்தை பெரியாரும், அன்னை மணியம்மையாரும் விட்டுச் சென்ற கழகத்தைக் கருத்துடனும், கம்பீரத் துடனும், வலிமை மிக்கதாக உருவாக்கி அதனை நாளும் சிறப்பாக வழிநடத்தும் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களும், அமைச்சர் பெருமக்களும் மாநாட்டில் விளக்கவுரை எழுச்சியுரை நிகழ்த்தவுள் ளார்கள்.

இளைஞர்களிடையே  எழுச்சியூட்டும் பேரணி

ஊருக்கு நான்கு பேர் இருப்பார்கள் இந்தக் கருப்புச் சட்டைக்காரர்கள் என்று பொதுவாக சொன்னதெல்லாம் ஒரு காலம். திராவிடர் கழகத்தின் இளைஞரணி அரிமா வாக, இயக்கத்தின் ஆற்றல் படைத்த பெரும் சக்தியாக உருவெடுத்து இருப்பது இக்காலம் என்று உலகிற்கு உணர்த்த உணர்ச்சி பெற்று வாருங்கள். அரியலூர் மாநில மாநாட்டில் நடத்தப்படவிருக்கும் இளைஞரணி பேரணியின் மூலம் இயக்கத்தின் வளர்ச்சியை, அதனால் ஏற்பட்ட எழுச்சியை எடுத்துரைக்கும் பேரணியாக சீருடையுடன் அரியலூரை ஆட்கொள்ள வேண்டும். அது நமது இயக்கத்தையும் தாண்டிய இளைஞர்கள் மத்தியிலும் ஒரு தாக்கத்தை, எழுச்சியை உருவாக்க வேண்டும். தந்தை பெரியார் பண்படுத்திய தமிழ்நாட்டை காவி மண்ணாக்க நினைக்கும் கயவர்களின் எண் ணங்களை காணாமல் போகச்செய்யும் வகையில் கருப்புச்சட்டைகளின் களமாக இளைஞரணி மாநில மாநாடும், பேரணியும் அமையவேண்டும். வீறுநடை போட்டு - கொள்கை முழக்கமிட்டுக் கம்பீரமாக நடை பெறும் நம் இளைஞரணி சீருடை அணிவகுப்பினை காண்பவர்கள் “புத்துயிர்ப் பெற்று புறப்பட்டது காண் புதிய புறநானூற்றுப் பெரும்படை” என்று நினைக்கும் வண்ணம், இன எதிரிகளான ஆரிய பார்ப்பனர்கள், ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்கள், பிற்போக்குச் சக்திகள் நடுங்கும் வண்ணம் கட்டுப்பாட்டின் இலக்கணமாக, முறுக்கேறிய தோள்களோடு, புது ரத்தம் பாய்ச்சிய புது மிடுக்கோடு வாருங்கள் இளைஞர்களே அரியலூரில் ஆர்ப்பரிப்போம்.

உலகை பெரியார்மயமாக்கிய 

தமிழர் தலைவர் அழைக்கிறார்

எந்த ஒரு இயக்கமாக இருந்தாலும் அதை தோற்றுவித்த தலைவருக்கு பிறகு அவருடைய தத்துவத்தை முன்னெடுத்து செல்ல யார் வருகிறார் என்பதைப் பொறுத்தே அந்த இயக்கம் நீடிக்கிறது. அதன் தலைவரும் பேசப்படுகிறார். அந்த வகையில் பத்து வயதில் தந்தை பெரியாரின் தத்துவங்களை ஏற்றுக்கொண்டு நடைபோட தொடங்கி இன்றைக்கு 90 வயதை தொடயிருக்கும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பெரியாரை உலகமயமாக்கியது மட்டுமல் லாமல், உலகை பெரியார் மயமாக்கியிருக்கிறார். அந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் “அரியலூர் மட்டுமல்ல, அகிலமே அதிசயிக்கத்தக்க வண்ணம் அம்மாநாடு அமைய அனைவரும் திரண்டு - கடலைக் காணா அரியலூரில், கருஞ்சட்டைக் கடலைக் காட்டுங்கள்; பெரியார் என்ற பேராயுதத்தின் வலிமையை விளக்கும் வாலிபர்கள் கூட்டம் இதோ என்று மாற்றார் மருள, புரிய வைக்க வாருங்கள், சந்திப்போம்! என்று அழைப்புவிடுத்துவிட்டார். கருஞ்சிறுத்தைப் பட்டா ளமே களம் காண தயாராவீர், தமிழர் தலைவர் தலைமையிலே தந்தை பெரியார் இலட்சியத்தை ஈடேற்ற வாருங்கள் இளைஞர்களே அணிசேருவோம் அரியலூரில்.

மதவெறியர்களுக்கு மட்டுமல்லாது ஜாதி வெறியர் களுக்கும் எதிராக முழக்கமிட்டு  மதமற்ற அமைதி உலகினைப் படைத்திட, மதவாதம் தலைதூக்காமல் தடுத்து மானுடத்தை போற்றிட, ஜாதியத்தை வீழ்த்தி சமத்துவம் படைத்திட அரியலூரில் நாம் இடும் முழக்கம் அகிலம் முழுவதும் கேட்கட்டும். எப்போதும் இது பெரியார் மண்தான் என்பதை அரியலூரில் நிரூபித் துக்காட்டுவோம் வாருங்கள் இளைஞர்களே, வாருங்கள்! தமிழ்நாட்டின் அனைத்துச் சாலைகளும் அரியலூரை நோக்கி பயணிக்கட்டும், ஜுலை 30 ஆம் தேதி இளைஞர்களுக்கான இடம் அரியலூர்; அரியலூர்; அரியலூர்!

- முனைவர் வே.ராஜவேல்,

நெல்லுப்பட்டு

No comments:

Post a Comment