2050 ஆண்டின் புத்தாண்டை செவ்வாய் கோளில் கொண்டாடுவோம்: உருவாகிறது புதிய நகரம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 16, 2022

2050 ஆண்டின் புத்தாண்டை செவ்வாய் கோளில் கொண்டாடுவோம்: உருவாகிறது புதிய நகரம்

உலக மக்கள் தொகை நாளான 11.07.2022 அன்று அய்க்கிய நாடுகள் அவை இன்னும் 10 ஆண்டுகளில் உலகில் 800 கோடியாக மக்கள் தொகை கூடிவிடும் என்று கூறியிருந்தது. 

 அதாவது தற்போது உள்ளதை விட இருமடங்காகும். தற்போது உள்ள மக்கள் தொகைக்கே உலகம் பல்வேறு சுழலியல் சீர்கேட்டைச் சந்தித்து பெரும் தொற்றுநோய் மற்றும் வாழ்வியல் சீர்கேட்டை உருவாக்குவதோடு, பிற உயிரினங்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது, இந்த நிலையில் இரண்டுமடங்காகும் போது பூமியின் 40 சதவீதம் இயற்கை முற்றிலும் அழிந்துவிடும். இதன் பாதிப்பு மிகவும் கடுமையாக இருக்கும்,

ஆகையால் தான் மக்கள் தொகைக்கு ஏற்ப பெருநகரங்களை நவீன முறையில் அமைக்க திட்டமிட்டுள்ளனர்.   ஜப்பான் ஒரு புதிய நகரத்தை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது.  இன்னும் சில 10 ஆண்டுகளில் உருவாகப்போகும் ஜப்பானின் அந்தப் புதிய நகரத்தில் இன்றைய கார்கள் இருக்காது. மெகா சிட்டி பிரமிட் என்ற அந்த நவீன நகரக் கட்டமைப்பு, சுமார் 750,000 மக்கள் வாழக்கூடிய அளவுக்கு இருக்கப்போவதாக தெரிவித்துள்ளது.

மேலும், இந்த நகரத்தில் மாசுபாடு, புதைபடிம எரிபொருள் சார்ந்த வாகனங்கள் போன்றவற்றுக்கு மாற்று ஏற்பாடு செய்யப்படும் என்றும் அந்தத் திட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

அதே போல் முடக்குவாதத்தைச் சரிசெய்யும் தண்டுவட உள்வைப்புகள் (Spinal cord Implants),, தூங்கும்போதுகூட தகவல்களைச் சேகரிக்கக்கூடிய மூளையில் பொருத்தப்படும் சிப், மறை உலகத்தை முழுமையாக அனுபவிக்க உதவும் ப்ரோகிராம்கள், புதைபடிம எரிபொருளில் ஓடும் கடைசி கார் சந்தையிலிருந்து வெளியேறுதல் போன்ற தொழில்நுட்ப முன்னேற்றங்களும் ஏற்படும் என்று எதிர்காலவியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

உச்சக்கட்டமாக, அபிபூ  (ABIBOO Architecture Studio)   என்ற நிறுவனம், 2054ஆம் ஆண்டில் செவ்வாய் கிரகத்தில் மனிதர்களுக்கென ஒரு புதிய நகரத்தை நிர்மாணிக்கத் திட்டமிட்டுள்ளது.

செவ்வாய் கோளில் மனிதர்களுக்கென ஒரு புதிய நகரம்

அவர்களுடைய திட்டத்தின்படி, 2054ஆம் ஆண்டின்போது செவ்வாய் கோளில் நுவா(The City of Nüwa) என்ற நகரத்தை நிர்மாணிக்கத் தொடங்குவார்கள். 2100-களின் தொடக்கத்தில் அந்த நகரக் கட்டுமான வேலைகளை முடித்து, 250,000 மக்களை செவ்வாய் கிரகத்தில் குடியேற்றுவார்கள்.

அபிபூவின் திட்டப்படி பார்த்தால், அடுத்த 100 ஆண்டுகளில் மக்கள் செவ்வாய் கிரகத்தில் வாழ்வார்கள். அந்தத் திட்டம் சாத்தியமானால், இன்றிலிருந்து சரியாக 100 ஆண்டுகள் கழித்து, 2122ஆவது புத்தாண்டு செவ்வாய் கிரகத்திலும் கொண்டாடப்படும். அது சாத்தியப்படுமா என்பதை அடுத்த நூறு ஆண்டுகளில் மனித இனம் காணப்போகும் தொழில்நுட்ப முன்னேற்றங்களால் மட்டுமே கூறமுடியும். 

எதிர்கால வளர்ச்சிக்கான தொழில்நுட்ப திட்டங்கள்

50  ஆண்டுகளுக்கு முன்பு வீடியோ கால் என்பதை யாரும் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. 1990 களில் கூட ஜேம்ஸ் பாண்ட் படங்களில் நாயகன் கையில் உள்ள ஒரு கருவியின் திரையில் எங்கோ உள்ளவர்களோடு பேசுவதைக் கண்டு நாம் வியந்து பார்த்தோம், அது வெறும் கற்பனை தான் என்ற நினைவோடு படம் பார்த்து திரும்பினோம். ஆனால், இன்று நினைத்த நொடியில் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், வீடியோ கால் மூலம் ஒருவரை ஒருவர் பார்த்துப் பேசிக்கொள்ள முடியும்.

இதேபோல, ஹாலோகிராம் என்ற அதிநவீன தொழில்நுட்பம் இனி எதிர்காலமாக இருக்கலாம். அடுத்த பத்து ஆண்டுகளிலேயே அது சாத்தியப்படும் என்று எதிர்காலவியல் வல்லுநரான(Futurologist)  ஜேம்ஸ் பெல்லினி கணித்துள்ளார். மேலும், எம்.அய்.டி-யைச் சேர்ந்த ஆய்வாளரான லியாங் ஷியும் 2032ஆம் ஆண்டுக்குள் ஹாலோகிராம் பயன்பாட்டிற்கு வந்துவிடும் என்று உறுதியாக நம்புகிறார். அதாவது ஸ்டார் வார் படங்களில் வரும் கதாப்பாத்திரங்கள் மேஜையின் முன்னால் தோன்றி பேசுவது போன்ற முழு பிம்பத்தை உருவாக்குவதே ஹாலோகிராம்.

இந்தத் தொழில்நுட்பத்தை நடைமுறை யில் சாத்தியப்படுத்தும் முயற்சிகள் நீண்ட காலமாக நடந்துகொண்டிருக்கின்றன. ஆனால், காற்றில் ஒளியைப் பிரதிபலிக்கச் செய்வது மிகவும் கடினம். காற்றின் அடர்த்தி மிக அதிகமாக இருந்தால் அல்லது காற்றில் அதிகளவிலான தூசு, துகள்கள் இருந்தால் சாத்தியப்படலாம். ஹாலோகிராம் தொழில்நுட்பம் அவ்வளவு விரைவில் சாத்தியப்படாது. இருப்பினும், 2122ஆம் ஆண்டின் போது இது நடைமுறையில் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அதோடு, இப்போது ஏதேனும் குழப்பமான மனநிலையோ, வருத்தமோ இருந்தால் கைபேசியை அணைத்துவிட்டு இருந்துவிடுவது போல் எதிர்காலத்தில் இருக்கமுடியாது. ஏனெனில், உங்களைச் சுற்றியிருக்கும் அனைத்துமே இணையத்தோடு தொடர்பில் இருக்கும்," என்றும் கூறுகிறார்.

எதிர்காலவியல் வல்லுநரான இயன் பியர்சன், அடுத்த நூற்றாண்டில் ஒருவருக்கு ஒருவர் வாய் திறந்து பேசாமல், தம் மூளையிலிருந்து இன்னொருவர் மூளைக்கு நேரடியாகக் கருத்துப் பரிமாற்றம் செய்யும் தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்துவிடும் என்று தெரிவித்துள்ளார். அவருடைய கூற்றின்படி, டெலிபதி என்று நாம் சயின்ஸ் ஃபிக்ஷன் படங்களில் பார்த்திருப்போம். அந்தத் தொழில்நுட்பம் விரைவில் நிஜ உலகில் சாத்தியப்படக்கூடும்.

ஒருவருக்கு ஒருவர் தொடர்புகொள்ளும் போது வெளியாகும் வார்த்தைகள் ஒரு வகையான மின்சார சிக்னல்களே. நம் உடலின் இயக்கம் அனைத்துமே மூளையின் அந்த சிக்னல்களை அடிப்படையாகக் கொண்டவைதான். அதை அடிப்படையாகக் கொண்டு கவனிக்கும்போது, டெலிபதி மூலமாகத் தொடர்புகொள்வதும் சாத்தியமாகும் என்று டெலிபதி குறித்து 2012ஆம் ஆண்டிலேயே  எதிர்காலவியல் வல்லுநர் பேட்ரிக் டக்கர் கூறினார்.  உதாரணமாகச் சொல்லவேண்டுமெனில், முதலில் நாம் பட்டன்களைக் கொண்ட சாதனங்களைப் பயன்படுத்தினோம். பிறகு தொடுதிரை கொண்ட சாதனங்கள் வந்தன. அதைத் தொடர்ந்து கைரேகை, குரல், முகவெட்டு போன்றவற்றைக் கொண்டு இயங்கும் சாதனங்கள் வந்தன.

இவற்றைப் போலவே, நாம் ஒரு சாதனத்தைத் தொடாமலே, பேசாமலே இயக்க முடியும். ஒருவர் நினைப்பதை வைத்தே, இயங்கக்கூடிய வகையிலான தொழில்நுட்ப சாதனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவை எதிர்காலத்தில் இன்றைய தொடுதிரைகளைப் போல் பொதுப் பயன்பாட்டிற்கு வரலாம். சமீபத்தில் மூளையில் பொருத்தப்பட்ட சிப் உதவியோடு, தான் நினைத்ததை ட்வீட்டாகப் பதிவு செய்தார் முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட 62 வயதான ஒரு முதியவர். இந்தத் தொழில்நுட்பம் எதிர்காலத்தில் மிகவும் சாதாரணமாகப் பயன்படும் அளவுக்கு வளரலாம்," என்று கூறியவர் டெலிபதி குறித்து மேலும் பேசினார்.

 உலகின் தலைசிறந்த வாணியல் பொறியியலாளர் ஸ்டீபன் ஹவ்கின்ஸ் தான் நினைத்ததை ஒருவித கருவியின் மூலம் கணனியில் பதிந்து அதன் மூலம் பேசியும் வந்தார். அவரது நூல்கள் அனைத்துமே இவ்வாறு அவரால் எழுதப் பட்டவைதான். "நரம்புகளின் வழியே மூளை மெல்லிய மின்சாரத்தைப் பாய்ச்சுகிறது. அதற்கு ஏற்றாற்போல் கை வேலை செய்கிறது. அந்தக் குறிப்பிட்ட நாடியை மீட்டுருவாக்க முடிந்தால் மூளையின் உதவியின்றியே கையை இயக்கமுடியும்.

நியூராலிங்க் மூலமாக எந்த அளவில் என்னென்ன செயல்பாடுகள் உடலில் நடக்கின்றன என்பதைப் பதிவு செய்து, அதைப் பயன்படுத்தி ஒருவர் சிந்திக்கும்போது என்ன அளவில் மூளை உடலை இயக்குகிறது என்பதைக் கண்டறியும்போது டெலிபதி சாத்தியப்படும். கணினியில் எப்படி 0,1 என்ற பைனரி மொழிதான் அடிப்படையோ, அதேபோல மனித மூளையில் நியூரான் இணைப்புகளில் உண்டாகும் மின்சாரமே அடிப்படை. நாம் எந்த மொழியைப் பேசுபவராக இருந்தாலும், அனைவரின் அடிப்படை மொழியும் அந்த நியூரான் இணைப்பில் உண்டாகும் மின்சாரம் தான். மூளையில் சிப் பொருத்துவதன் மூலம், அந்த மொழியைப் புரிந்துகொள்ள முடிந்தால் டெலிபதி விரைவில் சாத்தியப்படும். அதுமட்டுமின்றி அதைப் பயன்படுத்தி, மேட்ரிக்ஸ் படத்தில் வருவதைப் போல, நாம் கற்றுக்கொள்ள நினைப்பவற்றை ஒரு கணினியில் தகவலை ஏற்றி வைப்பதைப் போல மூளையில் ஏற்றி வைக்கவும் முடியலாம்.

 ஆர்டிக் பகுதியில் பனிக்கட்டியில் உறைநிலையில் இருந்த பிறகு  வசந்த காலத்தில் மீண்டும் வாழ்க்கையைத் துவங்கும் தவளை மற்றும் சில வகை கம்பளிப்பூச்சிகளிடமிருந்து உறை நிலையிலும் உயிருடன் வைத்திருக்கும் புரத மூலக்கூறுகளை பிரித்தெடுக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  

இந்த புரதம் மனிதர்களுக்குள் வெற்றிகரமாக செலுத்தப்படும் சூழலில் உறை நிலையில் மனிதர்களை ஆழ்ந்த தூக்கத்தில் வைத்து மிகவும் நீண்ட தூரவிண்மீன்களில் உள்ள பூமியை ஒத்த கோள்களுக்கு மனிதர்களை அனுப்பி அங்கு சென்று சேர்ந்த பிறகு மீண்டும் மனிதர்களை உயிர்பித்து அக்கோள்களில் வாழ்க்கையைத் துவங்கும் வழிமுறைகள் சாத்தியமாகும். 

இதன் மூலம் பூமியும் பாதுகாக்கப்படும் மனிதர்களும் இடம் பெயர்ந்து பல்வேறு கோள்களுக்குச் சென்று வாழலாம்.

No comments:

Post a Comment