கல்லூரி மாணவிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை காலக்கெடு இல்லை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, July 12, 2022

கல்லூரி மாணவிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை காலக்கெடு இல்லை

சென்னை, ஜூலை 12  மூவலூர் ராமா மிர்தம் அம்மையார் உதவித்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்க  கடைசி நாள் ஏதும் நிர்ணயிக்கப்படவில்லை. தகுதியுடைய மாணவிகள் அனைவரையும் விண்ணப்பிக்க வைப்பதே எங்கள் நோக்கம் என்று உயர் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

தமிழ்நாட்டில் உயர் கல்வி படிக்கும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித் தொகை வழங்கும் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உதவித்தொகை திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த திட்டம் நடப்பு கல்வியாண்டு முதல் நடைமுறைக்கு வர உள்ளது. இத்திட்டத்தின் கீழ் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்த மாணவிகள் உயர்கல்வியான பட்டப் படிப்பு அல்லது பட்டயப்படிப்பு அல்லது தொழிற்படிப்பு ஆகியவற்றில் இடைநிற்றல் இன்றி முடிக்கும் வரை மாதம் ரூ.1,000 வழங்கப்படும்.

இந்த தொகை நேரடியாக வங்கி கணக்கில் செலுத்தப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. இத்திட்டத்துக்கு தகுதியான மாணவிகளிடம் உரிய சான்றி தழ்களை பெற்று விண்ணப்பம் செய்ய வேண்டும் என கல்லூரி முதல்வர்களுக்கு உயர்கல்வித்துறை உத்தரவிட்டு, இதற்கான வழிமுறைகளையும் உயர் கல்வித்துறை வெளியிட்டு இருந்தது. அதன்படி இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் மாணவிகள் கல்லூரி வழியாக மற்றும் www.penkalvi.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலமாக நேரடியாக பதிவு செய்து வந்தனர். இத்திட்டத்துக்காக ஜூன் 25 முதல் ஜூன் 30 ஆம் தேதி வரை சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டது.

பிற உதவித்தொகைகளை மாணவிகள் பெற்றாலும் கூட இத்திட்டத்திலும் அவர்கள் பயன்பெறலாம். உதவி தொகைக்கு விண் ணப்பிக்க ஜூலை 10 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

அதன்படி மாணவிகள் விண்ணப்பித்து வந்தனர். இந்த நிலையில் உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் என்று ஏதும் குறிப்பிடவில்லை. தகுதி உடைய அனைத்து மாணவிகளும் இதில் பயன்பெற வைக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். அதுவரை விண்ணப்ப பதிவு திறந்து இருக்கும் என்று உயர் கல்வி துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இதனால், கல்லூரிகள் திறக்கப்படும் வரை மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என்ற நிலை உருவாகியுள்ளது.

No comments:

Post a Comment