கருநாடகாவில் முஸ்லிம் மாணவிகளின் உடையும் - காவிகளின் மதக்கலவரத் தூண்டலும்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, February 9, 2022

கருநாடகாவில் முஸ்லிம் மாணவிகளின் உடையும் - காவிகளின் மதக்கலவரத் தூண்டலும்!

மாணவர்களைப் பிரித்து அவர்கள் கல்விக்கு உலை வைக்கலாமா?

மதக் கலவரத்தைத் தூண்டும் போக்கிற்கு முடிவுகட்ட மதச்சார்பற்ற சக்திகள் கை இணைப்போம்!

கருநாடக மாநிலத்தில் முஸ்லிம் பெண்கள் வழமையாக அணிந்துவரும் ஹிஜாப் உடையை மதப் பிரச்சினையாக்கி, மதக் கலவரத்தைத் தூண்டும் ஹிந்து மதவெறி சக்திகளின் போக்கைத் தடுத்து நிறுத்தி, இந்தியாவின் மதச் சார்பின்மையைப் பாதுகாக்க ஒன்றுபடுவோம்! சட்டமும், நீதிமன்றமும் தன் கைகளை உயர்த் தட்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

அறிக்கை வருமாறு:

பள்ளி, கல்லூரிகளில் அனைவரும் ஒரே சீருடையை அணிய வேண்டும் என்றும், இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வரக்கூடாது என்றும் ஹிந்துத்துவ அமைப்புகளைச் சேர்ந்த மாணவ அமைப்புகள் திட்ட மிட்டு எதிர்ப்பு தெரிவிப்பதால், கருநாடகாவில் சர்ச்சை உருவாகியிருக்கிறது. சில நாள்களுக்கு முன்பு மங் களூரில் உள்ள ஒரு கல்லூரியில் இஸ்லாமிய மாணவிகள் வழக்கம்போல் ஹிஜாப் அணிந்து வந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஹிந்துத்துவ மாணவ , மாணவிகள் சிலர் காவித் துண்டு அணிந்து வந்தனர். ஹிஜாப் அணிந்தால் காவித் துண்டு அணிவோம் என்றும்,  ஹிந்துத்துவ அமைப்பு  மாணவர்கள் அறிவித்தனர். இதைத் தொடர்ந்து பல கல்வி நிறுவனங்களிலும் இதே சம்பவம் நடந்தேறியது.

கருநாடகாவில் காவிகளின் கலாட்டா!

இதனையடுத்து கருநாடகாவில் பெரும்பாலான 11-12 ஆம் வகுப்புகளில் படிக்கும் பி.யூ. கல்லூரிகளில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிய தொடர்ந்து வரிசையாக தடை விதிக்கப்பட்டு வருகிறது. இதனால் இஸ்லாமிய மாணவிகளுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. அதே வேளையில் ஹிஜாப் அணிந்து வரும் மாணவிகள் வகுப்புக்குள் அனுமதிக்கப்படுவ தில்லை என்றும், ஆப்சென்ட் போடப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதனால், கருநாட காவில் இருக்கும் பி.யூ. கல்லூரிகளில் பதற்றம் தொற்றிக் கொண்டுள்ளது. இந்த விவகாரத்தில் போராட்டம் நடத்தும் ஹிந்துத்துவ அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் மீது காவல்துறையினரும் நடவடிக்கை எடுக்கவில்லை. அங்கு நடப்பது பா... ஆட்சியல்லவா?

இந்நிலையில் குண்டபூர் பா... சட்டமன்ற உறுப் பினர் ஹலடி சிறீனிவாஸ், “உங்கள் பெண் குழந்தைகளை ஹிஜாப் அணியாமல் கல்லூரிக்கு அனுப்புங்கள்என்று இஸ்லாமிய பெற்றோருக்கு அறிவுரை வழங்கினார்!  இதற்கு இஸ்லாமியர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால், இஸ்லாமிய மாணவிகள் கல்லூரிக்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் குண்டபுராவில் கல்லூரிக்குள் செல்லாதவாறு தடுத்து நிறுத்தப்பட்ட இஸ்லாமிய மாணவிகளின் காணொலி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

முஸ்லிம் மாணவிகளின் கெஞ்சல்!

அந்தக் காணொலியில், கல்லூரி தலைமை ஆசிரிய ருடன் மாணவிகள் உருக்கமாகப் பேசும் காட்சியும் இடம் பெற்றுள்ளது.  எங்களை உள்ளே விடுங்க.. எங்க படிப்பு கெடுது. ப்ளீஸ் கல்லூரிக்குள் விடுங்கள். இத்தனை நாள்களாக அணிந்துவந்தபோது பிரச்சினை இல்லையே. தேர்வுக்கு ரெண்டு மாசம்தான் இருக்குஎன்று இஸ் லாமிய மாணவிகள் கெஞ்சிக் கண்ணீர் விடும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. ஆனால், அதை காதில் வாங்காமல், தலைமையாசிரியர் கதவை இழுத்து மூடும் கொடுமை யான காட்சியும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தேசிய அளவில் விவாதமாகி வருகிறது.

இதே சம்பவம் சிக்மங்களூரில் இருக்கும் இன்னொரு கல்லூரியிலும் நடைபெற்றது. இதனால் கருநாடகாவில் இருக்கும் பெரும்பாலான கல்லூரிகளில் பதற்றமான சூழ்நிலை திட்டமிட்டு உருவாக்கப்பட்டு வருகிறது. இஸ்லாமியப் பெண்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

கடந்த டிசம்பர் 31 ஆம் தேதியில் இருந்து இவர்கள் "ஆப்சென்ட்" என்று வகுப்புப் பதிவேட்டில் குறிப்பிடப் பட்டுள்ளது. “ஹிஜாப்பை'' அகற்றினால்தான் இவர்களை அனுமதிப்போம் என்று கல்லூரி நிர்வாகம் கூறியுள்ளது கொடுமையல்லவா? இது தொடர்பாக மாணவிகள் அளித்த பேட்டியில், “நாங்கள் எங்கள் உரிமைகளைத் தான் கடைப்பிடிக்கிறோம். எங்களை மிரட்டுகிறார்கள். நாங்கள் ஹிஜாப் அணியக் கூடாது என்று கூறுகிறார்கள். நாங்கள் கல்லூரிக்குள் வந்தும் எங்களுக்கு ஆப்சென்ட் போடுகிறார்கள். அதோடு நாங்கள் வேண்டுமென்றே விடுப்புப் போட்டதாக பொய்யாக எழுதிக் கொடுக்கச் சொல்கிறார்கள். அப்படி எழுதிக் கொடுக்க முடியாது என்றால் உங்களுக்குத்தான் பிரச்சினை என்றும் மிரட்டுகிறார்கள்'' என்று மாணவியர் குறிப்பிட்டுள்ளனர்.

உயர்நீதிமன்றத்தில் வழக்கு!

இந்த நிலையில், உடுப்பி கல்லூரி மாணவி ஒருவர், ஹிஜாப் அணிந்து வர அனுமதி கொடுக்கவேண்டு மென்று கருநாடக உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருக்கிறார். அந்த மனுவில், “இந்திய அரச மைப்புப் பிரிவு 14 மற்றும் பிரிவு 25-இன்படி ஹிஜாப் அணிவது ஒருவரின் அடிப்படை உரிமை. இந்திய அரசமைப்பு எந்தவொரு மனிதரும் தன் மதத்தைப் பின்பற்றுவதற்கான சுதந்திரம் மற்றும் உரிமையை உறுதி செய்கிறது. மதம் சம்பந்தமான நடவடிக்கைகள் பொது ஒழுங்கு - சட்டம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சினைகளை உள்ளடக்கியிருந்தால் மட்டுமே அது மாநில உரிமைகளில் தலையிடக் கூடியது'' என்று மாணவி தன் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இதன் பின்னணி என்ன? ஆர்.எஸ்.எஸ். - பா..., சங் பரிவார்களின் அணுகுமுறையைத் தெரிந்தவர் களுக்கு ஓர் உண்மை உறுதியாகவே தெரியும்.

எதையும் மதக் கண்கொண்டு பார்ப்பது என்ற ஒன்றே ஒன்றுதான் அது.

பா... - ஆர்.எஸ்.எஸின் புத்தி

எந்த ஒரு நாணயமான அறிவு சார்ந்த கொள்கையுமற்ற நிலையில், மதப் பிரச்சினையை மட்டுமே கண்களை இரவல் வாங்கிக் கூடப் பார்க்கும் புத்திதான் - அணுகுமுறைதான் அவர்களுடையது.

ஒரு சிறு துரும்புக் கிடைத்தால்கூடஈறைப் பேனாக்கி, பேனைப் பெரும் ஆளாக ஆக்கி'' என்ற பழமொழிக்கிணங்க  ஒரு யுத்தமே நடத்திவிடுவார்கள்.

அடுத்தவர் வீட்டு குளிர்சாதனப் பெட்டியில் (ப்ரிட்ஜ்) என்ன கறி இருக்கிறது என்று மோப்பம் பிடித்து, அது பசு மாட்டுக் கறி என்று சொல்லி ஒருவரை அடித்துக் கொல்லவில்லையா?

ஆடு- ஓநாய்க் கதை

ஆடு - ஓநாய்க் கதைதான். ஓடையில் மேற்பகுதியில் நின்று கொண்டிருந்த ஓநாய், 'கீழ்ப்பகுதியில் நின்று கொண்டிருந்த ஆடு தண்ணீர் குடித்ததால் தான், குடிக்கும் தண்ணீர் குழம்பி விட்டது' என்று ஆட்டை ஓநாய் அடித்துக் கொன்ற கதையை ஏட்டில்தான் படித்திருக்கிறோம். அந்தத் தன்மையைத்தான் ஆர்.எஸ்.எஸ். வகையறாக்கள் மூலம் இப்பொழுது பார்க்கிறோம்.

கருநாடகாவில் மட்டும்தானா?

கருநாடகாவில் பள்ளி செல்லும் முசுலிம் பெண்கள், பள்ளி சீருடையைப் புறக்கணிக்கவில்லை. சீருடையும் அணிந்து, அதற்குமேல் அவர்களின் மத வழக்கப்படி 'ஹிஜாப்' அணிந்து வருகின்றனர். ஏதோ கருநாடகாவில் மட்டும் முஸ்லிம் மாணவிகள் இப்படி அணிந்து வர வில்லை. இந்தியா முழுமையும் - இன்னும் சொல்லப் போனால் உலகம் முழுவதுமே அணிந்து வருகிறார்கள்.

உலகம் முழுவதுமே இதனை மாற்றப் போகிறார்களா? கருநாடகாவில் இந்த விஷயத்தைச் செய்யப் போய், உலகில் பெரும் எண்ணிக்கையில் வாழும் முஸ்லிம் நாடுகளின் கடும் எதிர்ப்பை இந்தியாவுக்கு எதிராகத் தூண்டும் வேலைக்கு வித்திடுவதை ஒன்றிய அரசு இந்த நிலையிலேயே கிள்ளி எறியவேண்டும்.

பொறுப்புணர்ச்சியுடன் தெரிவிக்கிறோம்

தங்கள் அமைப்பை வளர்ப்பதற்கான யுக்தி என்று இதை நினைத்தால், பன்னாட்டளவில்கூட பெரிய விலையைக் கொடுக்க நேரும் என்று மிகுந்த பொறுப்புணர்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

முஸ்லிம் மாணவிகள் எப்பொழுதும் அணிந்து வருவது போன்றே உடை அணிந்து வருகிறார்கள்? இப்பொழுது திடீர் என்று இந்தப் பிரச்சினையை எழுப்புவானேன்? இதன் பின்னணி என்ன? கருநாடகாவில் பா... ஆட்சி இருக்கிறது என்ற பலமா? பணமா? திட்டமா?

ஏட்டிக்குப் போட்டி

முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிந்து வந்தால் நாங்கள் காவித் துண்டு அணிந்து வருவோம் என்று சொல்லுவது பச்சையான ஆர்.எஸ்.எஸின் கலவர அணுகுமுறைதானே! இதன்மூலம் ஹிந்து - முஸ்லிம் பிரச்சினையை உருவாக்கி அதன்மூலம் குளிர்காயலாம் என்ற கலவரப் புத்திதானே! பல இடங்களில் செய்து பார்த்து வெற்றி கண்ட ருசி - இப்பொழுது கருநாடகாவிலும் அரங்கேற்றப்படுகிறது.

காவி அணிந்துகொண்டு ஒரு பக்கம் மாணவர்கள் நிற்பது - அதனை மறுத்து இன்னொரு பக்கத்தில் அணிதிரண்டு நிற்பது எதைக் காட்டுகிறது? இந்தியாவில் மத ரீதியாக - இரு அணிகளாக (Polarisation) பிரிக்கும் நோக்கத்தின் புள்ளி, எச்சரிக்கை!

மதச்சார்பின்மைமீது அக்கறையா?

பள்ளிகளில் மதச் சின்னங்களை அணிந்து வரக்கூடாது என்று பேச முற்பட்டுள்ளார்கள். இவர்கள் எப்பொழுது மதச்சார்பின்மைக் கொள்கைமீது காதல் கொண்டார்கள் என்று தெரியவில்லை.

முஸ்லிம்களையும், கிறித்தவர்களையும் பார்க்கும் போதுதானா?

திருநீறு அணிவது மத அடையாளம் இல்லையா?

அப்படிப் பார்த்தால் மாணவர்கள், மாணவிகள் திருநீறு அணிந்து வரலாமா? நாமம் போட்டு வரலாமா? பூணூல் அணிந்து வரலாமா? உச்சிக்குடுமி வைத்து வரலாமா? என்ற கேள்வி எழாதா? இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?

பஞ்சாபில் சொல்லுவார்களா?

பஞ்சாபில் சீக்கிய மாணவர்கள் அணியும் தலைப்பாகையை எடுக்கச் சொல்லுவார்களா?

அதைச் செய்து பார்க்கச் சொல்லுங்கள்; என்ன நடக்கும் என்பது காவிகளுக்கு நன்றாகவே புரியும்.

பள்ளிகளில் ஹிந்துப் பண்டிகைகளைக் கொண்டாடலாமா?

கல்வி நிறுவனங்களில் மதம் சார்ந்த ஆயுத பூஜை, விசய தசமியில் மாணவர் சேர்க்கை, அந்த நாளில் நெல் பரப்பி அதில் எழுத்துப் பயிற்சித் தொடக்கம், ஆர்.எஸ்.எஸ். பயிற்சிகள், சூரிய நமஸ்காரம், காலையில் மதம் சார்ந்த வழிபாடுகள், பிரார்த்தனைகள், ஜெபங்கள் ஆகியவற்றைத் தடை செய்யும் வகையில் அரசு நடவடிக்கை எடுக்குமா? கல்வி நிறுவன வளாகங்களில் உள்ள மதம் சார்ந்த வழிபாட்டு இடங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா? இஸ்லாமிய, கிறித்துவச் செயற்பாடுகளைத் தடுக்க எடுக்கப்படும் முனைப்புகள் ஹிந்து மதம் சார்ந்த செயற்பாடுகளுக்கும் பொருந்த வேண்டுமே!

வீண் வம்பை விலைக்கு வாங்குகிறார்கள். விஷ வித்தை ஊன்றி அதன் அறுவடையைச் சுவைக்கத் திட்டமிடுகிறது காவிக் கூட்டமான சங் பரிவார்!

மதச்சார்பின்மையில் நம்பிக்கையுள்ள அனைவரும் கட்சிப் பாகுபாடுகளின்றி ஒன்றுபட்டு இந்த அபாயத்தைத் தடுத்து நிறுத்த உடனடியாக முன்வரவேண்டும்.

பகுத்தறிவுக் கண்ணோட்டம்

பகுத்தறிவு பேசுபவர்கள் முஸ்லிம் பெண்களின் மத அடையாளத்துக்கு வக்காலத்து வாங்கலாமா என்று சில அரைகுறைகள்  உளறக் கூடும்.

நாங்கள் பகுத்தறிவாளர்கள்தான். ஆண் - பெண் இருவருக்கிடையே ஆடையில்கூட வேறுபாடு கூடாது - ஜடைகள் கூடாது - பெயர்களில் கூட ஆண் - பெண் வேறுபாடு தேவையில்லை என்று சொல்லுபவர்தான் தந்தை பெரியார்.

எதையும் வேறு உள்நோக்கத்தோடு செய்தால் அதனை ஏற்க முடியுமா? இந்த மாற்றத்திற்குக் காரணம் பகுத்தறிவோ, சமத்துவ சிந்தனையோ, சீர்மையோ அல்ல; மதவெறியின் முனைப்பு. எனவேதான், வன்மை யாகக் கண்டிக்கிறோம்.

அந்த நிலையைப் பகுத்தறிவுச் சிந்தனையையூட்டி செயலாக்கத்திற்குக் கொண்டு வரவேண்டும் என்பது தான் எங்கள் நிலை - ஒரு ஜனநாயக நாட்டில் சிந்தனைச் செழுமைமூலம்தான் இதனை உருவாக்கவேண்டும்.

இன்றைக்குப் பெண்கள் பேண்ட் அணிகிறார்களே!

இன்றைக்குப் பெண்கள் பேண்ட் - சர்ட் அணிந்து வரவில்லையா? கிராப் தலையுடன் வருவது பெருக வில்லையா? முஸ்லிம் பெண்களிடம் கூட இந்த நிலை - மாற்றம் வரத்தான் செய்கிறது. இவை எல்லாம் பகுத்தறிவு- முற்போக்குக் கொள்கைக்கு வெற்றிதான். மாற்றம் என்பதுதான் மாறாதது - இது அறிவியல்.

ஹிந்துத்துவாவாதிகள் பேண்ட் அணியலாமா?

கிறிஸ்துவக் கலாச்சாரத்தைப் புறந்தள்ளி, ஹிந்துக் கலாச்சாரத்தைத் தூக்கிப் பிடிக்கும் பிரதமர் உள்பட, ஆர்.எஸ்.எஸ். தலைவர் உள்பட எந்த உடைகளை அணிகிறார்கள்? வெள்ளைக்காரனின் கிறித்துவக் கலாச் சாரத்தைத் தானே பயன்படுத்துகின்றனர் - பின்பற்று கின்றனர்.

ஊருக்குத்தான் உபதேசமா? ஆர்.எஸ்.எஸில் உள்ள ஒடுக்கப்பட்ட மக்கள் சிந்திக்கட்டும். நாட்டு மக்களும் சிந்திக்கட்டும்!

சட்டமும், நீதித்துறையும் நேர் படுத்தட்டும்!

நாசகால மதவெறிப் போக்கைத் தடுத்து நிறுத்துவோம்! மதச்சார்பற்ற சக்திகள் கை இணைப்போம்! அரசமைப்புச் சட்டத்தின்மீதே உறுதி மொழி எடுப்பவர்கள் அதன் முகப்புரையில் முக்கியமாக இடம்பெற்றுள்ள மதச்சார்பின்மையை (செக்குலர்) மறக்கக் கூடாது - மறந்து செயல்பட்டால் சட்டமும், நீதிமன்றமும் தங்கள் கைகளை உயர்த்தி நேர்படுத்தட்டும் - இது காலத்தின் இன்றியமையாத கடமையாகும்!

மதவெறி மாய்த்து மனிதநேயம் காப்போம்!''

கி.வீரமணி 

தலைவர்,

திராவிடர் கழகம் 

சென்னை       

9.2.2022              

No comments:

Post a Comment