எவ்வளவு பெரிய சாதனை பாருங்கள்! நாம் விளம்பரம் எதுவும் செய்வதில்லை என்பதைத் தவிர, நாம் செய்திடாத செயல்கள்தான் என்ன? இயக்கத்தில் 6 தலைமுறையாகவும், மருத்துவம் பார்ப்பதில் 4 தலைமுறையாகவும் இருக்கும் மகளிர்தான் சிவகங்கை மருத்துவர் மலர்க்கண்ணி அவர்கள்! இயக்க மகளிர் வரலாற்றில் இது 22 ஆவது சந்திப்பு!
அம்மா வணக்கம்! தங்களைக் குறித்து அறிமுகம் செய்து கொள்ளுங்கள்?
என் பெயர் மலர்க்கண்ணி. வயது 69 ஆகிறது. 1954இல் பிறந்தேன். சொந்த ஊர் தஞ்சை மாரியம்மன் கோவில் அருகே உள்ள ஆலங்குடி எனும் சிற்றூர். அப்பா சுவாமிநாதன், ஓய்வு பெற்ற இரயில்வே ஊழியர். சிறந்த கால்பந்து விளையாட்டு வீரர். அம்மா இலட்சுமிதேவி, கரந்தை உமாமகேஸ்வரனார் உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்தவர்.
5ஆம் வகுப்பு வரை தஞ்சை சுப்பையா (நாயுடு) பள்ளியில் படித்தேன். பின்னர் திருச்சி பண்டாபீஸ் மற்றும் ஹோலிகிராஸ் பள்ளியில் உயர்நிலை வகுப்புகளை முடித்தேன். மருத்துவராவது விருப்பமாக இருந்ததால், தஞ்சை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தேன்.
அந்தக் காலத்திலேயே, உங்கள் குடும்பத்தில் அரசுப் பணியில் இருந்துள்ளார்களே?
ஆமாம்! எனது தாத்தா சாம்பசிவம் அவர்கள் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் பொறியாளராகப் பணியாற்றியவர். பெரியாருடன் இணைந்து செயல்பட்டவர்.
அம்மாவின் மாமா தி.பொ.வேதாசலம் அவர்கள். திருச்சியில் அவர்கள் இல்லத்தில் இருந்து தான் படித்தேன். அதேபோல அம்மாவின் மற்றுமொரு உறவுமுறை தாத்தா தமிழவேள் உமாமகேசுவரன் அவர்கள். கரந்தை உமாமகேசுவரனார் கல்லூரியை நிறுவியவர். அம்மா, அப்பா குடும்பத்தினர் அனைவருமே திராவிட இயக்கச் சிந்தனைக் கொண்டவர்களாகவும், பகுத்தறிவாளர்களாகவும் இருந்தவர்கள்!
திருமணம் எப்போது நடைபெற்றது?
1978ஆம் ஆண்டு எனக்குத் சுயமரியாதை திருமணம் நடைபெற்றது. சிவகங்கை வழக்குரைஞர் ச.இன்பலாதன் அவர்கள் தான் எனது இணையர். கரந்தை தமிழ்ச் சங்கக் கல்லூரி வளாகத்தில், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நடத்தி வைத்தார்கள். இது ஒரு “இராகு கால மணவிழா” என ஆசிரியர் மேடையில் சொன்னதைப் போல, ஞாயிற்றுக்கிழமை மாலை 4 – 6இல் திருமணம் நடைபெற்றது!
தாத்தா தி.பொ.வேதாசலம் இணையர் பங்கஜவல்லி அவர்கள் தான் மாலை எடுத்துக் கொடுத்தார்கள். காரணம் அவர்கள் “விதவை” எனும் அடையாளத்தோடு இருந்தார்கள். ஆசிரியர் அவர்கள் தான் மேடைக்கு அழைத்து, மாலை எடுத்துக் கொடுக்கச் சொன்னார்கள். எங்களுக்கு இராஜராஜன், தேம்பாவணி என இரண்டு பிள்ளைகள். இருவருமே மருத்துவர்கள்! மகனுக்கு ஆசிரியர் அவர்களும், மகளுக்கு அறிவுக்கரசு அவர்களும் திருமணத்தை நடத்தி வைத்தார்கள்.
எத்தனை ஆண்டுகளாக மருத்துவப் பணியில் இருக்கிறீர்கள்?
அரசு மருத்துவராக 23 ஆண்டுகளும், நிர்வாக இயக்குநராக (Joint Director) 9 ஆண்டுகளும் பணியாற்றியுள்ளேன். அதேநேரம் “சென்ட்ரல் நர்சிங் ஹோம்” எனும் மருத்துவமனையையும் தொடங்கி நடத்தி வருகிறேன்! ஆசிரியர் அவர்கள் தான் 2001 ஆம் ஆண்டு மருத்துவமனையைத் திறந்து வைத்தார்கள்.
என்னுடன் மருத்துவம் படித்தவர்கள் நிறைய பேர் முற்போக்குக் கொள்கையில் இருக்கிறார்கள். மருந்துவர்களுக்கான வாட்சப் குழுக்களில் பகுத்தறிவு ரீதியிலான கருத்துகளை நிறைய பார்க்க முடியும். ஆசிரியர் சொல்வதைப் போல கருப்புச் சட்டை அணியாத (Invisible Member) தோழர்கள் ஏராளம் உள்ளனர். நாங்கள் இந்த இருக்கையில் அமரவே பெரியார் தான் காரணம் எனப் பல மருத்துவர்கள் கூறுவர்!
உங்கள் தனித் தன்மைகளாக எதைப் பார்க்கிறீர்கள்?
சிறு வயதிலேயே நான் சுறுசுறுப்பாக இருப்பதாகக் கூறுவார்கள். ஓவியம் வரைவதில் ஆர்வமுடன் இருப்பேன். அதுவும் நண்டு ஒட்டை சுட வைத்து, அதிலுள்ள புள்ளிகளை நீக்கிவிட்டு, அதன் மீது ஓவியங்கள் வரைவேன்! அதேபோல மாணவர் பருவத்தில் 1330 திருக்குறளையும் மனப்பாடமாகச் சொல்வேன்.
இளம் வயது முதலே பகுத்தறிவுச் சிந்தனை கொண்டதால், எதையும் சிறப்பாகச் செய்யும் எண்ணம் இருக்கும். இத்தனை ஆண்டு கால மருத்துவப் பணிகளில் மத விழாக்களின் போது விடுமுறை எடுத்ததே இல்லை. தீபாவளி நேரங்களில் அனைவரும் விடுப்பில் இருந்தாலும், நான் பணியில் இருப்பேன்.
சிகிச்சை செய்வதை விட நோய்களின் தன்மைகளை, காரணிகளைக் கண்டறிவது மிக முக்கியம். அந்த வகையில் கூர்ந்து கவனித்து, மருத்துவம் செய்யும் போது, அதனால் நலம் பெறுபவர்கள் நமக்கு மிகுந்த மனநிறைவைத் தருவார்கள்! அவ்வகையில் 4 ஆவது தலைமுறைக்கு மருத்துவம் பார்க்கிறேன்!
என்னது… நான்காவது தலைமுறைக்கு மருத்துவம் பார்க்கிறீர்களா? வியப்பாக இருக்கிறதே?
ஆமாம்! அம்மா, மகள், பேத்தி, அதன் பிறகும் பார்த்துக் கொண்டிருக்கிறேன். இதுவரை 1000 – த்திற்கும் மேற்பட்ட மகப்பேறு மருத்துவம் (Delivery Cases) பார்த்திருப்பேன். பெரும்பாலும் அறுவைச் சிகிச்சை இல்லாமல் பார்த்துக் கொள்வேன். கணிப்பதும், கவனிப்பதும் மருத்துவத்தில் முக்கிய அம்சங்கள் ஆகும்!
மருத்துவத்தில் 4 தலைமுறை என்றால், இயக்கத்தில் 6 தலைமுறையாக இருக்கிறோம்! ஆம்! மானமிகுவாளர்கள் இராமச்சந்திரன், இராஜசுந்தர பாண்டியன், சண்முகநாதன், இன்பலாதன், இராஜராஜன், நிவன் இராஜசுந்தரம் என 6 ஆவது தலைமுறையாக நீடித்து வருகிறோம்!
இயக்கத்தில் இருந்து கொண்டே மருத்துவராக இருப்பதால், ஏதாவது இடையூறுகள் இருக்கிறதா எனச் சிலர் கேட்பார்கள். அவ்வாறு இருந்ததில்லை. மற்றவர்களை விட, சற்றுக் கூடுதலாக கடமையாற்ற வேண்டும் என்றே நினைப்போம்! பெரியார் கொள்கை என்பதே வாழ்க்கை நெறிதானே! அதைச் சரியாகப் பின்பற்றுகிற போது, தோல்வி என்பதே கிடையாது!
மாமனார் சண்முகநாதன், மாமியார் இராமலெட்சுமி ஆகியோரின் நினைவுகளைப் பகிர்ந்துக் கொள்ளுங்கள்?
மாமா சண்முகநாதன் அவர்கள் எந்தக் கருத்தைச் சொன்னாலும், தீர்க்கமாகச் சொல்வார்கள். வாங்க, போங்க என்றுதான் என்னை அழைப்பார். எனக்கு மிகப் பெரிய ஆதரவாக இருந்தவர். ஒரு கொள்கையாளர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு அவர்கள் ஓர் முன்னோடி!
அதேபோல அத்தை இராமலட்சுமி அவர்களும் இயக்கத்தில் தீவிரமாகச் செயல்பட்டவர். தவிர மகளிர் கிளப், சமூக நலச் சங்கங்கள், மகளிர் காவல் நிலையம் சார்ந்த பணிகள், மாவட்ட ஆட்சியரின் குறைதீர்க்கும் முகாம் பணிகள் எனப் பலவற்றிலும் இயங்கி வந்தவர். நகர்மன்ற உறுப்பினராகவும் சேவையாற்றி வந்தார். குறிப்பாகச் சிவகங்கையில் மகளிருக்கு என்றே “டென்னிஸ் கிளப்” இருந்தது. அதில் தினமும் விளையாடி வருவார். ஒரு பெண்மணியாக சமூகம் சார்ந்து நிறைய இயங்கியவர்! மாமா, அத்தை இருவருமே இயக்கம் மற்றும் குடும்ப வாழ்க்கைக்கு உதாரணமாக வாழ்ந்தவர்கள்!
அய்யா சண்முகநாதன் அவர்களுக்கு நூற்றாண்டு விழா எடுக்கப்பட்டதா?
ஆமாம்! 1923 – 2023 நூற்றாண்டை சிறப்பாக முன்னெடுத்தோம். மலர் ஒன்றும் வெளியிட்டோம். ஆசிரியர் அவர்கள் தான் அணிந்துரை எழுதி இருந்தார்கள். பெரியார் அறக் கட்டளையின் தலைவராக மாமா இருந்தார்கள். அன்னை மணியம்மையார் மற்றும் உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட்டு, அந்தப் பொறுப்பிற்கு வந்தார்கள். அதற்கு முன்பு தந்தை பெரியார் தான் தலைவராக இருந்தார்.
இராமநாதபுரம், சிவகங்கை , விருதுநகர் உள்ளிட்ட பிரிக்கப்படாத இராமநாதபுரம் மாவட்டத்தின் தலைவராக சண்முகநாதன் அவர்களும், செயலாளராகக் காரைக்குடி என்.ஆர்.சாமி அவர்களும் இருந்தார்கள்.
இன்றைக்கு இந்த நாடு வசதியாக இருப்பதற்கு, அன்றைக்கு வாழ்ந்த திராவிட இயக்கச் சிந்தனையாளர்கள் பெரிய விலை கொடுத்துள்ளார்கள். என் மாமா அளவில் ஒரு உதாரணம் சொல்ல வேண்டுமென்றால், அவர்கள் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது, தங்கியிருந்த விடுதி அறையில் இது ஒரு “நாத்திகர் அறை” என எழுதி இருந்தார்களாம். இதனால் ஏற்பட்ட விவாதங்கள், கருத்து வேறுபாடுகள் ஒருபுறம் இருந்தாலும், அந்தளவு துணிச்சலும், போராட்டக் குணமும் தமிழ்நாடு முழுவதும் வாழ்ந்த பெரியார் தொண்டர்களிடம் இருந்தது!
மாமனார் அவர்களின் நூற்றாண்டு மலரை உருவாக்க நான் அதிக முனைப்புக் காட்டினேன். “மாமனார், மாமியார் மெச்சிய கொள்கை வழியில் நிற்கும் அன்பு மருமகள் டாக்டர் மலர்க்கண்ணி! தனது மாமனார் குடும்பத்தின் வரலாறு, பாரம்பரியம், கொள்கை உணர்வுகளைப் பதிவு செய்து, கழகம் எப்படியான நல்ல குடும்பங்களை உருவாக்கும் என்பதற்கு எடுத்துக்காட்டாக இம்மலர் இருக்கிறது”, என ஆசிரியர் அவர்கள் தம் அணிந்துரையில் பாராட்டி இருக்கிறார்கள்!
ஒரு மருத்துவராக “நீட்” தேர்வு குறித்துத் தங்களின் கருத்து என்ன?
தகுதி, திறமை எனப் பொய்யான விசயங்களைக் கட்டமைக்கிறார்கள். இங்கே எந்த மருத்துவர் திறமை இல்லாமல் இருக்கிறார்? எனது மருத்துவ நண்பர்கள் பலரும் இந்த நீட் முறையைக் கடுமையாக எதிர்க்கிறார்கள்.
நமது ஆசிரியர் அவர்கள் “நீட்” என்கிற வார்த்தை அறிமுகம் ஆவதற்கு முன்பே, அதன் சூழ்ச்சிகளைத் தோலுரித்துக் காட்டிவிட்டார்கள். தொடர்ந்து ஆர்ப்பாட்டம், போராட்டம், அறிக்கைகள், கட்டுரைகள், நூல்கள், தமிழ்நாடு தழுவிய சுற்றுப் பயணங்கள், அனைத்துக் கட்சிக் கண்டனக் கூட்டங்கள் எனத் தொடர்ந்து செய்து வருகிறார்கள். தமிழ்நாடு
முழுவதும் வாகனப் பேரணியும் நடந்து வருகிறது!
ஆசிரியரின் இந்தத் தன்னலமற்ற உழைப்பைக் காலம், காலமாகவே பார்த்து வருகிறோம். சமூகத்தின் அனைத்துத் துறைகளுக்கும் அவர்கள் பங்காற்றி வருகிறார்கள். ஒரே ஒருமுறை பயணம் செய்தாலே சோம்பல் ஆகிற நமக்கு,
ஆசிரியரின் சமூகப் பயணங்கள் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன!
நூற்றாண்டு காணும் திராவிடர் இயக்கம் தொடர்ந்து போராடி வருவதன் விளைவே நாம் இந்த அளவு சிறப்பாக வாழ்கிறோம். இதைத் தக்க வைத்துக் கொள்ளவும், மேலும் முன்னேறிச் செல்லவும் ஆசிரியர் தலைமையில் திராவிடர் கழகத்தில் இளைஞர்கள் மேலும் குவிய வேண்டும்”, எனத் தம் எண்ணங்களை நம்மிடையே பகிர்ந்துக் கொண்டார் மருத்துவர் மலர்க்கண்ணி அவர்கள்!
No comments:
Post a Comment