மக்கள் இளம் வயதில், அதாவது தக்க வயதும் அறிவும் உணர்ச்சியும் இல்லாத காலத்தில் விவாகம் செய்யப்பட்டு வருவதால் மக்கள் சமூக வளர்ச்சிக்கும் உரத்திற்கும் கேடாயிருந்து வருகிறது என்கின்ற உண்மையை நமது வாழ்வில் தினமும் அனுபவத்தில் கண்டு வருவதோடு அவற்றை தடுக்க வேண்டுமென்பதாகவும் முயற்சி எடுத்தும் வருகின்றோம்.
இதைப்பற்றி பல சமூக மகாநாடுகளிலும், பல சீர்திருத்த மகாநாடுகளிலும் பேசி தீர்மானங்களும் செய்து வந்திருக்கின்றோம். ஆனால் அதை அனுசரித்து அது அமலில் வரத்தக்க ஏற்பாடுகள் ஏதாவது செய்ய ஆரம்பித்தால் உடனே அங்கு மதம் வந்து குறுக்கே விழுந்து அம்முயற்சிகளை அழிப்பது வழக்கமாகவே இருந்து வருகின்றதும் நாம் அறிவோம். இதன் காரணமாகவே பெரிதும் நாம் மனித இயற்கைக்கு விரோதமான மதங்களும் கண்மூடிக் கொள்கைகளும் மண்மூடிப் போக வேண்டுமென்று முயற்சித்து வருகின்றோம்.
இம்முயற்சிக்கு யார் எதிரிடையாக இருந்தபோதிலும் நாம் ஒருசிறிதும் லட்சியம் செய்யாமல் இடையூறான மதங்களையும் அதற்கு ஆதாரமான சாமிகளையும் கூட ஒழித்தாக வேண்டும் என்றே சொல்லுகின்றோம். சமீப காலத்தில் சென்னை சட்ட சபையில் இது விஷயமாய் சட்டம் செய்வதைப் பற்றி வாதம் நடைபெற்ற சமயத்தில் பார்ப்பனரல்லாதார் கட்சியைச் சேர்ந்த மாஜி மந்திரி சர். ஏ.பி. பாத்ரோ அவர்கள் சற்று மாறுதலாய் பேசியதற்காக அவரை, பார்ப்பனரல்லாதார் கட்சி ஸ்தானத்தை ராஜினாமா செய்துவிட்டு பார்ப்பனர் கட்சிக்கு போய்விட வேண்டுமென்றுகூட எழுதி யிருந்தோம். அவரை, ‘இனி பார்ப்பனரல்லாதார் கட்சியைச் சேர்ந்தவர் என்று சொல்வது பார்ப்பனரல்லாதார் சமூகத்திற்கே அவமானம் என்று கூட எழுதியிருந்தது வாசகர்களுக்குத் தெரியும்.
இந்நிலையில் சென்ற வாரம் இந்தியா சட்டசபையில் இம்மசோதா விவாதத்திற்கு வந்த போது தமிழ் நாட்டு பார்ப்பனர்கள் பெரிதும் இம்மசோதாவிற்கு விரோதமாய்ப் பேசியிருப்பதாகவும், பலர் தனி விண்ணப்பம் கொடுத்து இருப்பதாகவும் அதில் சில முகமதிய அங்கத்தவர்களும் கையொப்பமிட்டிருப்பதாகவும் தெரிய வருவதுடன் பல சங்கராச்சாரிகளும் சாஸ்திரி களும் ராமராஜ்யம் நடத்தும் மகாராஜாக்களும் இம்மசோதாவுக்கு விரோதமாய் அரசபிரதிநிதியிடம் தூது போனதாகவும் தெரிய வருகின்றது.
இந்த வருணாச்சிரமக்காரரோடு சில மகமதியர்களும் சேர்ந்து கொண்ட தானது அச்சமூகத்திற்கும் அவமானத்தை விளைவித்த காரியமென்பதோடு மனித சமூக உரிமைக்கே கேடு விளைவித்ததாகுமென்றே கருதுகிறோம் . அவர்களைப் பற்றிய மற்ற விஷயங்களையும், அதில் இவர் பார்ப்பனர்களுக்கு அடிமையாய் இருந்து வாழவேண்டிய அவசியத்தில் இருக்கிற விஷயங்களையும், வெளிப்படுத்தியும் அவர்களைக் கண்டிக்கவும் ஆன காரியங்களை அச்சமுகப் பத்திரிகைகளுக்குமே விட்டுவிட்டு நமது பிரதிநிதி என்னும் உரிமையின் பேரால் நடந்து கொண்டவர்களைப் பற்றி சற்று விசாரிப்போம். இது விஷயமாய் இந்திய சட்டசபையில் நடந்த முழு விபரத்தையும் எழுத நமக்கு போதிய இடமில்லாவிட்டாலும் அம் மசோதாவிற்கு விரோதமாய்ப் பேசிய தமிழ்நாட்டுப் பிரதிநிதியும் இந்துமத வருணாசிரமப் பிரதிநிதியும் ஆகிய திரு. எம்.கே. ஆச்சாரியார் அவர்களின் போக்கை சற்று கவனிப்போம்.
திரு. ஆச்சாரியார் அவர்கள் இச்சட்டத்தை எதிர்த்து பேசுகையில், “பால்ய விவாகமில்லாவிட்டால் உண்மையானகற்பு என்பது சாத்தியமில்லை’ என்றும், “பெண்களின் வாழ்க்கை நாசமடைந்து விடும்” என்றும், “குடும்ப வாழ்க்கை துக்க மயமாகி சதா ஆபத்திற்குள்ளாகி இருக்கும்” என்றும் ‘புருஷர்களுக்கு சிறைத்தண்டனை அளித்துவிடுவதால் பெண்கள் நடத்தையும் அதிக கேவலமாக மாறிவிடும்’ என்றும் ‘பாலிய விவாகம் இருந்தாலொழிய வாழ்க்கையில் உண்மையான ஒழுக்கம் இருப்பது அசாத்தியம்’, என்றும் பேசி இருக்கின்றதாக தெரியவருகின்றது. இவைகள் (சு. மி. த. நா) பத்திரிகைகளில் காணப்படுகின்ற துடன் சுதேசி மித்திரன் நிருபரும் திரு, ஆச்சாரியரை ஆதரித்தும் புகழ்ந்தும் எழுதி இருக்கின்றார்.
– குடிஅரசு – தலையங்கம் – 23.09.1928
தகவல்: க. பழநிசாமி, தெ.புதுப்பட்டி
No comments:
Post a Comment