புதுடில்லி, மே 29 மூல வரிப் பிடித்தம் (டிடிஎஸ்) உயா் விகிதத்தில் வசூலிக்கப்படுவதைத் தவிர்க்க, வரும் மே 31-ஆம் தேதிக்குள் நிரந்தர கணக்கு (பான்) எண்ணை ஆதாருடன் இணைக்குமாறு வருமான வரித் துறை நேற்று (28.5.2024) அறிவுறுத்தியது.
வருமான வரி சட்ட விதிகளின்படி, நிரந்தரக் கணக்கு எண்ணை ஆதாருடன் இணைப்பது கட்டாயமாக்கப்பட்டது. அவ்வாறு இணைக்கப்படாதவா்களின் வருமானத்தில் பிடித்தம் செய்யப்படும் மூல வரிப் பிடித்தம், அதன் விகிதத்தில் இரண்டு மடங்கு வசூலிக்கப்பட வேண்டும்.
இதையொட்டி, வருமான வரித்துறை கடந்த மாதம் வெளியிட்ட சுற்றறிக்கையின்படி, வரிசெலுத்துவோர் தங்களின் பான் எண்ணை ஆதாருடன் மே 31-ஆம் தேதிக்குள் இணைத்தால், டிடிஎஸ் வரி வசூலில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், அந்த அறிவிப்பை நினைவுப்படுத்தி வருமான வரித் துறை நேற்று (28.5.2024) வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘அதிக விகிதத்தில் வரி விதிக்கப்படுவதைத் தவிர்க்க, பான் எண்ணை மே 31-ஆம் தேதிக்கு முன் ஆதாருடன் இணைக்கவும்’ என வலியுறுத்தப்பட்டது. மற்றொரு பதிவில், அபராதங்களைத் தவிர்க்க மே 31-ஆம் தேதிக்கு நிதி பரிவா்த்தனை அறிக்கையை (எஸ்எஃப்டி) தாக்கல் செய்யுமாறு வங்கிகள், அந்நிய செலாவணி முகவா்கள் உள்ளிட்ட நிறுவனங்களை வருமான வரித்துறை கேட்டுக்கொண்டது.
No comments:
Post a Comment