புதியதோர் உலகு படைக்க முனைந்திடும் தமிழ்நாடு முதலமைச்சரையும் - நூற்றாண்டு தொடக்கவிழாவை சிறப்புற கொண்டாடும் கேரள முதலமைச்சரையும் உச்சிமோந்து பாராட்டுகிறோம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, March 30, 2023

புதியதோர் உலகு படைக்க முனைந்திடும் தமிழ்நாடு முதலமைச்சரையும் - நூற்றாண்டு தொடக்கவிழாவை சிறப்புற கொண்டாடும் கேரள முதலமைச்சரையும் உச்சிமோந்து பாராட்டுகிறோம்!

 மனித உரிமைக்கான தாய்ப் போராட்டமான வைக்கம் போராட்டம்!

நூற்றாண்டு விழாவில் வைக்கம் வீரர் தந்தை பெரியாருக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் அலை அலையான திட்டங்கள்!

ஜாதி - தீண்டாமை ஒழிப்புக்கு சட்டங்களும், திட்டங்களும் தேவை!

தீண்டாமை ஒழிப்புக்காக கேரள மாநிலம் வைக்கத்தில் தந்தை பெரியார் தலைமையில் போராட்டம் நடத்தி வெற்றி காணப்பட்டது. மனித உரிமைப் போரில் தாய்ப் போராட்டம் வைக்கம் போராட்டம். அதனைப் போற்றும் வகையிலும், பிரச்சாரம் செய்யும் வகையிலும் முதலமைச்சர் சட்டப்பேரவையில் இன்று (30.3.2023) அறிவித்த அடுக்கடுக்கான திட்டங்கள் வரவேற்கத்தக்கவை. அதற்காக நமது முதலமைச்சரை தாய்க்கழகம் திராவிடர் கழகம் உச்சிமோந்து பாராட்டி மகிழ்கிறது. ஜாதி - தீண்டாமை ஒழிப்புத் திசையில் புதிய சட்டங்களும், திட்டங்களும் நிறைவேற்றி ஆக்கப்பூர்வமான வழிகளில் அரசு செயல்படவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

‘ஜாதி - தீண்டாமை - பாராமை - நெருங்காமை' ஆகிய மனித உரிமை பறித்த சமூகக் கொடுமைகளின் உச்சமான காட்டுமிராண்டித்தனத்தை, சனாதனத்தினை அந்நாளைய திருவிதாங்கூர் ராஜ்ஜிய அரசு வரிந்து  காப்பாற்றி வந்தது.  ஒடுக்கப்பட்டு உரிமை பறிக்கப்பட்ட கீழ்ஜாதியார் என்று அழைக்கப்பட்ட ‘‘ஈழவர், புலையர், தீயர், பறையர்'' என்பவர்களுக்கு வைக்கம் கோவிலைச் சுற்றியுள்ள தெருக்களில் நடக்கும் உரிமைக்காக 1924, மார்ச் 30 ஆம் தேதி வெடித்துக் கிளம்பியதுதான் ‘‘வைக்கம் சத்தியாகிரகப் போராட்டம்'' ஆகும்!

அந்நாளில் அங்கே அரசால் காப்பாற்றப்பட்ட சனா தன வருணாசிரமத்தை எதிர்த்து அம்மக்கள் பிரதிநிதி களும், மற்ற மனிதாபிமானிகளும் தொடங்கிய சத்தியா கிரகத்தை முடக்கிவிட்டது அந்த மன்னர் அரசு!

அந்நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருந்த தந்தை பெரியாரை அழைத்து, போராட்டத்தைத் தொடர அவர்கள் கேட்டுக் கொண்ட நிலையில், தந்தை பெரியார் அவர்கள், 1924 ஆம் ஆண்டு அங்கே சென்று போராட்டத்தை நடத்தி, இருமுறை கைதாகி, வைக்கம் போராட்டத்தை ஒரு முக்கிய வரலாற்றுப் போராட்டமாக்கி, தெருக்களில் நடக்கும் உரிமையைப் பெறுவதில் வெற்றிக் கனி பறித்தார்.

நூற்றாண்டு இன்றிலிருந்து...

அதன் நூற்றாண்டு இன்றிலிருந்து (30.3.2023) தொடங் குவதால், தமிழ்நாட்டு ‘திராவிட மாடல்' ஆட்சியின் ஒப்பற்ற முதலமைச்சரும், தமிழ்நாடு அரசும் இன்று அறிவித்துள்ள அறிவிப்புகளும், நிதி ஒதுக்கீடும், அதனை விளக்கி முதலமைச்சரின் சுருக்க உரையும் இசைத் தேனாக நமது காதுகளில் ஒலித்தன!

மனித உரிமையின் மாண்புக்கு முன்னோட்டமான இப்போராட்டம் ஒரு துளி ரத்தம் சிந்தாத ஆயுதம் ஏந்தாத ஓர் அமைதிப் புரட்சிவழிப் போராட்டம்!

மனித உரிமைக்கான தாய்ப் போராட்டம்!

பல மனித உரிமைப் போராட்டங்களுக்கும், ஜாதி, தீண்டாமை ஒழிப்புப் போராட்டங்களுக்கும் ‘தாய்ப் போராட்டம்' என்றே பொருத்தமாக  இதனை அழைக்கலாம்!

அதன் முக்கியத்தை இப்போதுள்ள இளைஞர், மாணவர், மக்கள் அறியவேண்டிய, இனி வரக்கூடிய தலைவர்களுக்கும் புரியவேண்டிய தேவையும் கருதி, நமது முதலமைச்சர் அவர்கள் அறிவித்துள்ள நூற்றாண்டு விழா செயல் திட்டங்கள் செம்மை பெற, ‘செயலாக்கக் குழு' அமைப்பும் முக்கியம்!

செய்யப்படவேண்டியவை

வெறும் விழாக்கோலம் தாண்டி, புதிய எழுச்சியை உருவாக்கவும், ஜாதி - தீண்டாமை ஒழிப்புக்குத் தூண்டுதலாகவும், பல புதிய சமூகப் புரட்சி சட்டங்களையும், வைக்கம் நூற்றாண்டு காலத்தில் ‘திராவிட மாடல்' ஆட்சியும், கொள்கைமிகு முதலமைச்சரும் செய்யவேண்டும் என்பதை எதிர்பார்ப்பதுடன் - இதை ஒரு திருப்புமுனையாக அமைப் பது முக்கியம் என்பதையும் நினைவூட்டி, முதலமைச்சருக்கு நமது உளங்கனிந்த பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் மனமார - வாயார - கையார  வாழ்த்தி, கைதட்டி வரவேற் கிறோம்!

‘‘புதியதோர் உலகு செய்து'' நாட்டை புதிய சமத் துவபுரமாக்கிய நமது சமூகநீதிக்கான சரித்திர நாயகர் தளபதி மு.க.ஸ்டாலின் ஆட்சியை தாய்க்கழகத்தின் சார்பில் மனதார உச்சிமோந்து பாராட்டுகிறோம்!

வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழாவை எழுச்சியுடன் நடத்திட உள்ள கேரள முதலமைச்சர் தோழர் பினராயி  விஜயன் அவர்களையும், கேரள அரசையும் மனதாராப் பாராட்டுகிறோம்!

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

மயிலாடுதுறை

30.3.2023

No comments:

Post a Comment