தமிழ்நாடு அரசு உரிய வகையில் செயல்படட்டும்; வீதிமன்றத்திலும் இன்னொரு பக்கத்தில் கிளர்ந்தெழுவோம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, March 14, 2023

தமிழ்நாடு அரசு உரிய வகையில் செயல்படட்டும்; வீதிமன்றத்திலும் இன்னொரு பக்கத்தில் கிளர்ந்தெழுவோம்!

*    அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை: உயர்நீதிமன்ற நீதிபதியின் தீர்ப்பு!

* அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்; ஆகமங்கள் தடையில்லை என்று நீதிபதிகள் தலைமையிலான குழுக்கள் அறிக்கை கொடுத்துள்ளனவே!

பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் உணர்வை ஏற்படுத்துவது யார்?

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்; ஆகமங்கள் தடையில்லை என்று நீதிபதிகள் தலைமை யிலான குழுக்கள் அறிக்கை கொடுத்துள்ள நிலை யில், அதற்கு மாறான தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கூறியுள்ளார். தமிழ்நாடு அரசு உரிய வகையில் செயல்படட்டும்; வீதிமன்றத்திலும் இன்னொரு பக் கத்தில் கிளர்ந்தெழுவோம்! பார்ப்பனர் - பார்ப்பனரல் லாதார் உணர்வை ஏற்படுத்துவது யார்? என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

அறிக்கை வருமாறு: 

தந்தை பெரியார் இறுதியாக அறிவித்துக் களத்தில் நின்ற போராட்டம் அனைத்து ஜாதியினருக்கும் அர்ச் சகர் உரிமைபற்றியதாகும். முத்தமிழறிஞர் மானமிகு கலைஞர் அவர்கள் அதற்கான சட்டத்தையும் இயற் றினார். அதனை எதிர்த்து 13 சிவாச்சாரியார்கள் உச்ச நீதிமன்றம் சென்றனர்.

தந்தை பெரியார் நெஞ்சில் முள்ளோடு...

அதன்படி சில திருத்தங்கள் செய்யப்பட்டன. அவற்றின்படி அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் என்ற சட்டத்தைச் செயல்படுத்தும் முன்பே, தந்தை பெரியார் தனது இறுதி மூச்சைத் துறந்தார்.

தந்தை பெரியாரை நெஞ்சில் தைத்த முள்ளோடு புதைத்துவிட்டோமே என்று ஆதங்கப்பட்டார் முதலமைச்சர் கலைஞர்.

2021 ஆம் ஆண்டில் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு அரசின் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியில் படித்துத் தேர்வு பெற்ற 22 மாணவர்கள் உள்பட 57 மாணவர்களுக்கு முறையான நேர்காணல்மூலம் பணி நியமனம் செய்யப்பட்டது. பெண் ஓதுவார் ஒருவரும் நியமனம் செய்யப்பட்டார் (14.8.2021).

அ.இ.அ.தி.மு.க. ஆட்சியில் இருவர் நியமனம்!

அ.இ.அ.தி.மு.க. ஆட்சியில், மதுரையில் அழகர் கோவில் கட்டுப்பாட்டில் இருந்த அய்யப்பன் கோவிலில் மாரிமுத்து என்ற அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவரும், நாகமலைப் புதுக்கோட்டையில் உள்ள கோவிலில் தியாகராஜன் என்ற அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவரும்  நியமனம் செய்யப்பட்டனர்.

நீதிபதிகள் தலைமையில் குழுக்கள்!

நீதிபதி மகராஜன், நீதிபதி கிருஷ்ணசாமி ரெட்டியார், நீதிபதி டாக்டர் ஏ.கே.ராஜன் ஆகியோர் தலைமையில் தனித்தனி குழுக்கள் அமைக்கப்பட்டு, அவர்கள் அளித்த பரிந்துரைகளின்படி அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர்கள் ஆக ஆகமங்கள் தடை விதிக்கவில்லை என்று அறுதியிட்டுக் கூறியுள்ளனர்.

இந்த நிலையில் தி.மு.க. அரசால் திருச்சி குமார வயலூர் கோவிலில் நியமிக்கப்பட்ட அர்ச்சகர் நியமன ஆணையை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ரத்து செய்துள்ளது. அக்கோவிலில் அர்ச்சகர்களாகப் பணியாற்றிய அர்ச்சகப் பார்ப்பனர்களின் மனுவின் மீதுதான் நீதிபதி திரு.ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஒரு குறிப்பிட்ட நீதிபதியிடமே 

குறிப்பிட்ட வழக்குகள் செல்லுவது ஏன்?

இதுபோன்ற வழக்குகள் எல்லாம் குறிப்பிட்ட ஒரு நீதிபதியிடமே வருவதும், அந்த நீதிபதியும் தங்கள் மக்களுக்குச் சாதகமாக தீர்ப்பளிப்பதும் சர்வ சாதாரணமாகி விட்டது.

பகுத்தறிவாளர்களைக் கிண்டலடிப்பது, தேவை யில்லாமல் பெரியார் மணியம்மையார் திருமணத்தை சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் விமர்சிப்பது இவரின் போக்காக இருப்பதை மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றனர்.

ஆகமம் என்பது குறிப்பிட்ட 

ஒரு ஜாதிக்குத்தானா?

ஆகமம் என்பது எல்லாம் ஒரு ஜாதியினருக்கு மட்டும் சிவப்புக் கம்பளம் விரிப்பதுதானா? ஆகமங்கள் சமஸ்கிருதத்தில் மட்டும்தான் உள்ளனவா? அந்த ஆகமங்களை எழுதியவர்கள் யார்? எந்த ஆண்டில் எழுதினார்கள்? என்ற கேள்விகளுக்கு இடம் உண்டா?

அப்படியே பார்க்கப் போனாலும் இவர்கள் கூறும் ஆகமங்கள் காலம் காலமாக அட்சரப் பிசகின்றிதான் கடைப்பிடிக்கப்படுகின்றனவா?

1947 ஆம் ஆண்டு வரை தாழ்த்தப்பட்ட மக்கள் கோவிலுக்குள் நுழையக் கூடாது என்று இருந்ததே - அது இப்பொழுது அரசு சட்டத்தால் மாற்றி அமைக்கப் படவில்லையா? அப்பொழுது ஜி.ஆர்.சுவாமிநாதன்கள் பிறக்காத காரணத்தால் தப்பியதா?

ஆகமங்கள்படிதான் எல்லாம் நடக்கிறதா?

தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் ஆகமக விதிகள்தான் பின்பற்றப்படுகின்றனவா?

மின்சார விளக்குகளுக்கு எந்த ஆகமம் ஒப்பம் அளிக்கிறது? கர்ப்பக் கிரகம் ஏர் கண்டிஷன் செய்யப் படுவது குறித்து இந்த ஆகமத்தில் கூறப்பட்டுள்ளது என்று ஆதாரத்தைக் காட்டினால் உதவியாக இருக்குமே!

ஆங்கிலப் புத்தாண்டில் இரவு முழுவதும் கோவில் திறப்பு எந்த ஆகமத்தின் அடிப்படையில்?

ஆங்கிலப் புத்தாண்டுப் பிறப்பான ஜனவரி முதல் தேதியன்று விடிய விடிய கோவில்கள் திறந்திருக் கின்றனவே - இது ஆகமத்தின் எந்த சரத்துப்படி ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது?

அர்ச்சகர்கள் தட்சணை வாங்கலாமா? அர்ச்சனை தட்டில் விழும் பணம் யார் வயிற்றில் அறுத்துக் கட்டப் படுகிறது?

வைணவத்தில் ஜாதி உண்டா?

வைணவத்தில் ஜாதியில்லை. அப்படியிருக்கும்போது வைணவக் கோவில்களில் குறிப்பிட்ட ஜாதிப் பிரிவினர்தான் அர்ச்சகராகவேண்டும் என்ற விதி எப்படி பொருந்தும்?

''ஆகம விதிகளின்படி அடிப்படையில் பரிசீலித்துப் பார்த்தால், சிதம்பரம் நடராஜர் கோவில் ஆகம முறைப் படி அமைக்கப்பட்ட கோவில் அல்ல. அதுபோலவே, திருப்பரங்குன்றம் முருகன் கோவிலும் ஆகமப்படி அமைக்கப்பட்ட கோவில் அல்ல.

இவை போன்றே ஆகமப்படி அல்லாத அல்லது சிலவற்றில் ஆகமங்களிலிருந்து மாறுபட்ட கோவில் களில் பல தமிழ்நாட்டில் உள்ளன. பிள்ளையார்ப்பட்டி கணபதி கோவிலும் இந்த வரிசையில் அடங்கும்'' என்று பிரபல ஸ்தபதி கணபதி அவர்கள் கூறியுள்ளாரே!

சென்னை சிவா - விஷ்ணு கோவில்களின் 

நிலை என்ன?

சென்னை தியாகராயர் நகரில் சிவாவிஷ்ணு கோவில் எப்படி வந்தது? அது ஆகம விதிகளுக்கு விரோதம் இல்லையா?

சிறீரங்கம் ரெங்கநாதன் கோவிலுக்குள் துலுக்க நாச்சியார் சன்னதி எந்த ஆகம விதிகளின்கீழ் வந்தது?

பழனி கோவில் பூசை 

பார்ப்பனர் கையில் மாறியது எப்படி?

பழனி முருகன் கோவிலையும், நவபாஷாண சிலையையும் உருவாக்கியவர் போகர் அல்லவா! அவர் பரம்பரையைச் சேர்ந்த பண்டாரத்தார் தானே வாழையடி வாழையாக பூஜை செய்து வந்தனர்.

அவர்களைக் ‘கத்தி'  முனையில் வெளியேற்றிவிட்டு, அங்குப் பார்ப்பன அர்ச்சகர்களை உள்ளே நுழைத்தவர் - திருமலை நாயக்கரின் தளபதி ராமப்பன் அய்யர்தானே!

திருவேற்காடு கருமாரியம்மன் கோவில் கதை என்ன? அங்கு எந்த ஆகமப்படியும் பூஜைகள் கிடையாது.

பக்தர்கள் அதிகமாகக் கூடக் கூட கோவில்கள் புதிதாகக் கட்டப்பட்டு, கும்பாபிஷேகமும் ஜோராக நடத்தப்பட்டது. அதுவரை அக்கோவிலில் பூஜை செய்து வந்த பூசாரிகள் வெளியேற்றப்பட்டு, பார்ப்பன அர்ச்ச கர்கள் உள்ளே நுழைந்து சமஸ்கிருதத்தில் காரியங்கள் நடைபெற்று வருகின்றன.

இவையெல்லாம் கனம் நீதிபதி அறிவாரா?

நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு கண்டதும் - கேட்டதும்!

ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி டாக்டர் ஏ.கே.ராஜன் தலைமையில், தமிழ்நாடு அரசால் அமைக்கப் பட்ட குழுவில் சிவாச்சாரியார்களும், பட்டாச்சாரியார் களும் இடம்பெற்றிருந்தனர்.

அந்தக் குழுவினர் கோவில் கோவில்களாக நேரில் சென்று, அர்ச்சகர்கள்பற்றிய தகுதிகளை அறிந்தனர்.

வைணவக் கோவில் 108 இல் ஆகமம் தெரிந்தவர்கள் 30 கோவில்களில் மட்டுமே!

வைணவ திவ்ய தேசங்கள் 108 இல், 106 கோவில் களுக்குச் சென்றனர். 106 திவ்ய தேசங்களில் 30 கோவில் களில் மட்டுமே ஆகமம் தெரிந்தவர்கள் அர்ச்சகர்களாக உள்ளனர் என்றும், பெரும்பாலான கோவில்களில் ஆகமங்கள் தெரியாதவர்களே அர்ச்சகர்களாக உள்ளனர் என்றும் கூறியுள்ளனரே!

இந்த ஆகமம் தெரியாத அர்ச்சகர்களை என்ன செய்ய உத்தேசம்?

''சென்னை கபாலீஸ்வரர் கோவிலில் உள்ள 41 அர்ச்சகர்களில் 4 அர்ச்சகர்களுக்கு மட்டுமே ஆகம விதிகள் தெரிந்துள்ளன. மற்றவர்களுக்கு அஷ்டேத்திரம், குறிப்பான சில மந்திரங்கள், நாமா வளிகள் மட்டுமே தெரியும்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 116 அர்ச்சகர்களுள் ஆகமம் பயின்றவர்கள் 28 நபர்கள் மட்டுமே. இதர 66 அர்ச்சகர்கள் தங்களது தந்தை வழியாக ஆகமங்களைப் பயின்றவர்கள். அவர்களு டைய தந்தையார் செய்யும் பூஜை முறைகளைப் பார்த்துப் பெற்ற அனுபவத்தை மட்டுமே பெற்றவர்கள். அவர்கள் முறையாக ஆகம அனுஷ்டானம் அறிந்தவர்கள் என்று சொல்ல இயலாது'' என்று ஓய்வு பெற்ற நீதிபதி டாக்டர் ஏ.கே.ராஜன் குழு அரசுக்கு அறிக்கை கொடுத்துள்ளதே!

எல்லாம் 'தெரிந்த' நீதிபதி இவற்றுக்கெல்லாம் பதில் சொல்லுவாரா?

எல்லாம் தெரிந்த சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி, இந்த நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் அமைந்த குழு கூறும் உண்மைத் தகவலுக்கு என்ன சொல்லப் போகிறார்?

ஆகமம் தெரியாதவர்கள் அர்ச்சகராக இருக்க லாமாம், தொடரலாமாம்; முறைப்படி அர்ச்சகர் பயிற்சி பெற்றவர்கள் அர்ச்சகராக ஆகத் தகுதியில்லையாம் இது ஜாதி அடையாளமாகப் பார்க்கப்படுவதன்றி வேறு என்ன? தீண்டாமை எந்த வடிவத்தில் கடை பிடிக்கப்பட்டாலும், குற்றம் குற்றமே!

பார்ப்பனர் அல்லாதார் முறையான அர்ச்சகர் பயிற்சி பெற்றிருந்தாலும், அவர் அர்ச்சகரானால், சாமி தீட்டுப் பட்டுவிடும் என்றால், சாமியின் சக்தியையே கேவலப்படுத்துபவர்கள் யார்?

மாற்றம் என்பதுதான் மாறாதது!

மாற்றம் என்பதுதான் மாறாதது! அது எல்லா விஷயத்திலுமே என்பதை நீதிமன்றம் உணரவேண்டும். கோவில் விஷயத்திலும் மாற்றங்கள் வந்துள்ளன. அவற்றை வசதியாக மறந்துவிட்டு, ஆகம விதிகள் என்றும், அதனை மாற்ற முடியாது - கூடாது என்றும் பார்ப்பனர்களில் ஒரு குறிப்பிட்ட பிரிவினர்தான் அர்ச்சகர் ஆக முடியும் என்று சொல்லுவது எல்லாம் ஜாதி உணர்வுக்கு - எதிரான பெரும் அலையை ஏற்படுத்தக் கூடியனவே!

இந்த 2023 ஆம் ஆண்டிலும் இந்நாட்டின் பெரும்பான்மை மக்களை 'சூத்திரர்கள்' என்று கண்கொண்டு பார்க்கிறார்களா? இந்தப் பெரும்பான்மை மக்கள் பெரும்பாலும் இந்துக்கள்தானே!

அவர்கள் பயிற்சி பெற்று இருந்தாலும், இந்துக் கோவிலில் அர்ச்சகர் ஆகத் தகுதி இல்லை என்று கூறுவது விபரீதம் அல்லவா!

கேரளாவைப் பாரீர்!

அண்டை மாநிலமான கேரளாவில், திருவாங்கூர் தேவசம் போர்டுக்குச் சொந்தமான 1200 கோவில்கள் உள்ளன. பார்ப்பனர்  அல்லாத 36 பேரை அர்ச்சகர் களாக்கியது - அதில் 6 பேர் தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் (அக்டோபர் 2017).

அரசமைப்புச் சட்டம் கேரளாவுக்கு ஒன்று; தமிழ்நாட்டுக்கு வேறு ஒன்றாக இருக்க முடியாது என்பது கனம் நீதிபதிக்குத் தெரிந்ததோ, இல்லையோ!

தமிழ்நாடு அரசின் கவனத்துக்கு...

சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மானமிகு மாண்புமிகு முதலமைச்சர் ஆட்சியின் நூறாவது நாளில் செயல் பாட்டுக்குக் கொண்டு வரப்பட்ட - கம்பீரமான சாத னைக்கு ஓர் அறைகூவல் இப்பொழுது ஏற்பட்டுள்ளது.

நீதிமன்ற முறையில் மேற்கொள்ளவேண்டிய வழிமுறைகளில் நமது அரசு ஈடுபடும் என்பதில் உறுதி. காலந்தாழ்த்தாமல் இதுகுறித்து உரிய ஆலோசனைகளை உரியவர்களிடம் பெற்று செயல்படவேண்டியது மிகவும் அவசியமாகும்.

மற்றொரு வழி மக்கள் மன்றம் - அதனை ஒத்த கருத்துள்ளவர்களை அழைத்து, இணைத்து செயல் படுவதற்கு நாங்கள் தயாராகவே உள்ளோம்.

பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் உணர்வு சமூகத் தளத்தில் புது வீச்சுடன் உருவாக அடியெடுத்துக் கொடுத்துள்ளார்கள் - சந்திப்போம்! 


கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

14.3.2023

No comments:

Post a Comment