ஆசிரியர் விடையளிக்கிறார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, March 11, 2023

ஆசிரியர் விடையளிக்கிறார்

கேள்வி 1 : சட்டப் பேரவைக் கூட்டத் தொடர் நடத்து வதற்கே கூட பஞ்சாப் மாநில அரசு ஆளுநரிடம் கெஞ்சி, கூத்தாடியும் முடியாமல் நீதிமன்றத்தை நாடி உள்ளதே?

- அ. தமிழ்க்குமரன், ஈரோடு

பதில் 1: ஆளுநர்களை அரசமைப்புச் சட்டப்படி கடமையாற்ற விடாமல், அவர்களை அரசியல் ஏவுகணைகளாக்கிடும் அற்பத்தன ஜனநாயக விரோத அரசியலை ஒன்றிய ஆட்சி நடத்திடும் அவலத்தின் வெளிப்பாடே - எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில்! இதற்கு 2024 - பொதுத்தேர்தலில் முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும்!

---

கேள்வி 2 : தற்போது மக்கள் பொதுக்கூட்டங்களுக்கு ஆர்வத்தோடு வருகிறார்களா?

- மணிமேகலை, வீராபுரம்

பதில் 2: கரோனா தொற்று - ஊர் முடக்கம் காரணமாக: 1. நாம் துவக்கிய 'காணொலி' 'ZOOM' கூட்டங்களால் பொதுக்கூட்டம் தற்காலிகமாக மறைந்திருக்கிறது! 2. பெரிய அரசியல் கட்சிகள் ஆட்களை அழைத்து வருவதற்குரிய 'தீனி' போடும் அரசியல் அலங்கோலம் காரணமாக, 'ரெடிமேட் ஆடியன்ஸ்' திரட்டல் பொதுக்கூட்ட உணர்வையே பாழடித்தது. இவைகளை முறியடித்து வெற்றி கண்டதே கழகத்தில் நம் தொடர் பிரச்சாரப் பணி! மக்கள் ஏராளம் கூடினாலும், இறுதிவரை கலையாது இருந்து கேட்டு விழிப்புற்றனர். பொதுக்கூட்டத்திற்கு மீண்டும் ஓர் மறுமலர்ச்சி! - மகிழ்ச்சிதானே!

---

கேள்வி 3 : காங்கிரஸ் கட்சியின் தலைமை தற்போது மாற்றங்களை விரும்புவது போல் தெரிகிறது. இதை தொண்டர்களிடமும், மக்களிடமும் கொண்டுபோய்ச் சேர்ப்பார்களா?

- திராவிட விஷ்ணு, வீராக்கன்

பதில் 3: சேர்த்தால் நல்ல பலன் ஏற்படும். செய்தாக வேண்டும். செய்வார்கள் என நம்புகிறோம்.

---

கேள்வி 4: அண்மையில் நடத்தப்பட்ட இடைத் தேர்தல்களில் பிஜேபி ஆளாத வட மாநிலங்களில் அந்தந்த மாநில ஆளுங்கட்சிகள் தோல்வி அடைந்துள்ளனவே? இது எதிர்க்கட்சிகளுக்கு பொதுத்தேர்தலில் பின்னடைவைத் தராதா? 

- ஆரோக்கிய சேவியர், செங்கோட்டை 

பதில் 4: இல்லை. முன்பைவிட பா.ஜ.க வாங்கிய வாக்குகள் குறைவடைந்துள்ள நிலை. வடகிழக்கில் பல மாநில ஆட்சிகள் 'செட் அப்' ஆன ஆட்சி களாகத்தான் உள்ளன. பணம் பாதாளம் வரை பாயும்போது வடகிழக்கு என்ன விதிவிலக்கா?

---

கேள்வி 5 : இந்தியாவில் ஒடுக்கப்பட்ட மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதலுக்கு எதிராகத் தொடுக்கும் வழக்குகள் பெரும்பாலும் தோல்வியடைகின்றனவே - காரணம் என்ன?

- பழனிவேல், ஆதிவராகநல்லூர்

பதில் 5: மக்கள் எழுச்சி மூலம்தான் பதில் அடியைத் தர நாம் முயற்சிக்க வேண்டும். வெறும் நீதிமன்றங்களை நம்பிக் கொண்டு இருக்கக் கூடாது!

---

கேள்வி 6 : தேர்தல் ஆணையர் நியமனம் குறித்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பை எப்படிப் பார்க்கிறீர்கள்?

- க.கார்த்திகேயன், ஆண்டிமடம்

பதில் 6: ஒன்றியத்திற்குச் சரியான வழியை அறிவுறுத்தும் ஆணைத் தீர்ப்பு - பதிலடி - அதிர்ச்சியை அவர்களுக்குத் தரும் என்பது உறுதி!

---

கேள்வி 7 : அதிக அளவில் குறிப்பிட்ட பகுதிகளில் அடர்த்தியாக வடமாநிலத் தொழிலாளர்கள் குடியேற்றத்தை கழகம் எவ்வாறு பார்க்கிறது?

- தமிழ்மைந்தன், சைதாப்பேட்டை

பதில் 7: கவனத்தோடு கண்காணிக்க வேண்டிய முக்கிய அரசின் பணிகளில், தமிழ்நாடு அரசு முன்னுரிமையுடன் பார்க்க வேண்டிய பணி இது என்பதே நமது கருத்தாகும்!

---

கேள்வி 8 : மின்கட்டண உயர்வு குறித்து மக்களிடம் கருத்துக் கேட்டு ஒளிபரப்பிய ஊடகங்கள், சமையல் எரிவாயு விலையை எத்தனை முறை ஏற்றினாலும் அது போல் மக்களிடம் கருத்துகளைக் கேட்டு வெளியிடுவதில் அக்கறை காட்டாதது ஏன்?

- சா. புகழ்மணி, விக்கிரமங்கலம்

பதில் 8: ஊடகங்கள் யாரிடம் சரணாகதி, எதற்காக அப்படி என்பதை ஆய்வு செய்ய தங்களின் கேள்வி பெரிதும் பயன்படும் என்பது உறுதி! மத்தியத்திற்கு ஒரு நீதி - மாநிலத்திற்கு மற்றொன்று என்ற இரட்டை அளவுகோல் அணுகுமுறையை புரிந்துகொள்ளுங்கள்.

---

கேள்வி 9 : போக்குவரத்துத் துறை மக்களுக்கும், அரசுக்கும் நன்மை தரும் வகையில் அமைய என்ன செய்ய வேண்டும்?

- பாலகங்காதரன், பெரம்பூர்

பதில் 9: தனியார் ஒட்டகத்தை உள்ளே விடாமல் அரசே மேலும் திறம்பட நடத்திட திட்டங்கள் வகுக்க வேண்டும். தொழிலாளர்களை பங்காளிகளாக்கி, வீண் விரயத்தைத் தடுத்து, லாபகரமாக்கி தொழிலாளர்களை மேலும் ஆளுமையாளர்களாக்கி புதிய பெரியார் பாதையில் நடக்க வைத்தால் யாருக்கும் சிக்கல் இல்லாத ஒரு நல்வாய்ப்பினைப் பெற முடியும்.

--- 

கேள்வி 10: பெரும்பாலான அமைச்சர்கள் மதச் சார்பின்மையை மறந்து தங்களை ஒரு மதவாதி போல் காட்டிக்கொள்கிறார்களே?

- இரவீந்தரன், ஊத்தங்கரை

பதில் 10: வருந்த வேண்டிய, கண்டனத்திற்குரியது. முதல் அமைச்சர் இதில் 'கலைஞரானால்' பிரச்சினைக்குச் சரியான தீர்வு  கிடைக்கும். தி.மு.க. என்பது பகுத்தறிவுடன் இயங்கும் ஓர் அரசியல் கட்சி என்பதை பறைசாற்றி அப்பாதையில் சென்றால் மேலும் புகழுடன் விளங்கக் கூடும்.


No comments:

Post a Comment