இன்று அன்னை மணியம்மையார் 104 ஆம் ஆண்டு பிறந்த நாள்: விளம்பர வெளிச்சத்துக்கு வராமல் தந்தை பெரியாரையும்- அவர்தம் கொள்கைகளையும் கட்டிக் காத்தவர்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, March 10, 2023

இன்று அன்னை மணியம்மையார் 104 ஆம் ஆண்டு பிறந்த நாள்: விளம்பர வெளிச்சத்துக்கு வராமல் தந்தை பெரியாரையும்- அவர்தம் கொள்கைகளையும் கட்டிக் காத்தவர்!

கற்போம் - அவர் வழி நிற்போம்!

அன்னையார்தம் பிறந்த நாளில் கழகத் தலைவரின் அறிக்கை

விளம்பர வெளிச்சத்துக்கு வராமல் தந்தை பெரியாரையும், அவருக்குப் பின் அவர்தம் கொள்கை களையும், இயக்கத்தையும் கட்டிக் காத்த வீரத்தாய் அன்னை மணியம்மையார் வாழ்ந்து காட்டியவற்றைக் கற்போம் - அவர் வழி நிற்போம்  என்று அன்னை மணியம்மையாரின் பிறந்த இந்நாளில் (10.3.2023)  திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

அறிக்கை வருமாறு:

இன்று (10.3.2023) தொண்டறத்தின் தூய உருவமாம் அன்னை ஈ.வெ.ரா.மணியம்மையாரின் 104 ஆவது ஆண்டு பிறந்த நாள் விழா!

மகளிரால் என்ன முடியும்?

‘மகளிரால் என்ன முடியும்?' என்று இன்றும் ஒலிக்கும் ஆணாதிக்க ஆணவத்தின் அறைகூவலை ஏற்று, பழிக்கஞ்சா பாசறைத் தலைமைக்கு, தனது தியாக வாழ்வில் அமைதியாய், ஆடம்பர வெளிச்ச விளம்பரத்திலிருந்து விலகி, இறுதிவரை தன்னைக் காத்த பெரும் சுயமரியாதைக் கட்டுமானத்தின் மறுபெயர்தான் அன்னை 

ஈ.வெ.ரா.மணியம்மையார்!அப்பப்பா!

அவர்மீது வீசப்பட்ட அவதூறுகள், இழிமொழிகள், ஏச்சுப் பேச்சுகள், தரமற்ற வசைப் பொழிவுகள் மலை போன்றவை!

வேறு எந்தப் பெண்ணாக இருந்திருந்தாலும் அவர் அவற்றைத் தாங்காது காணாமற் போய் இருப்பார்!

அவரோ, ‘அகழ்வாரைத் தாங்கும் நிலமானார்!' அத னால், நிரந்தர வரலாற்று நாயகியானார்!! சரித்திரம் படைத்தார்!!!

அன்னையாரின் ஒரே இலக்கு!

அவரது ஒரே இலக்கு - பதவியல்ல, பவிசு அல்ல, செல்வம் சேர்த்தல் அல்ல. தனது தலைவரை வாழ வைத்து அவர் தந்த இயக்கத்தை, அது தந்த கொள்கை லட்சியத்தை வையத்தில் வாழ வைத்து, வையத்தையும் வாழ வைப்பதே!

இந்த ஒரே இலக்கு - அவரை எந்தப் பக்கமும் திரும்பிப் பார்க்க விடவில்லை!

தொண்டு! தொண்டு! விளம்பரமில்லா கொள்கைப் பயணத்தினையே வாழ்வாகக் கொண்ட அருந்தொண்டு!

அவரையே எதிர்த்து வெளியேறி தனிக் கழகம் கண்ட அதே அண்ணா, முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு ஒப்புதல் வாக்குமூலம்போல, ‘‘அம்மையார் இல்லாமலிருந்தால், அய்யா நமக்கு இத்தனை ஆண்டுகாலம் கிடைத்திருக்க மாட்டார்'' என்று உணர்ச்சி மேலிட எங்களிடம் பதிவு செய்தார்!

இளமையைத் தூக்கி எறிந்து 

எதிர்நீச்சல் போட்டவர்!

தந்தை பெரியாருக்காக தமது வாழ்வை, வசதிகளைத் துறந்தார்! மாளாத வசைமொழிகளையே சுழன்றடிக்கும் சூறாவளிகளாகப் பெற்றார்! இளமையையே தூக்கி எறிந்து எதிர்நீச்சலில் இமை கொட்டாது ஈடுபட்டார், வென்றார்!

அவர் வென்றது சாதாரணமானவர்களை அல்ல; பெரிய ஆளுமைகளை, அறிஞர்களை!

1. இராஜகோபாலாச்சாரியார் (இராஜாஜி)

2. அறிஞர் அண்ணா

3. புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்

ஏன்?

அன்னையார் நடத்திக் காட்டிய 

'இராவண லீலா'வை வரலாறு எல்லாம் பேசும்!

தன்னால் கழகம் பிளவுபட்டது என்ற வரிகளைக்கூடத் துடைத்துவிட்டு, பிரிந்த கழகம் கூட மேலும் உடைந்து சிதறிவிடாமல் தடுத்த, தனித்த பெருந்தன்மையால் தகைமையோடு வரலாற்றில் உயர்ந்தவர்!

அய்யா என்ற புரட்சி மலையின் உடல் மறைவினையும் எதிரிகள் மறந்து, ‘அய்யோ இவருக்கு இவ்வளவு ஆளுமையா?' என்று அதிர்ந்து அதிசயித்து பின்வாங்கிய பேராற்றலின் பெரு உருவம் நம் அன்னையார்!  அவர் நடத்திக் காட்டிய ‘இராவண லீலா' என்றைக்கும் அவர்தம் தீரத்தை - வீரத்தைப் பறைசாற்றும்!

கற்போம் - நிற்போம் அவர் வழி!

அவரால் அய்யா ஆயுள் நீடிப்பு!

அவரால் நாமும் - நமது இயக்கமும் இன்று செம்மாந்த நிலையில்!!

கட்டுப்பாட்டுடன் கடமையாற்றும் கருப்பு மெழுகு வத்திகளாகி, ஒளி வீசி, ஓங்கும் நிலை என்றும்  இவ்வியக் கத்திற்கும், கொள்கை லட்சியங்களுக்கும் என்றும்  பெருமையைச் சேர்த்து, இறுதி மூச்சு நிற்கும்வரை உழைத்த நம் அன்னையார், அய்யாவிற்குச் செய்த அருந்தொண்டை நினைந்து, அவர் தந்த இயக்கத்திற்கு நம்மை அர்ப்பணித்து, தன்னலமறியாத இனநலம், பொதுநலம் ஏந்தும் அந்தச் சுடரை அகிலம் முழுவதும் பரப்ப, நாம் நமது சூளுரையைப் புதுப்பிப்போம்; சுயமரியாதைச் சூடேற்றிக் கொள்ளுகிறோம்!

வாழ்க அன்னையார்!

வளர்க அவர்தம் தொண்டறம்!

கற்போம், அவர்வழி  நிற்போம்!

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

10.3.2023

No comments:

Post a Comment