தென் இந்திய நல உரிமைச் சங்கமும் - ‘ஜஸ்டிஸ்’ (JUSTICE) நாளிதழும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, February 25, 2023

தென் இந்திய நல உரிமைச் சங்கமும் - ‘ஜஸ்டிஸ்’ (JUSTICE) நாளிதழும்

அரசியல் துறையிலும் அரசாங்க நிருவாகத்திலும் தென்னகத்தில் ஒரு குறிப்பிட்ட ஜாதியினரே முழு ஆதிக்கம் செலுத்துவதை அகற்றவும், மிகப் பெரும்பான்மையாக உள்ள ஏனைய மக்களுக்கு உரிய நியாயமான உரிமைகளைப் பெற்றுத் தரவும் 1916இல் தோன்றிய மாபெரும் இயக்கமே திராவிட இயக்கம். அந்த ஆண்டில் இந்த இயக்கத்தின் வளர்ச்சிக்காக உருவாக்கப்பட்ட அமைப்பே, பிற்காலத்தில் நீதிக் கட்சி என்று அழைக்கப்பட்ட, ‘தென்னிந்திய நல உரிமைச் சங்கம்’ (South Indian Liberal Federation)  ஆகும். இந்த இயக்கத்தைத் தோற்றுவித்த பெருந்தலைவர்கள் சர்.பி.தியாகராயர், டாக்டர் டி.எம்.நாயர், டாக்டர் சி.நடேச முதலியார் ஆகிய மூவர்ஆவர்.

தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தைத் தோற்றுவித்தபோதே, அத்தலைவர்கள் மிக்க முன்யோசனையுடன், ‘திராவிடன்’ (June 1917) என்னும் தமிழ் நாளிதழ், ‘ஆந்திர பிரகாசிகா’ (1917) என்னும் தெலுங்கு நாளிதழ், ‘ஜஸ்டிஸ்’ (Feb 26, 1917) என்னும் ஆங்கில நாளிதழ் ஆகியவற்றைத் தொடங்கி நடத்தலாயினர். இக்கால கட்டத்தில் தோன்றிய திராவிட இதழ்களில் தலையாய இடத்தைப் பெறுவது, ‘திராவிடன்’ நாளிதழே. இந்த இதழ் 1916 முதல் 1932 வரை 15 ஆண்டுகள் தொடர்ந்து நடைபெற்றது. நெடுங்கால உறக்கத்தில் ஆழ்ந்து கிடந்த திராவிடப் பெருங்குடி மக்களைத் தட்டி எழுப்பி, அவர்களுக்கு அரசியல் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவதில் இந்த இதழ் ஆற்றியுள்ள பணி ஈடு இணையற்றது; 20ஆம் நூற்றாண்டுத் தமிழகத்தின் வரலாற்றில் தனி முத்திரை பதித்திருப்பது. இந்த இதழின் ஆசிரியர் குழுவில் இருந்த ஜனகசங்கர கண்ணப்பர், பக்தவத்சலம் பிள்ளை, பெரும்புலவர் மணி திருநாவுக்கரசு முதலியார், புலவர் எஸ்.எஸ்.அருணகிரிநாதர், பண்டித வில்வபதி செட்டியார், சுவாமி உருத்திரகோட்டீஸ்வரர் ஆகியோருள் பெரும்பாலோர் தமிழ்ப் புலவர்களாக இருந்தது சிறப்பாகக் குறிப்பிடத்தக்க செய்தி ஆகும். திராவிட இயக்க வரலாற்றில் தொடக்கக் காலத்திலிருந்தே, வீறு பெற்று எழுந்த திராவிட இன உணர்ச்சியோடு, சிறந்த தமிழ்ப் பற்றும் தமிழ் உணர்வும் கூடவே வளர்ந்து வந்திருப்பதை இச்செய்தி நன்கு எடுத்துக் காட்டுகிறது.

‘ஜஸ்டிஸ்’ என்னும் ஆங்கில நாளிதழ், படிப்பறிவு மிக்க மக்களிடத்தில் மிக்க செல்வாக்குப் பெற்றுத் திகழ்ந்ததால், அந்நாளிதழின் பெயரே ஜஸ்டிஸ் பார்ட்டி (Justice Party) என்று “கட்சியின் பெயராக’’ மக்களால் அழைக்கப்படும் நிலை ஏற்பட்டது. “ஜஸ்டிஸ்’’ என்னும் ஆங்கிலச் சொல்லுக்கு ‘நீதி’ என்பது பொருள். எனவே, ‘ஜஸ்டிஸ் பார்ட்டி’ என்று ஆங்கிலத்திலும், ‘நீதிக்கட்சி’ என்று தமிழிலும் அழைக்கப்படும் மரபு உருவாகி, இன்றளவும்அம்மரபே நிலைத்து நிற்கிறது. கட்சியின் அதிகாரப் பூர்வமான பெயர் மறைந்துவிட்டு, கட்சியின் நாளிதழின் பெயரால் கட்சி அழைக்கப்படும் மரபு நிலைத்திருப்பது, “திராவிட இயக்க வளர்ச்சியில் இதழ்களின் செல்வாக்கு எவ்வளவு வலிமையாக இருந்தது’’ என்பதை அழுத்தந்திருத்தமாக எடுத்துக்காட்டுகிறது.

1917 “தென்னிந்திய மக்கள்’’ சார்பில் ஆங்கிலம், தமிழ், தெலுங்கு ஆகிய மும்மொழிகளில் நாளிதழ்கள் வெளிவந்தன. ஆங்கில நாளிதழ் ‘ஜஸ்டிஸ்’ (Justice) பிப்ரவரி 26இல் வெளியிடப்பட்டது. இந்த இதழுக்கு ஆசிரியராகப் பணியாற்ற சி.கருணாகரமேனன் ஒப்புக் கொண்டிருந்தார். அன்னிபெசண்ட், சர்.சி.பி.இராமசாமி (அய்யர்), கேசவ (பிள்ளை) ஆகியோர் குறுக்கிட்டுஅவரைத் தடுத்தனர். எனவே, ‘ஜஸ்டிஸ்’ நாளிதழ் வெளிவர 6 நாள்களே இருக்கும் நிலையில் கருணாகரமேனன் ‘பல்டி’ அடித்து ஆசிரியராக இருக்க மறுத்துவிட்டார். பின்னர் டாக்டர் நாயரே கவுரவ ஆசிரியர் ஆனார். “மதராஸ் ஸ்டாண்டர்ட்’’ பத்திரிகையின் ஆசிரியராக இருந்த பி.ராமன் (பிள்ளை) துணை ஆசிரியர் ஆனார்.

தமிழ் நாளிதழ் ‘திராவிடன்’, ஜூன் மாதத்திலிருந்து வெளிவரத் துவங்கியது. இவ்விதழின் ஆசிரியராக என்.பக்தவத்சலம் (பிள்ளை), துணை ஆசிரியர்களாக சாமி ருத்ரகோட்டிஸ்வரர், பண்டித வில்வபதி (செட்டியார்) ஆகியோர் பணியாற்றினர்.

ஏற்கெனவே நடைபெற்று வந்த (நிறுவியது 1885இல்) “ஆந்திரப் பிரகாசிகா’’ என்ற தெலுங்கு வார இதழின் உரிமையை பெற்று, அதை நாளிதழாக மாற்றி நடத்தப்பட்டது. இந்த தெலுங்கு நாளிதழின் ஆசிரியராக ஏ.சி.பார்த்தசாரதி (நாயுடு) துணை ஆசிரியர்களாக, பண்டித கானாலா ராகவையா (நாயுடு), நரசிம்ம ராவ் (நாயுடு) ஆகியோர் இருந்தனர்.

இதழ்கள் அனைத்தையும் ராவ்பகதூர் சர்.பிட்டி தியாகராயர் அவர்கள் அச்சடித்து வெளியிடும் முழுப் பொறுப்பை ஏற்றார்.

இம்மூன்று இதழ்களும் சென்னையில் 16ஏ, மவுண்ட்ரோடில் “Justice printing works”  இல் அச்சடிக்கப்பட்டு வெளிவந்தன. அவ்விதழ்களில் உள்ளபடி printed & published by Rao Bahadur P.Theagarayar Chetty B.A., for the “South Indian peoples’ Association Ltd At the “Justice printing works”

‘ஜஸ்டிஸ்’ இதழாசிரியர்

டாக்டர் டி.எம்.நாயர், மெட்ராஸ் ஸ்டாண்டர்டு இதழாசிரியராக இருந்து வெளிப்படுத்திய பத்திரிகைத் துறை ஆற்றலைப் பாரதியார் பாராட்டியுள்ளதை முன்பு கண்டோம்.

பிராமணரல்லாதார் நலன்களைப் பேணும் பத்திரிகைகளுக்கான ஓர் அமைப்பாக “சவுத் இந்தியன் பீப்பிள்ஸ் அசோசியேஷன்’’ - தென்னிந்திய மகாஜனசபை - தோ£ன்றியது. இதன் சார்பில் வெளிவந்த ஆங்கில நாளேட்டின் பெயர்தான், ‘ஜஸ்டிஸ்’.

இந்த இதழிற்கு ‘ஜஸ்டிஸ்’ என்று பெயர் சூட்டியவர் டாக்டர் டி.எம்.நாயர், இவர் பிரெஞ்சு நாட்டில் டாக்டர் க்ளெமான்ஸோவிடம் மருத்துவப் பயிற்சி பெற்றார். க்ளெமான்ஸோ ஜார்ஜஸ் (1841-1929) பிரெஞ்சு நாட்டில் அரசியல் மேதையாக விளங்கியவர். ‘ரேடிகல் ரிபப்ளிகன் கட்சி’யைச் சார்ந்தவர். “வேங்கை - Tiger)” எனப் புகழ் பெற்றவர். 1906 முதல் 1909 வகையில் பிரான்சின் பிரதமராக இருந்த காலத்தில் அரசு - சர்ச் அதிகார மய்யங்கள் இரண்டையும் தனித்தனியாக பிரிக்க சட்டமியற்றியவர்.

1917 சூன் 2, 1917இல் வெளிவந்த ஜஸ்டிஸ் இதழில் ‘ஜஸ்டிஸ்’ கட்சியின் இலட்சியங்களைப் பற்றி டாக்டர் டி.எம்.நாயர் பின்வருமாறு எழுதியுள்ளார்.

‘We claim our social moral and political rights and our share of Government appointments will transform the non-brahmin com- munities into the most prosperous of mankind. not because Gov- ernment appointments carry with them political power, of which, as lords of the soil and inheritors of noble tradition, they must have their legitimate share. We have repeatedly pointed out that the future of the Non-Brahmin community lies in their own hands. As agriculturists, masters of industry and commerce and in other directions fresh efforts will have to be put forth by them only/ We cannot give up political power and Government appointments as lying altogether beyond their province. If claiming political, social, moral equality with the Brahmin of this presidencey is an offence, we plead guilty to it...... We are, nothing but slabs in the hands of the Brahmin hierarchy/ It is our turn to get the ascendancy. Let us onlyl educate ourselves in due course; we shall have our portion of Government services and political power, proportionate to our strength and importance.’

திவான் பகதுர் டி.வரதராஜுலு நாயுடு 1917இல் வெளியிட்ட “THE JUSTICE MOVEMENT” எனும் நூலில்,“POLITICAL RECONSTRUCTION IN INDIA - ARTICES IN JUSTICE”  எனும் தலைப்பில் அய்ந்து கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். இவ்வாறு ஆவணப்படுத்துதல் பாராட்டுதலுக்குரியது. ஒவ்வொரு வெளிவந்த கட்டுரையிலும் நாள் குறிப்பிடப்படவில்லை. கட்டுரைத் தலைப்புகள் பின்வருவன.

1. THE MEMORANDUM OF The NINETEEN - A CRITICISM

2. FEDERAL SYSTEM AND PROVINCIAL AUTONOMY

3. TRANSFER OF SOME DEPARTMENTS TO POPULAR CONTROL

4. PROVINCIAL AND IMPERIAL SUBJECTS

5. REPRESENTATION IN IMPERIAL FEDERATION

முதல் கட்டுரை, இம்பீரியல் லெஜிஸ்லேடிங் கவுன்சிலின் தேர்ந்தெடுக்கப்பட்ட உத்தியோகச் சார்பில்லாத பத்தொன்பது உறுப்பினர்கள் அரசியல், சாசன சீர்திருத்தம் தொடர்பான பதின்மூன்று கோரிக்கைகளை 1916 அக்டோபரில் இந்திய ராஜப் பிரதிநிதியிடம் சமர்ப்பிக்கப்பட்டதின் மீதான நாயரின் விரிவான விமர்சனம்.

இரண்டாவது கட்டுரையில் கூட்டாட்சித் தத்துவத்தையும் மாநில சுயாட்சியைப் பற்றியும் தமது கருத்துகளைக் கூறியுள்ளார் டி.எம்.நாயர்.

இதில் ஒரு வியப்பான செய்தி, அவர் மாபெரும் தேசியத் தலைவரான தாதாபாய் நவ்ரோஜியை (1825-1917) 1893இல் சந்தித்து உரையாடினார். சுயாட்சி அரசமைப்பிற்கு கட்டுப்படுத்த கடினமான அளவிற்கு நமது மாகாணங்கள் உள்ளன என்று என்னிடம் கூறினார் தாதாபாய் நவ்ரோஜி என்று குறிப்பிட்டுள்ளார் நாயர்.

சுயாட்சி அரசாங்கத்திற்கு ஏற்றவாறு மாநிலங்கள், அல்லது ராஜ்யங்கள் சீரான முறையில் பிரிக்கப்பட வேண்டும். இனம், சமயம் அல்லது மொழி அடிப்படையில் பிரித்தால் இடர்ப்பாடுகள் குறையும். கெட்ட வாய்ப்பாக இது சாத்யமில்லையென்றால் பிரதேச அடிப்படையில் பிரிக்கலாம். ஒவ்வொரு வகுப்பும், சமூகமும் அதற்குரிய பிரதிநிதித்துவம் பெற வேண்டும் என்று டி.எம்.நாயர், இக்கட்டுரையில் குறிப்பிட்டுள்ளது அவருடைய மாநில சுயாட்சி - கூட்டாட்சி பார்வையை விளக்க வல்லது. பாரதியார் ஜஸ்டிஸ் இதழ் கட்டுரைகள் சிலவற்றை முரண்பட்டு, விமர்சனம் செய்துள்ளார். அவையெல்லாம், டி.எம்.நாயருக்குப் பிறகு வெளிவந்த இதழ்களாகும்.

சர்.ஏ.இராமசாமி முதலியார் ஆசிரியர் பொறுப்பில் ‘ஜஸ்டிஸ்’ இதழ்

நீதிக்கட்சியின் ‘ஜஸ்டிஸ்’ இதழைப் பற்றி ஓரளவு விவரமாக அறிய வாய்ப்பளித்தவர். சர்.ஏ.இராமசுவாமி முதலியார், அவர் ஆசிரியராக இருந்த காலத்தில் 1927இல் எழுதிய நாற்பத்தாறு தலையங்கங்களைத் தொகுத்து அவரே 1928இல் “MIRROR OF THE YEAR” எனும் தலைப்பில் வெளியிட்டார்.

இதழியல் வரலாற்றில் ஆவணப்படுத்துதல் என்பது பெருந்தொண்டாகும். இத்தொண்டை சர்.ஏ.இராமசுவாமி முதலியார் செய்துள்ளது ஆய்வாளர்களுக்கு பயன் அளிக்கின்றது. இவ்வழியில் ஆங்கிலத்தில் ‘இந்து’ நாளேடு, அதனுடைய நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 1978இல் 842 பக்கங்களில் வெளியிட்ட  “A HUNDRED YEARS OF THE HINDU - THE EPIC STORY OF INDIAN NATIONALISM” எனும் நூல் குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து ‘இந்து’வின் தலையங்கங்கள் பலவும் தொகுத்து வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

‘நவசக்தி’, ‘தேசபக்தன்’ இதழ்களில் அவற்றின் ஆசிரியர் தமிழ்த்தென்றல் திரு.வி.க. தாம் எழுதியத் தலையங்கங்களைத் தொகுத்து நூல்களாக வெளியிட்டது. தமிழ் இதழியல் வரலாற்றிற்கு உரிய அரிய ஆவணமாகும். இவரைத் தொடர்ந்து ‘தமிழ் முரசு’ இதழாசிரியர் ம.பொ.சி. தாம் எழுதியத் தலையங்கங்கள் பலவற்றைத் தொகுத்து ‘முரசு முழங்குகிறது’ எனும் தலைப்பில் வெளியிட்டதும் குறிப்பிடத்தக்கது.

சர்.ஏ.இராமசுவாமி முதலியார் தாம் எழுதியத் தலையங்கங்களை பின்வரும் அத்தியாயங்களில் தொகுத்துள்ளார்.

1. THE MADRAS SWARAJISTS - 10

2. THE LAW MEMBER - 5

3. SOCIAL PROBLEMS - 2

4. THE SERVICES - 14

5. CONSTITUTIONAL PROBLEMS - 10

6. MISCELLANEOUS -4

7. H.E.THE VICEROY -1

ஒரு சமயத்தில் ஜஸ்டிஸ் இதழிற்கு மாதந்தோறும் மூவாயிரம் ரூபாய் இழப்பு ஏற்பட்டது. பொப்பிலி ராஜா 5000 ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளார்.

1933இல் ‘ஜஸ்டிஸ்’ எனும் பெயர் மாற்றப்பட்டு ‘நியூ டைம்ஸ்’ என்று பெயரிடப் பெற்றது. பத்து மாதங்களில் பழைய பெயரான ‘ஜஸ்டிஸ்’ பெயரே தொடரப்பட்டது. இராமசுவாமி முதலியார் தொடர்ந்து ஆசிரியராகவிருந்தார்.

1936இல் லண்டனில் இந்திய கவுன்சிலின் உறுப்பினராகப் பொறுப்பேற்க இராமசுவாமி முதலியார் சென்று விட்டார்.

திரு. டி.ஏ.வி.நாதன் ஆசிரியர் பொறுப்பேற்றார். இவர் சர்.ஆர்.கே.சண்முகம் செட்டியாரிடம் நிதியுதவி கேட்டுக் கடிதம் எழுதினார்.

பிராமணரல்லாதார் இயக்க உணர்வுகளுக்கு புத்துயிர் ஊட்ட பத்திரிகை தவறிவிட்டது எனக் காரணம் கூறி ஆர்.கே.சண்முகம் செட்டியார் நிதியுதவி அளிக்க மறுத்துவிட்டார். அவர் தமது கடிதத்தில் (ஆங்கிலத்தில்) கூறியதாவது.

“I was surprised to see the tone of dignified impartiality worthy of the LONDON TIMES or  THE HINDU  surely a paper intended to buck an opposition party which has been domoralised can afford to be a little more strong and like less solver.”

(டி.ஏ.வி.நாதனுக்கு 1938 ஜூன் 9இல் எழுதப்பட்ட கடிதம். ஆர்.கே.சண்முகம் செட்டி பேப்பர்ஸ்)

“லண்டன் டைம்ஸ், இந்து போன்று கவுரவமாக, பாரபட்சமில்லாமல் ஜஸ்டிஸ் இதழின் குரல் ஒலிப்பது எனக்கு வியப்பளிக்கின்றது. எதிர்க்கட்சியாக தளர்ந்து போன நிலையில் சற்று வன்மையாகவும், தன்னடக்கம் பேணாமல் எழுத வேண்டும்“ என்று கருதினார், ஆர்.கே.சண்முகம் செட்டியார்.

1937இல் நீதிக்கட்சி, காங்கிரசிடம் படுதோல்வியுற்றது. இறுதியாக 1938ஆம் ஆண்டின் இறுதியில் நின்று போனதாகத் தெரிகின்றது.

No comments:

Post a Comment