அண்ணா அய்யாவின் அருந்தொண்டர்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, February 3, 2023

அண்ணா அய்யாவின் அருந்தொண்டர்!

அண்ணா வாழ்கிறார் - 'திராவிட மாடல்' அரசாக - 

சாதனை சரித்திரமாக வாழ்கிறார்!

அண்ணா நினைவு நாளில் தமிழர் தலைவர் அறிக்கை

அண்ணா அய்யாவின் அருந்தொண்டர்! அண்ணா வாழ்கிறார் - 'திராவிட மாடல்' அரசாக - சாதனை சரித்திரமாக வாழ்கிறார்  என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

1. இன்று (3.2.2023) அறிஞர் அண்ணாவின் நினைவு நாள்.

2. அறிஞர் அண்ணா ஒப்புவமை சொல்ல முடியாத பன்கலைக் கொள்கலன்.

அண்ணாவின் நாவன்மை!

அவரது நாவன்மை, எழுத்தோவியத் திறன், ஆளுமை- நாடாளுமன்றவாதியாக அனைவரையும் திகைக்க வைத்த ஆற்றலாளர் - இவை எல்லாவற்றையும் தாண்டி, தன்னைச் செதுக்கிய ஆசானின் அதியற்புதப் பாராட்டைப் பெற்ற ஒப்பற்ற ஒரு தொண்டர் நாதன்!

3. இயக்கத்திற்கு வந்த அவரை சில ஆண்டுகளிலேயே அடையாளம் கண்டதோடு, பிறரும், அகிலமும் அவரது திறமையை அறியவேண்டும் என்பதற்காக 1937-லேயே துறையூரில் நடைபெற்ற முசிறி தாலுகா சுயமரியாதை மாநாட்டிற்குத் தலைமையேற்கச் செய்தார் தந்தை பெரியார்! என்னே முன்னோக்கு!

4. 1948 இல் ஈரோடு மாகாண ‘‘திராவிடர் கழக ஸ்பெஷல் மாநாட்டிற்கு''த் தலைமையேற்கச் செய்து, ‘‘பெட்டிச் சாவியைத் தருகிறேன்'' என்று கூறி, அந்த மாநாடு நடைபெறும்முன்பு - ஒரு மாபெரும் பேரணி - தொண்டர் அண்ணாவை ஊர்வலத்தில், வாகனத்தில் அமர்த்தி, முன்னால் தலைவர் பெரியார் நடந்து வந்தார் என்ற செய்தி, இன்றைய இளைய தலைமுறை அறிந்துகொள்ள வேண்டிய அதிசயச் செய்தி!

முதலில் சந்தித்தது தந்தை பெரியாரைத்தான்!

5. இடையில், கருத்து வேறுபாடுகள் என்ற பனிமூட்டம் - அது விலகிய நிலையில், தான் பெற்ற பதவியை, வெற்றியை அய்யாவின் காலடியில் வைக்க 200 மைல் தொலைவிலுள்ள திருச்சிக்கு அல்லவா பதவியேற்குமுன் அறிஞர் அண்ணா சென்றார்! அய்யாவிடம், அவர் கொண்டது வர்ணிக்க இயலாத ஒருவகை கொள்கைப் பிணைப்பு!

6. அந்த ‘‘ஆட்சியையே தனது தலைவருக்கு - தந்தை பெரியாருக்குக் காணிக்கை'' என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் பிரகடனம் செய்த பெரியாரின் சீடராக, சீலராக அறிஞர் அண்ணா முதலமைச்சரான பிறகு சொன்னதோடு, செய்கை யிலும் அதை நிலை நாட்டினார்.

முதலமைச்சர் அண்ணாவின் அரிய சாதனைகள்

அ. சுயமரியாதைத் திருமணச் செல்லுபடிச் சட்டம்

ஆ. ‘தமிழ்நாடு' பெயர் மாற்றச் சட்டம்

இ. இருமொழிக் கொள்கை - ஹிந்திக்கு இடமில்லை எனப் பிரகடனம்

ஈ. கடவுளர் படங்களை அரசு அலுவலகங்களில் அகற்றும் சுற்றறிக்கை 

உ. கலப்பு மணமக்களுக்குத் தங்கப் பதக்கம் என்ற ஜாதி தீண்டாமை ஒழிப்புத் திட்டம்

இப்படிப் பல - ஓராண்டு ஆட்சியிலே!

தந்தை பெரியார், அண்ணாவின் உடல்மீது சிந்திய கண்ணீர் எனும் ஓவியம்!

7. ‘‘புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்காடு

இரந்துகோள் தக்கது உடைத்து'' (குறள் 780)

என்ற குறளின் பொழிப்புரையாகவே தந்தை பெரியார், அறிஞர் அண்ணாவின் உடல்மீது சிந்திய கண்ணீர்த் துளிகள் காவியம் படைத்தன! வரலாறு ‘ஓவியம் இது' என்று பதித்தது!! உலகம் வியந்தது!

‘‘அண்ணா மறைந்தார்; அண்ணா வாழ்க!'' என்று இரங்கற் செய்தியில் எழுதினார் தந்தை பெரியார். 

அண்ணா அவர்கள் கண்ட - கொண்ட ஒரே தலைவர் தந்தை பெரியார்!

'திராவிட மாடல்' ஆட்சியாக அண்ணா வாழ்கிறார்!

அண்ணாவின் அந்த வசந்தம் பெற்ற பேறுதான் என்னே! தன் தொண்டனின் செயல் மலர்களைக் கண்டும், கேட்டும், ‘‘வலி குறைந்தது; மறைந்தது'' என்று ஓங்கி முழங்கி ‘‘வலிபோக்கிய வலிமையோன் வாழ்க! வாழ்க!!'' என்று கண்ணீரால் அவர்தம் தலைவர் எழுதிய காவியத்திற்குத்தான் எத்தனை பெருமை! எவ்வளவு சிறப்பு!!

அண்ணா வாழ்கிறார்! ‘திராவிட மாடல்' ஆட்சியாக - முத்தமிழறிஞர் கலைஞர், மு.க.ஸ்டாலின் சாதனை சரித்திரங் களாய் வாழ்கிறார் அண்ணா! - இல்லையா?

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

3.2.2023

No comments:

Post a Comment