பிறந்தாலும் சூத்திரனாய்ப் பிறக்கக்கூடாது! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, February 25, 2023

பிறந்தாலும் சூத்திரனாய்ப் பிறக்கக்கூடாது!

மேல்நாட்டில் பிறப்பதாயிருந்தால் நாயாய்ப் பிறந்தாலும் கழுதையாகப் பிறந்தாலும் மேன்மை பெறலாம். நம் “நரக” பூமியாகிய நம் திராவிட நாட்டில் பிறக்க வேண்டுமானால் ‘பார்ப்பனனாய்’ப் பிறந்தால்தான் பயன் பெறலாம்.

குஷ்டரோக குடிகார தூர்த்தப் பிராமணனானாலும் அனாமதேய பிராமணனானாலும் இந்நாட்டில் பிராமணப் பிறவிக்கு மரியாதை மேன்மை கிடைக்கும்.

திராவிடனுக்கு திராவிட நாட்டில் அவன் எவ்வளவு மேதாவியாக இருந்தாலும் மரியாதை கிடையாது.

உதாரணம்:

நேற்று கார்ப்பரேஷனில் சர்.ஏ.ராமசாமி முதலியார் ஆண்டு விழாவுக்கு அழைக்கப்பட்டு அங்கு சென்று அருமையான சொற்பொழிவாற்றி இருக்கிறார். அவர் உலகம் அறிந்த மேதாவி. அவரால் இந்தியாவுக்கே பெருமை கிடைத்திருக்கிறது. சுதந்திர இந்தியாவில் அதாவது வெள்ளையன் இந்தியாவில் அல்ல ‘‘பாரத்’’ இந்தியாவில், தாம் விரும்பாமல், தம்மைக் கேட்காமல் கூட தமக்கு கவர்னர் வேலை கொடுக்கப்பட்டதை வேண்டாம் என்று சொன்னவர்.

அப்படிப்பட்ட ஒருவரை அழைத்து தன்னை பெருமைப் படுத்திக்கொண்ட கார்ப்பரேஷன் அவருக்கு ஒரு அட்ரஸ் படித்து கொடுக்கக்கூட மனம் பெறவில்லை; டீ பார்டி வைக்கவும் மனம் பெறவில்லை.

காரணம், ராமசாமி முதலியார் ‘சூத்திரர்’ கார்ப்பரேஷனில் மெஜாரிட்டி கவுன்சிலர்களாக இருப்பவரும் “சூத்திரப்” பிண்டங்கள். தங்கள் இனம் என்ன என்பதையே அறியாதவர்கள். அதே கார்ப்பரேஷனுக்கு அடுத்த நாளில் ஒரு பார்ப்பனர் - இந்த நாட்டு பார்ப்பனர் - வட நாட்டுக்குச் சென்று ‘சிவானந்த சரஸ்வதி’ என்று பட்டம் சூட்டிக் கொண்டு, பார்ப்பனப் பத்திரிகை விளம்பரத்தின் மீது ‘பகவான்’ ‘சுவாமி’ ஆகி வந்த வழியில் அழைக்கப்பட்டு, டீ பார்ட்டி கொடுக்கப்பட்டு, வரவேற்பு கொடுக்கப்பட்டு மகா ஆடம்பரம் செய்யப்பட்டிருக்கிறது. அவர் செய்த சொற்பொழிவில் உதிர்ந்த முத்துகளோ அன்பு, ஆத்மா, இன்பம், ஈவு இரக்கம் என்பன போன்ற பண்டாரப் பேச்சுகளுடன் பஜனை பாடினார். அங்குள்ள அவரது சிஷ்யர்கள் கூடவே பின்பாட்டு பாடினார்கள். நல்ல பஜனை நடந்தது.

இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால், இந்தியாவில் பிறந்தால் பார்ப்பனனாய் பிறக்கவேண்டும். இல்லாவிட்டால் கழுதை, நாயாகவாவது மேல் நாட்டில் பிறக்கவேண்டும் என்பதுதான்.

அதனால்தான் தமிழ்நாட்டில் ஆங்கிலமும், ஹிந்தியும் கட்டாயப் பாடம். இந்தியாவுக்கு திராவிட நாடு ஒரு சிற்றரசு.

- ‘சித்திரபுத்திரன்’

(தந்தை பெரியார் -‘விடுதலை’ 2-10-1950)

No comments:

Post a Comment