Viduthalai

செய்திகள் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கழகம் சிறப்புக் கட்டுரை தமிழ்நாடு தலையங்கம் மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள்
மதுரை திறந்தவெளி மாநாட்டில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் உரை
February 12, 2023 • Viduthalai

 சேது சமுத்திரத் திட்டம் நிறைவேற்றப்படவேண்டுமானால் 

2024 மக்களவைத்  தேர்தலில் பி.ஜே.பி. ஆட்சியை வீழ்த்தவேண்டும்!

மதுரை, பிப்.12 சேது சமுத்திரத் திட்டம்  நிறைவேற்றப்பட வேண்டுமானால் 2024 மக்களவைத்  தேர்தலில் பி.ஜே.பி. ஆட்சியை வீழ்த்தவேண்டும் என்றார் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள்.

சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை உடனே செயல்படுத்த வலியுறுத்தி திறந்தவெளி மாநாடு

கடந்த 27.1.2023  மாலை மதுரையில் நடைபெற்ற சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை உடனே செயல்படுத்த வலியுறுத்தி நடைபெற்ற திறந்தவெளி மாநாட்டில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன்  உரையாற்றினார்.

அவரது உரை வருமாறு:

சேது சமுத்திரத் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி நடைபெறுகின்ற இந்த மாபெரும் திறந்தவெளி மாநாட் டிற்குத் தலைமையேற்கக் கூடிய திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களே,

இந்தத் திட்டத்திற்குக் கதாநாயகராக இருந்த, இருக்கிற திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொருளாளரும், மேனாள் ஒன்றிய அமைச்சருமான மரியாதைக்குரிய மானமிகு டி.ஆர்.பாலு அவர்களே,

சுயமரியாதை இயக்கக் குடும்பத்தைச் சார்ந்த தமிழ் நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் மரியாதைக்குரிய கே.எஸ்.அழகிரி அவர்களே,

எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளன் அவர்களே,

மாண்புமிகு அமைச்சர் மூர்த்தி அவர்களே,

மற்றும் இம்மாநாட்டில் கலந்துகொண்டிருக்கின்ற பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த அறிஞர் பெரு மக்களே, வெள்ளம்போல் திரண்டிருக்கின்ற அருமைத் தோழர்களே, தாய்மார்களே உங்கள் அனைவருக்கும் என்னுடைய வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

18 ஆண்டுகளுக்குப் பின்னால்....

எந்த மதுரையில், 2005 ஆம் ஆண்டில், சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை இந்தியாவினுடைய பிரதமர் மன்மோகன்சிங் அவர்கள் தொடங்கி வைத்தார்களோ, அதே மதுரையில், 18 ஆண்டுகளுக்குப் பின்னால், இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தவேண்டும் என்று வலியுறுத்துவதற்கு ஒரு மாநாட்டை நடத்த வேண்டிய ஓர் அவலம் இருக்கிறது.  இந்த நிலையை நாம் எண்ணிப் பார்க்கவேண்டும்.

இதற்கு ஒரே ஒரு தீர்வுதான் உண்டு. இந்தத் திட்டம் நிறைவேற்றப்படவேண்டும் என்றால், அதற்கு ஒரே ஒரு வழி இருக்கிறது.

மோடி ஆட்சியை ஒழித்துக் கட்டினாலொழிய, திட்டம் நிறைவேறுவதற்கான வாய்ப்பு இல்லை!

2024 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் நாடாளு மன்றத் தேர்தலில் மோடி ஆட்சியை ஒழித்துக் கட்டினா லொழிய, இந்தத் திட்டம் நிறைவேறுவதற்கான வாய்ப்பு இல்லை.

இங்கே உரையாற்றியவர்கள் ராமர் பாலம் என்ற ஒன்று இல்லை என்று சொன்னார்கள்; இடிக்கவேண்டிய அவசியமில்லை என்று சொன்னார்கள். மேலும் ஒன்றை சொல்ல விரும்புகிறேன்.

ராமர் பாலத்தை, ராமனே இடித்துவிட்டானே! நாங்கள் இதை ஆதாரம் இல்லாமல் சொல்லவில்லை.

கம்ப இராமாயணத்தில் மீட்சிப் படலத்தில், 171 ஆம் பாடல் - ராமனே, ராமர் பாலத்தை வில்லின் நுனியால் உடைத்தான் என்று கம்ப இராமாயணமே சொல்கிறது.

ஆக, உடைக்கப்பட்ட பாலம் எங்கே இப்பொழுது இருக்கிறது? உடைக்கவேண்டிய அவசியம் எங்கே இருக்கிறது? என்பது மிக முக்கியமான கேள்வியாகும்.

கலைஞரின் ‘‘சேது சமுத்திரத் திட்டமும், ராமன் பாலமும்!’’

இங்கே நான்கு நூல்கள் வெளியிடப்பட்டு இருக் கின்றன; அதிலே ‘‘சேது சமுத்திரத் திட்டமும், ராமன் பாலமும்’’ என்று கலைஞர் அவர்கள் எழுதிய, பேசிய புத்தகம். 40 பக்கங்கள் - ரூ.30.

டி.ஆர்.பாலு அவர்களின் ‘‘பாதை மாறா பயணம்’’

இன்னொன்று, சேது சமுத்திரத் திட்டத்தினுடைய நடுநாயகராக இருக்கக்கூடிய மானமிகு டி.ஆர்.பாலு அவர்களால், ‘‘பாதை மாறா பயணம்’’ என்ற தன்னுடைய வாழ்க்கை வரலாற்று நூலில், 60 பக்கங்கள் இந்த சேது சமுத்திரத் திட்டத்தைப்பற்றி அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.

எதையும் நுண்மையாக அறியக்கூடிய நமது தலைவர் ஆசிரியர் அவர்கள், அவரிடத்திலே சொல்லி, அந்த 60 பக்கங்களை ஒரு நூலாக திராவிடர் கழகம் வெளியிடும்; அதற்கு அனுமதி தரவேண்டும் என்று கேட்டபொழுது, மகிழ்ச்சியோடு அவர் அனுமதி கொடுத் ததற்காக இந்த நேரத்தில் நன்றியைத் தெரிவித்துக் கொள்ள நாம் கடமைப்பட்டு இருக்கின்றோம்.

‘‘சேது சமுத்திரத் திட்டம் ஏன்? எதற்காக?’’

மூன்றாவது, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவரும், ஊடகத் துறை தலைவருமான கோபண்ணா அவர்களால் எழுதப்பட்ட ஒரு புத்தகம் ‘‘சேது சமுத்திரத் திட்டம் ஏன்? எதற்காக?’’ 111  பக்கங்கள்; விலை 100 ரூபாய்.

தமிழர் தலைவர் எழுதிய  ‘‘சேது சமுத்திரத் திட்டமும் - ராமன் பாலமும்’’

2007 ஆம் ஆண்டு நம்முடைய தமிழர் தலைவர் அவர்களால் எழுதப்பட்ட கேள்வி - பதில் வடிவத்தில் உள்ள ஒரு புத்தகம் ‘‘சேது சமுத்திரத் திட்டமும் - ராமன் பாலமும்’’ 48 பக்கங்கள், ரூ.20. 

2007 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட நூல்; இதுவரை 10 பதிப்புகள் வெளியாகி, லட்சக்கணக்கில் மக்கள் மத்தியில் சென்றிருக்கின்றன. அவற்றைப் படிக்க வேண்டும் என்று உங்களையெல்லாம் இந்த நேரத்தில் கேட்டுக்கொள்கின்றேன்.

திராவிடர் கழகப் பொதுக்குழுவின் தீர்மானம்

திராவிடர் கழகம் 2007 ஆம் ஆண்டு அதனுடைய பொதுக்குழுவில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது.

அந்தத் தீர்மானத்தை மட்டும் சொன்னாலே, இந்த சேது சமுத்திரத் திட்டத்தினுடைய அவசியம் என்ன? இதனால் என்னென்ன பலன்கள் நாட்டு மக்களுக்கு என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

8.5.2007 அன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானம் என்ன சொல்கிறது?

1860 ஆம் ஆண்டு தொடங்கி, வெறும் பேச்சளவில் இருந்த சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்திற்கு, மத்தியில் உள்ள இடதுசாரிகள் ஆதரவு பெற்ற, அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில், 2005 ஆம் ஆண்டு மே 19 இல் ஒப்புதல் வழங்கப்பட்டது.

தமிழர்களின் நீண்ட நாள் கோரிக்கை

ரூ.2427.40 கோடி முதலீட்டில் தொடங்கப்படும் இத்திட்டம், தமிழர்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும்.

இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால், நாட்டிற்குக் கிடைக்கக் கூடிய பலன்கள் பலப் பல!

அந்நிய செலாவணி மிச்சம் -பொருளாதார வளர்ச்சி-

வேலை வாய்ப்புப் போன்ற பல நன்மைகள் இத்திட்டத்தினால் கிடைக்கின்றன.

இந்த நிலையில், மக்கள் நலனில் அக்கறை உள்ள எவரும், இத்திட்டத்தை வரவேற்கவே செய்வார்கள்.

பாபர் மசூதியை இடித்து நாட்டில் மதவாத அரசியலை நடத்திய, மதவாத சக்திகள், இந்தப் பிரச்சினையிலும் இந்தத் திட்டத்தால், ராமன் பாலம் இடிக்கப்படுகிறது என்ற மாய்மாலக் கூச்சலைக் கிளப்பி, மக்கள் மத்தியில், மதவாத உணர்வைத் தூண்டியும், நீதிமன்றம் சென்றும், திட்டம் நிறைவேற்றப்படுவதற்குக் குந்தகம் விளை விக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தனுஷ்கோடிக்கும் - தலைமன்னார்க்கும் இடையே அமைந்துள்ள மணல் திட்டுகள் ஆதாம் பாலம் என்று காலங்காலமாக வழங்கப்பட்டு வருகிறது.

விலங்கியல், நிலவியல், தாவரவியல் அறிஞர்களின் கருத்து!

பவளப் பூச்சிகளின் சுண்ணாம்பு சுரப்பால் உண்டான கட்டுமானமே இந்தப் பவளைப் பாறைகள் என்றும், உலகின் பல பாகங்களிலும் இத்தகைய திட்டுகள் உண் டென்றும், விலங்கியல், நிலவியல், தாவரவியல் அறிஞர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

இத்திட்டத்தை இப்போது எதிர்க்கும் பாரதீய ஜனதா, மத்தியில் ஆட்சியில் இருந்தபொழுது, ஆதாம் பாலம் வழியாக சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் உருவாக்க ஒப்புதலும் அளிக்கப்பட்டது என்கின்ற விவரத்தை மத்திய கப்பல் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் திரு.டி.ஆர்.பாலு அவர்கள் மாநிலங்களவையில் தெளிவுபடுத்தினார்கள். (நாள்: 2.5.2007).

மதவாத சக்திகளோடு 

மேனாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்களும் கைகோத்தார்

ராமன் பாலம் என்ற மதவாத கண்ணோட்டத்தோடு பிரச்சினைகளைக் கிளப்பிவரும் மதவாத சக்திகளோடு மேனாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர் களும் கைகோத்துக் கொண்டிருக்கிறார்.

2001 சட்டமன்றத் தேர்தலில், அ.இ.அ.தி.மு.க. அளித்த தேர்தல் அறிக்கையிலும் குறிப்பிட்ட வாக்குறுதிக்கு முரணான நிலைப்பாடாகும்.

(ஏற்கெனவே அ.தி.மு.க.வினுடைய தேர்தல் அறிக் கையில், சேது சமுத்திரத் திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று அறிக்கை கொடுத்திருக்கிறார்கள் என்பதை உங்கள் கவனத்திற்குக் கொண்டு வர விரும்பு கிறேன்.)

அந்த அறிக்கையில், 10.5.2001 இல் குறிப்பிட்டதாவது:

‘‘இந்திய தீபகற்பத்தைச் சுற்றி, இதுவரை தொடர்ச்சி யான கப்பல் போக்குவரத்திற்கு ஏற்ற பாதைகள் இல்லை. மேற்கிலிருந்து  கடல் வழியாக கிழக்கு நோக்கி கப்பல்கள் செல்லவேண்டுமானால்,  இலங்கையைச் சுற்றிக்கொண்டு தான் செல்லவேண்டி உள்ளது. இதற்குத் தீர்வாக அமை வதுதான் சேது சமுத்திரத் திட்டம். இத்திட்டத்தின்படி, ராமேசுவரத்திற்கும், இலங்கையின் தலைமன்னாருக்கும் இடையில் உள்ள ஆதாம் பாலம் பகுதியில், கப்பல் போக்குவரத்திற்குத் தடையாக உள்ள மணல் மேடுகள், பாறைகள் இவற்றையெல்லாம் அகற்றி, ஆழப்படுத்தி, கால்வாய் அமைப்பதுதான் சேது சமுத்திரத் திட்டத்தின் தலையாய நோக்கம்.’’ 

(என்று சொல்வது யார்?

அண்ணா தி.மு.க.வினுடைய பொதுச்செயலாளர் முதலமைச்சர் ஜெயலலிதா  என்பதை நீங்கள் மறந்து விடக் கூடாது.)

இந்தத் தீர்மானத்தை திராவிடர் கழகம் நிறைவேற்றி இருக்கிறது.

‘‘ஆதாம் பாலம் என்றும், மணல் மேடுகள் என்றும் அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருப்பதற்கு மாறாக, இன்று ராமர் பாலம் என்று மதவாத சக்திகளோடு இணைந்து குரல் கொடுத்தார், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் செல்வி ஜெயலலிதா. இது கடைந் தெடுத்த முரண்பாடு அல்லாமல் வேறு எதுவும் இல்லை.

அரசை நடத்துவதற்கு எந்தவிதமான அறிவார்ந்த கோட்பாடுகளும், திட்டங்களும் இல்லாத வெறுமை நிலையில், குறுகிய மதவாதத்தைக் கையிலெடுக்க வேண்டிய நிலைக்கும் அவர்கள் தள்ளப்பட்டு உள்ளனர் என்பதை இது நிரூபிக்கிறது.

மிகைப்படுத்தப்பட்ட பிரச்சாரமே!

மீனவர்களுக்கும், கடலோரப் பகுதிவாழ் மக் களுக்கும் இந்தத் திட்டம் நிறைவேற்றத்தால், பாதிப்பு ஏற்படும் என்பதும், மிகைப்படுத்தப்பட்ட பிரச்சாரமே! அப்படியே பாதிக்கப்படுபவர்கள் யாராவது இருந்தால், அவர்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதுவும் போதாது என்றால், இப்பாதுகாப்புக் குழு முன்னின்று அதனைப் பெற்றுத் தர வற்புறுத்தும்.

இந்த சூழ்நிலையில், மக்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டப்படி நிறைவேற்றுவதற்கும், மக்கள் ஆதரவு உண்டு என்பதையும் நிலைநாட்டுவதற்குக் கீழ்க்கண்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது  என்று திராவிடர் கழகம் ஒருமனதாகத் தீர்மானிக்கிறது.

சேது சமுத்திரத் திட்டப் பாதுகாப்புக் குழு என்கிற ஓர் அமைப்பு. திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம், காங்கிரஸ், பாட்டாளி மக்கள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை ஆகிய அமைப்புகளும் இந்தக் குழுவில் இணைத்துக் கொள்ளப்படும்.

முதலாவதாக,  இதில் உடன்பாடு உள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களும் பங்கேற்கும் மாநாடு சென்னை யிலும், அடுத்து மதுரையிலும் திறந்தவெளி மாநாடாக நடைபெறும்.

‘‘இராமன் பாலமா? சேது சமுத்திரத் திட்டமா?’’

மாநாட்டின் தலைப்பு ‘‘இராமன் பாலமா? சேது சமுத்திரத் திட்டமா?’’ என்ற உண்மை விளக்க மாநாடு.

சேது சமுத்திரத்திரக் கால்வாய்த் திட்டம் குறித்தும், இராமன் பாலம் என்கின்ற கற்பனையில் பின்னணியை விளக்கியும், துண்டறிக்கைகளை வெளியிடுவது என்றும்,

மாவட்டத் தலைநகரங்களிலும் மற்றும் முக்கிய நகரங்களிலும் இத்தகு மாநாடுகளை நடத்துவது என்றும், 

மனித சங்கிலி உள்ளிட்ட அறப்போராட்டங்களை நடத்துவது மேற்கொள்வது என்றும் தீர்மானிக்கப் படுகிறது’’ என்று 2007 ஆம் ஆண்டு இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதையே இந்த மாநாட்டிலும் நாம் நிறைவேற்றுகின்ற தீர்மானம் என்று கருதி, அனைவரும் பலத்த கரவொலி எழுப்பி ஆதரிக்கவேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன் (பலத்த கரவொலி).

16.5.2007 அன்று சென்னை அமைந்தகரை புல்லாரெட்டி அவென்யூவில், கலைஞர் தலைமையில் ‘‘சேது சமுத்திரத் திட்டமும் -இராமன் பாலமும்'' என்ற தலைப்பில், மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இராமன் பால புரட்டு

1.8.2007 அன்று மாலை இராமநாதபுரத்தில், திராவிடர் கழகத்தின் சார்பில், இராமன் பாலமும் புரட்டும் என்ற மாநாடும் நடைபெற்றது என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறோம்.

நம்முடைய முக்கிய கடமை

சேது சமுத்திரத் திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் என்றால், மீண்டும் சொல்கின்றேன் - 2024 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலை மறந்துவிடாதீர்கள்; இத்திட்டத் திற்குத் தடை போடுகின்றவர்களை மீண்டும் ஆட்சிக்கு வராமல் தடை செய்யவேண்டியதுதான் நம்முடைய முக்கிய கடமை என்று கூறி, வாய்ப்பளித்த உங்களுக்கு நன்றி கூறி, விடைபெறுகிறேன்.

                                                                  நன்றி, வணக்கம்!

- இவ்வாறு திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் சிறப்புரையாற்றினார்.

இம்மாநாட்டில் கழக அமைப்புச் செயலாளர் வே.செல்வம் சிறப்பாக இணைப்புரை வழங்கினார்.


ராமனே உடைத்து விட்டானே!

ராமன் கட்டினான் பாலம் என்கின்றனர். கம்ப ராமாயணக் கூற்றின்படி, அந்தப் பாலத்தை ராமனே உடைத்துவிட்டான் (ஆதாரம்: கம்பராமாயணம் மீட்சிப்படலம் 171ஆம் பாடல்)

மரக்கல மியங்க வேண்டி வரிசிலைக் குதையாற் கீறித் 

தருக்கிய விடத்துப் பஞ்ச பாதக ரேனுஞ் சாரிற் 

பெருக்கிய வேழு மூன்று பிறவியும் பிணிக ணீங்கி 

நெருக்கிய வமரர்க் கெல்லா நீணிதி யாவரன்றே

இராமன் புஷ்பகத்தின்மீது ஏறிச் செல்லுகையில் கடலில் அவ்விடத்து மரக்கலங்கள் இடையே இனிது செல்லுதற்பொருட்டு தனது வில்லின் நுனியாற் சேதுவைக்கீறி யுடைத்து வழிவிட்டார்.

மரக்கப்பல்கள் ஓட்டுவதற்கு அப்பாலம் தடையாக இருந்தது என்று கருதி, ராமனே அந்தப் பாலத்தை உடைத்துவிட்டான் என்று ராமாயணத்தில் கூறிய பிறகு, ராமன் பாலம் அங்கு இப்போது இருக்கிறது என்பது அறிவு நாணயமா? இராமனையே மறுப்ப வர்கள் இவர்கள் தானே!

அன்றைக்கு மரக்கப்பல் ஓட பாலத்தை இடிக்க நேர்ந்தது. இன்று பெரிய பெரிய கப்பல்கள் பயணிக்க மணல் திட்டாகிய அந்தப் பாலத்தை இடிக்க நேருகிறது-அவ்வளவுதானே!

Comments

பெரியார் வலைக்காட்சி


பெரியார் பண்பலை

Popular posts
காரைக்குடி என்.ஆர்.சாமி இல்ல மணவிழாவில் தமிழர் தலைவர் ஆசிரியரின் கொள்கையுரை
March 27, 2023 • Viduthalai
Image
இளைஞர்களே, மாவீரன் நாத்திகன் பகத்சிங்கைப் பின்பற்றுவீர்! அது உங்களை ''சொக்க சுயமரியாதைக்காரர்'' ஆக்கும்!
March 23, 2023 • Viduthalai
Image
ஓடப்பராக இருக்கும் ஏழையப்பர், உதையப்பர் ஆக வேண்டியதில்லை! ஓட்டப்பராகிவிட்டால் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாசிசம் வீழ்ந்துவிடும்!
March 27, 2023 • Viduthalai
Image
வேளாண் துறைக்கென்று தனி பட்ஜெட் - 'திராவிட மாடல்' ஆட்சியின் புதிய அணுகுமுறை விவசாயம் 'பாவ தொழில்' என்பது மனுதர்மம் - விவசாயிகளைக் கைதூக்கி விடுவது திராவிடம்
March 22, 2023 • Viduthalai
Image
தமிழ்நாட்டில் விளையாட்டு நகரத்திற்கு இரண்டு இடங்கள் தேர்வு
March 22, 2023 • Viduthalai
Image

தேட

Publisher Information
Contact
About
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily
அரசியல் அரசு அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் உரை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா இரங்கல் அறிக்கை இளைஞர் அரங்கம் உடற்கொடை உலகம் ஊசி மிளகாய் ஏட்டுத் திக்குகளிலிருந்து... ஒற்றைப் பத்தி கட்டுரை கரோனா கவிஞர் கலி.பூங்குன்றன் கழகக் களத்தில் கழகம் சட்டமன்றச் செய்திகள் சிறப்புக் கட்டுரை செய்திச் சுருக்கம் செய்தியும் சிந்தனையும்....! ஞாயிறு மலர் தந்தை ஞாயிறு மலர் தந்தை பெரியார் அறிவுரை தமிழ்நாடு தலையங்கம் நடக்க இருப்பவை நாடாளுமன்ற செய்திகள் பகுத்தறிவுக் களஞ்சியம் பதிலடிப் பக்கம் பிற இதழிலிருந்து... பெரியார் கேட்கும் கேள்வி! மகளிர் அரங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வணிகச் செய்திகள் வரலாற்றுச் சுவடுகள் வாழ்வியல் சிந்தனைகள்
Share this page
Email
Message
Facebook
Whatsapp
Twitter
LinkedIn