யாருக்கெல்லாம் ஆளுநர் பதவி? அதன் பின்னணி என்ன? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, February 13, 2023

யாருக்கெல்லாம் ஆளுநர் பதவி? அதன் பின்னணி என்ன?

 அயோத்தி பாபர் மசூதி நில வழக்கு, பிரதமர் நரேந்திர மோடியின் பணமதிப்பிழப்பு வழக்கு, முத்தலாக் தடை வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி எஸ்.அப்துல் நசீர் ஓய்வுபெற்று ஒரு மாதமான நிலையில் தற்போது ஆந்திர மாநில ஆளுநராக குடியரசுத் தலைவரால் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்.

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு 13 மாநிலங்களுக்கான புதிய ஆளுநர்களின் பட்டியலை வெளியிட்டு உள்ளார். இதில் தமிழ்நாடு பாஜக மேனாள் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டு உள்ளார். மணிப்பூர் ஆளுநராக இருந்த தமிழ்நாட்டை சேர்ந்த இல. கணேசன் நாகாலாந்து மாநில ஆளுநராக மாற்றப்பட்டு இருக்கிறார். லெப்டினண்ட் ஜெனரல் திரி விக்ரம் பிரனாய்க் அருணாச்சல பிரதேச ஆளுநராக அறிவிக்கப்பட்டு இருக்கிறார்.

ஆந்திர மாநில ஆளுநராக இருந்த பிஸ்வா பூசன் ஹரிசரண் சத்தீஸ்கர் மாநில ஆளுநராக மாற்றப்பட்டு உள்ளார். ஆந்திர மாநில ஆளுநராக ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி எஸ்.அப்துல் நசீர் நியமிக்கப்பட்டுள்ளார்.

சத்தீஸ்கர் மாநில ஆளுநராக இருந்த சுஸ்சிறீ அனுசுனியா உய்கி மணிப்பூர் ஆளுநராக நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார். பீகார் ஆளுநராக இருந்த பாகு சவுஹான் மேகாலயா மாநில ஆளுநராகவும், இமாச்சல பிரதேச மாநில ஆளுநராக இருந்த ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பீகார் ஆளுநராகவும், ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக இருந்த ரமேஷ் பையஸ் மகாராட்டிரா ஆளுநராகவும், அருணாச்சல் ஆளுநராக இருந்த பிரிகேடியர் பிடி மிஸ்ரா, லடாக் ஆளுநராகவும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

இதில் ஆந்திர மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டு இருக்கும் நீதிபதி எஸ்.அப்துல் நசீர் கருநாடகா மாநிலம் பெலுவாய் பகுதியை சேர்ந்தவர். 65 வயதான இவர், 1983 ஆம் ஆண்டு பார் கவுன்சிலில் தன்னை வழக்குரைஞராக பதிவு செய்துகொண்டார். 2003 ஆம் ஆண்டு கருநாடக உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக அவர் நியமனம் செய்யப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து நிரந்தர நீதிபதியாக பதவி உயர்வுபெற்ற நசீர், கடந்த 2017 ஆம் ஆண்டு உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். ஒரு மாநில உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவி வகிக்காமல் உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட 3ஆவது நீதிபதி அப்துல் நசீர். உச்சநீதிமன்றத்தில் அரசியல், சமூக முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு பரபரப்பான வழக்குகளை அப்துல் நசீர் விசாரித்து தீர்ப்பளித்துள்ளார். 

அரசுக்கு ஆதரவாக  இவர் விசாரித்த  முக்கியமான வழக்கு இந்தியாவே உற்றுநோக்கிய அயோத்தி பாபர் மசூதி நில வழக்கு. கடந்த 2019 ஆம் ஆண்டு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வில் நீதிபதி அப்துல் நசீரும் ஒருவர். பாபர் மசூதி இருந்த இடத்தை ராமர் கோயில் கட்ட வழங்க வேண்டும் என்ற ஒருமித்த தீர்ப்பை அந்த அமர்வு வழங்கியது.

அப்துல் நசீர் ஓய்வுபெறுவதற்கு முன் கடைசியாக அவர் விசாரித்த முக்கியமான வழக்கு பிரதமர் நரேந்திர மோடியின் பணமதிப்பிழப்புக்கு எதிரான வழக்குதான். அந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வில் ஒருவராக அப்துல் நசீர் இருந்தார். அந்த அமர்வில் நீதிபதி நாகரத்னாவை தவிர்த்து மற்ற நீதிபதிகள் பணமதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும் என்று தீர்ப்பளித்தனர். 

இதற்கு முன் பாபர் மசூதி வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற அமர்வுக்கு தலைமை தாங்கிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்ட நிலையில், அதே வழக்கை விசாரித்த அமர்வில் இருந்த மற்றொரு நீதிபதியான அப்துல் நசீர் தற்போது ஆந்திர ஆளுநராக நியமிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒரு கல்லால் இரண்டு காய் அடிப்பதாகச் சொல்லுவார்கள். "பார்த்தீர்களா, பார்த்தீர்களா? ஒரு இஸ்லாமியருக்கு பிஜேபி ஆட்சியில் ஆளுநர் பதவி அளிக்கப்பட்டுள்ளது" என்று கூறி ஊரை ஏமாற்றுவார்கள். பிஜேபிக்கு ஆதரவாக தீர்ப்பளித்தவர் என்பதுதான் அதன் பின்னணியில் உள்ள இரகசியமும் உண்மையும் ஆகும்.


No comments:

Post a Comment