அண்ணா நினைவு நாளில் எழுச்சியுடன் தொடங்கியது 'சமூகநீதி பாதுகாப்பு', 'திராவிட மாடல்' விளக்கப் பயணம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, February 4, 2023

அண்ணா நினைவு நாளில் எழுச்சியுடன் தொடங்கியது 'சமூகநீதி பாதுகாப்பு', 'திராவிட மாடல்' விளக்கப் பயணம்

'அனைவருக்கும் அனைத்தும்' என்பதுதான் நமது இலக்கு; அதற்குக் கடைப்பிடிக்கும் நடைமுறைதான் சுயமரியாதை! 

ஒன்று கூட்டணி; மற்றொன்று கூத்தணி; 

ஈரோடு - ஒரு தனி அரசியல் பேரேடு எழுத இருக்கிறது!

குமாரபாளையம், ஈரோட்டில் தமிழர் தலைவர் ஆசிரியர் கருத்துரை!

ஈரோடு, பிப்.4. சமூகநீதி பாதுகாப்பு, 'திராவிட மாடல்' விளக்கப் பயணத்தின் முதல் நாளில் குமாரபாளையம், ஈரோட்டில் நடைபெற்ற எழுச்சிகரமான கூட்டங்களில் தமிழர் தலைவர் கலந்து கொண்டு உரையாற்றினார்.

தமிழ்நாடு முழுவதுமாக பயணம் செய்து 'சமூகநீதி பாதுகாப்பு, திராவிட மாடல்' விளக்கப் பொதுக்கூட்டம் ஆகியவற்றை பேசி மக்களை அரசியல் படுத்தி பாசிச சக்திகளிடமிருந்து சமூகநீதியைக் காப்பாற்றும் நோக்கத் தோடு பெரும் பணியை பவானி குமாரபாளையம் தொடங்கி கடலூர் வரை 29 நாட்கள் 59 கூட்டங்கள் பிப்ரவரி 3ஆம் தேதி தொடங்கி மார்ச் 10 வரையில் நடத்தத் திட்டமிட்டபடி பிப்ரவரி 3 முதல் கூட்டமாக ப.குமாரபாளையம் உழவர் சந்தை அருகிலும், ஈரோட்டில் திருநகர் காலனியிலும் நடைபெற்றது.

இந்நிகழ்வில், நகர தலைவர் சரவணன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் குமார் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.

பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத் தலைவர் பொத்தனூர் க.சண்முகம், மாவட்ட செயலாளர் வழக்குரைஞர் பெரியசாமி, மாவட்ட ப.க.தலைவர் வழக்குரைஞர் இளங்கோ, நகர் செயலாளர் காமராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த பரப்புரை கூட்டத்தில் தி.மு.க. மாநில செயற்குழு உறுப்பினர் செல்வராஜ், ம.தி.மு.க.மேற்கு மாவட்ட செயலாளர் கணேசன், வி.சி.க.மாவட்ட செயலாளர் காமராஜ், காங்கிரஸ் கட்சி நகரச் செயலாளர் ஜானகிராமன், சி.பி.அய். நகர செயலாளர் கணேஷ்குமார், மற்றும் மாவட்ட அமைப்பாளர் ராஜசேகரன், மாவட்ட துணைத் தலைவர் அசோகன், வெண்ணந்தூர் ஒன்றிய அமைப் பாளர் செல்வகுமார், கோவை மண்டல செயலாளர் ஆ.கருணாகரன், மாவட்ட ப.க.துணைத் தலைவர் முருகன், கேப்டன் அண்ணாதுரை, சாமிநாதன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் திருச்செங்கோடு சேகர் , மாநில இளைஞரணி துணை செயலாளர் செந்துறை அறிவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 

நீண்ட இடைவெளிக்குப் பிறகு குமாரபாளையம் நகரில் கழகத் தலைவர் ஆசிரியர் உரையாற்றுகிறார் என்பதால் பொதுமக்கள் ஆவலாக எதிர்பார்த்து  கருத்துக்களை கேட்டனர். பவானி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள காவிரி ஆற்றின் பாலத்தில் முழுக்க கழகக் கொடிகள் வரிசையாகக் கட்டப்பட்டு, காற்றில் பட்டொளி வீசி பறந்த காட்சியைக் காணக் கண் கோடி வேண்டும் என்றே சொல்ல வேண்டும். நகரின் எல்லையில் பொதுமக்கள் வியப்புடன் வேடிக்கை பார்க்க, தோழர்கள் கழகத் தலைவரை மேளதாளம், பறை இசை முழங்க குதூகலத்துடன் வரவேற்றனர்.

முன்னதாக பேரா.ப.காளிமுத்து, மாநில கிராமப்புற பிரச்சாரக்குழு அமைப்பாளர் அதிரடி க.அன்பழகன், ஆகியோர் தொடக்க உரையாற்றினர். ஆசிரியர் மேடைக்கு வரும்போது, இந்தப் பரப்புரைப் பயணத் திற்கென்று அதிரடி க. அன்பழகன் அவர்களால் எழுதப்பட்டு, திரைப்பட இசையமைப்பாளர் விஜய் இசையில் திரைப்படப் பாடகர் முகேஷ் பாடிய எழுச்சிகரமான பாடல் ஒலிபரப்பப்பட்டது.

சுயமரியாதை எனும் சொல்லின் ஆழம்!

இறுதியாக தமிழர் தலைவர் உரையாற்றினார். தொடக்கத்திலேயே அவர், தந்தை பெரியார் சுயமரி யாதை இயக்கத்தைத் தொடங்கிய போது, பச்சை அட்டை குடிஅரசு ஏட்டில் சுயமரியாதை இயக்கத்தின் இலக்காக குறிப்பிட்டது  "அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும்" என்பதுதான் என்றார். தொடர்ந்து அந்த இலக்கை எட்ட நமது நடைமுறை என்ன என்பதைப் பற்றிச் சொல்லும் போது, “சுயமரியாதை”தான் அந்த நடைமுறை என்று குறிப்பிட்டு, ”சுயமரியாதை” என்பதற்கு ஆழமான பொருளைக்  குறிப்பிட்டார். தொடர்ந்து  இந்த அடித்தளத்தில் தான் நமது முதல மைச்சர் சமூகநீதிக்கான சரித்திர நாயகர் “திராவிட மாடல்” என்று குறிப்பிடுகிறார் என்று வரலாற்றின் தொடர்ச்சியை எடுத்துரைத்தார் ஆசிரியர். இதை யொட்டியே, அனை வருக்கும் அனைத்தும் கிடைக்கக் கூடாது என்பதுதான் ஆரிய மாடல் என்பதையும் சேர்த்தே சொல்லி, திராவிட, ஆரியப் போராட்டத்தின் அடிநாதத்தை கோடிட்டுக் காட்டி, தத்துவரீதியாக பேசியதோடு நில்லாமல், லட்சுமி, சரஸ்வதி கடவுள்களின் பெயர்கள் உண்டு. ஆனால் படிப்பு வாசனை இருந்த துண்டா? என்றொரு கேள் வியை எழுப்பினார். மக்கள் வாய்விட்டுச் சிரித்தனர். தொடர்ந்து, பாட்டி சரஸ்வதி கைநாட்டுதானே? ஆனால் பேத்தி சரஸ்வதி பொறி யாளர் ஆனது எப்படி? இது தானே திராவிடர் இயக்கம் செய்த சாதனை என்று கூறி ஆழமான தத்துவத்தை மக்களுக்கு எளிமைப்படுத்தி பேசினார்.

திராவிட மாடலின் பல்வேறு பரிமாணங்கள்!

மேலும் அவர், சென்னையில் இருந்து ஈரோட்டுக்கு ரயிலில் (2-02-2023) வந்த போது, கூபே பெட்டியில் பயணம் செய்த ஒரு ரயில்வே அதிகாரி, தான் அந்த ரயிலில் இருப்பதை அறிந்து கொண்டு, தன்னைச் சந்தித்து, தமிழில் முதன்முதலில் அய்.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்ற எனக்கு நீங்கதான் பரிசு கொடுத்தீங்க. நான் இப்போது இப்படி பெரிய பதவியில் இருப்பதற்குக் காரணம் தந்தை பெரியார் தான். ஆகவே எனது மனநிறைவுக்காக அந்த கூபேயில் நீங்கள் பயணம் செய்யுங்கள் என்று கேட்டுக் கொண்டதையும் தான் நெகிழ்ச்சியோடு மறுத்ததையும் குறிப்பிட்டு, தத்துவத்திற்கு தற்போதைய உதாரணத்தைச் சொல்லி, திராவிட மாடலின் செயல்பாட்டுத் தன்மையை எடுத்துக் காட்டினார்.  தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் வரதராஜன் எப்படி  உச்சநீதிமன்ற நீதிபதி யானார் என்பதையும் சொல்லி, மேலோட்டமாக பார்த்தால் வேலைவாய்ப்பு தானே என்று தோன்றும். ஆனால், நீதிபதிக்குக் கீழே இருப்பவர்கள் எல்லாம் அவாள்தானே! அவர்கள் நீதிபதியைப் பார்த்து, ”ஓ மை லார்டு” என்றல்லவா கூறவேண்டும் என்பதை நினைவுபடுத்தி, அடுத்ததை பேசுவதற்குள் மக்களே புரிந்து கொண்டு உணர்ச்சியுடன் கைதட்டினர். தொடர்ந்து பழனி முருகனே மு.க.ஸ்டாலின் ஆட்சியில்தானே முத்தமிழைக் கேட்கும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது என்றொரு நகைச்சுவை வெடியை வீசினார். மேலும் பெண்கள் முன்னேற்றம் அதற்கான தமிழ்நாடு அரசின் முன்னெடுப்புகள் என்று அனைத்துத் தரப்பினருக்குமான ஆட்சி இது என்பதை நிறுவி, இதுதான் சமூகநீதி! இதைத்தான் நாம் பாதுகாக்க வேண்டும். இதுதான் திராவிட மாடல்! இதைத்தான் நாம் தொடரவேண்டும் என்றும், ஆளுநர் ஆர்.என்.ரவியையும் கண்டித்து தனது உரையை நிறைவு செய்தார். 

ஈரோட்டில் மழை - மக்கள் காத்திருந்தனர்

முடிவில் மாவட்ட தி.க.துணைச் செயலாளர் பொன்னுச்சாமி நன்றி கூறினார்.  முதல் கூட்டத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு ஈரோடு புறப்பட்டார். வழியில் செல்லும் போதே ஈரோட்டில் மழை கனத்துப் பெய்கிறது என்றும், ஆனால் மக்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர் என்றும் தகவல்கள் வந்து கொண்டிருந்தன.

ஈரோடு திருநகர் காலனியில் நடைபெற்ற பரப்புரை பயண தொடக்க விழா மற்றும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் கு.சிற்றரசு தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் மணிமாறன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். அமைப்பு செயலாளர் ஈரோடு த.சண்முகம், மண்டல தலைவர் நற்குணன், பேரா.ப.காளிமுத்து, பொதுக்குழு உறுப்பினர் கோ.பாலகிருஷ்ணன்,மாநகர தலைவர் திருநாவுக்கரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

"எங்கள் நாடு தமிழ்நாடு! ஆளுநரே வெளியேறு!"

முன்னதாக மாநில கிராமப்புற பிரச்சாரக்குழு அமைப்பாளர் அதிரடி அன்பழகன் தொடக்க உரையாற்றினார். பிறகு மணப்பாறை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் ம.ம.க.பொதுச் செயலாளருமான அப்துல் சமது, ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோர் உரை நிகழ்த்தினர்.

அப்துல் சமது பேசும்போது, திராவிட மாடல் என்றால் சமூகநீதி; திராவிட மாடல் என்றால் சமத்துவம். இதெல்லாம் ஆளுநர் ஆர்,என்.ரவிக்குத் தெரியாது. அப்பாவித்தனமாக நம்மை எதிர்க்கிறார். அவர்கள் பேசுவது நமக்கு நகைச்சுவையாக உள்ளது என்றும், மனிதனை ஜாதியாக; மதமாகப் பார்க்காமல்  அவனை மனிதனாக பார்ப்பதுதான் திராவிட மாடல்! என்று திராவிட மாடலுக்கான இலக்கணத்தை அடுக்கினார். தொடர்ந்து, இந்திய அளவில் தமிழ்நாடு நன்றாக வளர்ந்திருக்கிறது. அதற்குக் காரணம் திராவிட மாடல் அரசுதான்! அப்படிப்பட்ட மனிதநேயப் பண்பைச் சொல்லிக் கொடுப்பதுதான் திராவிட மாடல் அரசு என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசுக்கு புகழாரம் சூட்டினார். மேலும் அவர், கடந்த முறை தமிழ்நாடு சட்டமன்றத்தில், “எங்கள் நாடு தமிழ்நாடு! ஆளுநரே வெளியேறு!” என்று முழக்கமிட்ட போது ஆளுநருக்கு உரைக்கவில்லை. ஆனால், முதலமைச்சரின் அதிரடியால், ஆளுநர் வெளியேறிவிட்டார். அதுமட்டுமல்ல, இதைக்கண்டு கேரள ஆளுநரும் கொடுத்ததை அப்படியே வாசித்திருக்கிறார் என்று திராவிட மாடலின் பெருமையை மேலும் மெருகூட்டினார். இறுதியாக ஈரோடு கிழக்குத் தொகுதியில் திருமகன் ஈ.வெ.ரா செய்த பணிகளையும், அவரின் பண்புகளையும் நெகிழ்ச்சியுடன் சுட்டிக்காட்டி, கை சின்னத்திற்கு வாக்களியுங்கள் என்று பேசி உரையை நிறைவு செய்தார்.

தந்தை பெரியாரின் வழியைத் தொடர்வேன்!

அவரைத் தொடர்ந்து, தற்போது வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள திருமகன் ஈ.வெ.ராவின் தந்தை ஈ.வெ.கி.ச. இளங்கோவன் பேசினார். அவர், தான் தந்தை பெரியாரின் குடும்பத்தைச் சேர்ந்தவன். 100 ஆண்டுகளுக்கு முன்பு தந்தை பெரியார் கொண்டு வந்த குடிநீர்த் திட்டம் இன்றும் ஈரோடு மக்களுக்கு பெரிதும் பயன்பட்டு வருகிறது. அதேபோல் எனது மகன் பல பணிகளை செய்திருக்கிறார். அதை நான் தொடர்வேன் என்றும், நான் எனது வாழ்க்கையின் கடைசி காலத்தில் இருக்கிறேன். ஆகவே மக்களுக்கு பல நல்ல காரியங்களை செய்து விட்டுப் போகலாம் என்றிருக்கிறேன் என்று சுருக்கமாகப் பேசி உரையை முடித்துக் கொண்டு அனைவரிடமும் விடைபெற்றுக் கொண்டு புறப்பட்டார்.

ஈரோடு ஒரு தனி அரசியல் பேரேடு எழுதும்!

இறுதியாக ஆசிரியர் பேசினார். தொடக்கத்தில் அவர், மழை பெய்ததைக் குறிப்பிட்டு, மழைக்கும் எங்களுக்கும் போட்டி, அதிலும் நாங்கள் தான் வெற்றி பெறக்கூடிய அளவுக்கு காத்துக்கொண்டிருக்கின்ற அருமைப் பெரு மக்களே! என்று உற்சாகமாக தொடங்கினார். அந்த உற்சாகம் மக்களையும் தொற்றிக்கொண்டது. இது திராவிட மாடல் விளக்கம் பற்றிய பரப்புரைக் கூட்டம் என்றாலும், எதிர்பாராமல் தேர்தல் பிரச்சாரக் கூட்டமாகவும் இருந்ததால், பழம் நழுவி பாலில் விழுந்து, அதுவும் நழுவி வாயில் விழுந்தது போல் இருக்கிறது என்றும், கம்பும் விளைந்தது, தம்பிக்கு பெண்ணும் பார்த்தாயிற்று என்றும், நாங்கள் நார் போன்றவர்கள், அரசியல் கட்சியினர் மலர் போன்றவர்கள். இவர்களை இணைப்பதுதான் எங்கள் பணி என்றும், ஈரோடு ஒரு தனி அரசியல் பேரேடு எழுத இருக்கிறது! ஒரு திருப்பம் நடக்கும்! அது அடுத்த மாதம் தெரியும் என்றும் உவமைகளைச் சொல்லி, ஈரோடு வெற்றியும் நமதே என்பதைச் சொல்லித் தொடங்கினார். 

"கை சின்னத்திற்கு வாக்களியுங்கள்!"

தொடர்ந்து திருமகன் ஈ.வெ.ரா பற்றியும், அவரது தந்தை ஈ.வெ.கி.ச. இளங்கோவன் பற்றியும் ஆழமான கருத்துகளை திருவள்ளுவரின், ”மகன் தந்தைக்காற்றும் உதவி இவன் தந்தை என்னோற்றான் கொல் எனும் சொல்”, “தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து முந்தி இருப்பச் செயல்” ஆகிய குறள்களை மேற்கோள் காட்டி, முதல் குறளில் இருக்கும் ’உதவி’ அடுத்த குறளில் இருக்கும் ‘நன்றி’ ஆகிய சொற்களில் எவ்வளவு ஆழமான கருத்து உள்ளது என்பதையும் இது திருமகன் ஈ.வெ.ராவுக்கும் அவரது தந்தைக்கும் எப்படி பொருந்துகிறது என்பதையும் விளக்கமாக எடுத்து வைத்தார். இதையொட்டியே ராகுல் காந்தி திராவிட மாடலை எப்படி புரிந்து வைத்திருக்கிறார் என்பதையும் சேர்த்துச் சொன்னார். இளங்கோவனின் தந்தை சம்பத்தை நினைவு கூர்ந்தார். அதே நேரம் ஆளுநர் ஆர்.என்.ரவியையும் ஊறுகாய் ஜாடியில் ஊற வைத்திருக்கும் ஆன் லைன் சூதாட்டம் உள்ளிட்ட மசோதாக்களைக் குறிப்பிட்டுச் சொல்லி, ஒரு பிடி பிடித்தார். ஈரோட்டின் வேட்பாளராக காங்கிரஸ் வேட்பாளரைத் தேர்வு செய்த திராவிட மாடல் அரசின் முதல்வரின் அரசியல் கண்ணியத்தையும் பூரிப்புடன் சுட்டிக்காட்டினார். இறுதியாக கை சின்னத்திற்கு வாக்களியுங்கள் என்று கேட்டு உரையை நிறைவு செய்தார்.

இந்த பரப்புரை கூட்டத்தில் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், வி.சி.க.அமைப்பு செயலாளர் சாதிக், சி.பி.அய். மாநில பொறுப்பாளர் துளசி மணி, காங்கிரஸ் கட்சி மேனாள் சட்டமன்ற உறுப்பினர் பழனிச்சாமி, காங்கிரஸ் கட்சி மாநகர மாவட்ட தலைவர் திருச்செல்வம், காங்கிரஸ் கட்சி மாமன்ற உறுப்பினர் ரவி, இ.யூ.மு.லீக், மாவட்ட தலைவர் முகம்மது ஆரிப், சமூகநீதி கூட்டமைப்பு பொறுப்பாளர் கண.குறிஞ்சி, ம.ம.க.மாவட்ட செயலாளர் சித்திக், த.மு.மு.க. மாவட்ட செயலாளர் முகம்மது ஷரீப்,நீரோடை ஒருங்கிணைப்பாளர் நிலவன், மாநில இளைஞரணி துணை செயலாளர் செந்துறை அறிவன், மேட்டூர் மாவட்ட செயலாளர் எடப்பாடி கா.நா.பாலு, கோபி மாவட்ட தலைவர் சிவலிங்கம், கோபி மாவட்ட செயலாளர் மு.சென்னியப்பன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

முடிவில் மாநகர செயலாளர் காமராஜ் நன்றி கூறினார். இப்படியாக முதல் நாள் கூட்டம் சிறப்பாக முடித்து, அங்கிருந்து பயணித்து கோபிசெட்டிபாளையும் நீர்வளத்துறை அரசினர் விடுதியில் பயணக்குழு முகாமிட்டது.

கழகத் தலைவர் மேற்கொண்டுள்ள சூறாவளி பரப்புரை பயணத்தில் கழக பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார், மாநில அமைப்பாளர் இரா.குணசேகரன்,பெரியார் வீர விளையாட்டு கழக மாநில தலைவர் பேரா.ப.சுப்பிரமணியம், திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், மாநில இளைஞரணி துணை செயலாளர் சோ.சுரேஷ்,  மாநில மாணவர் கழக அமைப்பாளர் இரா.செந்தூரபாண்டி, கழக சொற்பொழிவாளர் தி.என்னாரெசு பிராட்லா உள்ளிட்ட தோழர்கள் பங்கேற்றனர்.

 

No comments:

Post a Comment