பிரதமர் நிதியின் வெளிப்படைத் தன்மை? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, February 9, 2023

பிரதமர் நிதியின் வெளிப்படைத் தன்மை?

பி.எம். கேர்ஸ் நிதியானது தகவல் அறியும் உரிமைச் சட்டத்துக்குப் பொருந்தாது - காரணம் இது ஒன்றிய அரசு அல்லது இதர மாநில அரசுகளோடு அல்லது அரசின் நிதி அமைப்புகளோடு தொடர் பில்லாத தனியார் அமைப்பு என்று டில்லி உயர்நீதிமன்றத்தில் மோடி அரசு தகவல் தெரிவித்தது.

பி.எம். கேர்ஸ் நிதியின் செயல்பாட்டில் அதிக வெளிப்படைத் தன்மையைக் கோரும் மனு மீது ஒன்றிய அரசு டில்லி உயர்நீதி மன்றத்தில் அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.

அந்த அறிக்கையில், 

பிரதமரின் குடிமக்கள் உதவி மற்றும் அவசர கால சூழ்நிலைகளில் நிவாரண (பி.எம்.கேர்ஸ்) நிதிக்குத் தகவல் அறியும் உரிமைச் சட்டம் பொருந்தாது, ஏனெனில் இந்த சட்டத்தின் கீழ் வரையறுக்கப்பட்ட "பொது ஆணையமாக" அறக்கட்டளை தகுதி பெறவில்லை என்று டில்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில்  தெரிவித்துள்ளது.

பி.எம். கேர்ஸ் நிதி இந்திய அரசமைப்பின் கீழ் அல்லது நாடாளுமன்றம் அல்லது மாநில சட்டமன்றத்தால் உருவாக்கப்பட்ட எந்தவொரு சட்டத்தாலும் உருவாக்கப்பட வில்லை என்று பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"இந்த அறக்கட்டளை உண்மையில் எந்தவொரு அரசாங் கத்திற்கும் அல்லது அரசாங்கத்தின் எந்தவொரு சார்பிற்கோ சொந்தமானதாகவோ, கட்டுப்படுத்தப்பட்டதாகவோ அல்லது நிதியளிக்கப்பட்டதாகவோ இல்லை. அறக்கட்டளையின் செயல்பாடுகளில் ஒன்றிய அரசோ அல்லது எந்த மாநில அரசுகளோ நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எந்த வகையிலும் கட்டுப்படுத்த முடியாது." என்பது தான் ஒன்றிய அரசின் நிலை.

பிஎம் கேர்ஸ் நிதியின் செயல்பாட்டில் அதிக வெளிப்படைத் தன்மையைக் கோரும் மனு மீது டில்லி உயர் நீதிமன்றத்தில் மோடி அரசு ஒரு பக்க பதிலை கடந்த ஜூலை மாதம் தாக்கல் செய்தது.இதனால் நீதிமன்றத்தின் கண்டனத்திற்கு ஆளானது. 

அதனைத் தொடர்ந்து 01.02.2023 அன்று தாக்கல் செய்யப்பட்ட விரிவான புதிய பதில் மனு பிரமாணப் பத்திரத்தில் கூறப்பட்டுள்ள தாவது அமித்ஷா, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் பி.எம்.கேர்ஸ் நிதியின் அறங்காவலர் குழுவில் இடம் பெற்றுள்ளனர்.

பி.எம்., கேர்ஸ் நிதி ஒரு அரசாங்க நிதியாக முன்னிறுத்தப் பட்டுள்ளது என்றும், "துணை குடியரசுத்தலைவர் போன்ற அரசாங்கத் தின் உயர் அதிகாரிகள் மாநிலங்களவை உறுப்பினர்களை நன்கொடை வழங்குமாறு கோரியுள்ளனர்" என்றும் மனுதாரர்கள் தரப்பில் வாதிட்டாலும், பி.எம் கேர்ஸ் நிதியை "பொது அறக்கட்டளை" என்று அழைக்கும் வாதத்தை அரசாங்கம் எதிர்த்தது, இது தன்னார்வ நன்கொடைகளை மட்டுமே ஏற்றுக்கொள்கிறது என்றும் ஒன்றிய அரசு வாதம் வைத்தது. 

பி.எம்., கேர்ஸ் நிதி என்பது ஒன்றிய அரசின் வேலை அல்ல, அதிலிருந்து அரசு எந்த விதத்திலும் நலத் திட்டத் திற்கான நிதியைப் பெறவில்லை.  ஏப்ரல் 1, 2020 அன்று அமைக்கப்பட்ட பி.எம். கேர்ஸ் நிதியானது,  கோவிட்-19 தொற்று போன்ற அவசரகால சூழ்நிலைகளை சமாளிக்க நன்கொடைகளைப் பெறுகிறது என கூறப்படுகிறது.

2020-ஆம் ஆண்டு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு மோடி பி.எம். கேர் என்ற நிதி அமைப்பை அறிவித்தார். இதனைத்தொடர்ந்து மாநில மற்றும் ஒன்றிய அரசின் அனைத்து அதிகாரிகளும் இதற்கு ஒரு மாத ஊதியத்தை தரவேண்டும் என்று கூறினார். அவர் அறிவித்த உடனேயே வெளிநாடுகளில் இருந்து சில நடிகர்கள் பெருந்தொகையை இதற்கு அனுப்பினர். இது மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. இந்த நிலையில் மோடியே நேரடியாக இருந்த பிஎம் கேர் நிதிக்கு விளம்பரம் செய்தார்.  

ஆனால் 2020-2021 மற்றும் 2022ஆம் ஆண்டு இந்த நிதியிலிருந்து என்ன என்ன உதவிகளுக்கான நிதி கொடுத்தார்கள் என்ற எந்த விபரமும் இல்லை. 2021 ஆம் ஆண்டு கரோனா இரண்டாம் அலையில் வட இந்தியா மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டுக் கொண்டு இருந்த போது குஜராத்தைச்சேர்ந்த ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தில் இருந்து ஆக்ஸிஜன் கருவிகள் வாங்கப்பட்டன. அந்த கருவிகளில் மோடி படமும் பி.எம். கேர் என்ற லட்சினையும் பொருத்தப்பட்டிருந்தது, 

ஆனால் அந்தக் கருவிகள் அனைத்தும் தரமற்றவை என்று மத்தியப்பிரதேச சுகாதாரத்துறையும் ஒன்றிய சுகாதாரத் துறையும் தெரிவித்திருந்தன. இதனை அடுத்து அதன் மீது விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டது.  அப்படி இருக்க பல ஆயிரம் கோடி ரூபாய்களை பி.எம். கேர் என்ற பெயரில் அரசு ஊழியர்கள் மற்றும் பெரு நிறுவனங்கள் பொதுமக்களிடம் இருந்து   வலுக்கட்டாயமாக பெறப்பட்டது. அந்த நிதிக்கான செலவு குறித்து கணக்கு கேட்ட போது அது குறித்து எந்த விபரமும் கூறாமல் மோடி தட்டிக்கழித்து இருப்பது பி எம் கேர்ஸ் என்ற பெயரில் மோடி ஆட்சியில் நடந்த மேலும் ஒரு மிகப்பெரிய ஊழலாக தற்போது மாறியுள்ளது.

பெயரில் பிரதமர் நிதி என்று வந்த பிறகு அதில் வெளிப்படைத் தன்மை முக்கியம் அல்லவா! பிரதமர் என்பவர் தனி மனிதரல்ல - ஜனநாயக அடிப்படையில் நாட்டு மக்களுக்கும் அரசுக்கும் சம் பந்தப்பட்டவர் என்பதை மறக்கலாமா? பிஜேபி ஆட்சியில் எல்லாமே தலைகீழ் தான்.

No comments:

Post a Comment