சென்னையில் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, February 4, 2023

சென்னையில் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர்

 மக்கள் விழிப்புணர்வு பெறவே எங்கள் பயணம்!

ராகுல் காந்தியின் நடைப்பயணம் நல்லதோர் விளைவை ஏற்படுத்தும்!

சென்னை, பிப்.4   மக்கள் விழிப்புணர்வு பெறவே எங்கள் பயணம்! ராகுல் காந்தியின் நடைப்பயணம் நல்லதோர் விளைவை ஏற்படுத்தும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்

நேற்றுமுன்தினம் (2.2.2023) சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதாமன்றத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

அவரது பேட்டி வருமாறு:

செய்தியாளர்: காரைக்குடியில் உள்ள ஒரு வீட்டின் மதில் சுவரில் பெரியார் சிலை வைத்திருப்பதை எடுத்து விடவேண்டும் என்று வருவாய்த் துறை அதிகாரிகள் சொல்லியிருப்பது குறித்து உங்கள் கருத்து?

தவறான புரிதல் காவல்துறை அதிகாரிகளுக்கும் - வருவாய்த் துறை அதிகாரிகளுக்கும் இருக்கிறது!

தமிழர் தலைவர்: பிரச்சினை என்னவென்றால், ஒரு தவறான புரிதல் காவல்துறை அதிகாரிகளுக்கு இருக் கிறது; அதேபோன்று வருவாய்த் துறை அதிகாரி களுக்கும் இருக்கிறது. இந்தப் பிரச்சினை முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டு இருக்கிறது. உயர்நீதிமன்றத்தின் இரண்டு தீர்ப்புகள் - உச்சநீதிமன்றத் தீர்ப்பைக் கூட அவர்கள் சரியாகப் புரிந்துகொள்ளாததுதான் இந்தப் பிரச்சினைக்குக் காரணம்.

உச்சநீதிமன்றத் தீர்ப்பில் கூட என்ன சொல்கிறார்கள் என்றால், கேரளாவில் வந்த ஒரு வழக்கில், பொது இடத்தில், அரசாங்க இடத்தில் சிலை வைப்பதற்குத்தான் அனுமதி வாங்கவேண்டும் என்றுதான் இருக்கிறதே தவிர, தனியார் இடத்திற்கு அவர்கள் அப்படி சொல்ல வில்லை.

ஓய்வு பெற்ற நீதிபதி பண்டாரி தலைமை நீதிபதியாக இருந்தபொழுது, திருவண்ணாமலையில் கலைஞர் சிலை வைப்பது சம்பந்தமாக வழக்கு சென்றது. பட்டா நிலத்தில் தாராளமாக சிலையை நீங்கள் வைத்துக் கொள்ளலாம் என்று தீர்ப்பளித்தார்.

தனியார் இடமாக இருந்தால், வெளியே பார்க்கும் படியாக இருக்கக்கூடாது என்கிறார்கள். அப்படி யென்றால், ஜெயலலிதா அவர்களுடைய சிலை, லேடி வெல்லிங்கடன் கல்லூரி வளாகத்தில் வைக்கப்பட்டு இருக்கிறது. அதற்காக அரசாணை ஏதாவது போட்டார் களா? யாரிடம் அனுமதிவாங்கினார்கள்? அப்படி எதுவும் கிடையாது.

அதேபோன்று, நீண்ட கால குத்தகைக்கு எடுத் திருந்தாலும், 99 ஆண்டு குத்தகைக்குத்தான் - மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டு இருக்கும் விவே கானந்தர் இல்லத்தில் பெரிய சிலை வைத்திருக்கிறார்கள்; அதற்காக எந்த அனுமதியும் வாங்கவில்லை. அதுவும் சாலையோரம்தான் இருக்கிறது; தனியார் இடம்தான். இதுபோன்ற முன்மாதிரிகள் இருக்கின்றன.

இவற்றைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல், ஏதோ ஒன்றை நினைத்துக்கொண்டு, எங்கோ சொன்னார்கள் என்பதற்காக, எங்கே இருந்தாலும், வெளிப்படையாக அந்த சிலைகளை அகற்றவேண்டும் என்று சொல்வ தற்கு ஒரு தீர்வு காணப்படவேண்டும். முதலமைச்சர் அவர்களும் அதில் கவனம் செலுத்தியிருக்கிறார்.

ஆகவே, இந்தப் பிரச்சினை குறித்து அவருடைய கவனத்திற்கும், ஏற்கெனவே உள்ள தீர்ப்புகள் குறித்து உங்கள் மூலமாகவும், தனியாகவும் கொண்டு போகி றோம்.

ஆகவே, இதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. உச்சநீதிமன்றத் தீர்ப்பு என்பது பொது இடத்திற்கு மட்டும்தான் அனுமதி என்பது; அதுவும்கூட அனுமதி கொடுக்கலாம் என்றுதான் உள்ளது.

ஒரு குறிப்பிட்ட வழக்குதான். உதாரணம் சொன் னால் உங்களுக்கு மிகத் தெளிவாகப் புரியும்.

எனக்கு இடம் கிடைக்கவில்லை என்று ஒருவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார் என்றால், வழக்குப் போட்டவருக்கு இடம் கொடுங்கள் என்று தான் தீர்ப்பளிக்கும் நீதிமன்றம். அவருக்கு மட்டும்தான் அந்தத் தீர்ப்புப் பொருந்தும்.

யார் யாருக்கு இடம் கிடைக்கவில்லையோ, அவர்க ளெல்லாம் இடம் கொடுங்கள் என்று கேட்டார்கள் என்றால், நீங்கள் வழக்குத் தொடரவில்லை; ஆகவே, உங்களுக்கு அந்த உரிமை இல்லை என்று சொல் வார்கள்.

அதுபோன்ற பிரச்சினைதான் இந்தப் பிரச்சினையும்.

ஓர் அரசாணை கொண்டு வரவேண்டும்!

ஆகவே, இந்தப் பிரச்சினைக்கு ஒரு முடிவு கட்டுவார்கள்; அதற்காக ஓர் அரசாணை கொண்டு வரவேண்டும் என்று நாங்கள் முயற்சி செய்வோம்.

ஏனென்றால், இதுபோன்ற குழப்பங்கள் அடிக்கடி எல்லா இடங்களிலும் நடக்கின்றன; அதைத் தவிர்க்க வேண்டும் என்பதற்காகத்தான். 

தமிழ்நாட்டினுடைய கல்வித் திட்டம் என்பது எல்லோரும் பாராட்டக்கூடிய அளவில் இருக்கிறது

செய்தியாளர்: 'நான் முதல்வன்' திட்டத்தை எல்லா மாநிலங்களுக்கும் கொண்டு செல்லவேண்டும் என்று ஒன்றிய கல்வித் துறை செயலாளர் சொல்லியிருக் கிறாரே?

தமிழர் தலைவர்: மாணவர்களுக்கு உரிய தன்னம்பிக்கையை வளர்க்கவேண்டும். நம்மைப் பொறுத்தவரையில், தமிழ்நாட்டினுடைய கல்வித் திட்டம் என்பது எல்லோரும் பாராட்டக்கூடிய அளவில் இருக்கிறது.

உதாரணத்திற்குச் சொல்லவேண்டுமானால், தர்மேந் திர பிரதான் அவர்கள், கோயம்புத்தூர் அவினாசிலிங்கம் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழா வில் ஆற்றிய உரை எல்லா செய்தித் தாள்களிலும் வந்திருக்கிறது.

தமிழ்நாடுதான் உயர்கல்வித் துறையில் சிறந்த சாதனைகளைச் செய்திருக்கிறது என்பதை மிகத் தெளிவாக அவர் எடுத்துச் சொல்லியிருக்கிறார்.

ஆனால், இங்கே இருக்கிற அண்ணாமலை போன் றோர் தமிழ்நாட்டில் கல்வி வளர்ச்சி இல்லை என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆகவேதான், தமிழ்நாட்டில் நடைபெறும் ''நான் முதல்வன் திட்டம்'' போன்று எல்லா மாநிலங்களும் செய்யக்கூடிய அளவிற்கு மிகப்பெரிய வாய்ப்புகள் அதில் இருக்கின்றன.

தென்னாட்டு மக்களுக்காக மட்டுமல்ல; 

வேலை வாய்ப்புக்காக மட்டுமல்ல!

செய்தியாளர்: உங்களுடைய பரப்புரையில் கடவுள்களுக்கு எதிரான பிரச்சாரம் இருக்குமா?

தமிழர் தலைவர்: கடவுள் வளர்ச்சித் திட்டத்திற்குக் குறுக்கே வந்தால், அதைச் சொல்லவேண்டிய விதத்தில் விளக்கம் சொல்வோம்.

உதாரணமாக, ராமனைக் கடவுளாக நினைப்பவர்கள் இருக்கிறார்கள். ராமன் பாலம் என்ற ஒன்று இல்லை என்று ஒன்றிய அமைச்சரே சொல்லியிருக்கிறார்.

அவரே ஒப்புக்கொண்டிருக்கிறார்; ஆகவே, ராமர் பாலத்தைக் காட்டி இளைஞர்களின் வேலை வாய்ப்புத் திட்டத்திற்குத் தடை போடாதீர்கள் என்று கண்டிப்பாக சொல்வோம்.

சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் நிறைவேறியிருந்தால், இன்றைக்குத் தமிழ்நாட்டில் வளம் கொழித் திருக்கும்.

தற்போது, நேஷனல் செக்யூரிட்டி பாயிண்ட் ஆஃப் வியூ என்று சொல்லக்கூடிய அளவில், ஒரு பக்கத்தில் அம்பாந்தோட்டையில் சீனர்கள் நுழைகின்ற அச்சம் இருக்கின்றது. இன்னொரு பக்கம் திரிகோணமலைப் பகுதியில் அமெரிக்கர்கள் உள்ளே நுழையக்கூடிய ஆபத்து இருக்கிறது.

இவை எல்லாவற்றிலிருந்தும் பாதுகாக்கக்கூடிய ஒரு மிகப்பெரிய ஆயுதமாக சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் - இந்திய தீபகற்பத்தினுடைய பாதுகாப்பிற்காக வும் அந்தத் திட்டம் பயன்படக் கூடியதாக இருக்கும். வெறும் தென்னாட்டு மக்களுக்காக மட்டுமல்ல; வேலை வாய்ப்புக்காக மட்டுமல்ல. 

ஜாதி ஒழிப்பிற்கு 

எந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள்?

செய்தியாளர்: வேங்கைவயல் ஊராட்சி ஒன்றியத் தலைவர், ஒரு கிராமத்தினரை - பட்டியலினத்தைச் சார்ந்த ஒரு இளைஞரை திட்டுகிறார்; இதுபோன்ற பிரச்சினைகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்து கொண்டிருக்கின்றன. உங்களுடைய சுற்றுப்பயணத் தில், ஜாதி ஒழிப்பிற்கு எந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள்?

தமிழர் தலைவர்: அதற்காக தனித்தனிப் போராட்டங்களை திராவிடர் கழக இளைஞரணியினர் நடத்தினார்கள். புதுக்கோட்டை மாவட்டத்தில் தனிப் பிரச்சாரத்திற்காக ஏற்பாடு செய்திருக்கிறோம்.

புதுக்கோட்டையில் நான் சுற்றுப்பயணம் செய்யும் பொழுது அங்கே அனைத்துக் கட்சித் தலைவர்களும் பங்கேற்று பேசவிருக்கிறார்கள். இரண்டு கூட்டங்களில் அங்கே பங்கேற்கவேண்டும். அதிகமாகபட்சமாக என்னால் 45 நிமிடங்கள் உரையாற்ற முடியும்.

ஒவ்வொரு பிரச்சினைகளையும் எடுத்து விளக்கிக் கொண்டு வருகிறபொழுது, அந்தந்த ஊர்களில், என்னென்ன வலியுறுத்தப்பட வேண்டுமோ, அதையும், உள்ளூர் பிரச்சினைகளையும் சேர்த்து நிச்சயமாக வலியுறுத்திப் பேசுவோம்.

எங்களுடைய வாழ்நாள் பணி

'விடுதலை'யிலும் எழுதுகிறோம், அறிக்கை கொடுக்கிறோம்; இந்தப் பிரச்சாரத்திற்காக மட்டுமல்ல எங்களுடைய வாழ்நாள் பணி அதுதான்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஓரிடம் தவறாமல் சென்று, அதுபோன்ற பிரச்சாரங்களைச் செய்வோம். ஏற்கெனவே 'நரபலி'க்காக பிரச்சாரம் தொடங்கி, கடைசியாக விராலி மலையில் அந்தப் பிரச்சாரத்தை முடித்து வைத்தோம்.

அதேபோன்று மீண்டும் தொடங்கவிருக்கிறோம்.

செய்தியாளர்: ஒரு கட்சிக்கு வேட்பாளரை தேர்ந் தெடுக்கும்பொழுது இதுவரைக்கும் எந்த மாற்றமும் இல்லாமல், பெரும்பான்மை (ஆளுங்கட்சியோ, எதிர்க்கட்சியோ) சமுதாயத்தைச் சேர்ந்தவர்தான் வேட்பாளராக நிறுத்தப்படுகிறார். இந்த நடைமுறையை மாற்ற முடியுமா?

தமிழர் தலைவர்: நீங்கள் நாசூக்காக ஒரு வார்த்தையைப் போட்டிருக்கிறீர்கள். எந்த ஜாதியினர் அதிகமாக இருக்கிறார்களோ, அந்த ஜாதியைச் சேர்ந்த வேட்பாளரை தேர்தலில் நிற்கச் சொல்கிறார்கள்.

இதிலிருந்து மாற்றம் வரக்கூடாதா? என்று நீங்கள் கேட்கிறீர்கள்.

திராவிடர் கழகம் தீர்மானம் 

நிறைவேற்றி இருக்கிறது!

நீண்ட நாள்களுக்கு முன்பே இதுகுறித்து தீர்மானம் போட்டிருக்கிறோம். அரசு கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டங்களிலும் கூறியிருக்கிறோம்.

இன்றைக்கு உடனடியாக அதை செயல்படுத்த முடியவில்லையென்றால், உண்மையான ஜனநாயகம், மக்கள் நாயகம் அதற்கப்பாற்பட்டு இருப்பதற்கு என்ன செய்யவேண்டும் என்று கேட்டால், எந்த ஜாதியினர் அதிமாக இருக்கிறார்களோ, பெரும்பான்மையாக இருக்கின்றார்களோ அந்த ஜாதி வேட்பாளர் அந்தத் தொகுதியில் நிறுத்தப்படக் கூடாது  - கட்சிகளால்!

அதற்குப் பதிலாக மாற்றாக ஒருவரை தேர்ந் தெடுத்தால்தான், மக்கள் பிரதிநிதியாக அவரைத் தேர்ந்தெடுத்திருக்கின்றார்கள் என்கின்ற நிலை வரும். இதனை 8 ஆண்டுகளுக்கு முன்பே தீர்மான மாக நிறைவேற்றி இருக்கிறோம். அதுபோன்று நடைமுறைக்குக் கொண்டு வரவேண்டும்.

எங்களுடைய தீர்மானங்கள் எல்லாம் உடனடியாக நடைமுறைக்கு வரவில்லையென்றால், அடுத்த காலகட்டத்தில் அத்தீர்மானங்கள் நடைமுறைக்கு வரக் கூடிய வாய்ப்புகள் நிறைய உண்டு.

இன்னுங்கேட்டால், தமிழ்நாட்டைப் பொறுத்த வரையில், 1967 இல் அண்ணா அவர்கள் தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்திய பொழுது, யார்? என்ன ஜாதி? என்பதையெல்லாம் பார்த்தது கிடையாது. அதேபோன்று எம்.ஜி.ஆர். அவர்கள், இரண்டாவது தேர்தலில் அந்த சூழல் இல்லை; பிறகு மாறிப்போய்விட்டது. இதுதான்  எதார்த்தமான நிலை!

தேர்தல் ஆணையமே 

அதைத் துணிந்து செய்யவேண்டும்!

இன்னுங்கேட்டால், தேர்தல் ஆணையத்திலேயே அதுபோன்ற  மாற்றங்கள் வரவேண்டும். தேர்தல் ஆணையமே அதைத் துணிந்து செய்யவேண்டும். தேர்தல் சட்டத்திலேயே அதுபோன்று வரவேண்டும் என்று நாம் வலியுறுத்தவேண்டும்.

அப்பொழுதுதான் இயன் டெமாக்கரசி என்பது வரக்கூடிய வாய்ப்புகள் வரும். அதில் எல்லா குடிமக்களையும் சமத்துவத்தோடு பார்க்கும் நிலை உண்டு.

சட்டமாக வந்துவிட்டால், அதற்குப் பிறகு இப்படி நடப்பது சுலபமல்ல. நாங்கள் தீர்மானம் போட்டது, சட்டமாக வரவேண்டும். 

உலக சாதனையாளர்களில் ஒருவர் - 

உழைப்பால் உயர்ந்த பெருகமகன் கலைஞர்!

செய்தியாளர்: பேனா நினைவுச் சின்னத்தை நீங்கள் வைத்துப் பாருங்கள்; நான் வந்து உடைக்கிறேன் என்று சீமான் சொல்லியிருக்கிறாரே?

தமிழர் தலைவர்: சுய விளம்பரம் தேடுவதற்காக சிலர் சொல்லக்கூடிய வார்த்தைகள் அவை.

அவை என்ன விளைவுகளை உண்டாக்கும் என் றும் அவருக்கு நன்றாகத் தெரியும்.

இதுபோன்று சொன்னால், உடனே நீங்கள் கேள்வி கேட்பீர்கள்; நானும் அவரைப்பற்றி பதில் சொல்வேன்; அதன்மூலமாக ஒரு பெரிய விளம்பரம் வாங்கலாம் என்று நினைக்கிறார்கள். அவ்வளவுதானே தவிர, ''தமிழ் மக்கள் அதற்குரிய பதிலை தெளிவாகத் தருவார்கள்!''

ஏனென்றால், கலைஞர் என்பவர் ஒரு கட்சியினுடைய தலைவர் அல்ல. ஒரு சமுதாயத்தினுடைய தலைவர் என்பதைத் தாண்டி, உலக சிந்தனையாளர் களில், உலக சாதனையாளர்களில் ஒருவர் போன்று உழைப்பால் உயர்ந்த பெருகமகன் அவர்.

அவருடைய எழுத்து எல்லோராலும் ஈர்க்கப்படக் கூடிய எழுத்து. அவருடைய பேனா, வலிமை வாய்ந்த பேனா.

கலைஞர் அவர்கள் ஒன்றைச் சொன்னார், அதை யாராலும் மறக்க முடியாது.

''செங்கோலை வேண்டுமானாலும் என்னிடத்தில் இருந்து எவரும் பறித்துக்கொள்ளலாம்; ஆனால், என் எழுதுகோலை எப்பொழுதும், எவராலும் பறித்துக் கொள்ள முடியாது'' என்று சொன்னார்கள்.

அந்த எழுதுகோல்தான், நெருக்கடி நிலையை சந்தித்தது

அந்த எழுதுகோல்தான், 18 ஆண்டுகள் அவர் பதவி யில் இல்லாத காலகட்டமாக இருந்தாலும்கூட, அவர் பொறுப்பிலே இல்லாத காலமாக இருந்தாலும்கூட, அவற்றையெல்லாம் மாற்றியமைத்தது. அந்த எழுத்துகள், காலத்தை வென்றவை.

அ.தி.மு.க. என்ற அடமானப் பொருள் மீட்டெடுக்கப்படவேண்டும்!

செய்தியாளர்: அ.தி.மு.க.வினுடைய தற்போதைய நிலைமையை எப்படிப் பார்க்கிறீர்கள்? பா.ஜ.க. சொல் வதுவரை காத்திருப்பது என்று அறிவித்திருக்கிறார்களே?

தமிழர் தலைவர்: பா.ஜ.க.வில் அடகு வைக்கப் பட்டுள்ள அ.தி.மு.க. என்கிற அடமானப் பொருள் திரும்பி வந்தால், எங்களைப் போன்றவர்களுக்கு மகிழ்ச்சி! மீட்டெடுக்கப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். அதுபோன்ற ஒரு சூழ்நிலை ஏற்படவேண்டும். ஈரோட்டில் நடக்கவுள்ள தேர்தலின் மூலம் நடந்தால் நல்லது. ஈரோடுதான் எல்லோருக்கும் வழிகாட்டுவது.

ஏனென்றால், நீரோடு போகாதவர்கள்தான் ஈரோடு போவார்கள். ஆகவே, நிச்சயமாக அடமானப் பொருள் மீட்டெடுக்கப்படவேண்டும்.

வேகமாகப் போய்க் கொண்டிருக்கின்ற காட்சிகள்- அடமானம் இன்னும் தொடர்கிறதா? அதன் பிறகும், தங்களுக்கு எஜமானன் அவர்களே என்று நினைக்கப் போகிறார்களா? அல்லது இனமானம், தன்மானத்தைக் காப்பாற்றப் போகிறார்களா? என்பது இன்னும் கொஞ்ச நாள்களில் தெரியும்.

அரசியல்  வரலாற்றில் 

மிகப்பெரிய ஒரு திருப்பம்!

செய்தியாளர்: ராகுல்காந்தியினுடைய நடைப் பயணத் தாக்கம் எப்படி இருக்கும்?

தமிழர் தலைவர்: நிச்சயமாக. ராகுல் காந்தியினுடைய நடைப்பயணம் அண்மைக் காலத்தில் இந்திய அரசியல்  வரலாற்றில் மிகப்பெரிய ஒரு திருப்பமே அது.

அவரைப் பொறுத்தவரையில், தட்ப வெப்பங்கள் எதுவாக இருந்தாலும், அதை மிகப்பெரிய அளவில் எதிர்கொள்வது எப்படி அவசியமானதோ, அதே போன்று அரசியல் தட்ப வெப்பமும் அவருக்கு எதிராக நிறைய இருந்து, காங்கிரஸ் கட்சிக்கு விரோதமாக இருந்தாலும், அதை எதிர்கொள்ளக்கூடிய ஆற்றலும், அதை வெற்றியோடு அவர் நடத்திக் காட்டிய முறையும் அசாதாரணமான ஒன்று; யாராலும் சுலபமாக செய்ய முடியாதது.

அதன் விளைவுதான், இமாச்சலப் பிரதேசம் போன்ற வெற்றிகள். பிரதமர் மோடி அவர்கள், அங்கே தேர்தலுக்கு முன்பு தெருத் தெருவாகச் சென்று, மக்களைச் சந்தித்தார்கள்.  பயணம் செய்தார்கள். ஆனாலும், அங்கே தோல்வியடைந்தார்கள்.

ராகுல் காந்தி அவர்களின் நடைப்பயணம் என்பது நிச்சயமாக பெரிய பலனை 2024 இல் தெளிவாகக் காட்டும்.

மக்கள் விழிப்புணர்வு பெறவேண்டும் என்பதற்காகத்தான் எங்களுடைய சுற்றுப்பயணம்!

செய்தியாளர்: உங்களுடைய தொடர் பயணம் மார்ச் மாதம் வரையில் இருக்கிறது; ஏப்ரல் மாதம் அண்ணாமலை அவர்கள், தி.மு.க.வின் ஊழலுக் கெதிராக -அவர் சுற்றுப்பயணம் செய்யவிருக்கிறாரே?

தமிழர் தலைவர்: என்னுடைய பயணம் உறுதியானது; நடந்து காட்டியிருக்கிறோம். ஆனால், அவர்கள் நடக்கவேண்டியவர்கள்; இனிமேல், எப்படி நடப்பார்கள் என்று பார்க்கப்பட வேண்டியதாகும். அவரும் பயணம் வரட்டும்.

சாலை பொதுவான சாலை; ஆகவே, யார் வேண்டுமானாலும் பயணம் செய்யலாம்.

ஆனால், எதை நோக்கிப் பயணம் செய்கிறார்கள்? யாருக்காகப் பயணம் செய்கிறார்கள்? என்பதுதான் மிக முக்கியம்.

அவருடைய அரசியல் வரலாற்றில் என்ன பார்க் கிறோம் என்று சொன்னால், அவர் இதுவரையில் பயணம் செய்தது எல்லாமே, அவருடைய கட்சிக்காகத் தான் பயணம் மேற்கொண்டிருக்கிறாரே தவிர, தமிழ் நாட்டிற்காகப் பயணம் எதுவும் செய்யவில்லை.

அப்படி பயணம் செய்திருந்தால், என்.எல்.சி.க்கு நிதி வாங்கியிருப்பார்?

அப்படி பயணம் செய்திருந்தால், சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை நிறைவேற்றச் சொல்லியிருப்பார்.

அப்படி பயணம் செய்திருந்தால், பல ஒன்றிய அரசின் திட்டங்கள் இங்கே வரவேண்டும் என்று தமிழ்நாட்டிற்காக, தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக சொல்லியிருப்பார்.

இதுவரையில், அவருடைய பயணம் அது

போன்று அமையவில்லை. அவருடைய பயணம் அவருடைய கட்சியை வளர்ப்பதற்காக இருக்கிறது; எங்களுடைய பயணம் எங்கள் கட்சியை வளர்ப்பதற்காக அல்ல; தமிழ்நாட்டை வளர்ப்பதற்காக; மக்கள் விழிப்புணர்வு பெறவேண்டும் என்பதற்காகத்தான்...

நன்றி, வணக்கம்!

 - இவ்வாறு தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

No comments:

Post a Comment