புரோகிதமற்ற திருமணங்கள் மதத்திலுள்ளவர்களைப் பற்றிக் கேட்கவா வேண்டும்? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, February 3, 2023

புரோகிதமற்ற திருமணங்கள் மதத்திலுள்ளவர்களைப் பற்றிக் கேட்கவா வேண்டும்?

“ஜாதித் தடை காரணமாகத் திருமணம் செய்து கொள்ள முடியாமலிருப்பவர்களுக்கு, சர்க்கார் தனிச் சலுகை காட்டி, பெற்றோர் சொத்திலும் உரிமை பெறும்படியாகச் செய்வோம்” என்று நாளைக்கு ஒரு சட்டம் வருமேயானால் ஒரே மாதத்தில் இந் நாட்டில் ஓர் இலட்சம் திருமணங்கள் நடைபெறுவதைக் காணலாம். இன்று கலப்பு மணங்கள் இரண்டொன்று நடந்து வருவது போதாது. ஏராளமாக நடைபெற வேண்டும். கலப்பு மணத் தம்பதிகள் மாநாடு என்ற ஒன்றைக் கூட்டினால், தமிழ் நாட்டில் பத்தாயிரம் ஜோடிகளாவது வரவேண்டும். சென்ற வாரத்தில் சென்னை டாக்டர் சடகோப (முதலியார்) அவர்களின் மகன் (டாக்டர்) ஜாதி - மதம் - மொழி ஆகிய மூன்றிலும் மாறுபட்ட ஒரு பெண்ணைத் திருமணஞ் செய்துகொண்டார். அந்த நிகழ்ச்சிக்கு சென்னைப் பிரமுகர்களில் வராதவர்கள் நூறுபேர் கூட இருக்காது. இதுபோன்ற கலப்புத் திருமணங்கள் ஆயிரக்கணக்கில் நடைபெற வேண்டும். அப்போதுதான் நம் சமுதாயத்தில் நிரந்தர அய்க்கியம் ஏற்படும்.

இனி அடுத்தபடியாகத் திருமணஞ் செய்கின்ற முறை பற்றியும் ஒரு வார்த்தை. பார்ப்பனப் புரோகிதனை வைத்து நடத்துகின்ற திருமணங்கள் தமிழர்களிடையே மிகக் குறைந்து விட்டது. சட்டிப்பானை, குச்சிப்புகை, குத்துவிளக்கு ஆகிய பொருளற்ற கண்மூடிச் சடங்குகளும் விரைவாக மறைந்து கொண்டிருக்கின்றன. நமக்குத் தெரியாத ஓர் அந்நிய மொழியில், நம் வீட்டில் தண்ணீரும் அருந்த மறுக்கின்ற ஓர் அந்நியன் எதை எதையோ உளறுவதை “மந்திரம்” என்று நம்புகின்ற மூடர்களின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது.

ஆனால், திருமண நாளும் நேரமும் மட்டும் மாறவில்லை. “நல்ல நாள்” என்றுகூறி நம் வசதிக்குக் “கெட்ட நாளிலேயே” திருமணங்கள் நடைபெறுகின்றன. விடுமுறை நாட்களில் திருமண நிகழ்ச்சியை வைத்துக்கொள்கிற அற்பத் துணிவு கூட நமக்கேற்படவில்லை. நேரமும் பஞ்சாங்கத்தில் கூறப்படும் “முகூர்த்த வேளையாகவே” இருக்க வேண்டியிருக்கிறது.

சென்ற ஆண்டில் சென்னை அமைந்தகரையில் ‘இராகுகாலம்’ என்று கூறப்படுகின்ற ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு ஒரு திருமணம் நடைபெற்றது. சென்ற வாரத்தில் டாக்டர் பி.வரதராஜூலு நாயுடு அவர்களின் திருமகனுக்கு மாலை நேரத்திலேயே திருமணம் நடந்தது.

எனவே, இந்த மாதிரியான மாறுதல்களும் நம் திருமணங்களில் அவசியமாகும். இல்லாத வரையில் நம் மனத்தில் படிந்துள்ள பழமைப்பாசி முற்றிலும் போகவில்லை என்றே கூறவேண்டும். துளியாவது துணிவும் உணர்வும் உடைய இளைஞூர்கள் அனைவரும் மேற்கூறிய மாறுதல்களைச் செய்து பயங்காளிகளுக்கு வழிகாட்டிகளாக இருப்பார்களென்று எதிர்பார்க்கிறோம்.

- 1.9.1950 - ‘விடுதலை’ தலையங்கம்.


No comments:

Post a Comment