சமூகநீதி கோரி வரும் 11 ஆம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, February 7, 2023

சமூகநீதி கோரி வரும் 11 ஆம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம்!

 * உச்சநீதிமன்றம்-உயர்நீதிமன்றங்களில் உயர்ஜாதி பார்ப்பன நீதிபதிகள் ஆதிக்கமா?

* தகுதி இருந்தும் ஒடுக்கப்பட்ட சமூக மூத்த நீதிபதிகள் புறக்கணிக்கப்படுவது ஏன்?

தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை

உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்களில் நீதிபதி களாக பார்ப்பனர்கள் ஆதிக்கம் செய்வதை எதிர்த் தும், நீதிபதிகள் நியமனங்களில் சமூகநீதியை வலியுறுத்தியும் மாவட்டத் தலைநகரங்களில், திராவிடர் கழகத்தின் சார்பில் 11 ஆம் தேதி ஆர்ப் பாட்டம் நடைபெறும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

நாட்டின் நீதித்துறை மிக முக்கியமானது.

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் நீதித் துறையின் மாண்பும், சுதந்திரமும் பாதுகாக்கப்படவேண்டும்.

மக்களாட்சியின் கடைசி நம்பிக்கை நீதிமன்றமே!

மக்களாட்சியில், மக்களின் கடைசி நம்பிக்கை நீதிமன்றங்களேயாகும்.

நிர்வாகத் துறையின் ஆணைகள், சட்டமன்ற, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டங்கள் செல்லுமா? செல்லாதா? என்பதை நிர்ணயிக்கும் கடமையும், பொறுப்பும் நீதித்துறையின் அதிகாரமாக இருப்பதால், இத்துறை அந்த இருபெரும் துறைகளைவிட சக்திவாய்ந்ததாகும்!

நம் நாட்டில் உலகில் எங்குமில்லாத ஜாதி, தீண்டாமை பேதம் வளர்க்கும் சமூக அமைப்பு இருப்பதால், வழக் குரைஞர்களிலிருந்து தேர்வு செய்யப்படுவோர் மாவட்ட நீதிபதிகளிலிருந்து உயர்நீதிமன்ற நீதிபதிகள் வரை நியமனம் செய்தாலும், அறிந்தோ அறியாமலோ ஜாதி உணர்வு, ஆதிக்க மனப்பான்மையிலிருந்து விலகி நீதிபதி போன்று நடுநிலை நின்று, ‘ஓர்ந்து கண்ணோடாது' தேர்ந்த நீதிபரிபாலனம் செய்ய இயலாத நிலை.

வேறு சிலர் தாங்கள் சார்ந்திருந்த அரசியல் கட்சிகளின் சிந்தனை வட்டத்திலிருந்து வெளியே வர முடியாதவர்கள், நீதித் தராசு சாயவும் செய்கிறது!

அரசமைப்புச் சட்டம் சமூகநீதியை வற்புறுத்தினாலும், 

சமூக அநீதியே தலைவிரித்தாடுகிறது!

சமூகநீதி என்பது இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரையிலேயே (Preamble) வலியுறுத்தப்பட்டுள்ள முக்கிய கோட்பாடு.

ஆனால், உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனங்களில் சமூக அநீதியே பெரிதும் கோலோச் சுகிறது என்பது வேதனைக்குரிய ஒன்றாகும்!

நடைபெறுவது மக்களாட்சி, ‘‘ஜனநாயகக் குடியரசு'' -  (Democratic Republic)  மக்கள் பிரதிநிதித்துவம், மக்கள் பங்களிப்பும் அவர்களது உரிமை!

மிக சக்தி வாய்ந்த நீதி பரிபாலனத்தின் நியமனங்களில் சமூகநீதி பெரிதும் காணாமற்போய்க் கொண்டே இருக்கிறது!

100-க்கு 3 பேர்களாக உள்ள பார்ப்பனரும், 10 சத விகிதத்திற்குள் இருக்கும் மற்ற உயர்ஜாதிக்காரர்கள் நீதிபதிகளாக உச்சநீதிமன்றத்தினையும், உயர்நீதிமன்றங் களையும் ஏக போக ஆதிக்கம் செலுத்தும் சமூகஅநீதியே கொடிகட்டிப் பறக்கிறது!

சமூகநீதிக் காவலர் மேனாள் பிரதமர் வி.பி.சிங் அவர்கள், ‘‘ஜனநாயகம் என்பது மக்களின் பங்களிப்பும், அதிகாரப்பகிர்வும்'' என்றார்!

தகுதிமிக்க ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மூத்த நீதிபதிகளுக்கும் வாய்ப்பு மறுப்பு

தகுதிமிக்க மூத்த நீதிபதிகளான எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. - மைனாரிட்டி சமூகங்களில் இருந்தும்கூட, அவர்களை உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிப்ப தில்லை. இதில் கொலீஜியம் முறையும் சரி, ஒன்றிய சட்ட அமைச்சகமும் சரி ஒன்றுக்கொன்று எதிர்மறை விமர் சனங்களில் ஈடுபட்ட போதிலும், சமூகநீதி புறக்கணிப் பைப் பொறுத்தவரையில் இரண்டு அமைப்புகளும் ஒத்த கருத்தோடு உயர்ஜாதியினருக்கே கதவு திறந்து விடுவதை ‘தர்மமாக' கடைப்பிடித்து வருவது கண்டு நெஞ்சம் குமுறுகிறது!

எடுத்துக்காட்டாக உச்சநீதிமன்றத்தின் மொத்த நீதிபதிகள் எண்ணிக்கை 34.

32 இடங்கள் இதுவரை நிரப்பப்பட்டுள்ளன.

இதில் ஒரே ஒரு எஸ்.சி., நீதிபதி - ஒரே ஒரு ஓ.பி.சி. நீதிபதி (எஸ்.டி., இருக்கிறார்களா தெரியவில்லை) சிறுபான்மைச் சமூக நீதிபதிகள் இரண்டு.

இப்படி பிரித்துப் பார்த்தால் 32 இல் 27 அல்லது 28 நீதிபதிகள் (பெண்களாக நியமனம் ஆகியிருந்தாலும் உயர்ஜாதியிலிருந்தே!) உயர்ஜாதிகளைச் சேர்ந் தோராவர்.

அரசமைப்புச் சட்டம் விதித்த சமூகநீதியைப் பூதக் கண்ணாடி வைத்துத்தான் தேடவேண்டும்.

85 விழுக்காடு மக்களின் பங்கிலும் மனுதர்மம்தான்!

கேரளாவில் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாகி சில ஆண்டுகள் ஆன ஒரு எஸ்.சி., நீதிபதிக்கு உச்சநீதிமன்றக் கதவுகள் திறக்க மறுத்தே வந்துள்ளது. இன்னும் சில மாதங்களில் அவர் ஓய்வு பெறவிருக்கிறார். அவர் உச்சநீதிமன்றம் செல்ல போதிய அனுபவம், தகுதி, திறமை இருந்தாலும், வாய்ப்பற்று பதவி ஓய்வு பெறவேண்டிய நிலைதான் எதார்த்தம்.

100-க்கு 85 விழுக்காடு மக்களின் பங்குகளில் மனுதர்மம்தான் கோலோச்சும் நிலை!

அதுபோலவே, பெரியார் மண்ணான தமிழ்நாட்டில், சென்னை உயர்நீதிமன்றத்தின் மொத்த நீதிபதிகள் எண் ணிக்கை 75. பலர் ஓய்வு பெற்றும் அப்பதவிகள் நிரப்பப் படாததால், தற்போது உள்ளவர்கள் 52 நீதிபதிகளே!

நீதித் துறையில் பார்ப்பன ஆதிக்கம் பாரீர்!

தற்போது (6.2.2023) 5 பேர் கூடுதல் நீதிபதிகளாக நியமனம் பெற்றுள்ளார்கள். 

இதில் இரண்டு பேர் பார்ப்பனர்கள்; ஒரு பெண் நீதிபதி - பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். உணர்வாளர் - வெறுப் புப் பேச்சுகளில் வித்தகர் இவர் என்று கூறப்படுகிறது.

தமிழ்நாட்டில் சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்குரைஞர்கள் தலைமை நீதிபதிக்குக் கடிதம் எழுதினார்கள் - நடந்தது என்ன?

இரட்டைத் தாழ்ப்பாள்; அந்த அம்மையார் நியமனம் செய்யப்பட்டு, இன்று (7.2.2023)  பதவியேற்றுள்ளார்!

எல்லாம் பகிரங்கமாகவே இங்கு சமூகஅநீதி!  நியாயப் பறிப்புகள் நடைபெற்றுள்ளன.

3 சதவிகிதம் உள்ள பார்ப்பனர்களுக்கு 52 நீதிபதிகள். தற்போது 9 பார்ப்பன நீதிபதிகள்; இப்போது புதிய நியமனம் 2; ஆக 11 பேர் பார்ப்பனர்கள்!

வெகு தந்திரமாக ஒவ்வொரு பட்டியலையும் அனுப் பும்போது 2, 3 என்று உள்ளே நுழைத்து விடுகிறார்கள்!

இதில், காவி மனப்பான்மையாளர்கள் என்பதே நீதிபதிகள் நியமனத்திற்கான மறைமுக அடிப்படை முக்கியத் தகுதி என்ற மற்றொரு முக்கிய வேதனை நிலையும் நீடிக்கிறது!

அந்தப் பிரச்சினைக்குரிய அம்மையார் ‘‘சவுக்கிதார் விக்டோரியா கவுரியாம்'' எப்படி பட்டாங்கமாய் சர்வமும் பார்ப்பன மயமாக இருக்கிறது.

இன்று (7.2.2023) உச்சநீதிமன்றத்தில் அவருடைய நியமனத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கிலும் ''அசல் அநியாயம் அப்பீலில் அதுவே காயம்'' என்ற கிராமத்துப் பழமொழி போன்ற நிலைதான்.

11.2.2023 - முக்கிய தலைநகரங்களில் 

சமூகநீதி கோரும் ஆர்ப்பாட்டம்!

எனவே, இந்த நியமனங்களுக்குக் கண்டனம் தெரிவித்தும், உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள் நிய மனங்களில் சமூகநீதி வேண்டும் என்பதை வலியுறுத் தியும், தமிழ்நாட்டின் வருவாய் மாவட்டத் தலைநகரங்களில் அல்லது முக்கிய நகரங்களில் திராவிடர் கழகத்தின் சார்பில், வருகிற 11.2.2023 அன்று சனிக்கிழமை காலையோ, மாலையோ கண்டனப் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

சென்னையில் எனது தலைமையில் அந்த அறப் போராட்டம் காலை 11 மணிக்கு வள்ளுவர் கோட்டம் அருகே நடைபெறும்.

ஆங்காங்கே உள்ள கழகப் பொறுப்பாளர்கள் உடனே காவல்துறைக்கு எழுதிக் கொடுத்து நடத்துங்கள்; அனுமதி மறுத்தாலும், மீறி கைதாகும் நிலை வந்தாலும் நடத்துவதை தவிர்க்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம்!

சமூகநீதியைக் காப்பாற்றாமல், நாமிருந்து என்ன பயன்?

ஒத்தக் கருத்துள்ளவர்கள், அமைப்புகள் வந்தாலும் அவர்களையும் இணைத்துக் கொள்வோம்!

ஆயத்தமாவீர்! 

அவசரம்! அவசியம்!!

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

முகாம்: உடுமலைப்பேட்டை

7.2.2023


No comments:

Post a Comment