மேன்மைக்குரிய தலைவர் அவர்களே, தாய்மார்களே, பெரியோர்களே! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, January 29, 2023

மேன்மைக்குரிய தலைவர் அவர்களே, தாய்மார்களே, பெரியோர்களே!


இன்றைய தினம் இந்த செயங்கொண்டத்தில் பகுத்தறி வாளர் கழகத்தை துவக்கி வைக்கும் பேறு கிடைத்ததற்காக மகிழ்ச்சி அடைகிறேன்.

நான் கூறுகிற, கருதுகிற கருத்து களை நீங்கள் கேட்கத் தான் கடமைப்பட்டவர்களே தவிர, அப்படியே நம்பக் கடமைப்பட்ட வர்களல்ல. கேட்பவற்றை எல்லாம் நம்ப வேண்டுமென்றால், இதுவரை இந்த நாட்டில் என்னைவிட அதிகமாகக் கூறப்பட்ட கருத்துகள் ஏராளம்! ஆகவே, எதையும் நம்பாமல் அறிவு கொண்டு சிந்திக்கக் கேட்டுக் கொள்கிறேன்.

பகுத்தறிவாளர் கழகம் என்றால் மனிதர்கள் கழகம் என்று பெயர் மனிதனுக்குத்தான் பகுத்தறிவு என்ற ஒன்று இருக்கிறது. உலகத்தில் எத்தனையோ கோடி ஜீவன்கள் இருக்கின்றன என்றாலும் அவைகளுக்கு எல்லாம் ஆறாவது அறிவாகிய பகுத்தறிவு கிடையாது. மனிதன் ஒருவனுக்குத் தான் பகுத்தறிவு உண்டு. அப்படி இருக்கும்போது நாம் ஏன் பகுத்தறிவாளர் கழகம் துவக்க வேண்டும்?

இந்தக் கூட்டத்திற்கு வராதவர்கள் எல்லாம் பகுத்தறிவு அற்றவர்களா? பகுத்தறிவாளர் கழகத்தைச் சேராதவர்கள் எல்லாம் பகுத்தறிவு அற்றவர்களா? சிந்திக்க வேண்டும்.

நான் முன்பு ஒருமுறை ஒரு சுய மரியாதை மாநாட்டிற்கு குமாரசாமி ரெட்டியார் என்ற மந்திரியாரை அழைத்து இருந்தேன். அவர் வந்தும் பேசினார். அப்போது சொன்னார், "சுயமரியாதை மாநாடு என்று பெயர் வைத்து இருக்கிறார்கள். அப்படியானால், மற்றவர்களுக்கு சுய மரியாதை இல்லை என்று அர்த்தமா?" என்று கேட்டார். அதற்குப் பின்னால் நான் பேசும் போது, அவரைக் கேட்டேன். "நீங்கள் என்ன ஜாதி?" என்று. 'ரெட்டியார்' என்றார். கோவிலுக்குச் சென்றால் எந்த இடத்தில் நிற்கிறீர்கள்? ஓட்டலுக்குச் சென் றால் எங்கே உட்காருகிறீர்கள்? அதற்குக் காரணம் என்ன? நீங்கள் சூத்திரன் என்பதால் அல்லவா என்று கேட்டேன். அசட்டுச் சிரிப்பு சிரித்தார். கூடியிருந்த மக்கள் எல்லாம் கைதட்டி ஆரவாரம் செய்தார்கள்.

விளையாட்டுக்காக நான் சொல்ல வில்லை. இன் றைக்கும் நம் நிலைமை என்ன? சாஸ்திரப்படி மட்டுமல்ல - இன்றைய இந்தியாவின் அரசியல் சட்டப்படியும் நாம் சூத்திரர்கள்தான். எவன் கிறித்தவன் இல்லையோ, எவன் முஸ்லிம் இல்லையோ, அவனெல்லாம் பார்ப்பானைத் தவிர்த்து பகுத்தறிவுவாதி - நாத்திகன் உட்பட சூத்திரன் என்று இன்றைய சட்டத்திலும் இருக்கிறது.

இதற்கு ஒரு பரிகாரம் செய்ய வேண்டும் என்றுதான் தீவிரமாக இருக்கிறேன். நான் 50 ஆண்டுகளாக இந்த நாட்டில், பகுத்தறிவு சுய மரியாதை பிரச்சாரம் செய்தும் வருகிறேன்.

நம்முடைய இலட்சிய சொல்லாக 'கடவுள் இல்லை - கடவுள் இல்லை! கடவுள் இல்லவே இல்லை! கடவுளைக் கற்பித்தவன் முட்டாள் - பரப்பியவன் அயோக்கியன் - வணங்கு கிறவன் காட்டுமிராண்டி' என்று கூறிக் கொண்டு இருக்கிறோம்.

உலகத்திலே இருக்கிற மற்ற நாட்டு பகுத்தறிவுவாதிகள் எல்லாம் புதிய புதிய கருவிகளை எல்லாம் கண்டுபிடித்து இருக்கிறார்கள். ஆணும், பெண்ணும் "படுக்காமலேயே" குழந்தை பெறக் கூடிய சாதனங்கள் எல்லாம் ஏற்படுத்தப் பட்டு இருக்கின்றன. கடுமையான வியாதிகளுக்கு எல்லாம் மருந்து வகைகள் எல்லாம் கண்டுபிடிக்கப்பட்டு விட்டன. இவை எல்லாம் பகுத்தறிவை பயன்படுத்தியதால் மற்ற நாட்டுக்காரன் செய்து காட்டிய சாதனை.

1952-இல் நம்முடைய சராசரி ஆயுள் 29. இன்றைக்கு நமது சராசரி ஆயுள் 52. இன்னும் நம் நாட்டு வைத்தியன் எல்லாம் செத்தான் என்றால் அது 75 ஆகி விடும். நம் நாட்டு வைத்தியன் செய்த புண் ணியமெல்லாம் நம் உயிரைக் கொன்று தீர்த்தது தான். வெள்ளைக்காரன் வைத்தியம் நாட்டில் வளர்ந்து விட்ட பிறகுதான் நம்முடைய ஆயுள் நீண்டு வருகிறது.

இன்றைக்குச் சொல்கிறேன், ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். கி.பி. 2,000 முடிவில் இந்திய மனிதனின் சராசரி வயது 75 ஆகவும், வெள்ளைக்காரன் வயது 110ஆகவும் ஆகப் போகிறது. நான் அப்போது இருக்க மாட்டேன். நீங்கள் அதை அனுபவிப்பீர்கள்.

எனக்கு பல ஆண்டுகளுக்கு முன்பு நாக்கில் புற்று வந்தது. அந்தத் தழும்புக் கூட இன்னும் இருக்கிறது. டாக்டர் ரத்தின வேலு சுப்பிரமணியமும், டாக்டர் ராயும் வைத்தியம் பார்த்தார்கள்.

டாக்டர் ராய் எலக்டிரிக் டிரீட்மெண்டு செய்து என்னைப் பிழைக்க வைத்தார். இப்படி எல்லாம் மனிதனின் பகுத்தறிவு விஞ்ஞானத் துறையில்; இன்னும் எவ்வளவோ வளர்ந்து வருகிறது. நம் நாட்டைப் பொறுத்த வரையில் என்னுடைய கவலை எல்லாம் நம்முடைய பகுத்தறிவு, நமது மானத்தைக் காப்பாற்றப் பயன்பட வேண்டும் என்பது தான்.

மற்ற நாட்டுக்காரன் பகுத்தறிவு எல்லாம் வளர்ந்து சந்திர மண்டலத்தில் வீடு கட்டிக் கொண்டு இருக்கப் போகிறான். உணவு முறையிலும் மாறுதல் ஏற்படப் போகிறது.

நம்முடைய நாட்டு மக்களைப் பொறுத்த வரையில், பகுத்தறிவுவாதி களாக இருப் பதற்கு மான உணர்ச்சி வந்தாக வேண்டும். எவ்வளவு கேவலம்? இந்த நாட்டுக் குடி மக்களை நூற்றுக்கு மூன்று பேராக உள்ள ஒரு கூட்டம் தங்களுக்குத் தாசி மக்கள் என்று இன்றைக்கும் சொல்லி வருகிறது என்றால் இதைவிட ஒரு கேவலம் வேண் டுமா?

எனக்கு ஒருவனுக்கு மட்டும்தான் இந்த வேதனையா? 1925ஆம் வருடத்திலிருந்தே இதற்காக நான்தானே பாடுபட்டு வருகி றேன். எந்த அரசியல் காரன் பாடுபட முன் வந்தான்? அரசியல் காரனுக்கு எல்லாம் என்னோட சேர்ந்து இருப்பதற்கே பயம். காரணம், இவனோடு சேர்ந்தால் ஓட்டுக் கிடைக்காதே என்ற பயம்தான்!

நான் இவ்வளவு பாடுபட்டும் இன்னும் முடிந்த பலனை அனுபவிக்க முடியவில் லையே. நம்முடைய இயக்கத்தால் பார்ப் பானின் ஆதிக்கத்தை சகல துறைகளிலும் முறியடித்து விட்டோம். கல்வி, உத்தியோகத் துறைகளில் எல்லாம் நாம் தலையெடுத்து விட்டோம். இவ்வளவும் அமைதியான புரட்சியாக செய்து முடித்து இருக்கிறோம்.

ஒரு பார்ப்பானைக் கொல்லவில்லை, ஒரு பார்ப்பனத் தியைக் கெடுக்கவில்லை. எந்தவித பலாத்காரத்தையும் கையாளாமல் இந்த மாறுதல்களைச் செய்து இருக்கிறோம்.

ஒரு பார்ப்பான் கூட மந்திரியாக இல்லாத ஒரு மந்திரி சபையை தமிழ் நாட்டில் நிலை பெறச் செய்து விட்டோமே! இது ஒன்று போதாதா நம்முடைய வெற்றிக்கு? அதுவும் எப்படிப்பட்ட ஆட்சி! இராமனை செருப்பால் அடித்து வெற்றி பெற்று வந்த ஆட்சி! இது என்ன சாதாரண காரியமா?

வேறு மதக்காரர் ஆளும் நாட்டில் அந்தக் கடவுள்களை இப்படிச் செய்து ஓட்டு வாங்க முடியுமா? இங்கு இராமனை செருப்பால் அடித்து ஓட்டு வாங்கி விட்டோமே! இது என்ன சின்ன காரியமா? கடவுளாவது - வெங்காயமாவது என்று கருதும் அளவுக்கு மக்களுக்கு உணர்ச்சி வந்து விட்டதே!

மனிதன் ஒவ்வொரு துறையிலும் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் வருகிறான். இப்படி எல்லாத் துறைகளி லும் மாற்றமும், முன்னேற்றமும் ஏற்பட்டு விட்ட பிறகு, நம்மை தேவடியாள் மக்கள் என்னும் சூத்திர இழிவு ஏன் ஒழிய வில்லை? இதில் மட்டும் மாற்றம் ஏற்படவில்லையே, ஏன்?

மானம் இல்லாததாலா? உணர்ச்சி இல்லாத தாலா? அறிவு இல்லாததாலா? இல்லை - இல்லை. இவை எல்லாம் மனிதனுக்குத் தாராளமாக இருக்கிறது. இருந்தும் ஏன் பயன்படுத்தவில்லை?

மனிதன் பகுத்தறிவைக் கொண்டு எல்லாவற்றையும் சிந்திக்கலாம். ஆனால், கடவுள், மதம் விஷயங்களில் மட்டும் மனிதன் பகுத்தறிவைப் பிரயோகப்படுத்தக் கூடாது. அப்படி பயன்படுத்தினால் அவனைக் கொல்ல லாம் என்று இருக்கிறது. இதை விட என்ன வேண்டும்?

இராமாயணத்திலே கூறப்பட்டு இருக்கிறது, பகுத் தறிவைப் பயன்படுத்தி கடவுள், மத விவகாரங்களில் எவன் தர்க்கம் செய்கிறானோ, அவனைக் கொன்றுவிட வேண்டும் என்று இராமன் கூறுவதாக ஒரு காட்சி வருகிறது. அந்த நிலைமை தான் இன்றைக்கும்.

காந்தியாரைத் தீர்த்துக் கட்டியதும் இதே கருத்துப் படிதான். சாஸ்திரத்தில் தீண்டாமை இருக்கிறது. அதில் கை வைக்க வேண்டும் என்று காந்தியார் முயற்சித்த போது சாஸ்திரப் படி அவரைத் தீர்த்துக் கட்டி விட்டான்.

இன்றைய அரசியல் சட்டம் கூட அப்படித்தான். அரசியல் சட்டத்தில் எதைத் திருத்தினாலும் ‘அடிப்படை சட்டங்கள்' என்ற பகுதியை மட்டும் திருத்தக் கூடாது என்று எழுதி வைத்திருக்கிறான். அரசியல் சட்டத்தில் தீண்டாமை ஒழிய வேண்டும் என்று கூறப்பட் டிருக்கிறது. அந்தத் 'தீண்டாமை' என்ற வார்த்தை இன்வர்ட்டடு கமாவுக்குள் போடப் பட்டுள்ளது. அப்படிப் போடப்பட்டு இருப்ப தற்குக் காரணம், அதற்குத் தனி அர்த்தம் இருக்கிறது என்பதுதான்.

வருகிற டிசம்பர் 8, 9 தேதிகளில் சென் னையில் ஒரு பெரிய மாநாடு கூட்டப் போகிறேன். சட்டப்படி இருக்கிற நம்முடைய இழி நிலையை மாற்ற தீர்மானம் கொடுக்கப் போகிறேன். மாற்றினால் போச்சு, இல்லா விட்டால் போராடத்தான் வேண்டும். போரா டினால் கடுமையாகத் தண்டிப்பான். ஏழாண்டு வரை கொடுப்பான். ஏற்கத் தான் வேண்டும். நீங்கள் எல்லாம் ஜெயிலுக்கு வரத் தான் வேண்டும். எதெல் லாமோ செய்து நம்மை ஒழித்துக்கட்டப் பார்ப்பார்கள்.  அதற்கெல்லாம் நாம் தயாராக இருக்க வேண்டும்.

இந்து இல்லை என்று எவன் ஒருவன் சொல் கிறானோ, அவனை விடுதலை செய்ய வேண்டும். அவனை அந்த இழிவுக்குள் புகுத்தக்கூடாது என்று கூறப்போகிறோம். அதற்கு இந்த ஆட்சி என்ன செய்யப் போகிறது என்று பார்ப்போம்.

இந்த ஆட்சியை ஒழித்து விட்டால் மறு நாளே தீர்ந்தது. நம்முடைய இழிவை ஒழிக்க மறுநாளே ஏற்பாடு செய்து விடலாம். அதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும்.

அதற்கான ஆயத்தமான மாநாடு தான் நடக்க இருக்கும் சென்னை மாநாடு. மாநாட் டிற்கு ஆண்களும் பெண்களுமாய் இதுவரை மாநாடுகளில் கூடாத அளவுக்கு வந்து கூடியாக வேண்டும். எந்தெந்த வகையில் உங்களது ஒத்துழைப்பு இருக்க முடியுமோ அவ்வளவும் இருக்க வேண்டும். பண வசதி உள்ளவர்கள் தாராளமாக உதவலாம். ஜெயிலுக்கு வர வாய்ப்புள்ளவர்கள் ஏராள மாக வரவேண்டும்.

முதன்முதலில் வடநாட்டுக்காரன் கடை யில் மறியல் செய்யலாம் என்று இருக்கிறேன். அவனுக்கு இங்கு என்ன வேலை என்று கேட்போம்.

பம்பாயில் சிவசேனைக்காரன் நம்ம வர்களை அங்கு விரட்டவில்லையா?

அவன் அங்கு செய்யும்போது நாம் ஏன் இங்கு செய்யக்கூடாது?

துணியவேண்டும். பதவிக்குப் போகிற நாலுபேர்களை அதற்கென்று விட்டு விடு வோம். மற்றவர்கள் நம்முடைய இழிவை ஒழித்துக்கட்ட முயற்சிக்க வேண்டும்.

நமக்கு பதவி வந்தால் போதாது - நம்மில் பலர் இலட்சாதிபதியானால் போதாது. நமக்கு இன்றைக்கு தேவை எல்லாம் நமது மானம் மீட்கப்பட்டாக வேண்டும், நமது இழிவை ஒழித்தாக வேண்டும்.

இன்னும் எத்தனை நாளைக்கு நான் இருக்கப் போகி றேன். எத்தனை நாளைக்கு கத்தப்போகிறேன் நாளைக்கே பொசுக் கென்று போய்விடுகிறேன் என்று வைத்துக் கொள் ளுங்கள். உங்கள் கெதி என்ன? என் இடத்தில் உட்கார எவன் வரப்போகிறான். வர விரும்பு கிறவன் இருந்தாலும் எவனை இந்த அளவுக்கு மதிக்கப் போகிறீர்கள்?

மக்களிடம் மதிப்பு பெறுவது என்பது சின்ன காரியமா? அந்த மதிப்பைப் பெற எவ் வளவு பட்டாக வேண்டும். ஆகவே தோழர்களே! நாளைக்கு எனக்கு ஏதாவது என்றால் நம் கெதி அவமானகரமானதாகப் போய்விடும்; தலை எடுக்க முடியாது. எனவே, நீங்கள் எல்லாம் நமது இழிவை ஒழிக்கும் காரியத்தில் துணிந்தாக வேண்டும்.

உங்கள் பெயரை எல்லாம் பட்டியல் போட்டுக் கொடுங்கள். யார் யாரை எப்படி எப்படி எல்லாம் பயன் படுத்திக் கொள்ள முடியுமோ அப்படி எல்லாம் பயன்படுத்திக் கொள்கிறேன்.

எனக்காக, என் தயவுக்காக நீங்கள் போராட முன்வர வேண்டாம். உங்களுக்காக - உங்கள் பிள்ளை குட்டிகளுக் காக உங்கள் சந்ததிக்காக முன் வாருங்கள்.

(10.11.1973 அன்று ஜெயங்கொண்ட சோழபுரத்தில்  தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய அறிவுரை - ‘விடுதலை' 12.11.1973)

ஒரு பார்ப்பானைக் கொல்லவில்லை, ஒரு பார்ப்பனத்தியைக் கெடுக்கவில்லை. எந்தவித பலாத்காரத்தையும் கையாளாமல் இந்த மாறுதல்களைச் செய்து இருக்கிறோம். ஒரு பார்ப்பான் கூட மந்திரியாக இல்லாத ஒரு மந்திரி சபையை தமிழ் நாட்டில் நிலை பெறச் செய்து விட்டோமே! இது ஒன்று போதாதா நம்முடைய வெற்றிக்கு? அதுவும் எப்படிப்பட்ட ஆட்சி! இராமனை செருப்பால் அடித்து வெற்றி பெற்று வந்த ஆட்சி! இது என்ன சாதாரண காரியமா?

No comments:

Post a Comment