இரசிகர் மன்றம்?
சினிமா நடிகர்களுக்கு இரசிகர் மன்றங்கள் என்பது அறிவு ரீதியாக இரசிக்கத்தக்கதாக இல்லை. யாரோ படம் தயாரித்து, யாரோ நடித்துப் பணம் சம்பாதிக்கிறார்கள்.
இந்த நிலையில், நடிகர்களுக்காக இரசிகர் மன்றம் அமைப்பதும், அவர்களுக்காக சுவரொட்டி அடித்து ஒட்டுவதும், பிரச்சாரம் செய்வதும் எதற்காக?
'கட் அவுட்' வைத்து பாலாபிஷேகம் செய்வது, புதுச்சேரியில் ஒயின் அபிஷேகம் என்பது எல்லாம் ஆரோக்கியமானது தானா?
இளைஞர்கள் தங்கள் எதிர்காலத்தை நல்ல வண்ணம் உருவாக்க இவை எல்லாம் பயன்படுமா?
இந்த இரசிகர் மன்ற பெருக்கத்தை முதலீடாக வைத்து சம்பந்தப்பட்ட நடிகர்களுக்கு அரசியலில் குதிக்கும் நப்பாசை வரை நீண்டு கொண்டு போகிறதே!
கேரளா போன்ற மாநிலங்களில் இந்த நிலை இல்லை. தமிழ்நாட்டில் மட்டும் இந்த நிலை ஏன்?
நேற்று ஒரு நிகழ்வு!
'துணிவு' என்ற படம் வெளியாகி இருக்கிறது. படம் பார்க்கச் சென்ற அந்தச் சினிமா நடிகரின் இரசிகர் பரத்குமார் என்பவர் ஓடும் லாரியில் ஏறி, குதியாட்டம் போட்டபோது தவறி விழுந்து முதுகுத் தண்டு உடைந்ததால், மரணத்தை, தானே வரவழைத்துக் கொண்டார் என்ற செய்தி குருதியை உறைய வைக்கிறது. பெற்றோர் கதறி அழுத காட்சி கண்களில் குருதி வடியச் செய்கிறது.
நேற்று இன்னொரு பிரபல நடிகர் நடித்த 'வாரிசு' என்ற திரைப்படமும் வெளியாகியுள்ளது.
கேட்கவும் வேண்டுமா? சேலத்தில் இந்த இரண்டு இரசிகர்களுக்கிடையே மோதலாம்! திரையரங்கின் கண்ணாடி உடைப்பாம்!
கோவை, திருச்சியிலும் இரகளையாம்! நம் நாட்டு இளைஞர்களிடையே ஏனிந்த நோய்?
நடிகர்களுக்கும் இதில் பொறுப்பு இல்லையா?
படம் பார்த்து இரசித்துவிட்டுப் போகவேண்டியதுதானே! அதற்குமேல் இதில் என்ன இருக்கிறது?
நாடு கெட்டுக் குட்டிச் சுவர் ஆகவேண்டுமா? அரசியலும் பாழாக வேண்டுமா?
அனைத்துத் தரப்பு மக்களும் சிந்திக்கவேண்டிய கேள்வி இது!
- மயிலாடன்
No comments:
Post a Comment