'குடியரசு' நாள் தெலங்கானா அரசு பங்கேற்க மறுப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, January 25, 2023

'குடியரசு' நாள் தெலங்கானா அரசு பங்கேற்க மறுப்பு

இந்தியாவில் குடியரசு நாள் விழாவில் கலந்துகொள்ளாத ஒரே அரசு தெலங்கானா மாநில அரசு மட்டுமே. அரசு சார்பில் தெலங்கானா ஆளுநர் தமிழிசைக்கு எழுதிய கடிதத்தில் "குடியரசு நாள் விழாவில் அரசு சார்பில் யாரும் பங்கெடுக்க மாட்டோம், நீங்களாகவே நிகழ்ச்சியை ஆளுநர் மாளிகைக் குள்ளேயே ஒருங்கிணைத்து நடத்திக்கொள்ளுங்கள், அரசு சார்பில் எந்த ஒரு உதவியையும் எதிர்பார்க்க வேண்டாம்" என்று தெலங்கானா அரசு கடிதம் எழுதியுள்ளது. 

இந்தியாவில் 74ஆம் ஆண்டு குடியரசு நாள் விழா நாளை 26ஆம் தேதி நாடு முழுவதும் உள்ள மாநிலங்களில் கொண்டாடப்படுகிறது. விடுதலை நாள் விழாவில் (ஆக.15) முதலமைச்சர்கள் கோட்டை கொத்தளத்தில் கொடியேற்று வார்கள் (இந்த உரிமையைப் பெற்றுத் தந்தவர் முத்தமிழறிஞர் கலைஞர் முதல் அமைச்சராக இருந்தபோதுதான்). அதே போல் குடியரசு நாள் விழாவில் ஆளுநர்கள் கொடியேற்றுவார்கள். ஆளுநர்கள் கொடி ஏற்றினாலும் அதற்கான அனைத்துப் பணிகளையும் மாநில அரசு மேற்கொள்ளும். 

 இந்த நிலையில் நாட்டிலேயே முதல் முறையாக தெலங்கானா அரசு 'எங்களை அழைக்க வேண்டாம்,  அரசு சார்பில் யாரும் பங்கெடுக்க மாட்டார்கள்' என்று கூறியுள்ளது. மேலும் செகந்திராபாத்தில் உள்ள பேரணி அரங்கில் இந்த நிகழ்ச்சியை நடத்தவேண்டாம் என்றும், ஆளுநர் மாளிகை யிலேயே நடத்திக்கொள்ளுங்கள் என்றும் கூறியுள்ளது.

 கடந்த 20.1.2023 அன்று குடியரசு நாள் விழாவில் பேசவேண்டியது குறித்த குறிப்பை அனுப்பச் சொல்லி தெலங்கானா அரசிடம் தமிழிசை கேட்டும், இதுவரை எந்த பதிலும் அரசு சார்பில் கொடுக்கப்படவில்லை. அதே நேரத்தில் புகழ்பெற்ற பேரணி அரங்கில் பாதுகாப்பு காரணங்களால் அங்கு விழா நடத்த அனுமதி அளிக்க முடியாது என்று அரசு கூறிவிட்டது.   விரைவில் அங்கு சட்டப்பேரவை கூட்டத்தொடர் துவங்க உள்ளது. 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யும் போது அதற்கான உரையையும் இதுவரை தமிழிசைக்கு அம்மாநில அரசு வழங்கவில்லை.   இதுவரை பல்வேறு விழாக்கள் ஆளுநர் சார்பில் நடத்தப்பட்டது; அதற்கும் மாநில அரசு உதவி அளிக்கவில்லை. இதனால் அம்மாநில ஆளுநரான தமிழிசை சவுந்தரராஜன் தன்னுடைய சொந்த செலவிலேயே அனைத்தையும் ஏற்பாடு செய்து முடித்தார்.    

தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்த அவர் 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தூத்துக்குடியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இதனை அடுத்து அவரை தெலங்கானா மாநில ஆளுநராக மோடியும், அமித்ஷாவும் நியமித்தனர். அவர் தொடர்ந்து தெலங்கானா அரசோடு மோதல் போக்கைக் கடைப்பிடித்து வந்தார்.  மாநில அரசு அனுப்பிய 8 முக்கிய மசோதாக்களை பல்வேறு பொருத்தமற்ற காரணங்கள் கூறி ஒப்புதல் தராமல் காலம் கடத்தி வருகிறார். 

மேலும் புதுச்சேரி துணை நிலை ஆளுநராகவும் இருந்து வருவதால் அவர் சமீபகாலமாக தெலங்கானா மாநிலத்திற்குச் செல்லாமலேயே இருந்துவருகிறார். இதனால் அங்கு அரசுப்பணிகளில் சுணக்கம் ஏற்படுவதாக அம்மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த நிலையில் தெலங்கானா அரசே குடியரசு நாள் விழாவை நீங்களே கொண்டாடிக் கொள்ளுங்கள் என்று கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மோடி தலைமையிலான பி.ஜே.பி. அரசு ஒன்றியத்தில் அமைந்தாலும் அமைந்தது. 

'நான், நான்' எனும் அகங்காரமும், எதேச்சதிகாரமும் அலங்கோலமாய்த் தலைவிரித்து ஆட ஆரம்பித்து விட்டது.

பி.ஜே.பி. ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி.யில் ஈடுபாடுள்ளவர்களையே தெரிந் தெடுத்து, ஆளுநராக நியமிப்பது என்ற ஒரு முறை தொடங்கப்பட்டு விட்டது.

அத்தகைய ஆளுநர்களும் அவர்களுக்கென்று ஒன்றிய அரசின் மேலிடத்திலிருந்து அளிக்கப்பட்ட திட்டங்களை (கிழீமீஸீபீணீ) அரங்கேற்றி வருகிறார்கள்.

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதற்கு தமிழ்நாடு ஆளுநர் ரவி ஒருவர் போதாதா? "ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து, மனிதனை கடிக்கும் அளவுக்கு" ஆளுநர்களால் பல எதிர்வினைகள் ஏற்பட்டு வருகின்றன.

தெலங்கானாவில் குடியரசு நாளில் ஆளும் அரசு பங்கேற்காது என்று எழுத்துப் பூர்வமாகவே தெரிவித்து விட்டனர். இதற்குமுன்பு ஆளுநர் உரையேயில்லாமல் ஆண்டுத் தொடக்கத்திற்கான சட்டப் பேரவைக் கூட்டம் அங்கு நடைபெற்றுள்ளது.

ஆளுநரைப் பதவியை விட்டு நீக்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கூறியுள்ள கருத்து கவனிக்கத்தக்கது.

"ஆட்டுக்குத் தாடி எதற்கு? நாட்டுக்குக் கவர்னர் எதற்கு?" என்ற அண்ணாவின் குரல் இந்தியத் துணைக் கண்டம் முழுவதும் ஒலிக்கட்டும்! ஒலிக்கட்டும்!!

No comments:

Post a Comment