உ.பி. ஹிந்து கல்லூரியில் பர்தா அணிந்த மாணவிகளுக்கு அனுமதி மறுப்பாம்! காவல்துறையினர் தலையிட்டு போராட்டம் முடித்து வைப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, January 20, 2023

உ.பி. ஹிந்து கல்லூரியில் பர்தா அணிந்த மாணவிகளுக்கு அனுமதி மறுப்பாம்! காவல்துறையினர் தலையிட்டு போராட்டம் முடித்து வைப்பு

 லக்னோ, ஜன.20 உத்தரப்பிரதேசத்தின் பரேலியில் எம்.ஜே.பி. ரோஹில்கண்ட் பல்கலைக்கழகம் உள்ளது. இதன் உறுப்புக் கல்லூரிகளில் ஒன்றாக, முராதாபாத்தின் ஹிந்து கல்லூரி உள்ளது. முஸ்லிம்கள் அதிகமுள்ள முராதாபாத்தில் அமைந்த இக்கல்லூரியில் பல மாணவிகள் அன்றாடம் தங்கள் வகுப்புகளுக்கு பர்தா அணிந்து வருவது வழக்கமாக இருந்துள்ளது.

இந்நிலையில் இக்கல்லூரியில் மாணவர்கள் அனை வருக்கும் 2023 ஜனவரி 1 முதல் புதிதாக சீருடை அறிமுகப் படுத்தப்பட்டது. இந்த நிலையில்  முஸ்லிம் மாணவிகள் சிலர் பர்தா அணிந்து கல்லூரிக்கு வந்தனர். இவர்கள் கல் லூரி காவலர்களால் நுழைவாயிலில் தடுத்து நிறுத்தப் பட்டனர். இதனால், அங்கு மாணவ, மாணவிகள் கூட்டம் கூடியது. இதில் ஒரு பகுதியினர் பர்தா அணிந்த மாணவி களை உள்ளே அனுமதிக்கும்படி காவலர்களிடம் வாக்கு வாதம் செய்யத் தொடங்கினர்.

தகவல் அறிந்த நிர்வாகம் தனது சார்பில் சில பேராசிரியர்களை அங்கு அனுப்பியது. அதேசமயம், கல்லூரி மாணவர் பேரவையின் சமாஜ்வாதி கட்சி பிரிவு மாணவர்களும் அங்கு வந்து பர்தா மாணவிகளுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தனர். இவர்களுக்கும், பேராசிரியர் தரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதங்கள் நிகழ்ந்தன. இதன் காட்சிப் பதிவுகள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வைரலாகின.கல்லூரி வாயிலில் நிர்வாகம் தரப்பில் பேராசிரியர் ஏ.பி.சிங் கூறும்போது, “கடந்த ஜனவரி 1 முதல் அனைவருக்கும் புதிய ஆடை விதிகள் அமலாகி உள்ளன. இதன்படி, எவரும் இனி கல்லூரி உள்ளே பர்தா அணிந்துவர அனுமதி இல்லை. புதிய விதிகளின்படி சீருடை அணியாமல் எவரையும் கல்லூரி வளாகத்திலும் அனுமதிக்கமுடியாது” என்று அறிவித்தார்.

இக்கல்லூரி பேராசிரியர்களில் ஒருவரான என்.யு.கான்  சமீபத்தில் கல்லூரிக்குள் நுழையும்போது அடையாளம் தெரியாத சிலர் அவரை தாக்கிவிட்டு தப்பினர். இவரை தாக்கியவர்கள் கல்லூரி மாணவர்கள் அல்ல, வெளியிலிருந்து வந்தவர்கள் என்பது வாயிலில் இருந்த சிசிடிவி பதிவுகள் மூலம் தெரியவந்தது. இதையடுத்து இனி பேராசிரியர்கள் மீதான தாக்குதல்கள் நடைபெறாமல் இருக்க, மாணவ, மாணவிகளுக்கு புதிய ஆடை விதிகள் அமலாக்கப்பட்டன.

எனினும் உ.பி.யில் ஆளும் பாஜகவின் கோட்பாடுகளை பின்பற்றி இதனை கல்லூரி நிர்வாகம் செய்திருப்பதாக மாணவர்களில் ஒரு பிரிவினர் புகார் எழுப்பினர்.

இப்பிரச்சினையில், முராதாபாத் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் உதவிக்கு அழைக்கப்பட்டனர். மாணவர்கள் தரப்பில் முஸ்லிம் மாணவிகள் பர்தா அணிந்து வர அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டது. இதை கல்லூரி நிர்வாகம் பரிசீலிப்பதாகக் கூறியது. இதையடுத்து, மாணவர்களை சமாதானப்படுத்தி காவல்துறையினர் போராட்டத்தை முடித்து வைத்தனர்.

No comments:

Post a Comment