அண்ணா தி.மு.க.விலிருந்து அண்ணா பெயர் நீக்கப்படுமா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, January 14, 2023

அண்ணா தி.மு.க.விலிருந்து அண்ணா பெயர் நீக்கப்படுமா?

தமிழ்நாடு சட்டப் பேரவையில் சேது சமுத்திரக் கால்வாய் திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும்; அத்திட்டம் நிறைவேற்றப் பட்டால் தென் மாவட்டங்களின் செல்வம் பெருகும், வேலையில்லா இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புக் கிட்டும்;  மீனவர்கள் பயன் அடைவர், சிறு குறு துறைமுகங்கள் வளர்ச்சி அடையும், தூத்துக்குடி துறைமுகம் முக்கியத்துவம் பெறும்; வெளிநாட்டுச் செலாவணி அதிகம் கிட்டும்; பாதுகாப்புக் கண்ணோட்டத்திலும் இந்தத் திட்டம் அவசியமானது என்று நீண்ட காலமாக தமிழ்நாட்டில் திராவிட இயக்கங்களால் வற்புறுத்தப்பட்டுள்ளது.

150 ஆண்டுக்காலமாக இந்தத் திட்டம் பேச்சளவிலேயே இருக்கிறது. இந்த நிலையில் ராமன் பாலம்  என்று ஒரு புதுக்கரடியை அவிழ்த்து விட்டு, திட்டம் அனேகமாக முடிவடையும் கால கட்டத்தில் நிறுத்தப்பட்டதற்குக் காரணமாக இருந்தவர்கள் மன்னிக்கப்படவே முடியாதவர்கள்.

இராமன் பாலம் என்பது கற்பனை; அது ஒரு மணல் திட்டுதான். இதுபோன்றவை ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலும் உள்ளன; இதைவிட நீளமாகவும் உள்ளன என்பது தான் அறிவியல் புவியியல் உண்மையாகும் என்று ஆய்வாளர்கள் அறுதியிட்டுக் கூறியுள்ளனர்.

கீழ்வேளூர் சட்டப் பேரவை உறுப்பினர் தோழர் மாலிக் (சிபிஎம்) ராமன் என்ற கற்பனைக் கதாபாத்திரத்தையும், புராணக் கதைகளையும் முன்னிறுத்தி, மக்கள் வளர்ச்சித் திட்டத்திற்கு முட்டுக்கட்டை போடலாமா என்று பேசியதற்கு - பிஜேபியினர் மூக்கால் அழுததைப் புரிந்து கொள்ள முடிகிறது. அ.இ.அ.தி.மு.க.வுக்கு என்ன வந்தது?

பிஜேபி எதிர்ப்பதில் ஆச்சரியம் இல்லை.

நூற்றுக்கணக்கான கோடி ஹிந்து மக்களின் நம்பிக்கை நாயகனான கடவுள் அவதாரமான ராமனைக் கற்பனைப் பாத்திரம் என்று கூறலாமா? அதை அவைக் குறிப்பிலிருந்து நீக்க வேண்டும் என்று கதறுகின்றனர் அ.தி.மு.க.வினர் என்றால் இந்தக் கூத்தை என்னவென்று சொல்லுவது!

கட்சியின் பெயரில் அண்ணாவை வைத்திருக்கிறார்களே இராமாயணம் பற்றியும்  - இராமன் பற்றியும்  அந்த அண்ணாவின் கருத்து என்ன என்று தெரிந்து கொண்டுள்ளனரா?

இந்த லட்சணத்தில் அண்ணா தி.மு.க. கொடியில் அண்ணாவின் படத்தை வேறு பொறித்துள்ளனரே!

9.2.1943 அன்று சென்னை சட்டக் கல்லூரி மண்டபத்தில் 'சொல்லின் செல்வர்' என்று அழைக்கப்பட்ட இரா.பி. சேதுப் பிள்ளையை எதிர்த்தும், 14.3.1943 அன்று சேலம் செவ்வாய்ப் பேட்டை தேவாங்க பாடசாலை மண்டபத்தில் நாவலர் சோமசுந்தரபாரதியாரை எதிர்த்தும்,  "ஆரியச் சுவடியான இராமாயணத்தையும், பெரிய புராணத்தையும் கொளுத்த வேண்டுமா? வேண்டாமா?" என்ற தலைப்பில் அறிஞர் அண்ணா பங்கேற்று விவாதப் போர் நடத்தவில்லையா?

இரண்டு விவாத அரங்கிலும் புகழ் பெற்ற புலமை வாய்ந்த பெரு மக்கள் இருவர் அவற்றை எரிக்கக் கூடாது என்று வாதிட்டும், அவை எரிக்கப்பட வேண்டும் என்பதற்கான காரணங்களை அறிஞர் அண்ணா எதிர்வாதம் செய்து வெற்றிக் கொடி நாட்டியதெல்லாம் அண்ணா பெயரைக் கட்சியிலும் கொடியிலும் வைத்திருப்பவர்கள் அறியாதது - அறியாமை மட்டுமல்ல; வெட்கக் கேடானதும் ஆகும்.

"வாலியை மறைந்திருந்து கொன்றது - சூத்திரன் சம்புகன் தவம் செய்தான் என்பதற்காக அவன் தலையைக் கொய்தது  - அரசு தனக்குச் சொந்தமானதல்ல பரதனுக்குத்தான் சொந்தமானது எனத் தெரிந்திருந்தும் தனக்கு முடி சூட்டு விழா வைத்ததை இராமன் ஒப்புக் கொண்டு இராச்சியத்தை ஆள இசைந்தது - இவை இராமனின் கொடுஞ் செயல்கள் அல்லவா?" (நூல்: தீ பரவட்டும்) என்று அறிஞர் அண்ணா எடுத்து வைத்த வினாக்களுக்கு எதிர் தரப்பில் பதில் இல்லையே!

இராமாயணம் என்பது ஆரியர் - திராவிடர் போராட்டத்தை மய்யமாக வைத்துப் புனையப்பட்டது.

ஆரியக் கலை வேறு, திராவிடக் கலை வேறு -  ஆரியக் கலை நம்பொணா கருத்துகளும் ஆபாசமும், நிரம்பியதுடன், திராவிட இனத்தை அடக்கவும் பண்பை அழிக்கவும் பயன்பட்டுப் பாமரரின் மனத்தைப் பாழாக்குகிறது என்ற குற்றச்சாட்டுகளை வைத்தாரே அறிஞர் அண்ணா.

இதை எல்லாம் படித்திருந்தால், தமிழ்நாடு சட்டப் பேரவையில் அண்ணா தி.மு.க.வினர், இராமன் ஒரு கற்பனைப் பாத்திரம் என்று கூறி, எங்கள் மனதைப் புண்படுத்தலாமா என்று ஒப்பாரி வைத்திருப்பார்களா?

உச்சக்கட்டமாக அண்ணா எடுத்துக் கூறி வாதிட்டாரே!

தமிழருக்குத் தமிழ் நெறி முறை, ஒழுக்கம், வீரம், கற்பு, காதல்  எனும் பண்புகளைத் தரக் கூடியன கலையாக இருத்தல் வேண்டுமேயொழிய, வேறோர் இனத்தைப் புகழ்வதும், அதற்கு ஆதிக்கமளித்து, தமிழ் மக்கள் மனத்திலே தன்னம்பிக்கையற்றுப் போகும் படியும் தமது இனத்தைப் பற்றியே தாழ்வாகக் கருதிக் கொள்ளும்படியான நிலைமையை உண்டாக்குவதுமான கதை, காவியம், இலக்கியம் என்பவைகளைக் கொளுத்த வேண்டுமென்று நாங்கள் கூறுகிறோம். தமிழ் என்பது தமிழ்மொழி பேசுவோர் என்பவரை மட்டுமல்ல நான் குறிப்பது, தமிழ் இனத்தை என்பதை நினைவூட்டுகிறேன்" என்று கூறி இராமாயணத்தை கொளுத்த வேண்டிய அவசியத்தை வலியுறுத்திய  அண்ணாவை மதிப்பதாக இருந்தால், தவறை உணர்ந்து இனிமேலாவது ஆரியக் கற்பனைக் கதைகளை அவதாரம் என்று கூறி "அய்யய்யோ! எங்கள் மனதைப் புண்படுத்துகிறார்களே!" என்று புலம்புவதை நிறுத்த வேண்டும்; அல்லது அண்ணாவின்பெயரைக் கட்சியிலிருந்தும், கொடியிலிருந்தும் அகற்றி விடுவதே மேல்!"

அண்ணாவை அவமதிக்க வேண்டாம்!

No comments:

Post a Comment