சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை உடனே செயல்படுத்த வலியுறுத்திய மதுரை திறந்தவெளி மாநாட்டில் தமிழர் தலைவர் ஆசிரியர் முழக்கம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, January 28, 2023

சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை உடனே செயல்படுத்த வலியுறுத்திய மதுரை திறந்தவெளி மாநாட்டில் தமிழர் தலைவர் ஆசிரியர் முழக்கம்!

 சேது சமுத்திரக்கால்வாய்த் திட்டத்தை அன்று ஆதரித்த பி.ஜே.பி.யும், அ.தி.மு.க.வும் இன்று எதிர்ப்பது ஏன்?

2024 மக்களவைத் தேர்தலில் பி.ஜே.பி.யை வீழ்த்தவேண்டும் சேது சமுத்திர கால்வாய்த் திட்டத்தை  செயலாக்க செத்து மடியவும் தயார்!

‘திராவிட மாடல்’ அரசு திட்டத்தை நிறைவேற்ற துணை நிற்கும்!

மதுரை, ஜன.28 சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை நிறைவேற்றிட பி.ஜே.பி.,யும், அ.இ.அ.தி.மு.க.வும் முன்பு இசைவு தந்தும், இன்று எதிர்ப்பது ஏன் என்றும், மக்கள் நலன் வளர்ச்சித் திட்டத்தை ராமன் பெயரைச் சொல்லி வீழ்த்துவது நியாயம்தானா என்றும், இந்தத் திட்டத்தை நிறைவேற்றி முடிக்க சர்வ பரித் தியாகமும் செய்யத் தயார் என்றும், 2024 ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் மக்களவைத் தேர்தலில் பி.ஜே.பி. தலைமையிலான ஆட்சியை வீழ்த்துவது அவசியம் என்றும், சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை நிறைவேற்றுவதில் ‘திராவிட மாடல்’ அரசு துணை நிற்கும் என்றும் - இது உறுதி! உறுதி என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை உடனே செயல்படுத்த வலியுறுத்தி திறந்தவெளி மாநாடு

நேற்று (27.1.2023)  மாலை மதுரையில் நடைபெற்ற சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை உடனே செயல்படுத்த வலியுறுத்தி நடைபெற்ற திறந்தவெளி மாநாட்டில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி நிறைவுரையாற்றினார்.

அவரது நிறைவுரை வருமாறு:

மதுரை மாநகர வரலாற்றில் 

ஒரு முத்திரை

பேரன்பிற்கும், பெருமதிப்பிற்கும் உரிய - சிறப் போடும், எழுச்சியோடும் நடைபெறக்கூடிய, மதுரை மாநகர வரலாற்றில் ஒரு முத்திரைப் பதிக்கக் கூடிய அளவில், நீங்கள் எல்லாம் பல மணிநேரம் அசையாமல் அப்படியே உட்கார்ந்திருக்கின்ற வரலாறு படைத் திருக்கிற இந்த மதுரை- சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை செயல்படுத்தவேண்டும் என்று வலியுறுத்தி நடைபெறுகின்ற இந்தத் திறந்தவெளி மாநாட்டில் வரவேற்புரையாற்றியுள்ள மதுரை மாநகர மாவட்டத் தலைவர் தோழர் முருகானந்தம் அவர்களே, திராவிட முன்னேற்றக் கழகப் பொருளாளரும், தி.மு.க. நாடாளு மன்றக் குழுத் தலைவருமான, மேனாள் கப்பல் போக்கு வரத்து துறைக்கான அமைச்சர் என்பதைவிட, நாளைக் கும் அதே துறைக்கு அமைச்சராக வந்து இதே சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை நிறைவேற்றக் கூடிய உறுதியை, நம்மிடத்திலே உறுதியாக ஏற்படுத்தியிருக்கிற எமது அருமைச் சகோதரர் மானமிகு மாண்புமிகு அருமைச் சகோதரர் செயல்வீரர், உருக்கமான உரை யாற்றி, வரலாற்றில் பதிவு செய்யவேண்டிய பல செய்தி களை ஓர் ஆட்சி, அந்த ஆட்சியினுடைய அங்கங்கள் நீதித்துறை, நிர்வாகத் துறை, நாடாளுமன்றத் துறை - எல்லாத் துறைகளையும் உள்ளடக்கிய செயல்பாடுகளை வரிசைப்படுத்தி ஓர் அறிவார்ந்த உரையை, விரிவுரையை, பொருளுரையை ஆற்றியிருக்கக் கூடிய சேது சமுத்திரக் கதாநாயகராக இருக்கக்கூடிய அருமைச் சகோதரர் டி.ஆர்.பாலு அவர்களே,

கலைஞர் அவர்கள் வற்புறுத்தியமைக்குக் காரணம் என்ன?

எந்த எண்ணத்தில் நம்முடைய முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள், இந்தத் துறையை, பிரதமரிடமிருந்து பாலு அவர்களுக்குத் தரவேண்டும் என்று வற்புறுத்திய மைக்குக் காரணம் என்னவென்றால், இப்பொழுது நமக் குத் தெளிவாகத் தெரியும், எவ்வளவு செயல்திறனோடு அவர்கள் அந்தப் பணியை செய்தார் என்று.

அதே நம்பிக்கையை 

இன்றைய முதலமைச்சரும் வைத்திருக்கிறார்!

அதே நம்பிக்கையை இன்றைக்குத் தம்மின் தம்மக்கள் அறிவுடைமை என்பதற்கேற்ப செயல்படுகின்ற எங்கள் ஒப்பற்ற ‘திராவிட மாடல்’ ஆட்சியின் முதலமைச்சராக இருக்கக்கூடிய இன்றைய முதலமைச்சர் அதே நம்பிக்கையை அவரிடத்திலே வைத்திருக்கிறார்; இந்தக் கூட்டணி யின்மீதும் வைத்திருக்கிறார்; மக்கள்மீதும் வைத்திருக்கிறார்.

தோழர்களே, நான் இங்கே அதிகம் பேசவேண்டிய அவசியமில்லை. காரணம், எல்லோரும் அருமையாகப் பேசிவிட்டார்கள். பேசாமலேயே, பேசியதாகக் கருதி, நம்முடைய அமைச்சர் மூர்த்தி அவர்கள் இவை அத்தனையையும் அங்கீகரித்திருக்கிறார்.

இப்படி பல்வேறு வகையில்  ஒரு வரலாற்று சிறப்புமிக்க மிகப்பெரிய ஆவணத்தைத் தந்திருக்கக் கூடிய இந்த மாபெரும் மாநாட்டில் கலந்துகொண் டிருக்கின்ற  தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் மாண்பமை ஆற்றலாளர் கே.எஸ்.அழகிரி அவர்களே.

வணிக வரித் துறை மற்றும் பதிவுத் துறை அமைச்சர் மாண்புமிகு  மூர்த்தி அவர்களே,

அதேபோல, நிதித்துறை கஜானா காலியாக இருந் ததையெல்லாம் மாற்றி இன்றைக்கு சிறப்பாக செயல் பட்டுக் கொண்டிருக்கக்கூடிய நம்முடைய நிதியமைச்சர் அன்பிற்குரிய பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் அவர்களே,

எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அவர்களே,

மாவட்டச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினரு மான சகோதரர் தளபதி அவர்களே,

இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி அவர்களே,

திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களே,

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணை செயலாளர் பெரியசாமி அவர்களே,

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொறுப்பாளர் பேராசிரியர் அருணன் அவர்களே,

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல்  ஆய்வு மய்ய செயலாளர் பொறியாளர் செந்திலதிபன் அவர்களே,

திராவிட முன்னேற்றக் கழக உயர்நிலை செயல் திட்டக் குழு உறுப்பினரும், மேனாள் அமைச்சருமான பொன்.முத்துராமலிங்கம் அவர்களே,

திராவிட முன்னேற்றக் கழக உயர்நிலை செயல் திட்டக் குழு உறுப்பினர் குழந்தைவேலு அவர்களே,

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்டச் செயலாளர் பூமிநாதன் எம்.எல்.ஏ., அவர்களே,

தமிழ்ப்புலிகள் நிறுவனத் தலைவர் நாகை திரு வள்ளுவன் அவர்களே,

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தணிக்கைக் குழு உறுப்பினர் வேலுச்சாமி அவர்களே,

அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் தோழர் பசும்பொன் பாண்டியன் அவர்களே

வல்லரசு பார்வர்டு பிளாக் அமைப்பின் நிறுவனத் தலைவர் அம்மாசி அவர்களே,

அகில இந்திய பார்வர்டு பிளாக் பொதுச்செயலாளர் பி.வி.கதிரவன் அவர்களே,

மற்றும் திராவிடர் கழக, அனைத்து இயக்கங்களைச் சார்ந்த, காங்கிரசு இயக்க, கூட்டணிக் கட்சி நண்பர்கள், விடுதலை சிறுத்தைகள் நண்பர்கள், இடதுசாரி நண் பர்கள் ஆகிய அத்துணை பேருக்கும் என்னுடைய  முதற்கண் வணக்கத்தையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தோழர்களே, திராவிடர் கழகம் முன்னெடுப்பதற்கு என்ன காரணம்?

தென்பகுதி செல்வம் கொழிக்கக் கூடிய பகுதியாக இருந்திருக்கும்

தென்பகுதியில், சேதுசமுத்திரக் கால்வாய்த் திட்டம் அன்றைக்கு அறிவிக்கப்பட்ட திட்டம் நிறைவேற்றப்பட்டு இருந்தால், அடிக்கல் நாட்டப் பட்ட திட்டம் முடிந்திருந்தால், மிகப்பெரிய அளவிற்கு மாறுதல்கள் வந்திருக்கும். அது சாதாரண மாறுதல் அல்ல; இன்றைக்கு ஒரு பெரிய வளமான தமிழ்நாட்டைப் பார்த்திருப்போம்; அதிலும் தென்பகுதி செல்வம் கொழிக்கக் கூடிய பகுதியாக இருந்திருக்கும்.

நம்முடைய இளைஞர்கள் இன்றைக்குச் செல் வம் சேர்க்க இன்னொரு நாட்டிற்கோ, துபாய்க்கோ போகமாட்டார்கள்; அந்த நாட்டில் இருக்கக் கூடியவர்கள் இங்கே வரக்கூடிய அளவிற்கு, அவர்களை ஈர்க்கக் கூடிய அளவிற்கு இங்கே திட்டங்கள் உருவாகி இருக்கும். திட்டமிட்டே இதனைத் தடுத்தார்கள். அதுதான் வேதனை! மிகப்பெரிய கொடுமை!

பிடிவாதங்கள் முன், வாதங்கள் என்ன செய்யும்?

வாதத்திற்குப் பொருள் உண்டு; வாதத்திற்குச் சிகிச்சை உண்டு. ஆனால், பிடிவாதத்திற்கு எதுவும் கிடையாது.

நாடு முழுவதும் இந்தப் பிரச்சாரம் 

போய்ச் சேருவதற்கு, இது ஒரு கருப்பொருள்!

வேண்டுமென்றே அவர்கள் தூங்குகின்றவர்கள் அல்ல; நம்முடைய டி.ஆர்.பாலு அவர்கள், நாடாளு மன்றத்தில்கூட இவ்வளவு அதிகமாகப் பேசியிருக்க மாட்டார்; ஆதாரங்களை அடுக்கி அடுக்கி சொன்னார். எல்லா கோணத்திலும் - சிலம்பம் எடுத்து விளை யாடுபவர்கள், எல்லாப் பக்கமும் சுழற்றுவதுபோல,  ஆழமான கருத்துகளை, ஆதாரப்பூர்வமாக எடுத்துச் சொல்லியிருக்கிறார். இது ஓர் ஆவணம் - சாதாரண மானதல்ல. நாடு முழுவதும் இந்தப் பிரச்சாரம் போய்ச் சேருவதற்கு, இது ஒரு கருப்பொருள்.

மக்களாகிய உங்களைப் பார்த்த நேரத்தில், எங்களைப் பார்த்த நேரத்தில் கொட்டித் தீர்த்துவிட்டார்!

அவ்வளவு அழகாக கருத்துகளை இந்தக் கூட்டத்தில் எடுத்துச் சொல்லியிருக்கிறார். அவ்வளவு வேதனை களையும் மனதில் அடக்கி வைத்திருக்கின்றார். அவர் எவ்வளவு வேதனைப்பட்டிருந்தால், மனதிற்குள் எவ்வளவு வேதனையோடு இருந்திருந்தால், மதுரை திறந்தவெளி மாநாடு எப்பொழுது வரும்? எப்பொழுது வரும்? என்று இருந்திருக்கிறார். இந்த மேடைக்குவந்து மக்களாகிய உங்களைப் பார்த்த நேரத்தில், எங்களைப் பார்த்த நேரத்தில் கொட்டித் தீர்த்துவிட்டார். எந்த அளவிற்கு அவர் தன்னை மறந்த நிலைக்குப் போயிருக்கிறார் என்று சொன்னால், ‘சாபம்’ கொடுக்கிற அளவிற்குப் போய்விட்டார்.

‘‘ஏண்டா, நீங்கள் ‘சாபம்’ கொடுத்தீர்களேயானால் செல்லும்; நாங்கள் ‘சாபம்’ கொடுத்தால் செல்லாதா? என்று கேட்கிறார்.

நாம் ‘சாபம்’  கொடுப்பதில்லை. நாம் கொடுப்பதற்குப் பெயர் சாபமல்ல; அவர்கள் கொடுக்கிற ‘சாபம்’  செல்லுடி யாகாது. இது ஆசையல்ல; அல்லது ஒரு சார்பு வாதம் அல்ல.

அடுத்த ஆண்டு 

வைக்கம் நூற்றாண்டு விழா!

உங்களுக்கெல்லாம் வைக்கம் வரலாறு தெரியும்; அந்த வைக்கம் வரலாற்றில், தந்தை பெரியார் அவர்கள் இரண்டாம் முறையாகவும் போய் போராடுகிறார். அதனு டைய நூற்றாண்டு விழா வரவிருக்கிறது; அதற்காகத்தான் நம்முடைய முதலமைச்சர் அவர்கள், அங்கே அமைச் சர்களை அனுப்பி, ஆய்வு செய்யச் சொல்லியிருக்கிறார். அதற்குரிய ஏற்பாடுகளை நம்முடைய நிதியமைச்சர் போன்றோர் கலந்து பேசி செய்யவிருக்கிறார்கள்.

அந்த வைக்கத்தில், இரண்டாம் முறையாக தந்தை பெரியார் போராடச் செல்லும்பொழுது, அங்கே இருக்கிற அதிகாரவர்க்கத்தினர் என்ன நினைத்தார்கள் என்றால், பெரியார் அவர்கள் சிறைச்சாலையைக் கண்டு அஞ்சமாட்டார் என்று தெரிந்துகொண்டவர்கள், வைக்கத்தப் பனிடமே மனு போடலாம் என்று எண்ணி, ஒரு யாகம் நடத்தலாம் என்று முடிவு செய்தனர்.

‘‘சத்ரு சங்கார யாகம்’’ நடத்தினார்கள்!

அந்த யாகத்திற்கு என்ன பெயர் தெரியுமா? ‘‘சத்ரு சங்கார யாகம்’’ - சத்ரு என்றால், பகைவன்; சங்காரம் என்றால், அழிப்பது.

யாகத்திலிருந்து ஒரு பூதம் கிளம்பும்; அந்த பூதம், எதிரியை அழித்துவிடுமாம்.

அதுபோன்று ஒன்று இருந்தால் இப்பொழுது மிகவும் வசதியாக இருக்கும்; மிக சுலபமாக எல்லோரையும் ஒரு கை பார்த்துவிடலாம். ஆனால், அது உண்மையில் லையே!

யாகத்திலிருந்து ஒரு பூதம் கிளம்பும்; அப்படி கிளம்புகிற பூதம், நேரே சென்று பெரியாரை அழித்துவிடும் என்று யாகம் செய்தார்கள்.

அப்படி அவர்கள் எண்ணம் நிறைவேறியிருந்தால், ஒரு நூற்றாண்டுக்கு முன்பே பெரியார் இறந்து போயிருப்பார்.

போராட்டம் நடத்தியதால், ஆறு மாதச் சிறைத் தண்டனை பெற்று, கல் உடைக்கிறார்; கை, கால்களில் விலங்கு போட்டார்கள்.

எதைப்பற்றியும் கவலைப்படாமல், பெரியார் அவர்கள் சிறைச்சாலையில் தூங்குகிறார்.

ராஜா நாடி இழந்து போச்சு!

சிறைச்சாலையில் பாரா சென்று கொண்டிருந்தனர் காவலர்கள்; திடீரென்று சங்கு சத்தம் கேட்டது; என்ன சத்தம்? என்று பெரியார் அவர்கள் மலையாளத்தில் கேட்கிறார்.

அந்தக் காவலர், ‘‘தெரியுமோ, ராஜா நாடி இழந்து போச்சு’’ என்று சொல்கிறார்.

அதற்கு என்ன அர்த்தம் என்றால், ராஜா செத்துப் போனார் என்பதுதான்.

யாகம் செய்தது யாருக்காக?

பெரியாரை சாகடிப்பதற்காக!

யாகத்திலிருந்து கிளம்பிய பூதம் எங்கே போயிற்று?

ராஜாவிடம் போயிற்று!

இதை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள், ‘நம்பிக்கை யாளர்களே!’ இதை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்!

யாகம் நடத்துகிற கலாச்சாரம் 

நம்முடைய கலாச்சாரம் அல்ல!

எங்கள் ஆள்கள் யாகம் செய்யவேண்டிய அவசியம் கிடையாது; டி.ஆர்.பாலுவோ அல்லது எங்கள் கூட்டணியில் உள்ளவர்களுக்கோ யாகத்தில் நம்பிக்கை யில்லை.

‘‘அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்

உயிர்செகுத்து உண்ணாமை நன்று’’

என்று யாகத்தை எதிர்த்த திருவள்ளுவரின் மண் இந்த மண்.

அந்தக் கலாச்சாரமே நம்முடைய கலாச்சாரம் கிடையாது.

ஆனால்,

‘‘அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீர்அன்றே

செல்வத்தைத் தேய்க்கும் படை’’ - என்றொரு குறள் மொழியும் உள்ளது.

ஏழ்மையில் இருக்கும் மக்கள் 

புதுவாழ்வு பெறவேண்டும் - 

பெருவாழ்வு பெறவேண்டும்!

அந்தத் திட்டத்திற்காக டி.ஆர்.பாலு அவர்கள் கஷ்டப்பட்டு இருக்கிறார்; மனதில் எவ்வளவோ அடக்கி வைத்திருக்கின்றார். ஏழ்மையில் இருக்கும் மக்கள் புதுவாழ்வு பெறவேண்டும்; பெருவாழ்வு பெறவேண்டும்; நவீன வாழ்வு பெறவேண்டும் என்பதற்காகத்தானே எல்லோரும் இங்கே வந்திருக்கிறார்கள்.

நம்முடைய வெற்றிக்கு அச்சாரம்தான் 

இந்தத் திறந்தவெளி மாநாடு!

நாம் வெற்றி அடைந்தே தீருவோம் - அதி லொன்றும் சந்தேகமேயில்லை - வெற்றி உறுதி!

அதற்கு முன் அச்சாரம்தான் இந்தத் திறந்தவெளி மாநாடு.

ஒரு சிறிய உதாரணம் சொல்கிறேன் - நம்மு டைய முதலமைச்சர் அவர்கள் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிவிட்டார்.

சேதுக் கால்வாய்க்கு எதிரானவர்கள், ‘‘இதுவரையில் நாங்கள் இழுத்துப் பிடித்துப் பார்த்தோம், ஆனால், முடியவில்லை.  ‘‘நாங்கள் பொய்தான் சொன்னோம்’ ’  என்பதை  தற்போது மறைமுகமாக ஒப்புக்கொண்டார்கள்; சுப்பிரமணிய சாமியின் முகவரி தெரியவில்லை.

அவர்களுடைய யோசனை எப்படிப்பட்டது என்பதைப் பாருங்கள்; இல்லாத பாலத்தை இடிக்காதே என்கிறார்கள். இருந்த அமைப்பை இடித்துவிட்டு, அந்த இடம் எங்களுடையது என்கிறார்கள்.

மேனாள் முதலமைச்சர் ஜெயலலிதா

ஆனால், அதுபோன்ற செயல்களை செய்தால்கூட, என்றைக்கும் அவர்களால் வெற்றி பெற முடியாது என்பதற்கு அடையாளம் என்ன? மேனாள் முதல மைச்சர் ஜெயலலிதா அவர்கள்தான் முதலில் ஆரம் பித்தார்கள்; ‘‘சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் நிறைவேறினால், கப்பல் ஓடாது; அந்தத் திட்டம் அறவே கூடாது’’ என்று சொன்னார்கள்.

ஏன்?

அன்றைய காலகட்டத்தில், அதற்கடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் வரவிருந்தது; அந்தத் தேர்தலில் தி.மு.க.வுக்கு மக்கள் வாக்களித்துவிடுவார்கள் என்ற காரணத்தினால்தான்.

அதுதான் பா.ஜ.க.வினுடைய நோக்கமும்.

இந்திய அரசமைப்புச் சட்டம் 

51-ஏ(எச்) சொல்வதென்ன?

வாஜ்பேயி, அருண்ஜெட்லி, சுஷ்மா சுவராஜ், திருநாவுக்கரசு என்று வரிசையாக சொன்னாரே நம்முடைய டி.ஆர்.பாலு அவர்கள்.

இந்திய அரசமைப்புச் சட்டம் 51 ஏ(எச்) என்ன சொல்கிறது?

to develop the scientific temper, humanism and the spirit of inquiry and reform

இந்தியாவினுடைய ஒவ்வொரு குடிமகனுடைய அடிப்படைக் கடமை என்பதுதான் அதனுடைய தலைப்பு.

அறிவியல் மனப்பான்மையைப் பெருக்கு; ஏன்? எதற்கு? எப்படி? எங்கே? என்று கேள்வி கேட்கின்ற உணர்வைத் தூண்டிவிடு. மனிதநேயம், சீர்திருத்த சிந்தனை.

இந்த நான்கும்தானே மிகவும் முக்கியம்.

சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் நிறைவேற நாங்கள் மக்களை சந்திப்போம். ஆதாரங்களை சொல்ல வேண்டுமானால், விடிய விடிய சொல்லலாம். 

சம்பூர்ண ராமாயணம் என்று அந்தக் காலத்தில் விடிய விடிய நாடகம் போடுவார்கள். நாங்கள் மறுத்துப் போட்டால், ஒரு நாள் அல்ல, உன்னுடைய 18 நாள் களையும் தாண்டி சொல்லக்கூடிய அளவிற்கு எங் களிடம் சரக்கு இருக்கிறது; அதிலொன்றும் சந்தேகமே யில்லை.

பாரதியார் பாடிய பாட்டைப் பாருங்கள் -

ஆதாம் பாலம் - சேது பாலம் என்று சொல்கிறார்களே -  அதற்கு என்ன காரணம்?

தமிழன் கால்வாய் - திராவிடன் கால்வாய்!

சேது சமுத்திரக் கால்வாய் என்று அது பொது வாக அழைக்கப்பட்டாலும்கூட, உண்மையில் அது தமிழன் கால்வாய்தான். அதைத்தான் ஆதித் தனார் அவர்களும் சொன்னார்.

இனிமேல் நாங்கள் தமிழன் கால்வாய் - திராவிடன் கால்வாய் என்றுதான் சொல்வோம்.

அந்தக் கால்வாய்த் திட்டத்தைப்பற்றி பாரதியார் பாடிய பாடலைப் பாருங்கள். நீங்கள் பாரதியாரைத்தானே கொண்டாடுகிறீர்கள்; காசி யாத்திரைக்குப் போனாலும், பாரதியாரைத்தானே தூக்கிக் கொண்டு போகிறீர்கள். எங்களுக்கு பாரதியார் எதிரியும் அல்ல; நண்பரும் அல்ல!

பாரதியாரின் பாடலைப் பாருங்கள்!

‘‘கடலினைத் தாவும் குரங்கும்

வெங் கனலிற் பிறந்ததோர் செவ்விதழ்ப் பெண்ணும்,

வடமலை தாழ்ந்தத னாலே

தெற்கில் வந்து சமன்செயும் குட்டை முனியும்,

நதியி னுள்ளேமுழு கிப்போய்

அந்த நாகர் உலகிலோர் பாம்பின் மகளை

விதியுற வேமணம் செய்த திறல் 

வீமனும் கற்பனை என்பது கண்டோம்.

ஒன்றுமற் றொன்றைப் பழிக்கும் 

ஒன்றில் உண்மையென் றோதிமற்

றொன்று பொய்யென்னும்

நன்று புராணங்கள் செய்தார் 

அதில் நல்ல கவிதை பலப்பல தந்தார்.

கவிதை மிகநல்ல தேனும்

அக்கதைகள் பொய்யென்று

தெளிவுறக் கண்டோம்!’’

இது எங்களுடைய பாட்டு அல்ல நண்பர்களே; பாரதியாருடைய பாட்டு.

இதுபோன்ற ஒரு பொய்யை, புரட்டை புட்டு வைத்து - கலைஞர் அவர்கள் கேள்விகள் கேட்டார் - புல்லாரெட்டி அவென்யூவில் கூட்டம் போட்டோம்.

ராமன் என்ன என்ஜினியரா?

பேராசிரியர் அருணன் அவர்கள் மிக அழகாக விளக்கிச் சொன்னார். ராமன் என்ஜினியரா? என்று கேட்டார்.

அதற்கு உரிய விளக்கத்தை நம்முடைய சகோதரர் டி.ஆர்.பாலு அவர்கள் சொன்னார், என்ஜினியரிங் படித்ததினால்தான், தானே திட்டம் வகுத்தேன் என்று.

இராமன் பாலம் என்று, பா.ஜ.க.வினரும், சங் பரிவார்களும் கூறுகின்றனவே என்று கேள்வி?

17 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு 

மனிதன் வாழ்ந்தானா?

இது ராமர் கட்டிய பாலம் என்று 17 லட்சத்து 25 ஆயிரம் ஆண்டுகளுக்குமுன் ராமன் கட்டினான் என்று கதைக்கிறார்கள். 17 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு மனிதன் வாழ்ந்தானா? என்பதற்கு என்ன ஆதாரம்?

இப்பொழுது அரசமைப்புச் சட்டம் 51-ஏ(எச்) பிரிவை நினைத்துப் பாருங்கள்.

 to develop the scientific temper, humanism and the spirit of inquiry and reform

இதில் என்ன மனிதநேயம்?

எங்கள் பிள்ளைகள் வேலையின்றி தவிக்கிறார்களே? எங்கள் படித்த பொறியாளர்கள் வேலையின்றி அலைகிறார்களே?

டி.ஆர்.பாலு அவர்கள் ஏன் 

இவ்வளவு வேதனைப்பட்டார்?

அடுத்தபடியாக பொருளாதாரம் சரியப் போகிறது என்று சொல்கிறார்கள்; அமெரிக்காவை நம்பி வேலைக்குப் போனவர்கள் மீண்டும் வரப் போகிறார்கள். நம்முடைய அரசுக்கே ஒரு பெரிய தலைவலி. ஏற்கெனவே கஜானா காலியாக இருக்கிறது. ஆகவே, இதுபோன்ற திட்டங்கள் வரவேண்டாமா? தென்மாநிலம் கொழிக்கவேண்டாமா?

டி.ஆர்.பாலு அவர்கள் ஏன் இவ்வளவு வேதனைப் பட்டார்; மனது நொந்து போய் சொன்னார்?

ஒருவன்,  தடை ஓட்டப் பந்தயத்தில், ஆயிரம் தடை களைக் கடந்து வேகமாக ஓடிவருகின்ற நேரத்தில், இன்னும் கொஞ்சம் தூரம்தான் கடக்கவேண்டி இருக் கிறது; அதைக் கடந்துவிட்டால், பரிசு தயாராக இருக் கிறது.

இன்னும் 23 கிலோ மீட்டர்தான் பணிகள் மீதமிருக் கின்றன; அந்த சமயத்தில் அந்தத் திட்டத்திற்குத் தடையாணை வாங்கினார்கள்.

எனக்கு நன்றாக நினைவில் இருக்கிறது. அந்தத் திட்டை உடைப்பதற்காக ஒரு கருவியைக் கொண்டு வந்து உடைத்தார்கள். அந்தக் கருவி உடைந்து போயிற்று.

உடனே சொன்னார்கள், ‘‘பார்த்தீங்களா? இராமர் கட்டிய பாலத்தை உடைக்க வந்தார்கள்; ஆனால், அந்த உடைக்கும் இயந்திரமே உடைந்துப் போய்விட்டது’’ என்றார்கள்.

அட மடப் பயல்களே, அது சிறிய இயந்திரம் - அதனால் உடைந்து போனது. அதற்குப் பிறகு பெரிய இயந்திரத்தை வைத்து, கடகடவென உடைத்து விட்டார்களே! 

டி.ஆர்.பாலுவின் கனவில் 

இராமன் தோன்றியிருக்கலாமே!

நியாயமாக இராமர் என்ற ஒருவர் இருந்திருந்தால், டி.ஆர்.பாலு அவர்களின் கனவில் தோன்றி, 

‘‘டி.ஆர்.பாலு அவர்களே, நீங்கள் நரகத்திற்குப் போய்விடுவீர்கள்; வீணாக நரகத்திற்குப் போகாதீர்கள். மோட்சத்தில் உங்களுக்கு இடம் தயாராக இருக்கிறது. என்னிடம் வந்துவிடுங்கள்; நான் கட்டிய பாலத்தை உடைக்காதீர்கள்’’ என்று சொல்லியிருப்பாரே!

சென்னையில் உரையாற்றும்பொழுது கலைஞர்தான் கேட்டார், ‘‘ராமன் பாலம் கட்டினான், ராமன் பாலம் கட்டினான் என்று சொல்கிறீர்களே, ராமன் என்ன என்ஜினியரா?’’ என்று கேட்டார்.

என்னுடைய தலையை 

நானே சீவி நீண்ட காலம் ஆயிற்று என்றார் கலைஞர்!

அதற்கு வடநாட்டில் உள்ள சில பைத்தியக் காரர்கள், ‘‘கலைஞரின் தலையை சீவி விடுவேன்’’ என்றார்கள்.

அப்பொழுதுகூட ‘திராவிட மாடல்’ ஆட்சி, எங்களுடைய முதலமைச்சர்கள் எப்படிப்பட்டவர் என்பதற்கு அடையாளம் - அதனால் ஆத்திரப்பட வில்லை; மற்றவர்கள் ஆத்திரப்பட்டு இருப்பார்கள். வெட்டுவாயா? இங்கே வந்து பார் என்றெல்லாம் சொல்லியிருப்பார்கள்.

ஆனால், கலைஞர் அவர்கள் மிகவும் அமைதியாக, ‘‘ஏண்டா, என்னுடைய தலையை நானே சீவி நீண்ட காலம் ஆயிற்று; நானும் சீவலாம் என்று பார்க்கிறேன், என்னாலேயே முடியவில்லையே?’’ என்றார்.

இதுதான் திராவிட இயக்கம்; ஈரோடு குரு குலத்தில் பெற்ற பயிற்சி என்பதை நன்றாகத் தெரிந்துகொள்ளுங்கள்.

முதல் கட்ட வெற்றியை நாம் அடைந்திருக்கிறோம். அதற்கு என்ன அடையாளம் என்றால், அந்த அம்மையாரின்  ஜெயலலிதாவின் தலைமையில் இருந்த அ.தி.மு.க. மிகப்பெரிய அளவிற்கு இந்தத் திட்டத்தை செய்யக்கூடாது என்று முட்டுக்கட்டை போட்டார்களோ; அதே அ.தி.மு.க. இன்றைக்கு நான்கு பிரிவாக இருந்தாலும்கூட, எல்லோரும் சேர்ந்து, சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் நிறைவேண்டும்; அதை எதிர்க்க மாட்டோம் என்று சட்டப்பேரவையில் ஓட்டுப் போட்டார்களே, அப்பொழுதே - டி.ஆர்.பாலு வெற்றி, தி.மு.க. வெற்றி, கூட்டணி வெற்றி பெற்றது என்பதற்கு அச்சார வெற்றியாகும் அது.

பா.ஜ.க.வும் ஒப்புக்கொண்டது!

அதற்கடுத்து பா.ஜ.க. என்ன சொல்கிறது - நாங்கள் சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்திற்கு எதிரியல்ல; அதை நிறைவேற்றவேண்டும்; ஆனால்,  இராமர் பாலம்தான் பிரச்சினை என்று சொன்னார்கள்.

அதற்கான பதிலை ஒன்றிய அமைச்சரே சொல்லி விட்டாரே! இராமன் பாலம் என்ற ஒன்று இருந்ததற்கான எந்தவிதமான ஆதாரமும் இல்லை என்று.

இப்பொழுது பிரச்சினை இராமனுக்கும், எங் களுக்குமா?

இல்லை.

பிரச்சினை என்பது வேலையில்லாத் திண்டாட்டத் திற்கும், வறுமை ஒழிப்பிற்கும்தான்.

சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்திற்காக 

ஒரு பெரிய இயக்கத்தை நடத்தவேண்டும்!

ஆகவே இளைஞர்களே, உங்களுடைய எதிர் காலத்தைக் கருதி, சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்திற்காக ஒரு பெரிய இயக்கத்தை நாம் நடத்தவேண்டும்.

பிப்ரவரி 3 ஆம் தேதி - அண்ணா நினைவு நாளன்று ஈரோட்டில் அந்தப் பிரச்சார இயக்கத் தைத் தொடங்கவிருக்கிறேன்.

யார் அடித்தாலும், அசையாத பாறை - 

‘திராவிட மாடல்’ ஆட்சி!

தமிழ்நாடு முழுவதும் ஒன்றரை மாதம் பிரச்சாரம். மாநில அரசுகளுடைய உரிமை - இங்கே ஆளுநரை வைத்துக்கொண்டு பொம்மலாட்டம் நடத்தலாம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். இது யார் அடித்தாலும், அசை யாத பாறை - ‘திராவிட மாடல்’ ஆட்சி எங்களுடைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையில் நடைபெறுகிறது.

ஆகவே, அப்படிப்பட்ட ஓர் அற்புதமான இடத்தில், கட்சியில்லை; ஜாதியில்லை; மதமில்லை.

நீங்கள் எந்தக் கட்சி? எந்த மதம்? எந்த ஜாதி? என்பது முக்கியமல்ல. எங்கள் பிள்ளைகளுக்கு வேலை வேண்டும்: படித்தவர்களுக்கு வேலை வேண்டும். எங்கள் பிள்ளைகளுடைய எதிர்காலம் ஒளிமயமாக இருக்கவேண்டும்.

நம் மக்களுக்கு முதலில்

முன்னுரிமை கொடுக்கட்டும்!

வெளிநாட்டவர்களுக்கெல்லாம் கதவு திறந்துவிடுகிற வேலை இருக்கக் கூடாது; முதலில் எங்களுக்கு. அவர்களுக்குக் கொடுக்கவேண்டாம் என்று நாங்கள் சொல்லவில்லை.

முதலில் வீட்டுக்காரன் சாப்பிடட்டும்; பசியேப்பக் காரர்கள் பசியாறட்டும்; புளியேப்பக்காரர்களை வெளியே நிறுத்துங்கள். இந்த மண்ணுக்குரியவர்கள் என்று சொல்லக்கூடிய நம் மக்களுக்கு முன்னுரிமை கொடுக்கும்  அளவிற்கு வரவேண்டும்.

40 இடங்களைக் கொடுத்தால், 

அது 400 ஆகப் பெருகக்கூட வாய்ப்பிருக்கும்!

எனவேதான், இதுவரையில் சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்திற்காக செலவழித்த பணம் வீணல்ல; மறுபடியும் ஆட்சி நிச்சயமாக வரும்; இங்கே நம்முடைய சகோதரர் திருமாவளவன் அவர்கள் மிக அழகாகச் சொன்னார்; 2024 ஆம் ஆண்டு நடைபெறப் போகும் நாடாளுமன்றத் தேர்தலை - சாதாரண பொதுத் தேர்தலாக நினைக்காதீர்கள் நண்பர்களே - ஒரே பதில் - நீங்கள் தெளிவாகச் சொல்லுங்கள் - தமிழ்நாட்டில் 40 இடங்கள் - அந்த 40 தொகுதிகளும் நமதே என்று சொல்லுங்கள். அந்த 40 இடங்களைக் கொடுத்தால், அது 400 ஆகப் பெருகக்கூட வாய்ப்பிருக்கும்.

இந்தியாவே, ‘திராவிட மாடல்’ ஆட்சியைத்தான் எதிர்நோக்கிக் கொண்டிருக்கின்றது!

இந்தியாவே, தமிழ்நாட்டை - ‘திராவிட மாடல்’ ஆட்சியைத்தான் எதிர்நோக்கிக் கொண்டிருக் கின்றது. அந்தக் காலகட்டம் மிக வேகமாக வந்து கொண்டிருக்கின்றது.

நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி அவர்கள், முகத்தில் அடித்தாற்போல சொன்னாரே - ‘‘நீங்கள் நூறு ஆண்டுகள் தலைகீழாக இருந்தாலும், தமிழ் நாட்டில் உங்களுடைய கனவு பலிக்காது’’ என்று.

அது கல்லில் செதுக்கப்பட்ட வார்த்தை; அனு பவத்தில், தமிழ்நாட்டின் வரலாற்றைப் புரிந்து கொண்டு அவர் பேசியிருக்கிறார்.

அத்துணை பேரும் 

கைகோர்த்து நிற்கின்றோம்!

அந்த வகையில் நண்பர்களே, இங்கே அத்துணை பேரும் கைகோர்த்து நிற்கின்றோம். இதில் கட்சியில்லை, ஜாதியில்லை, மதம் இல்லை. சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் நிறைவேறவேண்டும் என்றும் சொன்னார்.

கே.டி.கோசல்ராம்

பழைய நண்பர்களுக்குத் தெரியும் - கே.டி.கோசல்ராம் அவர்களை.

எப்பொழுது பார்த்தாலும் அவர் சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தைப்பற்றித்தான் பேசுவார்.

எனவேதான் நண்பர்களே, நம்முடைய இளைஞர் களே, நீங்கள் தயவு செய்து உங்களுடைய நேரத்தை இணைய தளம் மற்றவற்றில் வீணாக்காதீர்கள். உங்களுடைய எதிர்காலம் என்னாவது? 

தமிழ்நாடு முழுவதும் முதலில் மனித சங்கிலி போராட்டம் நடத்தவேண்டும்!

ஆகவே, சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் நிறைவேறவேண்டும். தென்னாட்டின் தென்பகுதி யில் இருக்கக்கூடிய இந்தப் பகுதி  செழிப்பாக வேண்டும்; அந்தத் திட்டம் நிறைவேறவேண்டு மானால், அதற்கு நாம் எல்லோரும், தமிழ்நாடு முழுவதும் முதலில் மனித சங்கிலி போன்று தொடங்கவேண்டும்; போராட்டங்கள் பல வடி வங்கள் எடுக்கவேண்டும்; அதை செய்வதற்கான ஆட்சி இன்றைக்குத் தயாராக இருக்கிறது.

அதை இன எதிரிகள் நன்றாக உணர்ந்திருக்கிறார்கள். அவர்களால் எளிதாக வெற்றி பெற முடியாது. இதனை மோடி அவர்களே தெரிந்திருக்கிறார்கள் என்பதற்கு, இன்றைக்கு வந்திருக்கிற ஒரே ஒரு செய்தியை சொல்லு கிறேன்.

இன்றைய ‘இண்டியன் எக்ஸ்பிரஸ்’ 

செய்தி!

இது இன்றைய ‘இண்டியன் எக்ஸ்பிரஸ்’ பத்திரிகை. அதில் மோடி அவர்களுடைய திட்டம் என்னவென் பதைப்பற்றி ஒரு செய்தி வந்திருக்கிறது.

Sub-Mandal & kamandal is 

Modi formula for 2024

NEW DELHI:  Prime Minister Narendra Modi is preparing a heady cocktail for the next general election in 2024. Along with the winning combination of Hindutva and welfarism, Modi plans to appropriate the reservation plank and deny the opposition one of its biggest election issues.

The PM had set up a four-member commission headed by Justice (Retd) G Rohini on October 2, 2017, to examine if the Other Backward Classes need to be sub-categorised to ensure equitable distribution of the reservation benefits. After 13 extensions, the commission’s term ends on January 31, 2023. Sources said the panel may submit its report anytime to the government.

The commission was formed because government data revealed that over 90% of the OBC quota benefits were cornered by about a dozen dominant castes such as Yadavs, Jats, Kurmis, Vokkaligas, Sainis, Thevars, Ezhavas etc. The OBC quota is meant for over 3,000 castes and communities categorised as backwards by the Mandal Commission.

Therefore, the commission recommends sub-classifications of the dominant castes to ensure a more equitable distribution of benefits. It also suggests dividing the 3,000 OBC communities into four categories with a fixed percentage of benefits going to each type from the overall 27% OBC reservation. Empowering smaller OBC communities may bring huge electoral benefits for the BJP. The party has already successfully experimented with the idea in Uttar Pradesh by creating a social coalition of non-Yadav OBC castes.

The biggest pushback to Modi’s BJP has come from the leaders of the dominant OBC castes. Among them are Lalu Yadav, his son Tejashwi Yadav and Nitish Kumar in Bihar, Akhilesh Yadav in UP, H.D.Deve Gowda and son H.D. Kumaraswamy in Karnataka from the non-Congress parties. From the Congress, most of the top leaders leading the charge against the BJP in the states belong to the OBCs — Bhupesh Baghel in Chhattisgarh, Ashok Gehlot and Sachin Pilot in Rajasthan, Bhupinder Singh Hooda in Haryana, D K Shivkumar and Siddaramaiah in Karnataka.

These opposition OBC leaders recently stirred the caste cauldron by demanding a nationwide caste census. They reject the 2006 National Sample Survey Organisation report, which puts the total OBC population at 41%, down from 52% mentioned in the Mandal Commission report of 1980. Nitish has already started a caste survey in Bihar. 

The Rohini report, therefore, may prove to be the BJP’s ace in caste politics. It has the potential to ignite a debate on the denial of benefits to the overwhelming number of OBC communities. It may, however, face criticism over the authenticity of the data used by it. Social justice, coupled with the opening of a grand Ram temple at Ayodhya, which is likely to witness a global gathering bigger than the Pravasi Bharatiya Diwas, and subsidised foodgrain for 80 crore people, is the plank on which the PM will enter the 2024 Lok Sabha elections.

முதலில் மண்டல் - சமூகநீதி. 

இந்த மண்ணே சமூகநீதி மண் - தமிழ் மண் - பெரியார் மண். இந்த மண், இந்தியாவுக்கே வழிகாட்டிய மண்.

தந்தை பெரியார் போராடியதால் - 

முதலாவது அரசமைப்புச் 

சட்டத் திருத்தம்!

தமிழ்நாடு, வகுப்புவாரி உரிமை ஈன்றது - திராவிட இயக்கம் தந்தது. நீதிக்கட்சி தந்தது. அன்று செல்லாது என்று அல்லாடிகளும் மற்றவர்களும் சொன்ன நேரத்தில், அது செல்லாது என்று தீர்ப்பு கொடுத்த பிறகு, பெரியார் தனித்துப் போராடினார்; அண்ணா நின்றார்; காமராஜர் நின்றார்; தமிழ்நாடு எழுந்தது. அதனுடைய விளைவு நேரு என்கிற ஜனநாயக வாதியும், பாபா சாகேப் அம்பேத்கர் அவர்களும் அன்று இருந்தார்கள். அதனுடைய விளைவாக முதலாவது அரசமைப்புச் சட்டத் திருத்தம் வந்தது. 

15(4) என்று வந்தது அல்லவா!

தமிழ்நாட்டிற்கு மட்டும் கிடைத்த சமூகநீதி - வடநாட்டிற்கும் கிடைத்தது; இந்தியா முழுமைக்கும் கிடைத்தது. பிற்படுத்தப்பட்டவர்கள் யார் என் பதை அப்பொழுதுதான் உணர்ந்தார்கள் நண்பர் களே!

யாம் பெற்ற உரிமை, இந்தியா முழுவதும் பெற்றது. இதுதான் ‘திராவிட மாடல்’ ஆட்சி என்பதை நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்.

மண்டல் அறிக்கையை அமல்படுத்தியதால் வி.பி.சிங் ஆட்சியை கவிழ்த்தனர்!

அன்றைக்குப் பார்த்தீர்களேயானால், சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்கள் மண்டல் அறிக்கையை அமல்படுத்தினார் என்பதற்காக, அவருடைய ஆட் சியை கவிழ்த்தார்கள் -  இதே ஆர்.எஸ்.எஸ்., இதே பா.ஜ.க.

அதற்குப் போட்டியாகத்தானே கமண்டல் - இராமர் கோவில் - பாபர் மசூதி இடிப்பு - ரத யாத்திரையெல்லாம்.

இன்றைக்கு என்ன நிலை தெரியுமா? அந்த வழியைப் பயன்படுத்தி - இப்பொழுது அந்த வேஷத்தைப் போட்டு, அந்தத் தூண்டிலைத் தூக்கி, வருங்காலத்தில் தங்களால் வெற்றி பெற முடியாது - வெறும் இராமர் மட்டுமே கைகொடுக்க மாட்டார் என்பது மோடிக்குத் தெரிந்துவிட்டது நன்றாக.

இங்கே இராமர் கதை செல்லாது; 

பிள்ளையார் கதை செல்லாது!

இராமர் கோவிலைக் காட்டி வடநாட்டில் ஓட்டு வாங்கலாம் - ஆனால், தென்னாட்டில் அதைப் பயன்படுத்த முடியாது; ஏனென்றால், இது திராவிட மண் - பெரியார் மண். இங்கே இராமர் கதை செல்லாது; பிள்ளையார் கதை செல்லாது. கும்பிடுவார்கள்; பக்தி இருக்கும் கோவிலில். ஆனால்,  பக்தி இருந்தாலும், திராவிட இயக்கம் என்று வந்தால், புத்தியும் இருக்கும்.

வடநாட்டிலும் பெரியார் போய்விட்டார்!

இதை அவர்கள் உணர்ந்து கொண்டார்கள். வட நாட்டிலும், இப்பொழுது மண்டல் போய்விட்டார்; வடநாட்டிலும் பெரியார் போய்விட்டார்.

பீகாரில், இராமன் யோக்கியதை என்னவென்று பேசுகிறார்கள். உத்தரப்பிரதேசத்தில் நேற்று பேசு கிறார்கள்.

ஏனென்றால், அது கற்பனை கதை என்று அவர்களுக்கும் தெரிந்துவிட்டது.

கற்பனை கதை என்ன?

மிகவும் சாதாரண அறிவுள்ளவன் கேட்பானே!

‘‘ஏண்டா, சீதையைக் காப்பாற்றுவதற்கு அனுமார் போனார் என்றால், இராமன் பாலம் கட்டியிருந்தால், அது வழியாகத்தானே போயிருப்பார்; ஏன் பறந்து போனார்?’’ என்று கேட்டால், அதற்குப் பதில் சொல்லமாட்டார்கள்.

இன்றைக்கு அவர்களும் சிந்திக்க ஆரம்பித்து விட்டார்கள்.

அதனுடைய விளைவுதான் நண்பர்களே, இப் பொழுது வெறும் இராமர் பயன்படமாட்டார்; வெறும் சந்நியாசிகள் பயன்படமாட்டார்கள்; வெறும் கமண்டல் பயன்படாது என்பதற்காக என்ன செய்கிறார்?

வித்தை காட்டி ஏமாற்றலாமா? என்று 

ஒரு திட்டம் போடுகிறார்

அந்தப் பக்கத்தில் இராமரைக் காட்டி கொஞ்சம் ஏமாற்றுவது; இந்தப் பக்கத்தில் ‘‘27 சதவிகிதம் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக வி.பி.சிங் கொடுத் தாரே, அதில், உங்களுக்கெல்லாம் கிடைக்க வில்லையா? அப்படியென்றால், உங்களுக்கெல் லாம் தனித்தனியாக கொடுக்கிறோம்’’ என்பது போன்று ஒரு வித்தை காட்டி ஏமாற்றலாமா? என்று ஒரு திட்டம் போடுகிறார்.

அதைத்தான் இன்றைய ‘‘இண்டியன் எக்ஸ்பிரஸ்’ நாளேடு செய்தி வெளியிட்டு இருக்கிறது.

நடக்குமா?

ஒரே ஒரு கேள்வி!

அடுத்தபடியாக நீதிமன்றத்தில் என்ன கேட்பார்கள்?

எந்த ஆதாரத்தைக் கொண்டு இதை செய்தீர்கள்; புள்ளி விவரம் இருக்கிறதா? என்று.

அதற்காகத்தான் நாங்கள் சொல்கிறோம், ஜாதி வாரியாகக் கணக்கெடு என்று. 

ஜாதி வாரிக் கணக்கெடுப்புக்கு 

ஒப்புக்கொண்டாரா, பிரதமர் மோடி!

பீகார் முதலமைச்சர், பா.ஜ.க.வினர் உள்பட பிரத மரிடம் கேட்டார்களே, ஜாதி வாரிக் கணக்கெடுப்பு வேண்டும் என்று.

ஒப்புக்கொண்டாரா, பிரதமர்?

இல்லை.

ஆகவே, ஜாதி இருக்கிறது. ஜாதியை ஒழிக்கின்ற வரையில், ஜாதி இருந்துதானே தீரும்.

திருமணத்தில் ஜாதி இல்லையா?

அந்தந்த ஜாதியில்தான் மணமகன், மணமகளைப் பார்க்கிறார்களே!

இன்னமும் பார்த்தீர்களேயானால், கலப்பு மணம் என்றால், கூலிப் படையை வைத்து தன் சொந்த மகளையே கொல்கிறார்களே - ஜாதி வெறி அந்த அளவிற்கு இருக்கிறது.

இன்னமும் ஜாதி வெறி இருக்கிறது!

குடிதண்ணீர்த் தொட்டியில் மலத்தைக் கலக்கின்ற அளவிற்கு காட்டுமிராண்டிகள் இருக்கிறார்கள். இன் னமும் அந்த அளவிற்கு ஜாதி வெறி இருக்கிறது.

இந்த நிலையில், ஜாதியை ஒழித்தவர்கள் போன்று தங்களைக் கருதிக் கொண்டிருக்கிறார்கள் என்றால், அதற்கு என்ன அர்த்தம்? தயவு செய்து நீங்கள் நினைத்துப் பாருங்கள்.

ஆகவே, இன்னமும் ஜாதி இருக்கிறது. அப்படி யானால், ஜாதி அடிப்படையில் கணக்கெடுப்பு எடுக்க வேண்டியதுதானே!

கணக்கெடுப்பின்போது என்னென்ன ஜாதி என்று குறிப்பெடுக்கவேண்டியதுதானே!

ஓட்டில் ஜாதி இருக்கிறது

திருமணத்தில் ஜாதி இருக்கிறது

சுடுகாட்டில் ஜாதி இருக்கிறது

பிறகு, கண்ணை மூடிக்கொண்டிருந்தால் என்ன செய்வது? நெருப்புக் கோழி மனப்பான்மையா?

அதை செய்யாமல், பிற்படுத்தப்பட்டவர்களுக்கு எப்படி தனியாக உள் ஒதுக்கீடு என்று கொடுப்பார்.

எங்களுடைய கேள்வி!

அடுத்த கேள்வியை நாங்கள் வைப்போம்!

27 சதவிகிதம் அல்ல -

மண்டல் அறிக்கை பரிந்துரை செய்தது எவ்வளவு சதவிகிதம் தெரியுமா? 

52 சதவிகிதம்தான்.

27 சதவிகிதம் அல்ல; 27 சதவிகிதம் என்பது நடைமுறைக்குத்தான். 50 சதவிகிதத்திற்கு மேல் போகக்கூடாது என்பதற்காகத்தான் 27 சதவிகிதம் என்று சொன்னார்கள்.

எஸ்.சி., எஸ்.டி., - 15 சதவிகிதம், 7.5 சதவிகிதம்

ஆக 23 சதவிகிதம் என்பது. 50 சதவிகிதத்திற்கு மேல் போகக்கூடாது என்று ஒரு வியாக்கியானம் சொன் னார்கள். அரசமைப்புச் சட்டத்தில் அப்படி இல்லை. இவர்களாக உண்டாக்கிக் கொண்டார்கள்.

மண்டல் அறிக்கை என்ன சொன்னது?

மண்டல் அறிக்கை என்ன சொன்னது -  52 சதவிகிதம் என்று எங்கள் பரிந்துரையானாலும், 50 சதவிகிதத் திற்குமேல் போகக்கூடாது என்று உச்சநீதிமன்றத் தீர்ப்பு சொல்லுகிற காரணத்தினால், தாழ்த்தப்பட்ட, பழங்குடியினருக்குஉள்ளதை அப்படியே வைத்துவிட்டு, அடுத்த படியாக 50 இல் 23 அய் கழித்துவிட்டால், பிற்படுத்தப் பட்டவர்களுக்கு 27. அப்படித்தான் 27 சதவிகிதம் வந்தது.

ஒன்றிய அரசின், மோடி அரசின், 

ஆர்.எஸ்.எஸின் அரசின் கணக்கில்  வருமான வரி செலுத்துபவர்கள் ஏழைகள்?

உயர்ஜாதியில் உள்ள பொருளாதாரத்தில் நலிந்த ஏழைகள் என்று சொல்லி 10 சதவிகித இட ஒதுக்கீட்டை கொடுத்திருக்கிறார்கள். பார்ப்பனர்கள் எல்லாம் ஏழைகள், உயர்ஜாதியில் உள்ளவர்கள் ஏழைகள் - ஒரு நாளைக்கு 2,333 ரூபாய் சம்பாதிப்பவர்கள் ஒன்றிய அரசின், மோடி அரசின், ஆர்.எஸ்.எஸின் அரசின் கணக்கில் ஏழைகள்? வருமான வரி செலுத்துபவர்கள் ஏழைகள்?

இன்றைக்கு அவர்களுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு. 50 சதவிகிதத்தைத் தாண்டிவிட்டது. 50 சதவிகிதத்தைத் தாண்டினால் பரவாயில்லை என்றார்கள். அவர்களுக்கு வசதி என்றால், சட்டம் எப்படியென்றாலும் வளையும்.

50 சதவிகிதத்தைத் தாண்டியாயிற்றே - எங்களுக்கு 52 சதவிகிதமாக்கு. அதிலிருந்து பிரித்துக் கொடு.

இந்தக் கேள்விகள் எழுமா? இல்லையா?

இது பெரியார் மண் - இது சமூகநீதி மண்!

ஆகவேதான், இது பெரியார் மண் - இது சமூகநீதி மண். இங்கே உங்கள் வித்தைகள் எடுபடாது.

ஆகவே, ‘‘முன்னே பார்த்தால் நாயக்கர் குதிரை; பின்னால் பார்த்தால் ராவுத்தர் குதிரை’’ என்று சொல்வது போன்று, அவர்களுடைய வித்தைகளைக் காட்டி இங்கே வெற்றி பெறலாம் என்று நினைக்கிறார்கள். அது ஒருக்காலும் முடியாது.

ஒன்றியத்தில் ஆட்சியை மாற்றவேண்டும்; 

அது மக்களால் முடியும்!

நிச்சயம், சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டங்கள் போன்றவை நிறைவேறவேண்டுமானால், ஒன்றியத்தில் ஆட்சியை மாற்றவேண்டும்; அது மக்களால் முடியும். மக்கள்தான் அதிகாரம் படைத்தவர்கள். அரசமைப்புச் சட்டத்தில் இருக்கிறது.

அதிகாரம் ªன்பது இந்திய மக்களாகிய நாம், நமக்கு நாமே வழங்கிக் கொண்டது என்பதுதான் அரசமைப்புச் சட்டம்.

மக்கள் மத்தியில் அதிகாரம் இருக்கிறது. ஆகவே தான், இதுவரையில், நாடாளுமன்றத்தில் பேசிய டி.ஆர்.பாலு அவர்கள், இன்றைக்கு மக்கள் மன்றத்தில் இவ் வளவு விரிவாகப் பேசவேண்டிய அவசியம் ஏற்பட்டது.

தமிழ்நாடு முழுக்க இந்த இயக்கத்திற்கு 

ஆதரவு கொடுங்கள்!

மக்களைப் பார்த்துச் சொல்லி, மக்களை ஒன்று திரட்டவேண்டும்; மக்கள் பெருந்திரளாக இன்றைக்கு வந்து ஆதரவு கொடுத்ததைப்போல, தமிழ்நாடு முழுக்க இந்த இயக்கத்திற்கு ஆதரவு கொடுங்கள்; எங்கு பார்த்தாலும் சேது சமுத்திரத் திட்டம், சேது சமுத்திரத் திட்டம் என்று ‘‘மீண்டும் சேது சமுத்திரத் திட்டம்’’  என்று அந்த சேது சமுத்திரத் திட்டம் ஒவ்வொரு வீட்டிற் குள்ளும் வரவேண்டும்; ஒவ்வொருவரின் பேச்சுக் குள்ளும் வரவேண்டும்; காதலியிடம் பேசும்பொழுதுகூட மண்டலைப்பற்றி பேசுங்கள் என்றோம் அன்று.

அதேபோன்று இன்று, தூங்கிக் கொண்டிருக்கும் உங்களைத் தட்டி எழுப்பினால், சேது சமுத்திரம் என்று நீங்கள் சொல்லவேண்டும். அந்த அளவிற்கு உங்களு டைய உணர்ச்சிகளைப் பெறுங்கள். நிச்சயமாக வெற்றி பெறுவோம்!

எங்கள் கலைஞர் தொடங்கியதை - 

எங்கள் ஸ்டாலின் முடிப்பார்;

‘திராவிட மாடல்’ ஆட்சி முடிக்கும்!

முன் வாயிலுக்குள் நுழைந்துவிட்டோம்; அடுத்து சில இடங்கள்தான்; நிச்சயமாக மீண்டும் பாலு அதை முடிப்பார்;  அதைத் தி.மு.க. முடிக்கும்; எங்கள் கலைஞர் தொடங்கியதை - எங்கள் ஸ்டாலின் முடிப்பார்.  திராவிட மாடல் ஆட்சி முடிக்கும்!

அதைப் பார்க்கக்கூடிய வாய்ப்பைப் பெறுவோம்.

தோழர்களே, கட்சி இல்லை - ஜாதி இல்லை - மதம் இல்லை; ஒரே வளர்ச்சி, வளர்ச்சிதான்.

அவர்களுடைய ஒன்றிய ஆட்சியில் 

வளர்ச்சியல்ல - தளர்ச்சிதான்!

இது ஒன்றும், பிரதமர் மோடி போன்று ‘‘சப்தா சாத்’ சப்கா விகாஸ்’’ என்று  சத்தம் போட்டு விட்டுச் செல்பவர்கள் அல்ல; விகாஸ் என்றால், வளர்ச்சி என்று அர்த்தம். அவர்களுடைய ஒன்றிய ஆட்சியில் வளர்ச்சி யல்ல - தளர்ச்சிதான்.

உங்களுடைய விகாஸ் என்ன ஆயிற்று? அதுதான் கேள்வி.

அதனால்தான், விகாஸ் என்பது இந்தப் பக்கம்; சாப் அந்தப் பக்கம்.

ஆகவேதான் நண்பர்களே, நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள்!

அத்தனைக் கைகளும் உயரட்டும்!

அனைவருக்கும் நன்றி!

பங்கேற்க வந்த தலைவர்களுக்கு நன்றி!

அத்தனைக் கைகளும் உயரட்டும்!

அத்துணைக் கைகளும் உயர்ந்த அளவிற்கு, இந்தப் பணி உயரட்டும்!

மீண்டும் மீண்டும் வாருங்கள்!

எதிர்க்கட்சி என்ற ஒன்று இல்லை.

இன்றைக்கும்கூட சேது சமுத்திரத் திட்டத்தை ஒருவரும் எதிர்க்கவில்லை; சட்டப்பேரவையிலும் எதிர்க்கவில்லை. அனைவரும் ஏற்றுக் கொண்டிருக் கிறார்கள்.

தமிழ்நாடே ஆதரித்து இருக்கிறது - 

செய்வோம்! 

அதற்காகவே செத்து மடிவோம்! 

எனவே, செய்வோம்! அதற்காகவே செத்து மடி வோம்! என்கிற உணர்ச்சியைப் பெறுங்கள், பெறுங்கள் என்று கேட்டு வாய்ப்பளித்த உங்களுக்கு நன்றி கூறி, விடைபெறுகிறேன்.

இவ்வளவு நீண்ட நேரம் இருந்த உங்களுக்கு, தலைவர்களுக்கு, அமைச்சர் பெருமக்களுக்குத் தோழர்களுக்கு நன்றி! நன்றி!! நன்றி!!

வாழ்க பெரியார்! வளர்க தமிழ்நாடு!

தமிழ்நாடு வாழ்க! தமிழ்நாடு வாழ்க!!

தமிழ்நாடு வாழ்க!!!

நன்றி, வணக்கம்!

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நிறைவுரை யாற்றினார்.

No comments:

Post a Comment