தந்தை பெரியாரின் குரலை ஒலித்த நேபாளம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, January 21, 2023

தந்தை பெரியாரின் குரலை ஒலித்த நேபாளம்

நேபாளத்தில் சி.பி.எம். மாவோயிஸ்ட் தலைவர் பிரசாந்தா கடந்த ஆண்டு டிசம்பர் 26ஆம் தேதி மூன்றாவது முறையாக பிரதமரானார். நேபாள காங்கிரஸ் தலைமையிலான தேர்தலுக்கு முந்தைய கூட்டணியில் இருந்து அதிரடியாக வெளியேறிய இவர், எதிர்க்கட்சித் தலைவர் கே.பி. சர்மா ஒலியுடன் கூட்டணி வைத்து பிரதமரானார். இதனைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில்  நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள 275 உறுப்பினர்களில் 138 உறுப்பினர்களின் ஆதரவு பிரசாந்தாவிற்கு தேவை. இந்நிலையில் வாக்கெடுப்பில் பங்கேற்ற 270 உறுப்பினர்களில் 268 பேர் பிரதமர் பிரசாந்தாவிற்கு ஆதரவாக வாக்களித்து இருந்தனர். இரண்டு பேர் அவருக்கு எதிராக வாக்களித்தனர்.இதனை தொடர்ந்து நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரசாந்தா வெற்றி பெற்று பிரதமராக தொடர்கிறார்.

இந்த நிலையில் அந்நாட்டின் ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும் மேனாள் அமைச்சருமான கேசவ் மான் சாஹக்கியா தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு நேபாள அரசியல் குறித்து பேட்டி அளித்தார்.

அப்போது அவரிடம் ஹிந்து ராட்டிரம் அமைக்கப்போவதாக இந்தியாவில் கூறுகிறார்களே என்ற கேள்வி எழுப்பப்பட்டது 

அதற்கு அவர் அளித்த பதில் சிறப்பானது.

"நேபாளத்தில் வலதுசாரிகள் மக்களாட்சி முறையை ஒழித்து விட்டு, மீண்டும் மன்னாராட்சியைக் கொண்டுவர குறுக்குவழியில் முயல்கின்றனர். அவர்களின் எண்ணம் இங்கே பலிக்காது, அதே போல்  இந்தியாவில் ஹிந்து ராட்டிரம் என்ற பேச்சு வெறும் கனவுதான்,

 இந்தியா உலகின் மிகப் பெரிய மக்களாட்சி நாடு, அங்கு ஒரு குறிப்பிட்ட மதத்தின் ஆட்சி - அது பெரும்பான்மையாக இருந்தாலும், அதிகார பலம் வாய்ந்த சிறுபான்மையாக இருந்தாலும், மதத்தின் ஆட்சியை அமைக்க முடியாது. 

 ஹிந்து ராட்டிரம் என்றால் அங்கு ராஜா இருக்கவேண்டும், ராஜாவைச் சுற்றி ஹிந்து வேதம் தெரிந்தவர்கள் இருப்பார்கள், அவர்கள் வைத்ததுதான் சட்டம், பெயரளவிற்கு மக்களாட்சி இருக்கும்,

 நேபாளத்தில் அப்படித்தான் இருந்தது,  ஆகையால் நாங்கள் மன்னராட்சியை ஒழித்தோம், இன்று மன்னரே இல்லை.  இனி இந்தியாவில் மன்னராட்சி என்பதோ அல்லது ஒருநபர் தலைமையில் ஆட்சி என்பதோ எக்காலத்திலும் சாத்தியம் ஆகாது.

 மேலும் ஹிந்து மதத்தின் ஆட்சி என்றால் அங்கே கட்டாயம் வர்ணாசிரம முறை இருக்க வேண்டும்; அது இல்லை என்றால், அது ஹிந்து ராட்டிரம் இல்லை என்று பொருளாகிவிடும்.

வர்ணாசிரம முறைப்படி ஆட்சி என்றால் ஒரு சாரார் மட்டுமே ஏவல் செய்ய வேண்டும்; ஒரு சாரார் மட்டுமே போர் புரியவேண்டும் - ஒரு சாரார் வருவாய் ஈட்டும் முறையை செய்ய வேண்டும். இவர்கள் செய்யும் அத்தனை செயல்களாலும் பயனடைந்து மேலே ஒருவர் அமர்ந்துகொண்டு சுகமாக வாழ்வார். இதுதான் ஹிந்து ராட்டிரம் 

இதனை நாங்கள் அனுபவத்தில் தெரிந்துகொண்டோம். 

 நேபாளத்தில் ஹிந்து ராட்டிரம் அமைந்ததால் தான் இன்று வரை நேபாளப்பெண்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். இன்னும் சில 10 ஆண்டுகள் ஆகும் - ஆண்களின் மனநிலைய மாற்ற! அதன் பிறகுதான் இங்கே பெண்களுக்கும் அதிகாரம் கிடைக்கும். 

இந்தியாவில் அப்படி அல்ல; 40 ஆண்டுகளுக்கு முன்பே இந்திராகாந்தி பிரதமர் ஆகிவிட்டார். இரண்டு பெண் குடியரசுத்தலைவர்கள், 10க்கு மேற்பட்ட பெண் முதலமைச்சர்கள், பெரிய பதவிகளில் பெண்கள் என அனைத்தும் பெரிதும் மாற்றம் கண்டு விட்டது, 

இப்போது ஹிந்து ராட்டிரம் பேசினால் நேபாளத்தைப் போன்று பெண்கள் அடிமைப்படுத்தப்படும் அபாயம் ஏற்படும், இதற்குப் பெண்கள் ஒப்புக்கொள்ளமாட்டார்கள். 

நேபாளத்தை இன்றும் ஹிந்து ராட்டிரம் என்று இந்தியாவில் சில அமைப்புகள் கூறுகின்றன.  அப்படி அல்ல, அது என்றோ முடிந்துபோன கதை! இங்கே மன்னர் இல்லை, வர்ணாசிரம முறை இல்லை. பெண்கள் கல்வி கற்கின்றனர். பதவிகளுக்கு வர முயல்கின்றனர். இதை ஹிந்து ராட்டிரம் என்று கூறுவது தவறு.

உலகின் எந்த நாடும் நேபாளத்தை ஹிந்து நாடு என்று  கூறவே கூறாது, காரணம் இங்கே மக்களாட்சி உருவாகிவிட்டது, மன்னராட்சி ஒழிந்து விட்டது, உலகில் எங்கெல்லாம் மன்ன ராட்சி நடக்கிறதோ அங்கே மதங்கள் இருக்கும்.

ஆகவே அங்கே சில அமைப்புகள்(இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ்) நேபாளம் ஹிந்து ராட்டிரம் என்று கூறுகின்றன. அது வடிகட்டிய பொய் ஆகும். சமத்துவ உலகில் மதரீதியிலான ஆட்சிக்கு இடமில்லை." இவ்வாறு தனது பேட்டியில் கூறினார்.

தந்தை பெரியார் குரல் நேபாளத்திலும் கேட்க ஆரம்பித்து விட்டதே! உலகில் ஒரே ஹிந்து ராஜ்யம் என்ற தப்பட்டையின் தோல் கிழிந்து தொங்கி விட்டது. இதிலிருந்தாவது சங்பரிவார் - பிஜேபி வகையறாக்களுக்குப் புத்தி வருமா?

No comments:

Post a Comment