சேலத்தில் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, January 10, 2023

சேலத்தில் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர்

 ஆளுநர் ஓர் அரசு ஊழியர் அவ்வளவே!

ஆளுநர் நடந்துகொள்வது அப்பட்டமான சட்ட மீறல்

ஒரு நொடிகூட ஆளுநராகத் தொடரத் தகுதியில்லை;

முதலமைச்சர் தீர்மானம் - ஆளுநர் பதவிக்கு அவமானம்!

சேலம், ஜன.10 ஆளுநர் ஓர் அரசு ஊழியர் அவ்வளவே! ஆளுநர் நடந்துகொள்வது அப்பட்டமான சட்ட மீறல்; ஒரு நொடிகூட ஆளுநராகத் தொடரத் தகுதியில்லை; முதலமைச்சர் தீர்மானம் - ஆளுநர் பதவிக்கு அவமானம்! என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்

நேற்று (9.1.2023) சேலத்திற்குச் சென்ற திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

அவரது பேட்டி வருமாறு:

செய்தியாளர்: முதலமைச்சர் உரையாற்றிக் கொண் டிருக்கும்போதே ஆளுநர் சட்டமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்திருக்கிறாரே?

தமிழர் தலைவர்: ஒரு மாநில அரசினுடைய ஆளுநர் என்பவர், தன்னிச்சையாக நடப்பதற்கு, அவர் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டிருக்கின்ற அரசமைப்புச் சட்டத்தில் எந்தவிதமான அதிகாரமும் அவர்களுக்கு அளிக்கவில்லை.

அவர் நடந்துகொண்டிருக்கின்ற முறை, ஏற்கெ னவே வெளியிலும் சரி, இன்றைக்கு சட்டமன்றத் தொடக்க நிகழ்வில், ஆளுநர் அவர்கள் பாதியி லேயே வெளியேறியது என்பது ஜனநாயகத்தைக் கொச் சைப்படுத்துவது - இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு அவமதிப்பு உண்டாக்குவது - தன்னுடைய கடமை யிலிருந்து தவறிய - ஓர் அரசு ஊழியருடைய குற்றத் திற்கு அவர் ஆளாகிறார்.

இதுவரையில், தமிழ்நாட்டின் நீண்ட நெடிய வரலாற்றில், இப்படி ஜனநாயகத்தைக் கொச்சைப் படுத்தக் கூடிய கீழ்த்தரமான ஒரு நிலைக்கு ஓர் ஆளுநர் சென்றதே கிடையாது.

ஆளுநர் உரையை எழுதுவது யார்?

பொதுவாக ஆளுநர் உரை என்பது, அவரால் எழுதப்படுவது அல்ல; அவர் படிக்கவேண்டிய, அரசமைப்புச் சட்டத்தின் முறையில், ஒரு தலைவர் என்ற முறையில், அவருடைய பெயரால் ஆட்சி அமைந்திருக்கிறது என்ற பெயரால், அமைச்சரவை, அதனுடைய கொள்கைகளை முடிவு செய்து, ஆளுநர் மூலம் அறிவிப்பதுதான் ஆளுநர் உரை.

உதாரணமாக, ஒன்றிய அரசில், அந்த அமைச்சரவை என்ன முடிவெடுக்கிறதோ அதைத்தான் குடியரசுத் தலைவர் நாடாளுமன்றத் தொடக்க உரையில் படிப்பார். அவர் சொந்தமாகக் கருத்துகளைச் சேர்ப்பதற்கோ, நீக்குவதற்கோ அவருக்கு எந்தவிதமான உரிமையும், அரசமைப்புச் சட்டத்தில் அளிக்கப்படவில்லை. இது நீண்ட காலமாக காப்பாற்றப்பட்ட மரபும் ஆகும்.

ஆனால், அந்தக் குறைந்தபட்ச மரபைக்கூட ஆளுநர் மீறியிருக்கிறார். திராவிட மாடல் ஆட்சி என்பதோ, தந்தை பெரியார், டாக்டர் அம்பேத்கர், பேரறிஞர் அண்ணா போன்றவர்களின் பெயர் களை விட்டுவிட்டுப் படிப்பது என்பது அதிகப்பிரசங்கித் தனமானது; தேவையற்ற ஒன்றாகும்.

இன்னுங்கேட்டால், ஆளுநர் உரை தமிழ்நாடு அமைச்சரவையால் தயாரிக்கப்பட்டு, சட்டப்பேர வையில் ஆளுநர் படிப்பதற்கு முன்பாக, ஆளுநருக்கு அனுப்பப்பட்டு அவருடைய அனுமதியையும் பெறு வார்கள். அப்படி அந்த உரையின்மீது ஆளுநருக்கு மாறுபட்ட கருத்து இருந்தால், தனிப்பட்ட முறையில், நேரிடையாக அரசாங்கத்திற்கு அறிவிக்கவேண்டும்; சட்டப்பேரவைத் தலைவருக்குத் தெரிவிக்கவேண்டும்.

இதில் எல்லாம் எனக்கு மாறுபட்ட கருத்து இருக்கிறது என்று சொல்லி, பிறகு அவர்களுக்குள் முடிவெடுக்கவேண்டும்.

அப்படி செய்யாமல், அதை விட்டுவிட்டுப் படிப்பது என்பது இருக்கிறதே, அது தவறான முன்மாதிரி; அது மட்டுமல்ல, அரசமைப்புச் சட்டத்தை மீறிய அவமதிப்புச் செயல். இதற்குரிய நடவடிக்கையை எடுக்கவேண்டும்.

இதுவரை தமிழ்நாடு சட்டப்பேரவையில், ஓர் ஆளுநர் இவ்வளவு மோசமாக நடந்துகொண்ட நிகழ்வு என்பது  கிடையவே கிடையாது.

ஆளுநர் செயல் - 

அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமே!

ஆளுநர் அவர்கள் அரசமைப்புச் சட்டத்தின்மீது எடுத்த உறுதிமொழிக்கு இது முற்றிலும் விரோதமாகும்.

முதலமைச்சர், அமைச்சர்கள் எப்படி அரசமைப் புச் சட்டத்தின்மீது உறுதிமொழி கூறி பதவியேற் கிறார்களோ, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 159 ஆவது பிரிவில் உள்ள பகுதியை உங்களுக்குப் படித்துக் காட்ட விரும்புகிறேன்.

I solemnly affirm will faithfully execute the office of Governor (or discharge the functions of the Governor) of (name of the State) and will to the best of my ability preserve, protect and defend the Constitution and the law and that I will devote myself to the service and well being of the people of (name of the State)

என்று இருக்கிறது. 

அதாவது தமிழ்நாட்டு மக்களுடைய நலனுக்காக நான் பாடுபடுவதற்கு உறுதியேற்கிறேன்; அதைக் காப்பாற்றுவேன் என்பதுதான்.

அமைச்சர்களுக்கும், மற்றவர்களுக்கும் பதவிப் பிராமண உறுதி மொழி வாசகங்கள், அரசமைப்புச் சட் டத்தை உருவாக்கியபொழுது, அந்த வாசகங்கள் வேறு.

ஆனால், ஆளுநர் என்று வரும்பொழுது,    well being of the people - மக்களுடைய நலனுக்கு என்று அதில் தெளிவாக இருக்கிறது. இதற்கு முற்றிலும் விரோதமாக அண்மைக்காலமாக தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் நடந்து வருகிறார்.

அவர் எந்த மாநிலத்தினுடைய ஆளுநராக இருக்கிறார் என்று கேட்டால், தமிழ்நாடு என்று அதற் குத் தெளிவான பெயர், சட்டப்பேரவையிலேயே பேரறிஞர் அண்ணா அவர்கள் காலத்தில் மாற்றப்பட்டு, அது ஒன்றிய அரசால் ஏற்கப்பட்டு இருக்கிறது.

ஆனால், இன்றைய ஆளுநர் ஆர்.என்.இரவி அவர்கள், அதை மாற்றி, தமிழகம் என்று சொல்ல வேண்டும்; தமிழ்நாடு என்று சொன்னால், பிரி வினையை உண்டாக்குவது என்று குறுக்குச்சால் விடுகிறார்.

இவையெல்லாம்கூட அவர் வெளியில் சொன்ன விஷயங்கள். ஆனால், சட்டப்பேரவையில், ஆளுநர் உரையை படிப்பது என்பது, தமிழ்நாடு அரசின் கொள்கை அறிவிப்பு. அதைத்தான் ஓர் ஆளுநர் படிக்கவேண்டும்.

பேரறிவாளன் வழக்கில், ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்!

பேரறிவாளன் வழக்கில், இந்த ஆளுநரைப்பற்றி உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருக்கிறது.

எப்படி இங்கிலாந்து அரசருக்கு முடிவெடுக்க வேண்டிய உரிமை தனியாகக் கிடையாதோ - எப்படி குடியரசுத் தலைவருக்கு முடிவெடுக்கின்ற உரிமை கிடையாதோ - அதுபோன்றுதான், மாநில ஆளுநர்களுக்கும் என்று உச்சநீதிமன்றம் தெளிவாகச் சுட்டிக்காட்டி, இவருக்குக் குட்டும் வைத்திருக்கிறது.

அப்படிப்பட்ட ஓர் அனுபவத்தை அவர் ஏற் கெனவே பெற்றும்கூட, இது திட்டமிட்ட ஒரு செயல். வேண்டுமென்றே ஒரு மோதல் போக்கை உருவாக்க வேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசு, இயல்பாக நடக்கக்கூடாது; அதற்கு மாறாக, தாங்கள் ஒரு போட்டி அரசாங்கத்தை நடத்தவேண்டும் என்று, இதில் மட்டுமல்ல; அரசாங்கத்தினுடைய கொள்கைகள், திட்டவட்டமான கருத்துகளுக்கு விரோதமாக நடந்துகொண்டிருக்கின்றார்.

எனவே, இது மிகப்பெரிய ஓர் அரசியல் போராட்டத் திற்கு அவரே வழிவகுக்கிறார். அவர் ஓர் ஆளுநராக நடந்துகொள்ளவில்லை. முழுக்க முழுக்க ஓர் ஆர்.எஸ்.எஸ்.காரராகத்தான் நடந்துகொண்டிருக்கிறார்.

ஆளுநர் ஓர் அரசு ஊழியர் - அவ்வளவே!

அவர் ஓர் அரசு ஊழியர் (பப்ளிக் சர்வண்ட்). நம்முடைய வரிப் பணத்தில் சம்பளம் வாங்கக்கூடிய ஒருவர். அவருக்கு அரசியலில் ஈடுபடவேண்டும் என்ற எண்ணம் இருந்தால், ஆளுநர் பதவியிலிருந்து விலகிவிட்டு, வேண்டுமானால், அண்ணாமலை அவர் களின் பதவிக்கு அவர் போகலாம்; அது அவருடைய விருப்பம். இல்லாவிட்டாலும், ஓர் ஆர்.எஸ்.எஸ். காரராக இருந்து செய்யலாம்; அது அவருடைய விருப்பம். தனிப்பட்ட முறையில், ஆர்.என்.இரவியாக அவர் இதுபோன்ற கருத்தைச் சொல்வதில், எங்களுக்கு ஆட்சேபம் இல்லை. அதை நாங்கள் சந்தித்துக் கொண்டிருப்போம்.

ஆனால், முழுக்க முழுக்க மக்களுடைய வரிப் பணத்தை சம்பளமாகப் பெறக்கூடிய ஒருவர், ஆளு நராக இருந்துகொண்டு, சட்டப்பேரவை மரபுகளை யெல்லாம் குழிதோண்டி புதைப்பது - அரசமைப்புச் சட்டத்தின்மீது எடுத்த உறுதிமொழிக்கு விரோதமாக நடந்துகொள்வது என்பது கண்டனத்திற்கு உரியதாகும். மக்கள் போராட்டம் வெடிக்கும்!

ஏற்கெனவே 22 மசோதாக்களை ஆளுநர் அவர்கள் நிலுவையில் வைத்திருக்கிறார். அந்த மசோதாக்களை அவர் திருப்பி அனுப்பவேண்டும்; அல்லது அதற்குரிய காரணங்களை அரசிடம் கேட்கவேண்டும். அப்படி அவர் செய்யவில்லை.

ஆன்-லைன் சூதாட்டத்தினால், ஒவ்வொரு நாளும் தற்கொலைகள் நடந்துகொண்டிருக்கின்றன. அதைப் பற்றி அவர் கவலைப்படாமல், அதற்கு மாறாக,  வேண்டு மென்றே இப்படிப்பட்ட பிரச்சினைகளை உருவாக்கு கிறார்கள். இது தமிழ்நாட்டில் மட்டுமல்ல, எங்கெல்லாம் பா.ஜ.க. ஆளவில்லையோ, அங்கெல் லாம் தங்களுக்கு வேண்டப்பட்டவரை ஆளுநராகப் போடவேண்டியது; அந்த ஆளுநர், மக்களால் தேர்ந் தெடுக்கப்பட்ட அரசுக்கு விரோதமாக நடந்துகொள் கிறார்கள். இதுதான் ஆர்.எஸ்.எஸின் திட்டமாக இருக் கிறது.

ஒரு நொடிகூட ஆளுநராகத் தொடரக்கூடாது!

தமிழ்நாட்டிற்குப் போடப்பட்ட ஆளுநர்தான் மிக மிக மலிவாக, அருவெறுப்பாக நடந்துகொள்கிறார். அவர் அவமதிப்பது ஜனநாயகத்தை - அரசமைப்புச் சட்டத்தை; தன்னுடைய கடமையிலிருந்து வழுவியிருக்கிறார் ஆளுநர்.

எனவே, ஒரு நாள்கூட, ஒரு நொடிப் பொழுதுகூட ஆளுநராக நீடிக்க அவருக்குத் தகுதியில்லை என்பது மக்களுடைய எண்ணம்.

செய்தியாளர்: குடியரசுத் தலைவருக்கு என்ன கோரிக்கை வைக்க விரும்புகிறீர்கள்?

தமிழர் தலைவர்: நாடாளுமன்றக் கூட்டத் தொடர் தொடங்கும்பொழுது,  பிரதமர் மோடி தலைமையில் உள்ள அமைச்சரவை, ஒரு உரையைத் தயாரித்து, குடியரசுத் தலைவருக்கு அனுப்புவர். அதை அவர் நாடாளுமன்றம் தொடங்கும்பொழுது, அப்படியே படிப்பார், அவ்வளவுதான்.

படிப்பதை பாதியில் விட்டுவிட்டுச் செல்வதோ, உரையில் இருப்பதை விட்டுவிட்டுப் படிக்கவோ முடியாது. அது பெரிய அளவில் இருப்பது.

முதலமைச்சர் தீர்மானம் - 

ஆளுநர் பதவிக்கு அவமானம்!

இது மாநில அளவில் நடப்பது. இதுவரையில் எந்த மாநிலத்திலும் இப்படி நடைபெற்றது இல்லை.

முதலமைச்சர் அவர்கள் தெளிவாக ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி இருக்கிறார் என்றால், ஆளுநருக்கு இதைவிட அவமானம் வேறு கிடையாது. இதையும் தாண்டி அவர் பதவியில் நீடிப்பது என்பது - அவர் மான, அவமானத்தைப்பற்றி கவலைப்படாமல் இருக்கிறார் என்பதைவிட, அரசமைப்புச் சட்டக் கடமையிலிருந்து அவர் தவறியிருக்கிறார்.

எனவே, அவரை இனி ஆளுநர் பதவியில் துளியும் கூட அனுமதிக்கக் கூடாது. மக்கள் போராட்டம் வெடிக் கும்.

செய்தியாளர்: தமிழ்நாடு அரசு, ஒன்றிய அரசின் திட்டங்களை வேறு கோணங்களில் இங்கே செயல் படுத்துகிறார்கள் என்று அரசு ஊழியர்களே குற்றம் சாட்டியிருக்கிறார்கள்; குறிப்பாக அவுட்சோர்சிங் முறையில் பணியில் அமர்த்தப்பட்டவர்கள், 115 அரசாணை வெளியிட்டு, அதை நீக்காமல் அப்படியே வைத்திருக்கிறது என்கிற குற்றச்சாட்டை வைத்திருக் கிறார்களே?

தமிழர் தலைவர்: அதற்கும், இதற்கும் சம்பந்தமேயில்லை. அதை சொல்வதற்கும், இந்த நிகழ்விற்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை.

அதைப்பற்றி விளக்கம் கேட்கவேண்டியது; அதைத் தெளிவாகச் சொல்லவேண்டியது அரசாங்கத்தினுடைய கடமை. அது தனிப் பிரச்சினை. எனவே, அதைக் கொண்டு வந்து இதில் குழப்பவேண்டிய அவசிய மில்லை. அது ஆளுநருடைய வேலையும் அல்ல.

ஒன்றிய அரசு என்ன திட்டத்தைச் சொல்லிற்று, மாநில அரசு என்ன செய்தது என்பது வேறு பிரச்சினை. அதற்குத் தெளிவான விளக்கம் சொல்வார்கள்.

ஆளுநர் என்பவர் கேள்வி கேட்கின்ற இடத்தில் இல்லை. சொந்தமாக இவருடைய கருத்தைச் சொல் வதற்கு ஆளுநருக்கு உரிமையில்லை; விட்டுவிட்டுப் படிப்பதற்கும் உரிமையில்லை.

ஒன்றிய அரசு என்ன செய்யவேண்டும்?

செய்தியாளர்: ஆளுநர்மீதான நடவடிக்கை எப்படி இருக்கவேண்டும்?

தமிழர் தலைவர்: ஆளுநர் மீதான நடவடிக்கை என்பது, ஒரு நேர்மையான ஒன்றிய அரசாக இருந் தால், தமிழ்நாட்டு ஆளுநரைத் திரும்பி அழைத்துக் கொள்ளவேண்டும். அல்லது ஆளுநர் ராஜினாமா செய்யவேண்டும்.

அவர்களுடைய திட்டம் என்னவென்றால், அய்ந்தாண்டுகள் இந்த அரசு நீடிக்கக்கூடாது; அதற்காக இப்படி ஒரு மோதல் போக்கை உருவாக்கவேண்டும் என்பதுதான் அவர்களுடைய நோக்கம்.

எனவேதான், ஒன்றிய அரசு இந்த ஆளுநரைத்  திரும்பப் பெறவேண்டும். இல்லையானால், மக்கள் எழுச்சி ஏற்படும்.

செய்தியாளர்: ஆளுநர் அவர்கள், அடுத்தடுத்து சர்ச்சைக்குரிய பேச்சுகளை பேசி வருவதின் பின்னணி என்ன என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

தமிழர் தலைவர்: ஆர்.எஸ்.எஸ். பின்னணிதான். தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சி நல்லாட்சியாக நடைபெறுகிறது.  திராவிட மாடல் ஆட்சி உலகப் புகழ் பெறுகிறது; இந்தியாவிலேயே முதல் முதலமைச்சராக எல்லோராலும், பத்திரிகைகளாலும் புகழப்படுகிறார்.

இந்தப் பெருமை அவருக்கு வரக்கூடாது; இந்த ஆட்சிக்குப் பெருமை வரக்கூடாது; இப்படியே நீடித்தால், தமிழ்நாட்டில் தாங்கள் காலூன்ற முடியாது என்பதற் காகத்தான் - இதுபோன்ற காரியங்களை செய்கிறார்கள். இது இங்கே மட்டுமல்ல, கேரள மாநிலத்தில் உள்ள ஓர் ஆளுநராலும் அரங்கேற்றப்படுகிறது; மேற்கு வங்காளத்திலும் நடைபெற்றது. தெலங்கானாவில் நடந்துகொண்டிருக்கிறது.

ஆனால், எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு, இவ்வளவு கீழிறக்கமாக தமிழ்நாட்டு ஆளுநர்தான் நடந்துகொண்டிருக்கிறார். ஆகவே, அவர் வெளி யேறவேண்டும்; அப்படி வெளியேறாவிட்டால், வெளியேற்றப்படக்கூடிய மக்கள் இயக்கம் நடக்கும். அந்த மக்கள் இயக்கத்தில் அத்துணை பேரையும் ஒருங்கிணைப்போம்.

ஆளுநர் நிர்ப்பந்தப்படுத்தப்படுகிறாரா?

செய்தியாளர்: பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர், ஆளு நரை, தமிழ்நாடு அரசும், முதலமைச்சரும் நிர்ப்பந்தப் படுத்துகிறார்கள் என்று குற்றம் சாட்டியிருக்கிறாரே?

தமிழர் தலைவர்: மாநில ஆளுநருக்குச் சொந்த மாக சிந்திக்கக் கூடிய உரிமையோ, கருத்தோ சட்டப் பேரவையின் உள்ளே கிடையாது என்பதுதான் அரசமைப்புச் சட்டம்.

எனவே, பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினரின் குற்றச் சாட்டு என்பது, அரசமைப்புச் சட்டம் தெரியாதவர்கள் பேசுகின்ற பேச்சாகும்.

நன்றி, வணக்கம்!

 - இவ்வாறு தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தி யாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

No comments:

Post a Comment