பதவிக்காக அல்ல - உதவிக்காக! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, January 23, 2023

பதவிக்காக அல்ல - உதவிக்காக!

21.1.2023 சனிக்கிழமை அன்று தஞ்சாவூரிலும் 22.1.2023 ஞாயிறு அன்று திருச்சி பெரியார்  மாளிகையிலும் முறையே நடைபெற்ற மாநிலம் தழுவிய மாணவர் கழக, இளைஞரணி பொறுப்பாளர்களின் கலந்துரையாடல் கூட்டங்கள் முத்தாய்ப்பானவை.

தொடர்ந்து இயக்கப் பணிகள் ஒன்றின் மேல் ஒன்றாக கடல் அலைகள் போல் நடந்துள்ளன.

கடந்த ஆண்டு குமரி முதல் சென்னை வரை நீட் எதிர்ப்பை முன்னிறுத்தி திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் தலைமையில் மாபெரும் எழுச்சிப் பிரச்சாரப் பயணம் நடைபெற்றது. (2022 ஏப்ரல் 3 முதல் ஏப்ரல் 25 முடிய).

சென்னையில் நடைபெற்ற நிறைவு விழாவில் சமூகநீதிக்கான சரித்திர நாயகர் - முதல் அமைச்சர் மானமிகு, மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி  ஸ்டாலின் அவர்கள் பங்கேற்று கழகத்தின் பணியைப் பாராட்டினார். 90 வயது இளைஞராக தமிழர் தலைவர் பணியாற்றும் பான்மையை பலபடப் பாராட்டினார் (27.4.2022).

தந்தை பெரியார் பிறந்த நாளையொட்டி மாணவர்களுக்கிடையே பெரியார் 1000 நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

88 ஆண்டு 'விடுதலை' என்னும் பேராயுதத்தின் ஆசிரியராக 60 ஆண்டுகளாகப் பணியாற்றும் கின்னஸ் சாதனையைப் போற்றும் வகையில் 60 ஆயிரம் 'விடுதலை' சந்தாக்களைத் திரட்டும் பணியில் கழகத் தோழர்கள் ஆற்றிய அரும்பணி - களப் பணி கண்ணில் ஒத்திக் கொள்ளத்தக்க ஒப்பரும் பணியாகும்.

பல தரப்பட்ட மக்களைச் சந்தித்து சந்தாவைத் திரட்டிய அனுபவம் கழகத் தோழர்களுக்குக் கிடைத்த மிகச் சிறந்த அனுபவம்.

கழக நிகழ்ச்சிகளுக்காக கடைதோறும், வீடுதோறும் கழகக் கொடியைக் கையில் ஏந்தி கழகத் தோழர்கள் புடைசூழ நன்கொடை திரட்டும் பணி என்பதுகழகத்தின் பாலபாடமாகும் - ஒரு வகையில் மிகச் சிறந்த கருப்புச் சட்டைக்காரர்களின் பிரச்சாரமும் இதற்குள்  அடக்கமாகும்.

கடந்தாண்டு கழகத் தலைவரின் 90ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா - சென்னை கலைவாணர் அரங்கில் முதல் அமைச்சரும் மற்றும் அனைத்துக் கட்சித் தலைவர்களும் ஆர்வமோடு பங்கேற்று, வெறும் பாராட்டுச் சம்பிரதாய விழாவாக அமையாமல், சமூகநீதி, மதச் சார்பின்மை, மாநில சுயாட்சி முதலியவற்றை முன்னிறுத்தும் முழக்க முரசாக அந்நிகழ்ச்சி நடைபெற்றது.

இடையில் எத்தனை எத்தனையோ போராட்டங்கள் - எழும்பூர் இரயில்வே நிலையத்தில் இடம் பெற்றிருந்த ஹிந்தி எழுத்து அழிப்புப் போராட்டம் உட்பட!

இப்பொழுது அடுத்த கட்டமாக கழகத் தலைவர் ஆசிரியர் அறிஞர் அண்ணாவின் நினைவு நாளில் (3.2.2023) தொடங்கி மார்ச்சு 10 வரை தமிழ்நாட்டில் தொடர் சுற்றுப் பயணத்தை மேற்கொள்ள இருக்கிறார். சமூகநீதி - 'திராவிடர் மாடல்' அரசின் சாதனைகள், வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகளை முன்னிறுத்தி இந்தப் பெரும் பயணத் திட்டம் மேற்கொள்ளப்பட உள்ளது. ஆங்காங்கே மற்ற கட்சித் தலைவர்கள் பங்கேற்கவும் உள்ளனர்.

இயக்கம் என்றால் இயங்கிக் கொண்டு இருப்பது என்று சொல்லுவார் தமிழர் தலைவர். இன்றைக்கு அது காரணப் பெயராகி விட்டது.

'90 வயதில் இந்த பயணமா?' என்று பல்வேறு கட்சித் தலைவர்கள் கேட்டுக் கொண்ட போதிலும் அவரது சிந்தனைக்கும், கால்களுக்கும் யாராலும் விலங்கு போட முடியாது என்பது தெரிந்த விடயமே!

இயக்கப் பணிகளின் ஈரம் காய்வதற்கு முன்பே அடுத்தடுத்து இயக்கப் பணிகளில் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.

அதன் அடிப்படையில்தான் கடந்த சனியன்று (21.1.2023) தஞ்சையில் மாணவர் கழக மாநில அளவிலான கலந்துரையாடலும், நேற்று (22.1.2023) ஞாயிறன்று திருச்சியில் மாநிலம் தழுவிய இளைஞரணி கலந்துரையாடலும் பிற்பகலில் வெகு எழுச்சியுடன் நடைபெற்றன.

இதற்குக் காரணமாகக் களப்பணியாற்றிய பொறுப்பாளர்களுக்குப் பாராட்டுகள் வாழ்த்துகள்!

வரும் 30ஆம் தேதி முற்பகல் மாநில மகளிரணி மகளிர் பாசறைக் கலந்துரையாடலும், பிற்பகலில் மாநில தொழிலாளர் அணி கலந்துரையாடலும் நடைபெற உள்ளன.

கடந்த இரு நாட்களிலும் நடைபெற்ற மாணவர் கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட்டங்கள் மிகவும் உற்சாகமும் எதிர்கால இயக்க நடவடிக்கைகளுக்கான தன்னம்பிக்கையையும் கழகத் தோழர்களுக்கு மட்டுமல்ல - தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களிடத்திலும் மகிழ்ச்சிப் பெருக்கு.

எனக்கு 90 வயது என்று மற்றவர்கள் சொல்லித் தான் தெரியும் - இயக்க இளைஞர்களின் எழுச்சியைப் பார்க்கும்போது வயது எனக்கொரு பொருட்டல்ல என்று இளந்தோழருக்கே உரிய உற்சாக மின்னோட்டத்தையும் காண முடிந்தது.

இளைஞரணி கலந்துரையாடலில் கழகத் தலைவர் எழுந்து நின்று கொடுத்த உறுதிமொழி முழக்கத்தை இளைஞரணி தோழர்களும் எழுந்து நின்று அந்த உறுதிமொழியை உரத்தக் குரலில் ஓங்கி ஒலித்த காட்சி கம்பீரமானது - இளம் பட்டாளம் புறப்பட்டு விட்டது - தமிழர் தலைவர் தலைமையில் தந்தை பெரியார் பணிமுடிக்க என்பதை உணர முடிந்தது.

நேற்று (22.1.2023) காலை துறையூரில் நடைபெற்ற வாழ்க்கை இணை நல ஒப்பந்த விழாவினை நடத்தி வைக்க கழகத் தலைவர் சென்றபோது, கருஞ்சட்டை இளஞ் சேனை அணி வகுத்து நின்ற காட்சி அற்புதமானது. 90 இளங் கருப்புச் சட்டைத் தோழர்கள் அணி வகுத்து நின்று, கழகத் தலைவரின் வயதைக் கணக்கிட்டு தலா ரூபாய் 100 அளித்து தங்களின் இயக்க கொள்கை  உணர்வின் ஆர்வத்தை வெளிப்படுத்திய காட்சி நெக்குருகச் செய்த கண் கொள்ளாக் காட்சியாகும்.

திராவிடர் கழக இளைஞரணியின் மண்டல முதல் மாநாடு துறையூரில் என்று கழகத் தலைவர் அறிவிக்கும் அளவிற்குத் துறையூர் துள்ளும் தோழர்களின் தோள்களாகப் பூரிக்கச் செய்தது.

வரும் மே மாதம் முதல் ஒவ்வொரு மாதத்திலும் ஒரு இளைஞரணி மண்டல மாநாடு என்று 4 முதல் 6 மாநாடுகள் வரை நடக்கும் என்று நேற்றைய இளைஞரணி கலந்துரையாடலில் தமிழர் தலைவர் அறிவித்தபோது, ஆரவாரம் கடல் அலைகளாகப் பொங்கி எழுந்த காட்சியை வார்த்தைக் குடுவைக்குள் சுருக்கி விட முடியாது.

கலந்துரையாடலில் ஒருவரி சொல் உதிர்ப்பு கூடியிருந்த ஒவ்வொருவர் உள்ளத்திலும் அழிக்க முடியாத ஓர் உயிர் ஓவியத்தைத் தீட்டியது.

இது பதவிக்குப் போகும் கட்சியல்ல - உதவிக்குப் போகும் கட்சி என்று உரைத்தாரே - அது ஏதோ வார்த்தையின் நேர்த்திச் சுவைக்கும் சொல்ல ழகுக்கும் என்று கருதிக் கடந்து போக முடியாது.

அதுதான் உண்மை! உண்மையிலும் உண்மை!! நம் இயக்க இளைஞர்கள் இதயத் துடிப்பின் ஒளி விளக்காக இதனைக் கருத வேண்டும். 

ஒரு சமூகப் புரட்சி இயக்கம் அதன் தோற்றுநர் மறைவிற்குப் பிறகு துடிக்கும் தோள்களாக இலட்சிய முறுக்கோடு பொங்கிப் பிரவாகிக்கிறது என்றால், அதற்குக் காரணம் தந்தை பெரியார் தம் கொள்கையின் தேவைப்பாடு, அந்த நிறுவனர் மறைந்த நிலையில் தலைமையேற்று நடத்திச் சென்ற தலை வர்களின் நேர்த்தியான அணுகுமுறைகளும், செயல்பாட்டு முறைகளும்தான். 

இந்தியாவில் தோன்றிய பல சமூக சீர்திருத்த இயக்கங்கள் அவற்றின் நிறுவனர்கள் கண்மூடிய நிலையில் மண் மூடிப்போனதையும், அவற்றிற் கெல்லாம் விதி விலக்காகத் திராவிடர் கழகம் முன்னிலும் துடிப்பு மிக்கதாகத் துலங்குவதற்கும் இதுதான் முக்கிய ஆணி வேர் கரணியமாகும்.

தமிழர் தலைவர் தலைமையில் தந்தை பெரியார் பணி முடிப்போம்! பணி முடிப்போம்!! என்று சூளுரைப்போம்! சுத்த சுயம் பிரகாசமாக ஒளி வீசச் செய்வோம்!

வாழ்க பெரியார்! வெல்க திராவிடர் கழகம்!!

No comments:

Post a Comment