துப்புரவுத் தொழிலாளர்களின் துயர் துடைக்கப்பட வேண்டும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, January 23, 2023

துப்புரவுத் தொழிலாளர்களின் துயர் துடைக்கப்பட வேண்டும்

தூத்துக்குடி டவுண், ஜார்ஜ் ரோடு, காந்திநகர் பகுதியில் T.S.No.1154/4  மற்றும் 1155/8 அமைந்துள்ள இடம் 1956-ஆம் ஆண்டு அரசாங்கத்தால் நில ஒப்படைப்பு மூலம் வழங்கப்பட்டு அதில் 97 குடும்பங்கள் வசித்து வந்தனர். காந்திநகர் என்பது அருந்ததியர் சமுதாய துப்புரவு தொழிலாளர்கள் வாழ்ந்து வரும் பகுதியாகும். அந்த இடம் "அரிஜன  நில ஒப்படைப்பு திட்டம்" என்பதன் அடிப்படையில் அருந்ததியர் துப்புரவுத் தொழிலாளர்களுக்கு அவர் களின் வளர்ச்சிக்காக அரசு ஒதுக்கிய இடமாகும். ஆனால் அறியாமையிலும், வறுமையிலும் வாழ்ந்து வந்த அந்த அருந்ததியர் சமுதாய மக்களை மிரட்டியும், அவர்களின் ஏழ்மையை பயன்படுத்தி கந்து வட்டிக்குப் பணம் கொடுத்தும், அடமானம் என்ற முறையில் அந்த மக்களுக்கு வழங்கப்பட்ட சுமார் 75% இடங்களை ஆதிக்க சக்திகள் சட்டத் திற்குப் புறம்பாக அபகரித்துள்ளனர். இந்த அருந்த தியர் சமுதாயத்திற்காக சட்டத்தின் படி ஒதுக்கப்பட்ட இடத்தை வேறு ஜாதியை சார்ந்தவர்களுக்கு விற்கவோ, அவர்கள் வாங்கவோ, அனுபவிக்கவோ முடியாது என்பது தான் அரசின் சட்டம்.

எனவேதான், ஆதிக்க சக்திகள் அடமானம்  என்ற பெயரில் அருந்ததியர் மக்களின் நிலங் களையும், உடைமைகளையும் சட்டத்திற்குப் புறம் பான முறையில் மிரட்டி அபகரித்துள்ளனர். இந்த மிரட்டலுக்குப் பயந்தும், வேறு வழியில்லாமலும் வறுமையின் காரணமாக சுமார்   75 விழுக்காடு அருந்ததியர் குடும்பங்கள் அவர்களுக்கு உரிமை யான இடங்களை விட்டு விட்டு சென்று விட்டனர். இந்த மிரட்டலுக்கும், வறுமைக்கும் இடையிலும் சுமார் 15 அருந்ததியர் குடும்பங்கள் மட்டும் ஆதிக்க சக்திகளின் வற்புறுத்துதலுக்கு அடி பணியாமல் காலி செய்ய மறுத்து வருகின்றனர். ஆனாலும் ஆதிக்க சக்திகள் அரசு அதிகாரிகளின் துணையோடு அம்மக்களை அவர்களது இருப்பிடங்களிலிருந்து காலி செய்யச்சொல்லி தொடர்ந்து மிரட்டி வருகின்றனர்.

இந்நிலையில், அருந்ததியர் இனமக்கள் நமது திராவிடர் கழகத்தைச் சார்ந்த மதுரை உயர்நீதிமன்ற வழக்குரைஞர் லிங்கராஜ் மூலம் தூத்துக்குடி பெரியார் மய்யம் வந்து எங்களுக்கு உதவ' வேண் டும் என  கேட்டனர். தந்தை பெரியார் இயக்கமான திராவிடர் கழகம் தாழ்த்தப்பட்ட அருந்ததியினர் போன்ற சமூகத்தில் மிகவும் ஒடுக்கப்பட்ட மக்க ளுக்காக தந்தை பெரியார் அவர்களால் தொடங் கப்பட்ட இயக்கம் என்றும் கண்டிப்பாக உங்களுக்கு வேண்டிய உதவிகளை செய்கிறேன் என்றும் அவர்களுக்கு ஆறுதல் கூறி அனுப்பி வைத்தோம்.

பின்னர். அதோடு நிறுத்திக்கொள்ளாமல் வழக்குரைஞர் லிங்கராஜ் ஏற்பாட்டில் 06.01.2023 அன்று நான் மற்றும்  தோழர் கட்டபொம்மன் ஆகியோர் அந்த மக்கள் வசிக்கின்ற காந்திநகர் பகுதியில் அவர்கள் குடியிருக்கும் குடிசை வீட்டுக் குள்ளே சென்று அவர்களின் துன்பகரமான நிலை யினை அறிந்தோம். அவர்கள் எம்மைக் கண்ட வுடன் தந்தை பெரியாரே உங்களை அனுப்பியுள்ளார் என்றும், தங்கள் குறைகள் களையப்பட்டு விடும் என்ற உணர்வோடு  தோழர்களுக்குப் பிஸ்கட், டீ கொடுத்து தங்களின் அன்பை பகிர்ந்து கொண்டனர். அப்பொழுது தூத்துக்குடி மாவட்டம், பெரியார் கூட்டமைப்பை சார்ந்த புரட்சிகர இளைஞர் முன்னணி பொறுப்பாளர் த.சுஜித் அவர்களும் எங்களுடன் கலந்து கொண்டார்.

அதோடு நிற்காமல் 07.01.2023 சனிக்கிழமை அன்று நமது தூத்துக்குடி பெரியார் மய்யத்தில் தந்தை பெரியார் கூட்டமைப்பை சார்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி, ஆதித்தமிழர் பேரவை, ஆதிதமிழர் கட்சி, தமிழ் புலிகள் கட்சி மற்றும் 15க்கும் மேற்பட்ட அமைப்புகளின் முக்கிய பொறுப் பாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம்  பாதிக்கப் பட்ட மக்களின் முன்னிலையில் நடைபெற்றது. அதில் பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பைச் சார்ந்த அனைத்து பொறுப்பாளர்களும் 09.01.2023 அன்று மாவட்ட ஆட்சித்தலைவரின் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பாதிக்கப்பட்ட 15 குடும்பங்களை சார்ந்த அருந்ததியர் சமுதாய மக்களோடு மனு கொடுப்பது என்றும், அவர்களை காலி செய்யச்சொல்லி மிரட்டினால் அவர்களுக்கு பின்னால் அனைத்து அமைப்புகளும் உறுதுணை யாக இருந்து போராடுவது எனவும் முடிவு செய் யப்பட்டது.

 விடுதலை இதழில் புதுக்கோட்டை மாவட்ட மக்களின் தீண்டாமை பிரச்சினைக்காக தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் அறிக்கையை படித்தேன். அதே நிலையில் தூத்துக்குடி காந்திநகர் அருந்ததியர் இனமக்களின் பிரச்சினைகளையும், தமிழ்நாடு அரசுக்கும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருக்கும் தெரியப்படுத்தி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து உதவிடவும் வேண்டி விரும்பி அந்த மக்கள் சார்பில் தங்களிடம் கேட்டுக்கொள்கிறோம்.

இந்த நிகழ்வுகளில் திராவிடர்  கழகத்தின் மாவட்டத்தலைவர் பால்ராசேந்திரம், மாவட்ட செயலாளர் முனியசாமி, கழக தகவல் தொடர்பாளர் திரவியம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

- சு. காசி

நெல்லை மண்டல தலைவர், 

திராவிடர் கழகம்

No comments:

Post a Comment