தமிழ்நாடு அரசின் நிதிநிலையையும் கணக்கில் கொண்டு ஆசிரியர்களும் - அரசும் சுமூக முடிவுக்கு வருதல் அவசியம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, January 2, 2023

தமிழ்நாடு அரசின் நிதிநிலையையும் கணக்கில் கொண்டு ஆசிரியர்களும் - அரசும் சுமூக முடிவுக்கு வருதல் அவசியம்!

*    ஆசிரியர்களின் 6 நாள் போராட்டம் முடிவுக்கு வந்தது

* ஆசிரியர்களின் குறைதீர்க்க முதலமைச்சர் குழு அமைத்திருப்பது வரவேற்கத்தகுந்தது

சம வேலை, சம ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஆசிரியர்கள் ஆறு நாள்கள் நடத்திய பட்டினிப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்த முதலமைச்சரின் அணுகுமுறை வரவேற்கத் தகுந்தது என்றும், தமிழ்நாட்டின் நிதிநிலையையும் கணக்கில் கொண்டு இருதரப்பினரும் சுமூக முடிவை எட்டவேண்டும் என்றும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத் துள்ள அறிக்கை வருமாறு:

ஊதிய முரண்பாட்டை நீக்கி, சம வேலைக்கு சம ஊதியம் வழங்கிடக் கோரி, இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தின் சார்பில், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பேராசிரியர் க.அன்பழகன் வளாகமாகிய பழைய டி.பி.அய். வளாகத்தில் ஆசிரியர்கள் தொடர் பட்டினிப் போராட்டத்தில் - கடந்த 6 நாட்களாக ஈடுபட்டு வந்தனர். அப்போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 100 ஆசிரியர்கள் மயக்கம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டனர் என்பதும் மிகுந்த வேதனைக்குரியதாகும்!

ஆசிரியர்கள் போராட்டமும், முதலமைச்சரின் மனிதநேய அறிவிப்பும்!

பள்ளிக்கல்வித் துறைச் செயலாளர், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் என இரண்டு முறை நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் எதிர்பார்த்த பலனிக்கவில்லை.

இந்நிலையில், சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று (1.1.2023) வெளியிட்ட அறிவிப்பில்,

‘‘சம வேலை, சம ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் போராடி வருகின்றனர். ஆசிரியர்களின் கோரிக்கை தொடர்பாக ஆய்வு செய்து, தக்க பரிந்துரைகளை அளிப்பதற்காக, நிதித் துறைச் செயலாளர் (செலவினம்) தலைமையில், பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநர் ஆகியோரை உறுப்பினர்களாகக் கொண்ட குழு அமைக்கப்படும். இந்தக் குழுவின் பரிந்துரைகளைப் பரிசீலித்து, தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிவு செய்துள்ளது'' என்று தெரிவித்துள்ளார்.

முதலமைச்சரின் இந்த அறிவிப்பை அடுத்து, ஆசிரியர்கள் தங்களது போராட்டத்தைத் திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளனர்.

'ஆசிரியர் இயக்க'ப் 

பொதுச்செயலாளரின் பேட்டி

இதுகுறித்து இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கப் பொதுச்செயலாளர் ஜே.ராபர்ட்,

‘‘எங்களது கோரிக்கையை பரிசீலிக்கக் குழு அமைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. கோரிக்கைக்கு விரைவில் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையிலும், முதலமைச்சரின் அறிவிப்பின் அடிப்படையிலும் கடந்த 6 நாள்களாக நடத்தி வந்த ‘உண்ணாவிரத'ப் போராட்டத்தை முடித்துக் கொள்கிறோம்'' என்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர்கள் கூட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு ஆசிரியர் சங்கங்கள் முதலமைச் சரின் அறிவிப்புக்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

போராட்டம் நடத்திய ஆசிரியப் பெருமக்களின் கோரிக்கையில் உள்ள நியாயங்கள் ஒருபுறம் இருந் தாலும், முன்பிருந்த அ.தி.மு.க. அரசு ஒப்படைத்த காலியான கருவூலத்திலிருந்து மாற்றத்தை அடைய பல்வேறு  முயற்சிகளில் ஈடுபட்டு, தி.மு.க. தலைமை யிலான தற்போதைய தமிழ்நாடு அரசு நிதிநிலையைச் சரிப்படுத்தி வருகிறது. இந்நிலையில், ஒன்றிய அரசு நமக்கு நியாயமாகத் தரவேண்டிய பங்கைக்கூட தராமல்  காலதாமதம் செய்து, நிதி நெருக்கடியை ஏற்படுத் துவதன்மூலம் ‘திராவிட மாடல்' ஆட்சிக்கு எதிரான மறைமுக ஒத்துழையாமையையும் நடத்தி வருவதை ஆசிரியப் பெருமக்கள் அறியாதவர்கள் அல்ல!

'திராவிட மாடல்' ஆட்சியின் தலைவர் - முதலமைச்சரின் விளக்கம்!

‘திராவிட மாடல்' அரசான தி.மு.க. அரசுபற்றி நமது முதலமைச்சர் அவர்கள் விளக்கிக் கூறும்போது,

‘‘திராவிட மாடல் ஆட்சி என்று அழைக்கப்படும் நமது தி.மு.க. ஆட்சி, அனைத்துப் பிரிவினர்களையும் உள்ளடக்கிய வளர்ச்சி, அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய வளர்ச்சி, ‘அனைவருக்கும் அனைத்தும்' என்ற கொள்கையைச் செயலாக்கிடும் ஆட்சி'' என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளார்!

எனவே, ஆசிரியப் பெருமக்களின் கோரிக்கை அரசின் கவனத்தை ஈர்த்து, இரண்டு முறை பேச்சு வார்த்தைகளுக்குப் பின், அதற்கென ஒரு தனி குழு போட்டு, அதன் கருத்துரையைப் பரிசீலனை செய்வோம் என்ற தமிழ்நாடு அரசு அறிவித்திருப்பதே இப் பிரச்சினையில் நமது ஆசிரியப் பெருமக்கள் 50 விழுக்காடு வெற்றியை எட்டி விட்டனர் என்பதன் அடையாளமாகும். இதைப் புரிந்து, போராட்டத்தை முடித்திருப்பது பாராட்டத்தக்கதாகும்.

யாருக்கு வெற்றி? யாருக்குத் தோல்வி? என்று பார்க்கவேண்டியதில்லை!

உண்மையிலேயே ஆசிரியர்கள், அரசு ஊழியர் கள்பால் கருணை உள்ளம் படைத்தவர், நம்முடைய மனிதாபிமானம் மிக்க முதலமைச்சர் என்ற காரணத்தால், அவர் அமைத்துள்ள குழுவின் பரிந்துரை - பரி சீலனைக்குக் கால அவகாசத்தைத் தந்து, ஆசிரியர் - அரசு ஆகிய இருவருமே யாருக்கு வெற்றி - யாருக்குத் தோல்வி என்று பார்க்காமல், இருதரப்புக்குமே வெற்றி (Win - Win - Situation) என்பதுபோல, மனிதாபிமானமும், நிதிநிலை பற்றிய புரிந்துணர்வும் கைகோர்க்கும் வகையில் ஒரு தீர்வு காணுவது முக்கியம்.

தமிழ்நாடு அரசின் நிதி நிலையையும் 

கவனத்தில் கொள்வது அவசியம்!

ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் நடை முறைக்குகந்த வகையில், அரசின் நிதிநிலைபற்றிச் சிந்தித்தும், அதேநேரத்தில், முரண்பாடுகள் களையப் படவேண்டும் என்ற ஆசிரியர்களின் கோரிக்கையில் உள்ள நியாயத்தின் பக்கத்தையும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களும் சிந்தித்தும் சிறப்பான தீர்வைக் காண அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்!

தற்போது சிறப்பாக நடைபெறும் ‘திராவிட மாடல்' ஆட்சி, மக்கள் பிரச்சினைகளைக் கேட்பதிலும், தீர்ப் பதிலும் மிகுந்த அக்கறை கொண்ட சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நடைபெறுகிறது. முந்தைய ஆட்சிகளைப் போன்று அடக்குமுறைகளாலும், கோளாக் காதுகளைக் கொண்டும் நடைபெறும் ஆட்சியல்ல.

பொருளாதார நிலையை அத்துணைத் தரப்பு மக்களும் புரிந்து, அது திரும்பவும் செழிப்பான நிலையை எட்டும் வரை ஒத்துழைப்புத் தருவது முக்கியம். எந்தப் பிரச்சினைக்கும் உடனே போராட்டக் களத்திற்குச் செல்லாமல், பேசித் தீர்ப்பதற்கு முன்னுரிமை கொடுப்பது சாலச் சிறந்தது. உடல்நலம் பாதிக்கப்பட்ட ஆசிரியப் பெருமக்கள் விரைந்து நலம் பெற விழைகிறோம்.

இந்த ஆட்சி அனைத்துத் தரப்பினருக்கும் நல்லாட்சி என்பதை அறியாதவர்கள் அல்ல நம் ஆசிரியப் பெருமக்கள்.

ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கையை அறிந்து குழு அமைத்த சமூகநீதிக்கான சரித்திர நாயகர் முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்குப் பாராட்டினைத் தெரிவித்துக் கொள்கிறோம்!

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

2.1.2023

No comments:

Post a Comment