பதிலடிப் பக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, January 30, 2023

பதிலடிப் பக்கம்

(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்., 

சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப் பதிலடிகளும் வழங்கப்படும்)

இராமன் பாலம் அல்ல - மணல் திட்டே!

மின்சாரம்

இராமாயணத்தைப் பற்றி 

இராஜாஜியின் கருத்து என்ன?

1930ஆம் ஆண்டு, சுதந்திரப் போராட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த போது, இராஜாஜி கூறிய கருத்துகள் பிற்காலத்தில், 'இராஜாஜியின் கட்டுரைகள்' என்ற தொகுப்பு நூலாக வெளிவந்தது. அதில், 'பொருளற்ற சண்டைகள்' என்ற தலைப்பில், 'இராமாயணம் நடந்ததல்ல; நன்மைக்கும் தீமைக்கும் உள்ள வேற்றுமைகளைக் காட்ட வால்மீகி முனி சிருஷ்டித்த கற்பனைதான்' என்று இராஜாஜி கூறியது, அதில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அது வருமாறு:

"உலக அனுபவத்தை வைத்து ஆராய்ந்து யோசித் தால், வால்மீகி ரிஷியானவர் இராமாயணத்தைப் பாடி யதற்கு முன்னமே - அதாவது புராதன காலந்தொட்டே, 'சீதாராம சரித்திரம்' எழுத்து வடிவம் பெறாமலே, பல நூற்றாண்டுகளாக மக்களிடையே வாய்வழிக் கதையாக வந்திருப்பதாகத் தோன்றுகிறது. கர்ண பரம்பரையாக முன்னமேயே இருந்த இராம சரிதத்தை எடுத்துக் கொண்டு அதற்கு வால்மீகி பகவான் நூல் வடிவம் கொடுத்தாற்போல் தோன்றுகிறது. அதனா லேயே கதையில் பல சிக்கல்கள் ஏற்பட்டது என்றும் ஊகிக்கலாம். வாலியைக் கொன்ற முறை, அதில் காணும் நியாயக் குறை, சீதையைக் காட்டுக்கு அனுப் பிய அநீதி என்பன போன்ற இன்னும் பல சிக்கல்கள்.

வால்மீகி ரிஷியின் காவியத்தில் இராமனுடைய நடவடிக்கைகளை, ஈஸ்வர அவதாரமாக வைத்து எழுதவில்லை. சில அதிகாரங்களிலும், இங்குமங்கும் சுலோகங்களிலும், தெய்வ அவதார விஷயத்தையும் சொல்லி வந்தாலும், மொத்தத்தில் வால்மீகி இராமா யணத்தில் காணப்படும் இராமன் ஒரு சிறந்த இராஜ குமாரன். வீர புருஷன். அபூர்வமான தெய்வீக நற் குணங்கள் பெற்றவன். அம்மட்டே; கடவுளாக வேலை செய்யவில்லை."

ஆன்மீகத்திலும், கடவுள் நம்பிக்கையிலும் அழுத்தமான ஈடுபாடு கொண்டவரான இராஜாஜி. வால்மீகி இராமாயணத்தை தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்ட பெருமை அவருக்குண்டு. மிகுந்த ஆய் வுக்குப் பிறகு, 'வால்மீகி இராமாயணம் வாய்வழியாக வந்த கதை' என்று அவரே கருத்து தெரிவித்து இருக்கிறார்.

- கே.எஸ்.அழகிரி 

(தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி)

- - - - -

பாரதியாரின் பாடலைப் பாருங்கள்!

"கடலினைத் தாவும் குரங்கும்

வெங் கனலிற் பிறந்ததோர் செவ்விதழ்ப் பெண்ணும்

வடமலை தாழ்ந்தத னாலே 

தெற்கில் வந்து சமன்செயும் குட்டை முனியும்

நதியி னுள்ளேமுழு கிப்போய் 

அந்த நாகர் உலகிலோர் பாம்பின் மகளை 

விதியுற வேமணம் செய்த திறல் 

வீமனும் கற்பனை என்பது கண்டோம். 

ஒன்றுமற் றொன்றைப் பழிக்கும் 

ஒன்றில் உண்மையென் றோதிமற் 

றொன்று பொய்யென்னும் 

நன்று புராணங்கள் செய்தார் 

கவிதை மிகநல்ல தேனும் 

அக்கதைகள் பொய்யென்று 

தெளிவுறக் கண்டோம்!" 

இது எங்களுடைய பாட்டு அல்ல நண்பர்களே; பாரதியாருடைய பாட்டு.

"குரங்குகள் பாலம் கட்டின" என்ற பொய்த் திரையைப் பாரதியாரே கிழிக்கிறார். "கவிதை மிக நல்ல தேனும், அக்கதைகள் பொய்யென்று தெளிவுறக் கண்டோம்" என்று ‘தேசியக்கவி' பாரதியாரே கூறியிருக்கின்றாரே என்ன பதில்?

- திராவிடர் கழகத் தலைவர் 

ஆசிரியர் கி.வீரமணி

- - - - -

ராமனே உடைத்து விட்டானே!

ராமன் கட்டினான் பாலம் என்கின்றனர். கம்ப ராமாயணக் கூற்றின்படி, அந்தப் பாலத்தை ராமனே உடைத்துவிட்டான் (ஆதாரம்: கம்பராமாயணம் மீட்சிப்படலம் 171ஆம் பாடல்)

மரக்கல மியங்க வேண்டி வரிசிலைக் குதையாற் கீறித் 

தருக்கிய விடத்துப் பஞ்ச பாதக ரேனுஞ் சாரிற் 

பெருக்கிய வேழு மூன்று பிறவியும் பிணிக ணீங்கி 

நெருக்கிய வமரர்க் கெல்லா நீணிதி யாவரன்றே

இராமன் புஷ்பகத்தின்மீது ஏறிச் செல்லுகையில் கடலில் அவ்விடத்து மரக்கலங்கள் இடையே இனிது செல்லுதற்பொருட்டு தனது வில்லின் நுனியாற் சேதுவைக்கீறி யுடைத்து வழிவிட்டார்.

மரக்கப்பல்கள் ஓட்டுவதற்கு அப்பாலம் தடையாக இருந்தது என்று கருதி. ராமனே அந்தப் பாலத்தை உடைத்துவிட்டான் என்று ராமாயணத்தில் கூறிய பிறகு, ராமன் பாலம் அங்கு இப்போது இருக்கிறது என்பது அறிவு நாணயமா? இராமனையே மறுப்ப வர்கள் இவர்கள் தானே!

அன்றைக்கு மரக்கப்பல் ஓட பாலத்தை இடிக்க நேர்ந்தது. இன்று பெரிய பெரிய கப்பல்கள் பயணிக்க மணல் திட்டாகிய அந்தப் பாலத்தை இடிக்க நேரு கிறது-அவ்வளவுதானே!

- திராவிடர் கழகத் துணைத் 

தலைவர் கலி.பூங்குன்றன்

ஜெயலலிதாவின் முரண்பாடு

"இந்திய தீபகற்பத்தைச் சுற்றி இதுவரை தொடர்ச்சி யான கப்பல் போக்குவரத்துக்கு ஏற்ற பாதைகள் இல்லை. மேற்கிலிருந்து கடல் வழியாக கிழக்கு நோக்கி கப்பல்கள் செல்ல வேண்டுமானால், இலங்கையைச் சுற்றிக் கொண்டுதான் செல்ல வேண்டியுள்ளது. இதற்குத் தீர்வாகத்தான் சேது சமுத்திரத் திட்டம். இத்திட்டத்தின்படி ராமேசுவரத்திற்கும், இலங்கையின் தலைமன்னாருக்கும் இடையில் உள்ள ஆடம்ஸ் பாலம் பகுதியில் கப்பல் போக்குவரத்திற்குத் தடையாக உள்ள மணல் மேடுகள், பாறைகள் இவற்றையெல்லாம் அகற்றி ஆழப்படுத்தி, கால்வாய் அமைப்பதுதான் சேது சமுத்திரத் திட்டத்தின் தலையாய நோக்கம்."

- 10.5.2001 அன்று அதிமுக வெளியிட்ட 

தேர்தல் அறிக்கையிலிருந்து

ஆடம்ஸ் பாலம் என்று தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்த அதே ஜெயலலிதாதான் ராமன் பாலம் என்றும், அது பதினேழு இலட்சத்து 25 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட ராமன் பாலம் என்றும் புதுக்கரடி விட்டார்.

- - - - -

ராமர் சேது பாலம் பற்றிய 

உறுதியான ஆதாரம் இல்லை!

மாநிலங்களவையில் 

ஒன்றிய அமைச்சர் அறிவிப்பு!

"விண்ணிலிருந்து படம்பிடித்து இராம் சேதுவை ஆராய்வதில் பல்வேறு கட்டுப்படுத்தும் காரணிகள் இருக்கின்றன. இராமாயணத்தின் வரலாறு பதினெட்டா யிரம் ஆண்டுகளுக்கு முந்தையது. இராம் சேது 56 கிலோ மீட்டர் நீளமுடையது. கடலுக்குள் காணப்படும் மணற்படுகை, இராம் சேதுவின் எஞ்சியிருக்கும் பகுதி என்று துல்லியமாகக் கூற முடியாது. இராம் சேது உருவான வரலாறு, அதன் காலம் ஆகியன பற்றி விண்கலங்களிலிருந்து எடுக்கப்படும் படங்கள் துல்லியமான தகவல்களைத் தருவதில்லை" என்று ஒன்றிய அமைச்சர் ஜிதேந்திர சிங். 2022 டிசம்பர் 23 அன்று மாநிலங்களவையில் கூறியுள்ளார்.

- (புதுடில்லி, 24 டிசம்பர் 2022) 

"இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே பழங்கால ராமர் சேது பாலம் இருந்ததாகக் கருதப்படும் பிராந்தியத்தின் செயற்கைக்கோள் படங்கள். தீவுகள் மற்றும் சுண்ணாம்புக் கற்களைக் கைப்பற்றியுள்ளன. ஆனால் அவை ஒரு பாலத்தின் எச்சங்கள் என்று துல்லியமாகச் சொல்ல முடியாது' என்று 22.12.2022  அன்று நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

"ஓரளவிற்கு, விண்வெளி தொழில்நுட்பத்தின் மூலம் துண்டுகள், தீவுகள், சில வகையான சுண்ணாம் புக் கற்கள் ஆகியவற்றைக் கண்டறிய முடிந்தது. அவை எச்சங்கள் அல்லது பாலத்தின் பாகங்கள் என்று துல்லியமாகச் சொல்ல முடியாது" என்று, ஒன்றிய விண்வெளித்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் மாநிலங்களவையில் தெரிவித்துள்ளார்.

- மதுரையில் நடைபெற்ற சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தும் திறந்த வெளி மாநாட்டில் எடுத்துக்காட்டப்பட்ட தகவல்கள் (27.1.2023)

இப்பொழுது சொல்லுங்கள் - இராமன் பாலம் என்பது பொய்தானே! மக்கள் நல வளர்ச்சிக்காக அந்த மணல் மேட்டை உடைத்து சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை செயல்படுத்துவதுதானே சரி!


No comments:

Post a Comment