ஆசிரியர் விடையளிக்கிறார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, January 14, 2023

ஆசிரியர் விடையளிக்கிறார்

கேள்வி 1: அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் அயோத்தியில் இராமர் கோவில் திறக்கப்படும் என்று உள்துறை அமைச்சர் சொல்லியிருப்பது எதைக் காட்டுகிறது?

-ச.சீனிவாசன், ஆரணி

பதில் 1: 

1.அவர்களிடம் வேறு குறிப்பிடத்தக்க சாதனை ஏதும் இல்லை (வேலைவாய்ப்பு - வளர்ச்சி - கல்வி போன்று). 

2. மதச்சார்பின்மை என்ற அரசியல் சட்டத்தின் கூற்றை நாங்கள் மதிப்பவர்கள் அல்ல; மிதிப்பவர்கள். 

3. 2024 பொதுத் தேர்தலுக்கு வடமாநிலங்களில் இராமரையே நம்புகிறோம் - முதலீடாக. 

- இப்படிப் பலப்பல அர்த்தங்கள் உண்டு.

---

கேள்வி 2: ஜோதிடர்கள் சொல்வது பொய் என்று தெரிந்திருந்தும், அவர்கள் சொல்வதை நம்புபவர்களைப்பற்றி என்ன சொல்கிறீர்கள்?

- பா.முகிலன், சென்னை

பதில் 2 : மூளை இருந்தும் பயன்படுத்தத் தெரியாத பாமரத் தன்மையர்கள் என்று அவர்கள் மீது பரிதாபப்படுவதைத் தவிர வேறு ஒன்றுமில்லை!

---

கேள்வி 3: தமிழ்நாடு அரசிற்குத் தொடர்ந்து இடையூறுகளைக் கொடுத்துவரும் தமிழ்நாடு ஆளுநரின் செய்கை தன்னிச்சையானதா?

-ஏ.நடராஜ், மதுராந்தகம்

பதில் 3 : இல்லை; நிச்சயமாக இல்லை. அதற்கு மேலிடத்தின் தூண்டுதல், கண் ஜாடை உண்டு - பின்னணி பற்றிய தகவல்கள்  நிச்சயம் வரும் - அம்பலப்படுத்துவோம்!

---

கேள்வி 4: வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்களிடம் உங்கள் ஏ.டி.எம். கார்டு எண்ணை சொல்லுங்கள்; நாங்கள் வங்கியில் இருந்துதான் பேசுகிறோம் என்று தொலைப்பேசியில் தொடர்புகொண்டு ஏமாற்றுகிறார்களே, இதைத் தடுப்பதற்கு வழியில்லையா?

- கி.இராமலிங்கம், செம்பியம்

பதில் 4 : தற்காத்து தற்கொண்ட கணக்கினைப் பாதுகாக்கத் தெரியாதவர்கள் நிலை பரிதாபத்திற்குரியது - உங்களுக்காக மற்றவர் உண்ண முடியுமா? எண்ண முடியுமா?

---

கேள்வி 5: தமிழ்நாட்டில் ஆட்சிதான் மாறியிருக்கிறது; ஆனால், அரசு அதிகாரிகள் பழைய ஆட்சியினரின் கட்டுப்பாட்டிலேயே இருக்கிறார்கள் என்று சொல்கிறார்களே, இது 'திராவிட மாடல்' ஆட்சிக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தாதா?

-கே. பழனிச்சாமி, பழனி

பதில் 5 : நிச்சயமாக. முதல் அமைச்சர் இதற்கு நிச்சயம் முடிவு கட்டுவார் என்று நம்புவோம்.

---

கேள்வி 6:  இன்றைய இளைஞர்கள் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி வருவது எதிர்கால  சந்ததியினரை பாதிக்காதா?

- மு.சுந்தரமூர்த்தி,  சேலம்

பதில் 6 : உறுதியாக. எனவேதான் கவலையோடும் பொறுப்போடும் அனைவரும் இணைந்து தீர்வுகாண வேண்டும்.

---

கேள்வி 7 : ஜாதி வாரிக் கணக்கெடுப்பை பீகார் அரசு தொடங்கியுள்ளதே, தமிழ்நாட்டிலும் அது சாத்தியப்படுமா?

- மு.செல்வம், கன்னியாகுமரி

பதில் 7 : நாமும் முயன்றால் முடியாதது ஏதுமில்லை. நிச்சயம் தமிழ்நாடு இதில் ஈடுபடுவது அவசியம்!

---

கேள்வி 8: கரோனா காலகட்டத்தில் தங்களை அர்ப்பணித்துக்கொண்ட ஒப்பந்த செவிலியர்களுக்குப் பணி நீட்டிப்புச் செய்ய தமிழ்நாடு அரசு தயங்குவது ஏன்?

- கி.விஜயகுமார், விழுப்புரம்

பதில் 8 : அரசு தயங்கவில்லை. அதில் நீதிச் சிக்கலும் சட்டச் சிக்கலும் இணைந்துள்ளன. நம் முதலமைச்சர் மனிதாபிமானி. நிச்சயம் விரைவில் முடிப்பார். யாரையும் பாதிக்கப்பட விடமாட்டார். தீர்வில்லாப் பிரச்சினைகள் என்று எதுவும் கிடையாது.

---

கேள்வி 9:  பி.ஜே.பி. அண்ணாமலையின் ஆட்டமும் - ஆளுநரின் ஆட்டமும் அளவு மீறிக்கொண்டிருக்கிறதே?

- ச.சரண்யா, சென்னை

பதில் 9 : 'பீலிபெய் சாக்காடும் அச்சிறும்' என்ற குறளை நினைவுப்படுத்தி அவர்களுக்கு சொல்லலாம். நுனிக்கொம்பருக்கு தவறான பொருள் கொண்டு விடக் கூடாது என்றே அக்குறளை நாம் கவனத்தில் கொள்ளவில்லை.

---

கேள்வி 10: சென்னையில் நடைபெறும்  புத்தகக் காட்சியில் திருநங்கையர்களுக்கு ஓர் அரங்கு ஒதுக்கப்பட்டு இருக்கிறதே, இந்நிலை தமிழ்நாடு முழுவதும் தொடருமா?

- க.ராஜூ,  சேலம்

பதில் 10 : தொடருவார்கள் என்று நம்புவோம்.


No comments:

Post a Comment