திராவிட மாடல் அரசுக்கு மேலும் ஒரு கிரீடம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, January 10, 2023

திராவிட மாடல் அரசுக்கு மேலும் ஒரு கிரீடம்!

பெண்களின் வேலைவாய்ப்பிற்கு உகந்த சூழல் கொண்ட நகரங்களின் பட்டியலில், இந்திய அளவில் சென்னை முதலிடம் பிடித்துள்ளது.  அதே போல் முதல் 10 இடங்களில் கோவை, மதுரை, திருச்சி போன்ற மாநகரங்களும் இடம் பெற்றுள்ளன. 

"பெண்கள் பணிபுரிபவர்களாக இருந்தாலும் சரி, கல்லூரியில் படிக்கிறவர்களாக இருந்தாலும் சரி, அவர்கள் எங்கு சென்றாலும் பாதுகாப்பாக உணர வேண்டியது அவசியம். 2022ஆம் ஆண்டு நிலவரப்படி, இந்தியாவில் வாழும் மக்கள் தொகையில் 48.65% பெண்கள் உள்ளனர். இப்போது, இந்தியாவில் ஒரு பெண்ணாக இருப்பது என்பது பாதுகாப்பின் அடிப் படையில் பல்வேறு சவால்களைக் கையாள்வதாகும். நாட்டின் எதிர்காலத்தை பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் வடிவமைப் பதில் பெண்கள் முக்கிய பங்கு வகிக்கும் நிலையில் இது கெட்ட வாய்ப்பாகும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அவர்கள் தகுதியான பாதுகாப்பைப் பெற வேண்டும். பெண்களுக்குத் துப்பாக்கிப் பயிற்சியையும் அனுமதியையும் தர வேண்டும் என்று திராவிடர் கழகம் தீர்மானம் நிறைவேற்றியது.

இன்று, எண்ணற்ற பெண்கள் வேலை அல்லது கல்விக்காக தங்கள் சொந்த ஊரை விட்டு வெளியேறி, நாட்டின் பல்வேறு பகுதிகளுக்குச் செல்கிறார்கள். இது பாதுகாப்பு பிரச்சினைகளில் கவனம் செலுத்துவதை அவசியமாக்குகிறது. எனவே, நீங்கள் நிரந்தரமாக ஒரு புதிய நகரத்திற்குச் செல்ல விரும்பினால் அல்லது தனிப் பயணியாகப் பயணிக்க விரும்பினால், நகரம் எவ்வளவு பாதுகாப்பானது என்பதை முதலில் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த நிலையில் புனேவில் உள்ள 'அவடார்' குழுமம் (Avtar Group) எடுத்த ஆய்வறிக்கையில் பெண்களின் வேலைவாய்ப்பிற்கான சிறந்த நகரங்கள் குறித்து, 111 நகரங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்களின் பட்டியலில், சென்னை முதலிடம் பிடித்துள்ளது.

புனே, பெங்களூரு, அய்தராபாத் நகரங்கள் அடுத்தடுத்த இடங்களை பிடித்த நிலையில், கோவை, மதுரை நகரங்களும் முதல் தர வரிசையில் தடம் பதித்தன. அதேபோல, 10 லட்சத்திற்கும் குறை வான மக்கள் தொகை கொண்ட நகரங்களுக்கான பட்டியலில், திருச்சி, வேலூர், ஈரோடு, சேலம், திருப்பூர் ஆகிய நகரங்கள் முதல் 5 இடங்களை பிடித்துப் பெருமை சேர்த்துள்ளன.

 2019ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் சில நகரங்கள் பாதுகாப்பற்ற நகரங்களாக ஒன்றிய குற்ற ஆவண சேகரிப்பு அமைப்பின் கீழ் வெளியிடப்பட்ட அறிக் கையில் இடம்பெற்றிருந்தது. தற்போது முதல் 10 இடங்களில் பெண்களுக்கு பாதுகாப்பான நகரங்கள் தமிழ்நாட்டில் உள்ள நகரங்களாக இருப்பது குறிப் பிடத்தக்கது ஆகும்.

உண்மை நிலை இவ்வாறு இருக்க, தமிழ்நாட்டில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்று பிஜேபி அண்ணாமலைகள் பிதற்றுவதை என்னவென்று சொல்ல!

பெண் கல்வி, உத்தியோகம், பெண்ணுரிமை இவற்றைப்பற்றி மக்கள் மத்தியில் அடிப்படை விழிப்புணர்வை ஏற்படுத்தியது தந்தை பெரியாரும், அவர்கள் கண்ட சமூகப் புரட்சி இயக்கமான சுயமரியாதை இயக்கமும், திராவிடர் கழகமுமேயாகும்.

தற்போது நடப்பது 'திராவிட மாடல்' அரசு.அதன் சிந்தனையும், செயல்பாடும் இந்த அடிப் படையில்தான் இருக்கும். இப்பொழுது அதிகார பூர்வமாகவே தமிழ் நாட்டை தரவுகளுடன் அறிவித்துள்ளது மகிழ்ச்சிக் குரியது.

வாழ்க திராவிட மாடல் அரசு.

வெல்க அதன் தத்துவங்கள்!

No comments:

Post a Comment